குரங்குத்துணை

images (2)

 

வி.எஸ்.பிட்செட் எழுதிய தி செயிண்ட் என்னும் சிறுகதை இது

*

பதினேழு வயதிருக்கும்போது எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமலாகியது. கொஞ்சநாளாகவே அது நிலையிலாமல்தான் இருந்துகொண்டிருந்தது. நாங்கள் வசித்துவந்த இடத்தின்றருகே இருந்த ஆற்றங்கரையில் இதற்குக் காரணமான சம்பவம் நடந்தது. 

நான் அப்போது என் மாமாவுடன் தங்கியிருந்தேன். அவர் நொடித்துப்போனபின்னர் ஒரு சின்ன மரச்சாமான்கடையை ஆரம்பித்து நடத்திவந்தார். கடவுள் எப்படியாவது உதவிசெய்வார் என்று அவர் நம்பினார். அப்போது கனடா டொரொண்டோவிலிருந்து கடைசிச் சுத்திகரிப்பு சபைஎன்ற பெயருள்ள கிறித்தவ சபையைச் சேர்ந்த ஒருவர் மாமாவை அணுகினார். அவர் மாமாவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார். அதன் பின் சுருக்கமாக அவர் சொன்னது இதுதான். கடவுள் மனிதர்களைப் படைத்தார். அவர்கள் வாழ்வதற்காக பணத்தையும் படைத்தார். அப்படியானால் அவர் ஏன் மனிதர்களுக்கு பணக்கஷ்டத்தை உண்டாக்க வேண்டும்? மனிதர்களுக்கு பணம் தேவை என்று கடவுளுக்கு தெரியாதா என்ன?

 

நாங்கள் இந்தக் கேள்வியில் திருப்திகொண்டுவிட்டோம். நகரின் முதல் சுத்திகரிக்கப்பட்டோர் ஆனோம். விரைவிலேயே இந்தக்கருத்து நகரத்தில் பரவி கிட்டத்தட்ட ஐம்பது சுத்திகரிக்கப்பட்டோர்  உருவானார்கள். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை தானியச்சந்தையருகே ஒரு பழைய வீட்டில் கூடி நாங்கள் ஜெபமும் வழிபாடும்செய்ய ஆரம்பித்தோம்

 

சீக்கிரமே நாங்கள் தனிமைப்பட்டு பிறரை வெறுக்கவும் பிறரால் இகழப்படவும் ஆரம்பித்தோம்.  அவிசுவாசிகள் நாங்கள் சொன்ன இரு அடிப்படைக்கோட்பாடுகளைக் கேட்டு கடுப்பானார்கள். ஒன்று, வெற்றிகரமான பிரார்த்தனை. இரண்டு, டொரொண்டோ வெளிப்பாடு.

 

முதல் கோட்பாடு இதுதான். உண்மையில் பிரபஞ்சத்தில் எந்த தவறும், பிழையும், தீமையும் இருக்கவே முடியாது. காரணம் கடவுள் அந்த எதிர்மறை அம்சங்களை படைக்கவேண்டிய தேவையே இல்லையே. அவை எல்லாம் நம் மனப்பிரமைகள். நம் பாவத்தின் விளைவுகள். நாங்கள் அவற்றை பிழைஎன்றோம். நாம் அந்தப்பிழைகளை கற்பனைசெய்துகொள்வதனால்தான் அவை நிகழ்கின்றன. நாங்கள் உண்மையான யதார்த்தத்தில் வாழ்வதாகவும் பிறர் பிழையில் மூழ்கிகிடப்பதாகவும் நம்பினோம்

 

இந்த பிழையைக் களைவதற்கு கடுமையான பிரார்த்தனையே சிறந்த வழி என்று எண்ணினோம்.வெற்றிகரமான பிராத்தனை என்று அதை நாங்கள் சொன்னோம். பிராத்தனை முழுமை அடையும்போது அந்த பிழை நீங்கிவிடும். இதனால் எங்கள் சர்ச்சில் அனேகமாக தினமும் ஏராளமான அற்புதங்கள் நடந்தன. நோய் குணமாகியது. வறுமை இல்லாமலாகியது.

 

இந்த வெளிப்பாடு இறைவனால் நேரடியாக கனடாவில் டொரொண்டோ நகரில் எங்கள் சர்ச்சை நிறுவிய தீர்க்கதரிசிக்கு வெளிபப்டுத்தப்பட்டது என்று நாங்கள் நம்பினோம். கடுப்பாகாமல் என்ன செய்வார்கள்?

 

என்னது?” என்றார் என் ஆசிரியர். நான் அப்போது சின்னப்பையன் சரி… நீ மாடிமேல் ஏறி குதித்தால் உன் மண்டை உடையாதென்றா சொல்கிறாய்?”

 

நான் கோழையான பையன் பேசவே வராது. ஆனால் நாங்கள் சுத்திகரிக்கப்பட்டோர் ஆதலால் மதவிஷயங்களில் விட்டுக்கொடுக்க மாட்டோம் அது பிழை..அந்த பிழைக்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்என்று நான் ஆணித்தரமாகச் சொன்னேன். என் மண்டை உடையும் என்று நான் சொல்லவே மாட்டேன்என்று கூவினேன்.

 

மண்டை உடைந்தால் நீ கண்டிப்பாக அதைச் சொல்லமுடியாதுதான்என்றார் ஆசிரியர்.  பயல்கள் சிரித்தார்கள். ஆனால் பலருக்கும் என் துணிச்சல் மீது மரியாதை ஏற்பட்டது.  

 

இப்படி வளர்ந்த எனக்கு சட்டென்று ஒரு அசௌகரியம் உருவாக ஆரம்பித்தது. அதாவது ,நான் என் படுக்கையறைக்குள் செல்லும்போது அங்கே ஒரு மனிதக்குரங்கு இருப்பது போல. அது கூடவே வருவது போல. அதை நான் கட்டுப்படுத்தவே முடியாது. மனிதக்குரங்கு சொறிந்துகோண்டும், பிராண்டிக்கொண்டும், இளித்துக்கொண்டும் என்னுடன் வந்தது.  அது ஒரு ஐயம். அதாவது பிழை’ ஆனால் பிழை என்பது ஒரு பிரமை என்றால் அதற்கு மூலம் எது? எங்கிருந்து அது வருகிறது?

 

நான் என் மாமாவிடம் ஒருநாள் கேட்டேன். நீ அதிகமாக படிக்கிறாய்…தேவையில்லாமல் ஆற்றில் படகுப்பயணம் செய்கிறாய். அதனால்தான் பிழை  உனக்குள் நுழைகிறது. பிழையை உள்ளே விடாதேபிழையை உள்ளே விடுதல் என்பது எங்கள் சுத்திகரிக்கப்பட்டோர் மரபில் ஒரு முக்கியமான கலைச்சொல். சரியான கலைச்சொல்லைச் சொல்லிவிட்டால் தெளிவான பதில் என நம்புகிறவர்களில் ஒருவர் மாமா.

 

நான் இந்தமாதிரி வெந்தும் வேகாததுமாக அலைந்து கொண்டிருந்த நாளில்தான் திரு ஹயுபர்ட் டிம்பர்லேக் எங்களூருக்கு வந்தார். அவர்தான் எங்கள் சர்ச்சின் உச்சநிலையைச் சேர்ந்த போதகர். எங்கள் மதக்குழுவின் நிறுவனர் அவர்தான்.அவர் எங்களூரில் பேசப்போவதை நாங்கள் ஊரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டி விளம்பரம் செய்தோம். அந்த ஞாயிற்றுக்கிழமை பேச்சுக்குப் பின்னர் டிம்பர்லேக் எங்கள் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.

