நேரப்பொறுப்பு

அன்புள்ள ஜெ

கடந்த சில வருடங்களாகவே நான் என்னுடைய சில நண்பர்கள் வட்டத்திலிருந்து punctuality காரணமாக கொஞ்சம் விலகி இருக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்றால் குறித்த நேரத்திற்கு யாரும் வருவதில்லை. ஒரு விஷயம் செய்ய வேண்டி இருப்பின் அந்த நேரத்தில் அது செய்யப்படுவதும் இல்லை, அது ஏன் செய்ய முடியவில்லை என்பதற்கான காரணமும் சொல்வதில்லை. நான் கடந்த சில வருடங்களாகவே யுரோப்பியன் கம்பெனிகளுக்கு வேலை செய்து கொண்டிருப்பதால் அவர்களுடன் தினமும் தொடர்பில் இருப்பதால், இந்த விஷயம் எனக்கு முக்கியமானதாகப்படுகிறது.

கடந்த நான்கு ஐந்து வருடங்களில் பார்த்தால் நிறைய நண்பர்களின் தொடர்பில் இருந்து நான் விலகி இருந்திருக்கிறேன் இந்த punctuality/responsibility காரணமாக. இது எனக்கு கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. நான் இது பற்றி விவாதித்தால் சண்டை வருகிறது மேலும் என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை இது பொறுப்பின்மை என்றே படுகிறது. இதன் காரணமாக நிறைய வாட்ஸப் குழுவில் இருந்தும் நான் விலகி இருக்கிறேன். மிகச் சிறுபான்மையினர்  தான் சொன்னதை சொன்னபடி செய்கிறார்கள், இல்லையெனில் அதை முன்கூட்டியே தெரிவித்து விடுகிறார்கள். அவர்களிடம் மட்டுமே தொடர்பில் இருக்க வேண்டியுள்ளது. நான் செய்வது சரிதானா? இல்லை இந்த உலகம் அப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறதா? இதை எப்படி எடுத்துக் கொள்வது? இது பற்றி ஏதேனும் எழுதி இருக்கிறீர்களா என்று தெரியப்படுத்தவும்.

சுரேஷ்

கோவை

*

அன்புள்ள சுரேஷ்,

நேரப்பொறுப்பு உலகமெங்கும் இன்று ஒரு பெரிய நெறியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய வாழ்க்கையின் அடிப்படைகளில் ஒன்று அது.

ஆனால் அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நேரப்பொறுப்பு என்பது சென்ற இருநூறாண்டுகளாக உலகத்தில் உருவாகி வந்த ஒன்று. இந்தியாவுக்கு சென்ற நூறாண்டுகளாகவே அது பழக்கமாகியிருக்கிறது. இன்னமும் நம் உள்ளத்தில் அது பதியவில்லை.

நான் மலைப்பகுதியில் பார்த்திருக்கிறேன். நேரம் என்பதே அங்கில்லை. பத்துமணிக்கு வரும் பேருந்துக்கு காலை ஏழுமணி முதல் வந்து அமர்ந்திருக்கிறார்கள். சலிப்படைவதுமில்லை. எதையாவது பேசிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். வேலைக்கு வருவது பொதுவாக வெளிச்சம் வந்தபின். குளிர்காலத்தில் பலசமயம் அது பத்து மணி. ஒருவரின் வீடு மலைநிழலில் இருந்தால் அவர் காலை என்று சொல்வது பெரும்பாலும் ஒன்பதுமணியாக இருக்கும்.

கைவெளிச்சம் மறைவது வரை, காக்காய்ச்சத்தம் கேட்கும்போது, நிழல் மங்கும்பொழுது – இப்படித்தான் நான் சின்ன வயதில் நேரத்தை நினைவுபடுத்துபவர்களைக் கண்டிருக்கிறேன். நேரம் என்பதே தோராயமானதுதான்.

திருவிதாங்கூரில் நேரம் அரசப்பணிகளுக்காக அளவிடப்பட்டது. முக்கியமான இடங்களில் பீரங்கி வெடித்து நேரம் சொல்லப்படும். அதுதான் கன் டைம் எனப்பட்டது. பின்னர் சங்கொலி வந்தது. கடிகாரம் வந்ததெல்லாம் நூறாண்டுகளில்தான்.

இன்றும்கூட பலர் அந்த பழைய நேரமனநிலையில்தான் வாழ்கிறார்கள். அப்படி வாழ்பவர்கள் எவர் என்று பார்த்தால் ஒன்று தெரியும், அவர்கள் பொறுப்பாகச் செய்தேயாகவேண்டிய பணிகள் இல்லாதவர்கள். அதாவது எங்காவது வேலைபார்ப்பவர்கள். பிந்திப்போனால் ஏதாவது சமாதானம் சொன்னால்போதும். பிந்தினால் பண இழப்பு ஏற்படும் நிலையிலுள்ள எந்த வணிகராவது நேரப்பிழை செய்கிறாரா? என் நண்பர் டைனமிக் நடராஜன் ‘அஞ்சு நாப்பத்தெட்டுக்கு அங்க இருப்பேன்’ என்றுதான் நேரம் சொல்வார்.

ஊழியர்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல் பணியாற்றி காலப்போக்கில் ஒரு மெத்தனம் உருவாகிவிடுகிறது. பத்துமணி என்றால் அது பத்துக்கும் பதினொரு மணிக்கும் நடுவே எங்காவதுதான். நானும் அரசுப்பணியில் இருந்தபோது அப்படித்தான் இருந்தேன்.

