இன்று ஓங்கியுள்ள உலகியல்தன்மை என்பதுதான் இந்திய இலக்கியத்தின் மிகப்பெரிய போதாமை என்று நான் நினைக்கிறேன். உலகியல்தன்மை ஏன் இலக்கியத்தில் இருக்கக்கூடாது என்று கேட்கலாம். உலகியல்தன்மை இலக்கியத்தில் உறுதியாக இருந்தாக வேண்டும் என்றே நான் சொல்வேன். உலகியல் தொடர்பு இல்லாத இலக்கியப்படைப்பு மிக எளிதாக தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்துவிடும். அதீதமான கற்பனாவாதத் தன்மை கொண்ட ஆக்கங்களிலும்கூட உலகியல் உள்ளுறைந்தே இருக்கவேண்டும். மாபெரும் செவ்வியல் படைப்புகள் அனைத்தும் இன்று படிக்கப்படுவதென்பது அவற்றின் உலகியல் தன்மையால்தான். ஒவ்வொரு அன்றாட வாழ்க்கைச் சிக்கலிலும் நாம் ராமாயணத்தையோ மகாபாரதத்தையோ பெரும் புராணங்களையோ நினைவுகூர்கிறோம்.
இலக்கியம் ஒருபோதும் உலகியலிலிருந்து விலகிச்செல்ல இயலாது. உலகமே இலக்கியத்தின் தொடக்கமாக அமைய முடியும். ஒரு வாசகன் ஓர் இலக்கியப்படைப்பை எடுக்கும்போது அவ்னுடைய அன்றாட வாழ்க்கையில், அவனுடைய அகத்தில் நிகழும் சிக்கல்களை அது தொட்டு உசாவத் தொடங்குகையிலேயே அவன் அதற்குள் நுழைகிறான். ஒரு நல்ல வாசகனின் முதல் கேள்வியே ‘இந்நூல் என் வாழ்க்கையில் எனக்கு என்ன அளிக்கும்?’ என்பதுதான்.
ஆனால் இலக்கியத்தின் முடிவுப்புள்ளியும் உலகியலாக இருக்குமெனில் அது எளிய இலக்கியமாக ஆகிவிடுகிறது. இலக்கியம் உலகியலிலிருந்து உலகியலுக்கு அப்பாற்பட்ட தளம் நோக்கி எழுந்தாக வேண்டிய கட்டாயம் கொண்டது. அந்தக் கட்டாயம் எதிலிருந்து வருகிறதெனில், அன்றாட வாழ்க்கை சார்ந்த வினாக்கள் எப்போதுமே அவற்றின் உச்சநிலையில் சென்றடைவது அன்றாடத்திற்கு அப்பாற்பட்ட என்றுமுள தளத்தைத்தான் என்பதனால்தான். அந்த ஆழத்துக்குச் சென்றடையாவிடில் இலக்கியம் அதன் அடிப்படைக் கடமையைச் செய்யாமல் நின்றுவிட்டது என்றே பொருள்
ஏன் அழம் என்பது உலகியலுக்கு அப்பாலுள்ளதாக உள்ளது? மனிதவாழ்க்கையின் சிக்கல்கள், வினாக்களுக்கான விடைகளை இன்றுள்ள சமூகச் சூழலில், இன்றுள்ள உளவியல்சூழலில் தேடும்போது அவை எல்லைக்குட்பட்ட பேசுதளத்தையே கொண்டுள்ளன. ஆழமாகச் செல்லச் செல்ல நாம் மானுட இனத்தின் அடிப்படை இயல்புகளை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறோம். மானுடனின் பரிணாமத்தையே கருத்தில்கொள்கிறோம். மேலும் விரிந்து உயிர்க்குலத்தின் இயல்புகளை, அவற்றுக்கிடையேயான உறவுப்பின்னலை, அவற்றின் இயக்கவிதிகளை நோக்கிச் செல்கிறோம். ஒட்டுமொத்த இயற்கையையும். பிரபஞ்சவியலையும் கருத்தில்கொள்கிறோம். அவை உலகியலுக்கு அப்பாற்பட்டவை. புறவயத் தர்க்கத்தால் மட்டுமே அறியவோ அறியவைக்கவோ முடியாதவை. படிமங்கள், ஆழ்படிமங்கள் என இலக்கியத்தின் அழகியல் உத்திகள் வழியாக ஆசிரியனின் அகக்கனவில் இருந்து வாசகனின் அகக்கனவுக்குச் செல்பவை. அந்த உரையாடலையே இலக்கியத்தின் ஆழம் என்கிறோம்.
உங்கள் தனிவாழ்க்கைச் சிக்கலை உள்ளூர் டீக்கடையில் சொல்கிறீர்கள். அதற்கு அங்கிருக்கும் ஒரு பெரியவர் உகந்த பதிலொன்றை சொல்கிறார். அது வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் தெளிவுறுத்துவதாகவும் இருக்கிறது. இதற்கு அப்பால் இலக்கியம் கூடுதலாக என்ன சொல்கிறது என்பதுதான் இலக்கியப்படைப்பு எழுதப்படுவதற்கான காரணமாக அமைகிறது. அவ்வாறன்றி அந்த டீக்கடை உரையாடலே போதுமெனில், இலக்கியம் அதைக்கூட அளிக்கவில்லை எனில், இலக்கியம் எனும் கலையே தேவையில்லை. எளிய உலகியல் விவேகத்தை எந்த வயது முதிர்ந்தவரும் உங்களுக்கு அளிக்க முடியும். உலகியல் சார்ந்த அரசியல் எங்கும் காசுக்கு எட்டாக பெருகிக் கிடைக்கிறது. சமூகவியல் ஆய்வுகள் தினசரிகளில் நுரைத்து விளிம்பு கவிகின்றன. அதற்கப்பால் ஒரு அடியேனும் முன்னெடுத்து வைக்கையிலேயே இலக்கியம் ஏன் எழுதப்படவேண்டும் என்ற கேள்விக்கான விடை அமைகிறது.
அந்த ‘கூடுதல்’ அம்சம்தான் இலக்கியம் இத்தனை ஆண்டுகளாக திரும்ப திரும்ப இங்கே எழுதப்படுவதற்கான காரணமாக அமைந்திருக்கிறது. உலகியலைத் தொட்டு தொடங்கி, உலகியலைக் கடந்து, என்றுமுள சில விவேகங்களை நோக்கி ,சில தத்துவ தரிசனங்களை நோக்கி, சில அடிப்படைத் தெளிவுக்ளை நோக்கி வாசகனை கொண்டு சென்று சேர்க்காவிடில் இலக்கியம் என்பது பயனற்றதே ஆகும்.
இன்றைய உலகியல் எழுத்தாளர்கள் இந்த கூற்றை மறுக்கக்கூடும். பின்நவீனத்துவத் களத்தில் ஒரு சாரார் ‘என்றுமுளது’ என்ற சொல்லுக்கு கடும் மறுப்பை தெரிவிக்கக்கூடும். ஆனால் என்றுமுளது ஒன்று உண்டு என்பதிலிருந்தே இங்கு வாழ்க்கை நிகழ்கிறது. தற்செயல்களால் ஆனதல்ல வாழ்க்கை என நிறுவுவதே மானுட சிந்தனையின், இலக்கியத்தின் முதன்மை நோக்கம். ஆகவேதான் அது வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிறது, பொதுமைப்படுத்துகிறது, சாராசப்படுத்துகிறது. சிந்தனை தொடங்கிய காலம் முதல் இதுவே நிகழ்ந்து வருகிறது. இன்று காலை சிலருக்கு அது தவறு என்று தோன்றியதனால் அப்போக்கு நின்றுவிடுவதில்லை. அவ்வாறு சொல்பவர்கள் ஒரு தரப்பாக எஞ்சுவார்கள். ஆனால் அத்தரப்பு என்றுமுள்ளது. தர்க்கவாதம் என்றும் சார்வாகம் என்றும் ஐயவாதம் என்றும் ஆனால்வாதம் இங்கே அது சொல்லப்பட்டது. ஸ்கெப்டிஸிசம் என்றும் நிகிலிசம் என்றும் அக்னாஸ்டிஸிசம் என்றும் மேலைநாடுகளில் விவாதிக்கப்பட்டது. ஆனால் அதற்கப்பால் சாராம்சப்படுத்தும் போக்கு என்றுமிருக்கும்.
ஒருவேளை அச்சாராம்சம் கற்பனைதான் என்றாலும் அது மானுடனுக்கு தேவையாகிறது. இங்கு வாழ்க்கை என்பது ஒவ்வொரு கணத்திலும் முன்பிலாத வகையில் மட்டுமே சென்றுகொண்டிருந்தது எனில் இங்கு நாகரிகம் இல்லை. மனித வாழ்க்கையின் எந்த அடிப்படைகளும் இல்லை. அது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு பேச்சுக்காக மட்டுமே ‘என்றுமுள ஒன்றில்லை’ என்று சொல்லிக்கொள்கிறோமே ஒழிய என்றுமுள ஒன்றை நாம் ஒவ்வொரு கணத்திலும் நம்பிக்கொண்டுதான் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறோம். என்றுமுள சில மட்டுமே நமக்கும் நம் தந்தைக்குமான தொடர்பை உருவாக்குகின்றன. நமக்கும் நம் மைந்தர்களுக்குமான தொடர்பை உருவாக்குகின்றன அந்த முடிவிலாச் சரடு வழியாகவே மானுடன் ‘மானுடம்’ என்னும் அமைப்பாக மாறுகிறான். இங்கு உண்டு புணர்ந்து வாழ்ந்து மடியும் இவ்வுயிர்த்திரள் மானுடமென்னும் பெரும் கருத்துத்திரளாக ஆகிறது.
எந்த இலக்கியமும் ’மானுடத்தன்மை’ கொள்ளும்போதே மெய்யான இலக்கியமாக ஆகமுடியும் அந்த மானுடத்தை நோக்கி செல்லும்போது மட்டுமே இலக்கியம் அதன் மெய்யான பங்களிப்பை ஆற்ற முடியும். இல்லையேல் இலக்கியம் எளிய அன்றாடத்தன்மை கொண்டதாகிறது. அன்றாடத்திலேயே நிகழ்ந்து அதிலேயே மடிகிறது. ஒவ்வொரு நாளும் பொலிந்து உதிர்ந்து மறையும் இலைகளாக இலக்கியப் படைப்பு இருக்கலாம். ஆயிரம் பல்லாயிரம் இலைகளை உற்பத்தி செய்து பூத்து கனிந்து அங்கு நின்றிருக்கும் பெருமரமாகவும் இலக்கியம் இருக்கலாம்.
உண்மை, அந்தப்பெருமரங்களும் காலப்பெருக்கில் மறைந்து செல்லக்கூடியவைதான். நாம் எழுதும் நூல்கள் எத்தனை நூல்கள் ராமாயணம் மகாபாரதம் போல நின்றிருக்கும் என்று நமக்குத் தெரியாது. இன்னும் ஆயிரமாண்டுகளுக்குப்பின் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கும் என்று கூட நம்மால் சொல்ல முடியாது. புவி எனும் மரத்தில் இங்குள்ள பெருமரங்களும் உதிரும் இலைகளே. இப்பிரபஞ்சத்துக்கு புவியே ஒர் உதிருமிலைதான். ஆயினும் நாம் இங்கு ஒன்றை திரட்டிக்கொண்டிருக்கிறோம் என்னும் தன்னுணர்வு நமக்குத்தேவை. நாம் அழியாத ஒன்றை இங்கே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். சாராம்சமான ஒன்றை. அதில் நாம் தனியாக தெரியாமலிருக்கலாம். நம் பங்களிப்பும் அதில் உண்டு என்பதே நமக்கான ஊக்குவிசை.
அடிப்படை வினாக்களுக்கு இடமற்றதாக இந்தியச் சமூகம் மாறியுள்ள சூழலில் நின்றுகொண்டு அடிப்படை வினாக்களை மட்டுமே எழுதும் இலக்கியப் படைப்புகளுக்குத்தான் இங்கு தேவையுள்ளது என்று நான் நினைக்கிறேன். இந்தியச் சமூகத்திற்கு அடிப்படை வினாக்களை மறுபடியும் மறுபடியும் எடுத்துரைக்கவேண்டிய, அறிவுறுத்த வேண்டிய பொறுப்பு இலக்கியத்துக்கு உள்ளது. இந்திய வாசகர்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் அந்த தளம் நோக்கி வரமாட்டார்கள் என்பதும் அவர்கள் தங்கள் அன்றாடத்தின் அரசியல்ச் சிக்கல்களையும் உளச்சிக்கல்களையும் மட்டுமே இலக்கியத்தில் தேடுவார்கள் என்பதும் உண்மையே. ஆனால் தன்னிடம் கோருவதை எழுதுவதல்ல இலக்கியவாதியின் பணி.
இலக்கியவாதி என்பவன் தன் வாசகர்களின் தளத்தில் தானும் நின்றிருக்கும் ஒருவன் அல்ல. தேர்ந்த கேளிக்கை எழுத்தாளன் தன் வாசகர்களின் அதே தளத்தில் தானும் வாழ்பவன். அவர்களுடைய அகத்தை நன்கு தெரிந்தவன். உண்மையிலேயே தான் எழுதுவதை தானே மிக விரும்புபவனே நல்ல கேளிக்கை எழுத்தாளன் என்பார்கள். கேளிக்கை எழுத்தாளர்கள் அவர்கள் எழுதும் எழுத்தின் தரத்திலேயே அவர்கள் வாசிப்பின் தரத்தையும் வைத்திருப்பவர்கள். கேளிக்கை எழுத்தாளகளின் வாசகர் வாசிப்பை அன்றாடத்திலேயே நிறுத்திவிடுபவர். அவ்வாசகர்களில் ஒருவர் எழுந்து வந்து அவர்களுக்காக எழுதுபவர்தான் கேளிக்கை எழுத்தாளர். இலக்கியவாதி அப்படி அல்ல. அவன் அடிப்படை வினாக்களை நோக்கிச் சென்றாகவேண்டியவன். அதன்பொருட்டு தன் வாசகர்களின் பொதுத்தளத்தை மீறி தான் எழுந்தாகவேண்டியவன்
அடிப்படை வினாக்கள் இன்றி இலக்கியம் அமையாது என்று அறிந்தவன் மட்டுமே இலக்கியவாதி. அவன் வாழ்வின் நிகழ்வுகளிலிருந்து தூண்டுதல் பெற்று என்றுமுள சிலவற்றை நோக்கித் தன்னை கூர்மைப்படுத்திக்கொண்டவன். காரந்தோ டால்ஸ்டாயோ அத்தகையவர்களே .அவர்கள் கேட்ட கேள்விகளும் அளித்த பதில்களும் எளிய வாழ்க்கைக்கானவை அல்ல. வாழ்க்கையை கடந்து செல்பவை ,மானுடத்தை நோக்கியவை.
ஒரு பண்பாட்டுச் சூழலில் அத்தகைய கேள்விகள் ஏன் எழவேண்டும் என்பது இன்னொரு முக்கியமான ஐயமாக சிலரில் எழலாம். ஒரு சூழலில் அடிப்படை வினாக்கள் எழவில்லை எனில் அச்சூழல் தன் அன்றாடத்தின் வினாக்களை சரியாக எழுப்பவோ, அவற்றின் விடைகளை கண்டடையவோ முடியாது. ஏனெனில் அன்றாடத்தில் எழுப்பப்படும் வினாக்களுக்குக் கூட தெளிவான விடைகள் உண்மையில் ’என்றுமுள’ ‘மாறாத’ அடிப்படைகளிலேயே உள்ளன. உதாரணமாக, ஓர் ஆணும் பெண்ணும் கொள்ளும் உறவில் உருவாகும் ஆணவச்சிக்கலுக்கான விடை அந்த ஆணவச்சிக்கலின் களத்தில் வைத்து ஆராயப்பட வேண்டியதல்ல. ஆண்- பெண் என்னும் இருமை என்றும் இங்கு எவ்வண்ணம் திகழ்ந்துள்ளது என்றும், அதன் அடிப்படை இயல்புகளும் அதன் அறைகூவல்களும் என்ன என்றும் உண்மையிலேயே உணர்ந்த ஒருவரால் மட்டுமே கையாளத்தக்கது அக்கேள்வி.
ஒருவர் சாதாரணநிலையில் எளிய அன்றாட உண்மையை ஒட்டிய பதில்களைச் சொல்லலாம். ஒருவருக்கு ஒரு தருணத்திலும் பொருந்தும் ஒரு விடையைச் சொல்லலாம். அனைவருக்குமான ஒரு விடையைச் சொல்லமுடியாது. ஆனால் அதைச் சொல்வதே இலக்கியம். ஆழம் என நாம் சொவது அந்த பொதுமையைத்தான். ’Universal Truth’ என்பதே இலக்கியத்தின் ஆழம் என முன்வைக்கப்படும் உண்மை. இலக்கியம் என்பது எல்லாவகையான பகுதியுண்மைகள், சார்நிலைகள் அனைத்தையும் கருத்திகொண்டபடி ஏதோ ஒருவகையில் முதல்முழுமை (Absolutism) நோக்கியே முகம்திருப்பி செல்கிறது என நினைக்கிறேன்.
முப்பதாண்டுகளுக்கு முன் நடராஜ குருவின் Autobiography of an Absolutist நூலின் அட்டையை பார்த்து அச்சொல்லில் திகைப்படைந்ததை நினைவுகூர்கிறேன். அன்று அந்தச் சொல்லுக்கு எதிராகச் செல்லவே என் இளமை அன்றைய என் சிந்தனையை தூண்டியது. இன்று பணிவுடன் ‘ஆமாம் குரு, அது அங்குள்ளது’ என்று சொல்லிக்கொள்கிறேன்.
(நிறைவு)
ஜெயமோகன் நூல்கள்
வாசிப்பின் வழிகள் வாங்க
வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க
வணிக இலக்கியம் வாங்க
இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க
இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க