 

எங்களுக்கு நம்பவே முடியாத அனுபவம் அது. சாட்சாத் டிம்பர்லேக் எங்கள் வீட்டில், எங்கள் மேஜையில், எங்கள் கரண்டியால் உணவருந்துகிறார்! டிம்பர்லேக்குக்குதான் உண்மைஅதன் இறுதிவடிவில் அளிக்கப்பட்டது. அது அறிவியல்பூர்வமானது. ஆகவே கச்சிதமானது, நிரூபிக்கத்தக்கது. டிம்பர்லேக் ஏராளமான அற்புதங்களைச் செய்துகொண்டே இருந்தார். இரண்டுமுறை செத்தவர்களை அவர் மீட்டதாகவும் சொல்லப்பட்டது

 

இது என் மருமகன்என்றார் மாமா இங்கே எங்களுடன் இருக்கிறான். அவன் சிந்திப்பதாக சிந்தித்துக்கொண்டிருக்கிறான்நான் தலைகுனிந்தேன் எப்போது பார்த்தாலும் ஆற்றில் இருக்கிறான். தலைக்குள் தண்ணீர் புகுந்துகொண்டுவிட்டது

 

ஏன், ஆறு நல்லவிஷயம்தானே?”என்றார் டிம்பர்லேக்.  என்னிடம் உன் மாமா நகைச்சுவையாகப் பேசுவதாக நகைச்சுவை செய்கிறார்எனக்கு அவர் என் தரப்பை எடுத்ததுமே புரிந்துவிட்டது, இவர் அந்தமாதிரி ஆள்என்று. பையன்களுடன் இறங்கிபேச வருகிற ஜாலியானபெரிய மனிதர். எனக்குக் கொஞ்சம் கிலி பிடித்தது.

 

திரு டிம்பர்லேக் களைத்திருப்பார்  என்று எண்ணுகிறேன்என்றாள் மாமி. உடனே மாமா எகிறினார் களைப்பா? எப்படி அவர் களைப்படைய முடியும்? பிழையை உள்ளே விடாதேமாமி பேயறைந்தது போல ஆகி மன்னிப்புகோரினாள். 

 

டிம்பர்லேக், “இல்லை, கடவுளுக்கே ஞாயிற்றுக்கிழமை ஓய்வு தேவைபப்ட்டதேஎன்றார் .என்னிடம் நாம் இருவரும் ஆற்றுக்குப் போய் கொஞ்சம் தண்ணீரை தலைக்குள் ஏற்றிக்கொள்வோம், என்ன?” என்றார்.

 

அவர் என்னிடம் கொஞ்ச நேரம் அமைதியானபேச்சை நடத்த விரும்புவதைப் புரிந்துகொண்டு என் வயிறு கலங்கியது. என் மாமா என் சந்தேகங்களை சொல்லித்தொலைத்திருப்பார் போல.

 

ஞாயிற்றுக்கிழமை படகுகளும் துடுப்புகளுமாக ஆற்றுக்கு வரும் காலிக்கும்பலுடன் சேர்ந்து ஒரு புனிதரும் ஆற்றில் செல்வதை எண்ணி மாமா கலங்கினார் கண்ட காவாலிப்பயல்களும் அங்கே வருவார்களேஎன்றார். டிம்பர்லேக் பரவாயில்லைஎன்றார்.

 

என்ன ஒரு அற்புதமான மனிதர்!என்று மாமா கண்ணாடியைக் கழற்றினார் ரொம்ப மனிதாம்சத்துடன் இருக்கிறார்என்று மன்னிப்புகோரும் தொனியில் மாமியிடம் சொன்னார்.

 

டிம்பர்லேக் உடை மாற்றப்போனார். மாமா என்னிடம் அந்தரங்கமாக டேய், இது உன் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நாள்…. ஹ்யுபர்ட் டிம்பர்லேக் வருடத்துக்கு ஆயிரம் டாலர் வரை இன்சூரன்ஸில் சம்பாதித்தவர். இந்த வெளிபாட்டுக்குப் பிறகு அவர் அப்படியே எல்லாவற்றையும் விட்டுவிட்டார்…  இப்போது அவர் மீண்டும் பதினைந்தாயிரம் சம்பாதிக்கிறார்”  என்றார். இப்போது அவர் அற்புதங்கள் மூலம் சம்பாதிக்கிறார் என நான் அறிந்திருந்தேன்.

 

மாமா கண்களை தாழ்த்தினார் உன் பிரச்சினையை நான் அவரிடம் சொன்னேன். அவர் சும்மா புன்னகைதான் செய்தார்நான் ஒன்றும் சொல்லவில்லை. டிம்பர்லேக் கீழே வந்தார். நாங்கள் கிளம்பினோம்.

 

நான் தீவிரமான முகபாவனையுடன் நடந்தேன். எக்கணமும் அவர் எனக்கு தீமையின் உறைவிடத்தைப் பற்றிச் சொல்லப்போகிறார். அவர் சொன்னால் வேறு வழி இல்லை, நான் அதை ஒப்புக்கொண்டு முழுத் திருப்தி அடைந்தாகவேண்டும்.

 

டிக்கெட் எடுக்கும்போது என்னருகே நின்றிருந்த அந்த பொன்னிறத்தோல் நங்கையர் நான் டிம்பர்லேக்க்கு டிக்கெட் வாங்குகிறேன் என்று அறியவில்லையே என ஏங்கினேன். ஆனால் டிக்கெட் எடுத்தபின் தூரத்தில் ஆற்றைப்பார்த்து நின்ற டிம்பர்லேக்கை திரும்பிப்பார்த்தபோது சட்டென்று ஏமாற்றமாக இருந்தது. தொப்பையும், சரிந்த தோளுமாக டிம்பர்லேக் சாதாரண மனிதனாக, முக்கியமில்லாதவராகவும் பொருத்தமற்றவராகவும் அங்கே தோன்றினார்.

 

ரெடியா?”என்றார் அவர் உற்சாகமாக வா போகலாம்…நானே கொஞ்சம் துடுப்பு போடுகிறேன். துடுப்பு எப்படி போடுவதென்று நான் சொல்லித்தருகிறேன்….

 

நாங்கள் ஆற்றில் படகில் சென்றோம். டிம்பர்லேக் பொதுவாகப் பேசிக்கொண்டு வந்தார்.  எனக்கு அவர் சொன்னது ஒன்றுமே ஏறவில்லை. டிம்பர்லேக் போன்ற ஒரு மகான் எளிய அற்பமான உலகியல் பொருட்களான துடுப்பு, படகு, கயிறு ஆகியவற்றின் நடுவே இருந்துகோண்டிருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.

 

அதேசமயம் நல்ல நீரோட்டம் கொண்ட ஆற்றுக்கு எதிரே அவரே துடுப்புபோடுவதாகச் சொன்னதை எண்ணினால் திகிலாக இருந்தது. ஆனால் எதற்கு பயம்? கடவுளுக்குத்தெரியாதா? அவர் எப்படி ஆற்றில் விழ முடியும்? அது பிழை‘.

 

ஆற்றின்மீது அடர்த்தியான வில்லோ மரங்கள் வளைந்திருந்தன. டிம்பர்லேக் கொண்டா படகைஎன்றார் நான் இந்த துடுப்பை போட்டு பதினெட்டு வருடமாகிறது. ஆனால் நான் அந்தக்காலத்தில் நன்றாகவே துடுப்பு போடுபவன்…

 

இந்த மரங்களை தாண்டிவிடலாமேஎன்றேன் எதற்கு? நான் நன்றாகவே துடுப்பு வலிப்பேன்என்றார் டிம்பர்லேக்

 

அவர் ஆவேசமாக துடுப்பை வலித்தார் எப்படி இருக்கிறது?” நான் நன்றாக இருக்கிறது என்றேன். ஆனால் நாம் மரங்களை விட்டுத்தள்ளிச் சென்றுவிடுவோமே.. நான் வேண்டுமானால் மரங்களை தள்ளுகிறேனே

 

வேண்டாம்…என்றார் டிம்பர்லேக் எனக்கே தெரியும்” .நான் டக்என்றேன் வாத்துக்களா? எங்கே தெரியவில்லையே  நான் இல்லை தலையை குனியச் சொன்னேன்என்றேன் அதற்குள் அவரது தலை ஒரு மரக்கிளையில் இடித்தது. அவர் அதைப்பிடித்துக்கொண்டு தள்ளுவதர்குள் படகு முன்னே செல்ல அவர் மரக்கிளையில் தொங்கி கிடந்தார்

 

என்னால் நம்ப முடியவில்லை. கண்முன் ஒரு பிழை‘. பிரார்த்தனை செய்வதைப்பற்றி யோசித்தேன். நடக்கவே முடியாத காரியம் நடந்துவிட்டிருக்கிறது. இப்போது ஒரு அற்புதம் நடந்தாகவேண்டும்.

