அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
கேப்டன் வெங்கட் என்ற ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியின் ட்விட்டர் பதிவை படித்தேன்.
https://twitter.com/CaptVenk/status/1585873059910914048
Following orders is not natural for humans. Soldiers are de-humanised to make them follow orders unquestionably. It’s unfair to expect a behaviour from them like any other non-dehumanised person, the moment they retire.
உத்தரவிற்கு கீழ்படிதல் என்பது மனித இயல்புக்கு மாறானது. கேள்வி கேட்காமல் உத்தரவிற்கு கீழ்படிவதற்காக ராணுவ வீரர்களை மனிதத்தன்மை அற்றவர்களாக ஆக்கப்படுகின்றனர். ராணுவ வீரர்கள் ஒய்வு பெற்றவுடனே அவர்களிடம் மனிதத்தன்மை உள்ள ஒரு நபரிடம் இருந்து எதிர் பார்க்கும் நடத்தையை எதிர்பார்ப்பது நியாயம் இல்லை.
உடனே இந்த மனித இயல்பை குறித்து தங்கள் ஏதேனும் கூறியுள்ளீர்களா என்று தங்கள் வலை தளத்தில் தேடினேன். தொடர்புடைய பதிவு எதுவும் கிடைக்கவில்லை.
சரி. அக்னிவீர் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் நேர்/எதிர்மறை பாதிப்பு குறித்து குறித்து ஏதேனும் உரையாடல் / பதிவு உள்ளதா என்றும் தேடினேன். அதற்கும் தொடர்புடைய பதிவு எதுவும் கிடைக்கவில்லை.
ஒரு வேளை அக்னிவீர் திட்டம் அப்போது மிகவும் அரசியலாக்க பட்டதால் தாங்கள் கருத்து பதிவு செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
கேப்டன் வெங்கட்டின் “உத்தரவிற்கு கீழ்படிதல் என்பது மனித இயல்புக்கு மாறானது” என்னும் வரி எனக்கு தற்கால குழந்தைகளை நினைவு படுத்தியது. தற்கால பெற்றோரின் மிக பெரிய குறையே தங்கள் குழந்தைகள் தங்கள் பேச்சை (அதாவது உத்தரவை) கேட்பதில்லை என்பதே.
தயவு செய்து தாங்கள் “உத்தரவிற்கு கீழ்படிதல்” பற்றி தெளிவு படுத்த வேண்டுகிறேன். தற்கால பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளை புரிந்து கொள்ள பேருதவியாக இருக்கும்.
மிக்க நன்றி
அன்புடன்
சந்தானம்
****
அன்புள்ள சந்தானம்
இந்தவகையான விவாதங்கள் எல்லாம் அடிப்படையில் மனித இயல்பு என்ன என்னும் வினாவை தேடிச்செல்பவை. மேலோட்டமாக ஓர் அரட்டைக்களத்தில் விவாதிக்கலாம். மேலதிகமாக விவாதிக்கவேண்டும் என்றால் விலங்கியல், மானுடவியல், நாட்டாரியல் தரவுகள் மற்றும் கொள்கைகளை வைத்துக்கொண்டு பேசவேண்டும்.
ஆனால் அதிலும் அறுதியாக ஏதும் சொல்லிவிட முடியாது. அதில் உறுதியான வெவ்வேறு தரப்புகள் இருக்கும். நம்முடைய சொந்த அனுமானங்களின் அடிப்படையில் ஒரு தரப்பை தெரிவுசெய்துகொள்ளவேண்டியதுதான்.
இந்த விவாதத்தில் நான் என் தரப்பென ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அப்படி முன்னரே ஓர் உறுதியான புரிதலை அடையவும் விரும்பவில்லை. எழுத்தாளனின் இயல்பல்ல அது. இந்த விவாதத்தை எப்படி முன்னெடுக்கலாம் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
முதலில் உசாவவேண்டிய வினா இது. கட்டளைக்குக் கீழ்ப்படிதல் மனிதனின் அடிப்படை இயல்பா இல்லையா?
விலங்கியல் என்ன சொல்கிறது? நாம் பார்க்கும் விலங்குகள் இரண்டுவகை. மந்தையாக வாழ்பவை, தனியாக வாழ்பவை. புலி தனியான விலங்கு. மான் மந்தை விலங்கு. மந்தை விலங்குகள் மந்தைகளுக்குரிய நெறிகள் கொண்டுள்ளன. பெரும்பாலான மந்தைவிலங்குகளில் உறுதியான தலைமை உண்டு. தலைமையின் ஆணைக்கு அந்த மந்தையின் அத்தனை விலங்குகளும் மறுப்பின்றி கட்டுப்பட்டாகவேண்டும். இல்லையேல் மந்தைவிலக்கம் முதல் கொலை வரை தண்டனைகள் உண்டு.
