முதற்கனல் மின்நூல் வாங்க
முதற்கனல் அச்சுநூல் வாங்க
அன்புள்ள ஜெ,
இந்த ஆண்டு ஜூன் மாதம் உங்கள் கொற்றவை நாவலை வாசித்து முடித்தேன். அந்த வாசிப்பின் எழுச்சியில் நேரடியாக வெண்முரசுக்குள் நுழைந்தேன். முதற்கனலை வாசிக்க ஆரம்பித்தேன். முதற்கனலின் முதல் ஐந்து அத்தியாயங்களைக் கடந்து வேள்விமுகம் தாண்டிய போது வெண்முரசின் மொழியும், வர்ணனைகளும், உவமைகளும் ஈர்த்துக்கொண்டு முதற்கனலின் உலகத்தில் முழுவதுமாக பிரவேசிக்க வைத்தது. நிலம் பற்றிய வர்ணனைகளும்,தட்சன் தாட்சாயிணி,சிபிச் சக்கரவர்த்தி போன்ற கிளைக்கதைகளும்,ஷத்ரிய அறம் பற்றிய விளக்கங்களும் வாசிக்க வாசிக்க பருப்பொருளிலிருந்து உருவான இப்புடவியின் ஒவ்வொரு நிலமும் காலத்தின் போக்கில் அதற்கான வலுவான வரலாற்றையும் பண்பாட்டையும் அடைந்தவிதத்தை சிந்தித்துப் பார்க்கையில் ஒரு பிரமிப்பும் வியப்பும் எழுந்தது. இதற்கு முன் முக்கண்முதல்வனிலிருந்து தொடங்கும் கொற்றவையை வாசித்த போது அப்படி ஒரு உளஎழுச்சியை அடைந்தேன். முதற்கனலின் வாசிப்பில் அந்த உணர்வின் ஆழம் இன்னும் பன்மடங்காகியதை உணர முடிந்தது.
முதற்கனலின் முதல்வாசிப்பில் சத்யவதி ,விசித்திரவீரியன் ,பீஷ்மர் ,அம்பை, சிகண்டியே உச்சமாக பதிந்தார்கள். சந்தனுவிற்கு, சத்யவதிக்கு, அஸ்தினாபுரத்திற்கென்று தன் சுயவிருப்பு வெறுப்புகளைத் துறந்த பீஷ்மரின் தியாகமே பீஷ்மரைப் பற்றிய முதல் நினைவாய் மனதில் பதிந்தது.
சத்யவதி காசி மன்னனின் இளவரசிகளை கவர்ந்து வர சொல்லி
பீஷ்மருக்கு கட்டளையிட்டபோது உள்ளம் கலங்கி கிருஷ்ண துவைபான வியாசரின் பீஷ்மர் ஆலோசனை கேட்கச்சென்றபோது, சால்வனை உதறி காசி சென்று திரும்பிய அம்பை பீஷ்மரிடம் அன்பைக்கோரி மன்றாடியபோது,அஸ்தினாபுரியை நீங்கிச் சென்ற பீஷ்மர் இரவில் கல்மண்டபத்தில் தங்கியபொழுது சூதர்கள் பாடல்கள் வழியாக எள்ளிநகையாடியதைக் கேட்டபோது,’இந்த பாரதவர்ஷத்தில் எங்காவது நான் ஒரு குடும்பம் அமைத்து வாழவிரும்புவேன் என்றால் அது இங்குதான். ஆனால் இப்பிறவியில் எனக்கு அந்த நன்னிலை இல்லை’ என்று அந்தக் கிராமத்து முதியவரிடம் பீஷ்மர் சொன்ன போது, “பெண்ணின் அன்பைப்பெறாதவன் பிரம்மஞானத்தால் மட்டுமே அந்த இடத்தை நிறைத்துக்கொள்ளமுடியும். நான் இரண்டுக்கும் தகுதியற்றவன். பழிசூழ்ந்தவன்” என்று தன்னை மணக்க விரும்பிய கிராமத்து இளையபெண்ணிடம் பீஷ்மர் கூறிய போது, நாக முனிவரின் ஆடியில் யயாதியாய் பீஷ்மர் தன்னைக் கண்டபோதும், இந்த எல்லா சூழ்நிலைகளிலும் அத்தனை இறுக்கங்களிலிருந்தும் அறுபட்டு ஒரு பெரும் விடுதலைதலையுணர்வை இறைஞ்சும் பீஷ்மரையே உணர முடிந்தது . ‘நான் என்னை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பே அளிப்பதில்லை.என் வழியாக உருவாகும் என்னை நானே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கேன்’ என்ற பீஷ்மரின் வார்த்தைகளில் அடிமனக் கலக்கமும், வலியும் தோய்ந்த உண்மையாகவே அது வெளிப்பட்டது.
முதற்கனலின் வழி நெடுகவே உறவுமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையில் ஒருவர் பிறிதொருவரை நிறைக்கும் முழுமையை ,கூரிய அவதானிப்புகளை விளக்கும் நிகழ்வுகளும் ,வரிகளும் ஏராளம். “உங்கள் விழிகள். அவற்றில் ஆணே இல்லை.ஆண்களின் கண்களில் உள்ளவை இருவகை உணர்வுகள். ஒன்று, வேட்கை. எப்போதும் எரியும் அதன் சுவாலை விலகினால் தெரிவது புறக்கணிப்பின் ஏளனம்…அதையே ஆண்மை என்கிறார்கள். அவை உங்கள் கண்களில் இல்லை. இவை என் அன்னையின் கண்கள் போலிருக்கின்றன,” என்று அம்பிகை விசித்திரவீரியனிடம் மஞ்சத்தில் சொன்ன வார்த்தைகள், “எனக்கு சற்று குற்றவுணர்வு இருந்தது. ஆனால் அந்த காசிநாட்டு இளவரசி அழுததைப் பார்த்தேன். அக்கணமே நெஞ்சு திறந்து இறந்துவிடுபவள் போல…அப்போது என் மனம் நிறைந்தது. ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் செல்வதுதான் ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்…’ என்று அம்பிகையையும் விசித்திரவீரியனையும் பற்றி சத்யவதி பீஷ்மரிடம் சொன்னது, “ஒரு பெண்ணை யாரோ ஓர் ஆண் மட்டும்தான் முழுப்பெண்ணாக்குகிறான் என்று தெரியுமா உனக்கு? அப்படிப்பட்ட ஆணை சந்திப்பவளே நல்லூழ்கொண்டவள்….ஆனால் ஒன்று சொல்கிறேன். அந்த ஆணை தன் மகனாகக் கொண்டவள் பெரும்பேறு பெற்றவள். அவள் நான்,” என்று சத்தியவதி உதிர்த்த வார்த்தைகள் யாவும் அதற்கான சாட்சிகள்.
ஆண் பெண் உறவில் ஒருவர் பிறிதொருவரை நிறைக்கும் இடம் போல், ஆணவத்தால் ஒருவர் பிறிதொருவரை பிரியும் பிளவும் இப்பிரபஞ்ச ஆட்டத்தின் ஆண் பெண் விளையாட்டின் ஒரு அங்கம் போல. தாட்சாயிணியால் தோல்வியுற்ற தட்சன் ‘களத்தில் நான் தோற்கவில்லை, உன் மேல் கொண்ட அன்பினால் தோற்றேன்’ என்ற சொன்னபோது ஒரு ஆணின் வலிமை பெண்ணின் அன்பின் முன்னால் தோற்றதை உணரும்போது அது அடக்கமுடியா ஆணவமாக வெளிப்பட்டுவிடுகிறது. அப்படி அம்பை மன்றாடி தன் தூய்மையான அன்பை வெளிப்படுத்தி அதை ஏற்குமாறு பீஷ்மரிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தபோது ஒரு பெண்ணின் அன்பின் முன்னால் நாம் படிப்படியாக தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே பீஷ்மரிடம் ஏளன சுழிப்பாக வெளிப்பட்டிருக்கக்கூடும். அதை கண்டுகொண்ட அம்பாயாகிய திருமகள் அக்கணத்திலிருந்து எரிக்கும் கொற்றவையானாள். முதற்கனலின் அம்பை கொற்றவையின் கண்ணகியை நினைப்படுத்தினாள். தான் நேசிக்கும் ஆணின் மீது அப்பழுக்கற்ற அன்பை சுமந்திருக்கும் போது அவள் கனிந்து நிறைந்திருக்கும் திருமகளாகவே இருக்கிறாள். கோவலன் மாதவியிடம் சென்ற போதும் கோவலன் கண்ணகி மீது கொண்ட அன்பிற்காக அல்ல , கண்ணகி கோவலன் மீது கொண்ட தூய்மையான அன்பிற்காகவே அவள் காத்திருந்திருக்கக்கூடும். அந்த அன்பின் சாட்சியான கணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது அவள் கொற்றவையாகி மதுரையை எரித்து , முலையறுத்து நோன்பு பூண்டு பின் சமாதி நிலையடைந்தாள். இங்கு அம்பைக்கு எல்லா நிலையிலும் யாவரும் அநீதியே இழைத்தார்கள். நினைத்த சுயம்வரம் நடக்காமல், நேசித்த மணவாளன் கிடைக்காமல், நேசித்த சால்வனை அடைக்கலம் தேடி சென்ற போது அவனும் கீழ்மையான சொற்களால் அம்பையை நிராகரித்து, இறுதித் தஞ்சம் என்று நினைத்துச் சென்ற பிறந்தவீடான காசிநாடாலும் கைவிடப்பட்டு, பின் கடைசியில் ஒற்றை சரணாகதியாய் பீஷ்மரிடம் அன்பைக்கோரி மண்டியிட்டபோது பீஷ்மர் அவள் தன்மானத்தை சீண்டி அவர் மீது கொண்ட அன்பில் பிழை கண்டபோது இந்தத் திருமகளும் கொற்றவையாகி இறுதியில் நெருப்புக்கு அவியானாள். பீஷ்மர் அம்பை இவ்விருவரையும் நினைக்கையில் இந்த இருவர்மீதுமே கருணை தோன்றியதே தவிர குறைபட முடியவில்லை. இருவருமே அவரவர் சூழ்நிலையில் அவரவர் சரியே என்றாலும் ‘பாசிமணிகளுக்குள் பட்டுச்சரடுபோல மனிதர்களுக்குள் விதியின் நோக்கம் ஊடுருவிச் செல்கிறது ‘ என்ற முதற்கனலின் வரிகளே அம்பை பீஷ்மர் பகுதியை வாசித்தபோது அப்போது நினைத்துக்கொண்டேன்.
ஆடியின் ஆழத்தில் அக்னிவேசர் மற்ற சிஷ்யர்களிடம், துரோணரிடம் ,சிகண்டியிடம் சொல்லும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மந்திரமாக பதிந்தது.முதற்கனல் வாசிப்பின் போது கூடவே ஒரு கல்வி நிகழ்வதையும் உணர முடிந்தது. எண்ணற்ற வாக்கியங்களும் உவமைகளும் அகத்தில் அமர்ந்து நிறைந்திருக்கின்றன.
‘எந்த சொற்களையும் விட உடல் ஆன்மாவை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.’
‘விழியற்றவனுக்கு கண்களில் நிறங்கள் இல்லை.
விழியிருப்பவனுக்கு உடலில் நிறங்கள் இல்லை ‘.
‘கரைகளால் நதி கட்டுப்படுத்தப்படுவதில்லை.
கரைகளை நதிகளே உருவாக்கிக்கொள்கின்றன ‘.
‘ஞானம் என்பது அடைவதல்ல.
ஒவ்வொன்றாய் இழந்தபின் எஞ்சுவது ‘.
இப்படி உள்ளுக்குள் உணர்ந்து வியந்த வரிகள் இன்னும் எத்தனையோ. முதல் வாசிப்பில் நிச்சியமாக பல விஷயங்களை தவற விட்டிருப்பேன் என்பதையும் உணர முடிந்தது. மீண்டும் மீண்டுமான மீள்வாசிப்புகளில் அக்குறையை நிறைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். வெண்முரசு தொடர் ஒரு கிளாசிக் என்று ஏன் சொல்லப்படுகிறது என்று இப்போது புரிகிறது. எவ்வளவு முறை படித்தாலும் தீராமல் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒன்று கிளாசிக். கொற்றவையும் முதற்கனலையும் இவ்வாண்டு வாசித்ததில் ஒரு கிளாசிக்கை படிப்பதே எனக்கு உகந்த வாசிப்பு என்று கண்டுகொண்டேன். மழைப்பாடலை தொடங்கியிருக்கிறேன்.
அன்புடன்,
இந்துமதி