 

ஆனால் டிம்பர்லேக் தொங்கி கிடந்தார். அவரது கைகள் நடுவே தலை பிதுங்கி கண்கள் உறுத்து விழித்து வாய் பிளந்து மூச்சு வாங்கியது. அவரது கோட்டுக்கும் பாண்டுக்கும் நடுவே உடை இடைவெளிவிட்டு பிளந்து தொப்பை பிதுங்கி தெரிந்தது. தெய்வமாக வணங்கிய அப்பல்லோவின் சிலை இரண்டாகப்பிளந்தது கண்ட கிரேக்கர்கள் போல நான் கலங்கினேன்.

 

என்னை ஆச்சரியபப்டுத்தியது டிம்பர்லேக் அப்போது மிக மிக மௌனமாக இருந்தார் என்பதே. படகுகள் கவனிக்காமல் தாண்டிசென்றன. நல்லவேளை!

 

மெல்ல மெல்ல அவர் கிளை தாழ்ந்து வந்தது. அவர் இன்னொரு கிளையை பிடிக்கமுயன்றார். அது மேலும் தாழ்ந்து அவர் குளிர்ந்த நீரில் மூழ்க ஆரம்பித்தார். கால்கள் இடுப்பு மார்பு வரை அவர் மூழ்குவதைபார்த்தேன். நான் கடுமையாக பிரார்த்தனை செய்தேன். அது கேட்கப்படவில்லை. அற்புதம் நிகழவில்லை.

 

அதன்பின் நான் துடுப்பைப்போட்டு மேலே உந்தி அவரை மீட்டு படகில் இருத்தினேன். அவரது உடைகளில் இருந்து தண்ணீர் கொட்டியது. கோட்டுக்குள் நீர் தேங்கி களகளவென தொங்கியது. நாம் கொஞ்சம் பிழையை உள்ளே விட்டுவிட்டோம் என்று நினைக்கிறேன்என்றார் அவர்

 

அவர் அப்போது என்னையும் எங்கள் குடும்பத்தையும் எந்த அளவுக்கு வெறுத்திருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். என்னை மன்னியுங்கள் திரு டிம்பர்லேக்…நீங்கள் உடனடியாக கரைக்குப்போயாகவேண்டும்…உங்களுக்கு இதயத்தாக்குதல் அல்லது நிமோனியா— எனக்கு பகீரென்றது. பிழையை உள்ளே விட்டுவிட்டேனே.

 

தண்ணீரை கடவுள் படைத்தார் என்றால் அது அவரது சிருஷ்டிகளுக்கு தீங்கிழைக்கும் என ஏன் எண்ணவேண்டும்?” என்றார் டிம்பர்லேக் மேலே போவோம்…ஒரு புல்வெளி உண்டு என்று சொன்னாயல்லவா? அங்கே போவோம்

 

நான் சீக்கிரமே  உங்களை…என்று ஆரம்பித்தேன். வேண்டாம்…மேலே போ…ஒன்றுமே நடக்கவில்லை. பிழை…பிழையை உள்ளே விடாதே

 

அவரிடம் பேசிப்பயனில்லை என்று தோன்றியது. நான் படகைத் துழாவினேன். அவரது உடைகளில் இருந்து நீர் சொட்டி ஓடியது. அவர் நடுநடுங்கினார். நரம்புகள் நீலமாக தெரிந்தன. எங்கள் சபையில் உள்ள பெரும்பாலானவர்களிடம் உள்ள ஒரு முகபாவனை அவரிடம் நிறையவே இருந்தது. அது போய்விட்டது.

