இன்றைய எழுத்தில் அடிப்படைக்கேள்விகள்-2

ஏ.ஜே.அயர்

பின்நவீனத்துவச் சூழல் நமக்கு நவீனத்துவத்தின் தர்க்கம் சார்ந்த, உலகியல் சார்ந்த தளைகளில் இருந்து மேலெழும் வாய்ப்பை அளித்தது. பல தர்க்கங்களால் ஆனது நம் அறிவுக்கட்டுமானம். உதாரணமாக, வரலாறென்பது ஒரு வகை தர்க்கபூர்வக் கட்டமைப்பாக நம் மூளைக்குள் உள்ளது. மாற்றுவரலாறுகளை புனைவதன் வழியாக நாம் அந்த கட்டமைப்பின் சிறையில் இருந்து வெளியேறலாம் என்று பின்நவீனத்துவச் சூழல் நமக்குக் காட்டியது. நம் தொன்மங்களை அவ்வண்ணம் மறுபுனைவு செய்யலாம். நம்மையே நாம் மறுபுனைவு செய்துகொள்ளலாம். வரலாறு, மரபு, தனிமனிதன் எல்லாமே புனைவுகள் எனும்போது அது அளிக்கும் வாய்ப்புகள் முடிவற்றவை. பின்நவீனத்துவம் அந்த வாய்ப்பை அளித்தது உன்னதம் என அது சொல்லும் அதீதநிலையை எட்டும்பொருட்டே.

ஆனால், இந்தியாவுக்கு பின்நவீனத்துவம் வந்தபோது அது திருப்பி போடப்பட்ட நவீனத்துவமாக இருந்தது. நவீனத்துவம் மேலோட்டமாக எதையெல்லாம் முன்வைத்ததோ  அதையெல்லாம் மறுப்பது மட்டுமே பின்நவீனத்துவம் என்று இங்கே புரிந்துகொள்ளப்படுகிறது. நவீனத்துவம் வடிவ ஒருமை, மையம், இலக்கு ஆகியவற்றை கொண்டிருந்தது. ஆகவே  வடிவமின்மை, மையமின்மை, நோக்கமின்மை ஆகியவை மட்டுமே பின்நவீனத்துவம் என்றும்; நவீனத்துவம் தனக்கென வைத்துக்கொண்ட தற்கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறிச் செல்வதே பின்நவீனத்துவம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆபாசம், பாலியல்மீறல், கொடூரச்சித்தரிப்புகள் மட்டுமே பின் நவீனத்துவம் என்று நம்பும் ஒரு சூழல் இங்கு உருவாகியது.

அதேசமயம், இந்தியாவின் பின்நவீனத்துவரிடையே ஒரு குறிப்பிட்ட இயல்பைக் காணலாம். அவர்கள் என்னதான் மீறல், கலகம் என்று பேசினாலும் முன்னர் நவீனத்துவர் பேசிய அதே அரசியலையே தாங்களும் பேசுவார்கள். அந்த அரசியல் சரிநிலைகளை மீறவே அவர்களால் இயலாது. இங்கே ஆச்சரியங்கள் ஏராளம். தங்களை பின்நவீனத்துவர் என அறிவித்துக் கொண்ட பலர் பல இலக்கியப்  படைப்புகளை விமர்சித்ததும் நிராகரித்ததும் அவை ’முற்போக்கான’  ‘அரசியல் சரிநிலைகொண்ட’ நிலைபாடுகளை வெளிப்படையாக முன்வைக்கவில்லை என்ற கோணத்திலேயே. இந்தியச் சூழலில் பின்நவீனத்துவம் என்பது முந்தைய நவீனத்துவகால அரசியலை, இன்னும் சொல்லப்போனால் எளிமையான கட்சியரசியலை,  கொஞ்சம்  ‘ஆபாசமான’ மொழியில் சொல்வது மட்டுமே என்றுதான் புரிந்துகொள்ளப்பட்டது.