மனிதனுக்கு பரிணாமத்தில் அணுக்கமான விலங்குகள் சிம்பன்ஸிக்கள். அவை மந்தை விலங்குகளே. நாம் காணும் குரங்குகள் மந்தையாகவே வாழ்கின்றன. அவற்றில் தலைவன் உண்டு, அவன் ஆணைக்கு மொத்த மந்தையே முற்றிலும் கட்டுப்பட்டது. சும்மா குற்றாலத்துக்குச் சென்று ஒருமணிநேரம் குரங்குகளை கவனியுங்கள். தாட்டான் என ஊர்க்காரர்கள் சொல்லும் பெரிய ஆண்குரங்கு தலைமையேற்றிருப்பதை, அதன் ஆணைகளை அத்தனை குரங்குகளும் அப்படியே ஏற்பதை காணலாம். தாட்டான் தரையில் கையால் தட்டினால் அவ்வளவுதான், ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது. மீறப்பட்டால் கொலைதான்.
மானுட இனமும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும் என்றே எல்லா தொல் மானுடவியலாய்வுகளும் சொல்கின்றன. மானுடவியலும் நாட்டாரியலும் பழங்குடிகளைப் பற்றிச் சொல்லும் எல்லா விவரணைகளிலும் அவர்களிடமுள்ள தலைமை சார்ந்த ஒருங்கிணைப்பை குறிப்பிடுகிறார்கள். பழங்குடிகளில் தலைவனின் ஆணை என்பது குடிகளால் மறுசொல் இன்றி ஏற்கப்படவேண்டிய ஒன்று. இன்றும் அப்படித்தான். இப்போது மலைக்குச் சென்றாலும் பார்க்கமுடியும். கட்டளைக்குக் கீழ்ப்படிதல் என்பது பழங்குடிகளின் அடிப்படை இயல்பு. ஆகவே பழங்குடிகளிடம் மானுடப்பண்பு இல்லை என்று சொல்லிவிடமுடியுமா?
அதே மனநிலைதான் நாட்டார்ப் பண்பாட்டிலும் உள்ளது. ஊர்க்கட்டுப்பாடு, ஊர் நாட்டாமை இல்லாத கிராமங்களே இல்லை. மிக மிக மெல்லத்தான் அக்கட்டுப்பாடுகள் விலகி வருகின்றன. அவ்வாறு விலகிய கிராமங்களில்கூட திருவிழாக்களின்போதும் சாவு போன்ற சடங்குகளின்போது மீறமுடியா ஆணைகள் உண்டு.
ஆக, நாமறிந்த மானுட இயல்பு என்பது கட்டளைக்கு கீழ்படிவதே. மானுட இனம் விலங்கிலிருந்து அப்படித்தான் பரிணாமம் அடைந்துள்ளது. சேர்ந்து வேட்டையாடவும், சேர்ந்து போரிடவும் அந்த கீழ்ப்படிதல் உதவியாக இருந்துள்ளது. கீழ்ப்படிதல் கொண்ட சமூகங்களே வென்று ,தங்கி வாழ்ந்தன அவையே இன்றுள்ள சமூகங்களாயின.
இன்றைய ராணுவங்கள் எல்லாம் அந்த பழங்குடி ராணுவத்தின் செம்மைசெய்யப்பட்ட வடிவங்களே. பழங்குடிகளின் குழுமனநிலை, தாக்குதல் மனநிலை, கொண்டாட்ட மனநிலை அப்படியே இன்றும் ராணுவத்தில் நீடிக்கிறது. மீறமுடியாத தலைமையும் கீழ்ப்படிதலும் அவ்வாறுதான்.
கீழ்ப்படிதல் ஓரளவுக்கேனும் இல்லாத எந்த அமைப்பும் இருக்க இயலாது. பள்ளி முதல் அலுவலகங்கள் வரை. தொழிற்சாலை நெறிகள், சாலைநெறிகள், தொழில்நெறிகள் என நாம் கீழ்ப்படிந்தே ஆகவேண்டிய எத்தனை ஆணைகள் இங்குள்ளன. எத்தனை ஒழுக்க நெறிகளை இயல்பாக ஏற்று கடைப்பிடிக்கிறோம். சட்டை இல்லாமல் சந்தைக்குப் போகிறோமா என்ன? நாம் பிள்ளைகளுக்கு அளிக்கும் ‘நாகரீகப்’ பயிற்சியே அடிப்படையில் கீழ்ப்படிதல்தானே?
மனித குல வரலாற்றிலேயே தனிமனிதன், தனிச்சிந்தனை எல்லாம் மிக அண்மையில் உருவானவை. எப்படி நீட்டி வரலாறு எழுதினாலும் ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டுமுதல் தொடங்குவதுதான் அச்சிந்தனை. அவர்களிடமிருந்தே உலகம் கற்றுக்கொண்டது. தனிமனிதன் என்னும் உருவகத்தில் இருந்தே தனிமனிதனுக்கான ஆன்மிகம், தனிமனிதனுக்கான உரிமைகள் என வளர்ந்து ஜனநாயகம் வரை வந்தனர்.
இந்தியாவில் அஹம் என்றும் ஆத்மா என்றும் சொல்லப்படும் தனிமனிதன் என்னும் தத்துவ உருவகம் என்றும் உண்டு. ஆனால் சமூக வாழ்க்கையில் அது இல்லை. குழு அடையாளம், குடும்ப அடையாளமே ஒவ்வொருவருக்கும் இருந்தது. இருநூறாண்டுகளுக்கு முன்புவரை தன் வாழ்க்கை பற்றிய எந்த முடிவையும் எவரும் எடுக்க முடியாது. தொழில், குடும்பம், உறவுகள் எல்லாமே மரபால், இனக்குழுவால், சமூகநெறிகளால் எடுக்கப்படும்.
1951-ல் நடந்த முதல் இந்தியப் பொதுத்தேர்தலில் வாக்காளர்பட்டியல் தயாரிக்கப்பட்டபோது பலருக்கு சொந்தமாகப் பெயர்களே இருக்கவில்லை என்று ராமச்சந்திர குகா பதிவு செய்கிறார். ஆண்களுக்கு இனக்குழுவின் பெயரும் பெண்களுக்கு கணவன்பெயருமே அடையாளமாக அமைவது சாதாரணமாக இருந்தது. பெயர்களை அளித்து, அவர்கள் ஒரு விஷயத்தில் சுயமாக முடிவெடுக்கலாம் என்று சொல்லிக்கொடுத்தது தேர்தல் கமிஷன். இன்னமும் ஜனங்கள் முழுமையாக கற்கவில்லை. (காந்திக்கு பிறகு இந்தியா)
உங்கள் பாட்டியோ தாத்தாவோ எப்படி கல்யாணம் செய்துகொண்டார்கள்? தெரிவு இருந்ததா? முடிவெடுக்கும் உரிமை இருந்ததா? இயல்பாக, மறுசிந்தனை இல்லாமல் கட்டளைக்கு அடிபணிந்தார்கள் அல்லவா? அதுவே இயல்பென எண்ணினார்கள் அல்லவா? நம் சமூகத்தில் பெண்கள் தங்களை தனிமனித ஆளுமை என எப்போது நம்ப ஆரம்பித்தனர்?
இது ஒரு வாதம். இதற்கு மறுவாதம் என எதைச் சொல்லலாம்? இந்த அடிபணியும் இயல்பு உயிரியல் சார்ந்தது, மானுடப்பரிணாமத்தில் உருவாகி வந்தது. ஆனால் கலாச்சாரம் அதற்கு எதிரானது. அதுதான் தொடர்ச்சியாக மனிதனை கட்டமைத்தபடி வந்திருக்கிறது. இன்றைய மனிதன் கலாச்சாரத்தின் சிருஷ்டி. அவனுக்கு அவன் தனிமனிதன் என சொல்லப்பட்டிருக்கிறது. அவன் தன் தனித்தன்மையை, உரிமையை நம்புகிறான்.
இன்றைய மனிதனின் இயல்பு அவனுக்கு இருக்கும் கலாச்சார பயிற்சியால் உருவானது மட்டுமே. அவனிடமிருக்கும் உயிரியல்பு இரண்டாம்பட்சமே. ஆகவே கீழ்ப்படிதல் அவனுக்கு இயல்பானது அல்ல. ஆணைகளை மீறுவதும், தனித்தன்மையை பேணுவதுமே மானுட இயல்பு. இப்படி வாதிடலாம். மீறுபவனே மானுட இயல்புக்கு அணுக்கமானவன். கீழ்ப்படிபவன் எதிரானவன்.
ஆக, கேள்வி உயிரியல்பா கலாச்சாரப்பயிற்சியா எது மனிதனை உருவாக்குகிறது என்பதாக எஞ்சும். அது தத்துவார்த்தமான கேள்வி. அதற்கு இருபக்கமும் நின்று நிறைய வாதிடலாம். இருபக்கத்துக்கும் பேரறிஞர்கள் துணைவருவார்கள்.
ஜெ