 

அது என்ன வீடு?”என்று கரையைச் சுட்டிக்காட்டி அவர் கேட்டார். அவர் உரையாடலை ஆரம்பிக்கிறார் என்று புரிந்தது. அவரை நான் ஒரு மனிதராக மதிப்பிட ஆரம்பித்தேன். அவர் மிகவும் பலவீனமான ஆள். உடற்பயிற்சி செய்யும் வழக்கமே இல்லை போல. சாப்பாட்டுமேஜையில் பேசும்போது ஒரு சபைவிசுவாசி சொன்னதற்கு அவர் சொன்ன பதிலை  நான் நினைத்துக்கொண்டேன். அந்தப்பெண் அவர் தினம் பத்து கிலோமீட்டர் நடப்பதைப்பற்றிச் சொன்னாராம். இவர் உடலைப்பற்றி எண்ணுவதே பிழை என்று சொல்லிவிட்டாராம்

 

அவர் உடைகளை கழற்ற மறுத்துவிட்டார். அவர் ஈரமாக இல்லை என்று சொல்லிவிட்டார். ஆகவே நிமோனியாவோ இதய தாக்குதலோ வர நியாயமே இல்லை. பிழையை அவர் உள்ளே விடவில்லை.

 

நாங்கள் அந்த புல்வெளிக்கு வந்தோம். சுமாராக வெயில் அடித்தது. இது ஒரு மறைவான இடம்…இங்கே யாருமே வரமாட்டார்கள். நீங்கள் உங்கள் உடைகளைக் கழற்றி பிழியலாம்என்றேன்

 

தேவையில்லை…நான் ஈரமாக இல்லை…என்றார் டிம்பர்லேக். இது என்ன பூ?” ”இதுவா இது பட்டர்கப்என்றேன் சரிதான்என்றார். அவருக்கு அந்த இடமோ சூழலோ மனதில் பதியவில்லை. ஆர்வமே இல்லாமல் வெளுத்துப் போய் இருந்தார்

 

அவரது சூட்டை கவனித்தேன் உங்கள் சூட்!என்று கூவினேன். அது நீலமாக இல்லை. பட்டர்கப் பூகக்ளின் மகரந்தம் பட்டு மஞ்சளாக ஆகிவிட்டிருந்தது.அவர் கீழே பார்த்து வெறுமே புன்னகை செய்தார். அவரே பொன்னிறப் பூச்சு பெற்றிருந்தார்.

 

இந்த மனிதர் ஒரு புனிதர் என்று எண்ணிக்கொண்டேன். பாப்பிரஸ் ஓவியங்களில் வரக்கூடிய பழங்கால புனிதர்களைப் போன்றவர். பொன்னிறமான புனிதர். பொன்னிறமாக அவர் படகில் அமர்ந்துகொண்டார். பொன்னிறமாகவும் சலிப்பாகவும் உட்கார்ந்திருந்தார். பொன்னிறமாக அவர் இறங்கிக் கொண்டார். நாங்கள் மாமாவின் வீட்டை நோக்கி நடந்தோம்.

 

அவர் கணப்பருகே அமரவோ உடைகளை மாற்றவோ மறுத்துவிட்டார். நடந்தவற்றைப்பற்றி அவர் ஒன்றுமே சொல்லவில்லை. சரியாக நேரத்தைப் பார்த்து இரவு ரயிலைப் பிடித்து கிளம்பிவிட்டார்.  இயறகையின் ஆபத்தையும் அழகையும் அவர் பொருட்படுத்தவில்லை. அவர் மீது அவை படிந்தன என்றால் அது ஒரு ஓடுமீது படிந்தது போலத்தான்.

 

நான் அவரை ஆற்றில் தள்ளிவிட்டு அவரது கால்சட்டையியில் நீர் நிறைந்ததைப்பார்த்து என் கடவுள் நம்பிக்கையை முற்றிலும் இழந்து பதினாறு வருடம் அவரை நான் பார்க்கவேயில்லை. இன்று அவர் இறந்துவிட்ட தகவல் தெரியவந்தது. அவருக்கு ஐம்பத்துநான்கு வயது. அவரது அம்மாவும் அவரும் மட்டும்தான் ஒரு குடியிருப்பில் இருந்தார்கள். அவர் சர்ச்சுக்குப் போக தயாராகிக்கொண்டிருக்கும்போது அம்மா அவரது படுக்கையறையின் உள்ளே சென்று பார்த்திருக்கிறார்.  அவர் உள்ளே தன் சட்டைக்கையை போட்டபடியே செத்து கிடந்திருக்கிறார்.  ஐந்து நிமிடம் முன்னால் அவருடன் பேசியதாக டாக்டரிடம் அவர் அம்மா சொன்னாராம்