ஆனால் சினிமாவுக்கு வந்ததும் எல்லாம் மாறிவிட்டது. இங்கே என் நேரம் இன்னொருவரின் நேரத்துடன் இணைந்தது. அது வேறொருவரின் நேரத்துடன் இணைந்தது. ஒருவர் தாமதமானால் அத்தனைபேர் வேலையும் தாமதமாகும். அனைவர் பொழுதும் வீணாகும். பதிமூன்றாண்டுகளில் ஒருநாள் ஐந்து நிமிடம் எதற்காகவும் மணி ரத்னம் பிந்தி நான் கண்டதில்லை.

ஆனால் வாழ்க்கை முழுக்க நேரப்பொறுப்பு இருந்தாகவேண்டும் என்பதில்லை. அவ்வப்போது எல்லாவற்றையும் கழட்டிப்போட்டுவிட்டு இருக்கலாம். மதியம் பல்தேய்க்கலாம். பின்மாலையில் மதியச்சோற்றை சாப்பிடலாம். அது ஓரு விடுதலை. ஆனால் நம் விடுதலையால் இன்னொருவர் நேரம் வீணடிக்கப்படலாகாது.

உங்கள் கேள்விக்கே வருகிறேன். நேரப்பொறுப்பில்லாதவர் எவர் என்பதை கொண்டே நீங்கள் முடிவெடுக்க முடியும். நேரப்பொறுப்பை கடைப்பிடிக்காதவர் உங்களுக்கு பணலாபம் தரும் வாடிக்கையாளர் என்றால் அவரை புறக்கணிக்கமுடியுமா? (வேண்டுமென்றால் ரகசிய அபராதம் போட்டு வசூல் செய்யுங்கள்)

ஒருவர் அவருடைய நன்மைக்காக நம்மைச் சந்திக்கையில் நேரப்பொறுப்பை கடைப்பிடிக்கவில்லை என்றால் அவரை முழுமையாகவே தவிர்க்கலாம். வெறும் நட்புகளில் அவ்வாறு இருந்தாலும் தவிர்த்துவிடலாம். நான் அப்படித்தான். ஒருமுறை நேரம்பிந்தியவரை அதன்பின் பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.

வழக்கமான ஒரு சாக்கு உண்டு. உயர்நிலையில் இருப்பவர்கள் நேரப்பொறுப்புடன் இருக்கலாம். எளியநிலையில் இருப்பவர்கள், பேருந்தில் செல்பவர்கள் நேரப்பொறுப்புடன் இருக்க இயலாது என்பார்கள். அது பொய். எதற்கும் ஒரு கணக்குண்டு. மிக அவசியமான ஒன்று என்றால் எவரும் அந்தக் கணக்கை போட்டு சரியான நேரத்தில் செல்லவே செய்கிறார்கள். நேரம் பிந்துபவர் இரண்டு விஷயத்தையே உணர்த்துகிறார். ஒன்று, அந்த சந்திப்பு அவருக்கு அவ்வளவு முக்கியமில்லை. இரண்டு, அவர் அவ்வளவு சூட்டிகையான ஆள் அல்ல.

நேரம்பிந்துவதற்கு பின்னாலுள்ளது ஒருவகை மிதப்பு. அதற்கு அடிப்படை உளச் சோம்பல். உள்ளம் ஒரு செயலில் இருந்து இன்னொன்றுக்குச் செல்ல தயங்கி அதை ஒத்திப்போடுகிறது. அதை ஒருவகை எனலாம். எடைமிக்க பொருட்களுக்கு அந்த செயலின்மை உண்டு.

நான் ரயிலுக்குக் கிளம்பும்போது பார்த்திருக்கிறேன். ”ரயில் எட்டு மணிக்குத்தான், ஏழரை மணிக்கு கிளம்பினா  ஏழு அம்பதுக்கு ரயில்வே ஸ்டேஷன், பத்து நிமிசம் நடந்தா பெட்டிக்குள்ள நுழைஞ்சிடலாம். என்ன அவசரம்?” என்பார்கள்.  நான் கிளம்பும்போது ஒவ்வொரு முறையும் எவரேனும் அதைச் சொல்வார்கள்.

ஏன் அப்படிச் செல்லவேண்டும்? செல்லும் வழி முழுக்க பதற்றப்படவேண்டும். பரபரப்புடன் ஓடி ரயிலைப் பிடித்தால் அதில் ஒரு பெருமிதம். “நான் போறதுக்குள்ள ரயில எடுத்திட்டான்…அப்டியே ஓடி ஏறிட்டேன்” என்பதில் ஒரு மகிழ்ச்சி. நான் ஒருமணிநேரம் முன்னரே கிளம்பி ரயில்நிலையத்தில் நின்றிருப்பேன். செல்லும்வழியில் சாவகாசமாக வேடிக்கை பார்க்கலாம். ரயில்நிலையத்தில் நின்று நாலைந்து போன் அழைப்புகளை பேசினால் ரயிலில் நிதானமாக ஏறலாம்.

அதற்கு முன், என் பணிகளை முடித்திருப்பேன். எனக்கு பணி ஓய்வதே இல்லை. எங்கு சென்றாலும் எது செய்தாலும் என் இணையப்பக்கம் வலையேறியாகவேண்டும். 14 ஆண்டுகளாக இது ஒருநாளும் பிந்தியதில்லை. பணியோ நெருக்கடியோ நேரப்பொறுப்பின்மைக்குக் காரணமில்லை. ஒருவர் தன் உள்ளத்தை அதற்குப் பயிற்றவில்லை, அவருக்கு இன்னொருவரின் நேரம் பற்றி அக்கறையில்லை அவ்வளவுதான்.

ஜெ

***

முந்தைய கட்டுரைவேதாளம் [சிறுகதை]
அடுத்த கட்டுரைபொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு