டிபி.ராஜீவனின் கவிதை அருமை. அந்தக் கவிதையில் எமன் யார் என்பதுதான் நுட்பமான விஷயம். அந்தக்கவிதையிலுள்ள எல்லா துன்பங்களையும் அளிப்பவர் அவர்தான். அவரை காதலித்து மணந்த மிஸிஸ் எமதர்மன் என்னும் சீமாட்டியின் கருணைச்சேவைகளுக்கான பணமும் மிஸ்டர் எமதர்மனிடமிருந்தோ அல்லது எமதர்மா லிமிட்டட் என்ற குளோபல் கம்பெனியிடமிருந்தோ அல்லது அவர்கள் ஸ்பான்சர் செய்யும் மசாசுசெட்ஸ் பல்கலையில் இருந்தோ வருகிறது என்று நினைக்கிறேன். பாவம் சீமாட்டி, எருமைச்சாணி வாடையில் தூங்கவேண்டும். ஆனால் எல்லாமே ஒரு நாடகத்தின் பல பகுதிகள்தானே?
ஸ்ரீனிவாஸ்
*
அன்புள்ள ஜெ
டி.பி.ராஜீவனின் கவிதை மனதை துயரில் ஆழ்த்தியது. அவரை நான் பார்த்ததில்லை. ஆனால் திடீரென்று வேண்டிய ஒருவரை இழந்ததுபோல் உணர்கிறேன். அந்தக்கவிதை அவரை அவ்வளவு அணுக்கமானவராக ஆக்கிவிட்டது. அந்தக் கவிதையை அவருடைய நோய் மற்றும் சாவின் பின்னணியில் வாசித்தபோது அதில் இருந்த நையாண்டியும் போட்டோவிலிருந்த அவருடைய சிரிப்பும் எல்லாம்சேர்ந்து அவரை மிகமிக வேண்டியவராக ஆக்கிவிட்டன.
ராமச்சந்திரன் எம்.ஆர்.