 

பின்னாட்களில் டிம்பர்லேக் பெரிதும் குண்டாகிவிட்டதாக மாமா சொன்னார். அவரது தலை ஒரு பெட்டி போல இருந்ததாம். இதய அடைப்புதான், சந்தேகமே இல்லை என்றார் டாக்டர். மரணத்தில் அவரது முகம் அக்கறையின்மையையும் கடுமையையும் காட்டியது. இத்தனை நாள் அவர் வாழ்ந்ததே ஆச்சரியம்தான் என்றாராம் டாக்டர். கடந்த இருபதாண்டுக்காலத்தில் எந்த ஒரு சிறிய அதிர்ச்சியும் பதற்றமும் அவரைக் கொன்றிருக்கும் என்றாராம்

 

நான் அவர் மரத்தில் தொங்கி மெல்ல அங்கிருந்து நீரில் விழுந்ததை நினைவுகூர்ந்தேன். புல்வெளியில் அவர் எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் பொன்னிறமாக நின்றதை எண்ணிக்கொண்டேன். ஏன் அதன்பின்னரும் அவர் தற்காப்புத்தன்மை கொண்ட, மொண்ணையான தன்னிச்சையான புன்னகையையும் ஒரேவகையான சொற்றொடர்களையும் வைத்துக்கொண்டிருந்தார் என்று ஊகித்தேன். நீரில் விழுந்தபின்னும் அந்தக் கோட்டை வைத்துக்கோண்டதுபோல அவற்றை வைத்துக்கொண்டிருந்தார்.

 

ஏனென்றால் அவர் நேர்மையானவர். ஆகவேதான் அவர் பிழையின் உற்பத்தி மூலம் எது என்று என்னிடம் பேச முற்படவில்லை. மனிதக்குரங்கு எங்கள் இரண்டு பேருடனும் இருந்து கொண்டிருந்தது. என்னுடன் கூடவே வந்து நொச்சு பண்ணிக்கோண்டிருந்த அந்தக்குரங்கு டிம்பர்லேக்கின் உள்ளே குடியேறி அவர் இதயத்தைத் தின்றுகொண்டிருந்தது.

 

வி.எஸ்.பிரிட்செட் எழுதிய புனிதர்என்ற கதையின் சுருக்கம் இது. [The saint]

 

 

**

 pritchett

 

விக்டர் சாடன் பிரிட்செட் [Victor Sawdon Pritchett] 1900 டிசம்பர் 16 அன்று  லண்டன் வணிகர் ஒருவரின் மகனாக, அவரது தந்தை வணிகம் தோல்வியுற்று வந்து இப்ஸ்விக் என்ற ஊருக்குவந்து தங்கியிருந்தபோது, பிறந்தார். பிரிட்செட்டின் அப்பா கிறிஸ்தியன் ஸயன்டிஸ்ட் என்ற வழிபாட்டுக்குழுவைச் சேர்ந்தவர். இப்ஸ்விக்கு வந்த ஒருவருடத்தில் பிரிட்செட்டின் அப்பா திவாலானார். அவர்கள் அங்கிருந்து வேறு ஊருக்குச் சென்றார்கள். பலவகையான தொழில்களைச்  செய்து வாழ்ந்தார்கள்.

 

பிரிட்செட்டும் அவரது சகோதரர் சிறிலும் சிறுவயது முதலே பாட்டி வீட்டிலும் உறவினர் வீட்டிலுமாக மாறி மாறி வாழநேர்ந்தது. அவரது அப்பாவின் பொறுப்பின்மை காரணமாக அவர்களுக்கு சீரான குடும்ப வாழ்க்கையே அமையவில்லை. முதல் உலகப்போரில் பிரிட்செட்டின் அப்பா கலந்துகொள்ளச் சென்ற போது பிரிட்செட் பள்ளியை விட்டு விலக நேர்ந்தது.

 

தன் பதினாறாம் வயது முதல் நான்கு வருடம் பிரிட்செட் தோல் வணிகராக பணியார்றினார்.  பின்பு பாரீஸ¤க்குச் சென்று கடை  உதவியாலராக வேலைபார்த்தார். 1923 முதல் கிறிஸ்டியன் சயன்ஸ் மானிடர் இதழில் எழுத ஆரம்பித்தார். அவ்விதழ் அவரை அயர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் அனுப்பியது. 1926 முதல் அவர் நியூ ஸ்டேட்ஸ்மான் இதழில் மதிப்புரை எழுதினார். பின்னர் அதிலேயே இலக்கியப்பகுதிக்கு ஆசிரியராக பணியாற்றினார்.

 

பிரிட்செட் எழுதிய முதல் நூல் ஸ்பெயின் வழியாக  அவர் சென்ற பயணத்தைப் பற்றியது. அயர்லாந்து அனுவபத்தைப் பற்றிய அடுத்த நூல் தொடர்ந்து வெளிவந்தது. அயர்லாந்தில் அவர் எவ்லின் விகோர்ஸ் என்ற பெண்ணைக் கண்டு மணந்துகோண்டார். அந்த மணவாழ்க்கை நன்றாகச் செல்லவில்லை.

 

பிரிட்செட் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருந்தார். ஐந்து நாவல்கள் எழுதினார். ஆனால் 1932ல் வந்த ஸ்பானிஸ்ஹ் விர்ஜின் மற்றும் கதைகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் அவர் இலக்கிய ஆசிரியராகப் புகழ்பெற்றார். 1936ல் அவர் தன் முதல் மனைவியை விவாகரத்துசெய்துவிட்டு டோரதி ரட்ஜ் ராபர்ட்ஸ் என்ற பெண்ணை மணந்தார். இவ்வுறவு இறுதிவரை நீடித்தது– ஆனால் இருவருக்கும் வேறு உறவுகள் இருந்தன. பிரிட்செட்டின் மைந்தர்களான ஆலிவர் பிரிட்செட் இதழாளராகவும் மாட் பிரிட்செட் கேலிச்சித்திரக்காரராகவும் புகழ்பெற்றனர்

 

உலகப்போரில் பிரிட்செட் பிபிஸிக்காக பணியாற்றினார். அவருக்கு ஜெர்மன், பிரெஞ்சு ஸ்பானிஷ் மொழிகள் தெரியும். இவான் துர்கனேவ், ஆண்டன் செக்கோவ் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதியிருக்கிறார். நெடுநாள் வாழ்ந்த பிரிட்செட் 1997 மார்ச் மாதம் 20 அன்று லண்டனில் மறைந்தார்.

 

பிரிட்செட்டின் இந்தக்கதை ஒரு சுயசரிதைத்துண்டு. இலை மரக்கிளையில் இருந்து ஒரு குறிப்பிட்ட கணத்தில் உதிர முடிவெடுப்பதுபோல இளைஞனின் மனம் தன் வாழ்க்கை பற்றிய சொந்தத் தரிசனத்தை ஒரு தருணத்தில் அடைகிறது. பிறகு அவன் சிந்திப்பதெல்லாம் அந்தக் தருணத்தின் நீட்சிகளே. அந்தப் புள்ளியை எளிமையாக தொட்டுப் பிடித்துவிட்டிருக்கிறார் பிரிட்செ  அதைவிட முக்கியமாக டிம்பர்லேக் தன் உடலுக்குரிய ஞான தரிசனத்தை உடலில் இருந்தே உருவாக்கிக்கொண்டார் என்பதிலுள்ள அங்கதம் புன்னகைக்கவைக்கிறது.

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 24, 2009 

 

http://home.snu.edu/~hculbert/saint.htm

http://en.wikipedia.org/wiki/V._S._Pritchett

முந்தைய கட்டுரைசுவையின் வழி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-23