தர்க்கபூர்வமாக, புறவயமாக எண்ணி எடுக்கப்படும் அரசியல்நிலைபாடுகள் கொண்ட எழுத்து எப்படி பின்நவீனத்துவச் சூழலுக்கு உரியதாக இருக்கமுடியும்? எப்படி அதில் அதீதங்களும், மயக்கநிலைகளும், பிறழ்வுகளும், உச்சங்களும் வெளிப்பட முடியும்? முப்பதாண்டுகளுக்கு முன் தமிழின் நவீனத்துவச் சூழலில் பேசப்பட்ட அளவுக்குக்கூட உளம்கடந்த, அதர்க்கநிலை எழுத்துவெளிப்பாடுகள் இன்று பேசப்படுவதில்லை. வெங்கட் சாமிநாதன் முன்வைத்த டிரான்ஸ் போன்ற கருத்துக்களுக்குக்கூட இன்று இடமில்லை. இன்று இலக்கியத்தில் புகுந்து கருத்துக்களை முன்வைக்கும் பல விமர்சகர்களின் பேச்சும், உளநிலையும் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் தரத்திலானவை.

நவீனத்துவ காலகட்டத்திற்குப் பின்பு ஒரு விசித்திரச் சூழலும் உருவாகியது. நவீனத்துவ காலகட்டத்தில் இலக்கியத்தின்மேல் கவனம் இருந்தது. இலக்கியவாதிகள் முதன்மை ஆளுமைகளாக கருதப்பட்டனர். அப்போது உலகமெங்கும் வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான வேறுபாடும் தெளிவாக இருந்தது. அந்த வேறுபாட்டை நவீனத்துவர்கள் சார்த்ர் முதல் சுந்தர ராமசாமி வரை வலியுறுத்திக்கொண்டும் இருந்தனர். தமிழ்ச்சூழலில் நவீனத்துவர்களுக்கு புகழ் இருக்கவில்லையாயினும் கவனமும் முக்கியத்துவமும் இருந்தது. ஆனால் பின்நவீனத்துவச் சூழலில் இலக்கியவாதிக்கும் இலக்கியத்திற்கும் இருந்த அந்த முக்கியத்துவம் இல்லாமலாகிவிட்டிருக்கிறது.

அதற்குப் பல காரணங்கள். முதன்மையாக , ஊடகப்பெருக்கம். இங்கே மின்னூடகம், சமூகஊடகம் ஆகியவை எல்லாரையும் எப்படியோ முன்னிறுத்த ஆரம்பித்தன. சாமானியர் தங்களை தாங்களே பார்த்து, கேட்டு மகிழ ஆரம்பித்தனர். சட்டென்று வணிகக்கேளிக்கை எழுத்து இல்லாமலாகியது. பின்நவீனத்துவர்கள் அவர்களே இலக்கியத்துக்கும் கேளிக்கைக்குமான வேறுபாட்டை மறுத்து, அழித்தனர்.  அத்துடன் நூல்வெளியீடும் வாசிப்பும் வணிகமயமாகி, இலக்கியமானாலும் தத்துவமானாலும் விற்பனையே முதன்மை அளவுகோல் என்னும் நிலை உருவானது.

பின்நவீனத்துவ எழுத்து தன் அறம் சார்ந்த பொறுப்புகளை துறந்தது. அது எவருக்கும் வழிகாட்டுவதாகவோ, எந்த கனவையும் முன்வைப்பதாகவோ இல்லாமலாகியது. தன் பணி ஏற்கனவே எழுதப்பட்டவற்றை உடைப்பதும் விளையாடுவதுமே என அதுவே சொல்லிக்கொண்டது. எனில் நான் ஏன் அதை கவனிக்கவேண்டும், எனக்கென்ன பயன் அதனால் என வாசகன் கேட்கலானான். நவீனத்துவ காலம் வரை இலக்கியத்தை தன் சொந்த வாழ்க்கையை விளக்கிக்கொள்ள, அதில் தன் தேடல்களை துலக்கிக்கொள்ள மக்கள் தேடிப் படித்தனர். பின்நவீனத்துவ எழுத்துக்கு அத்தகைய வாழ்க்கை சார்ந்த வாசிப்பே இல்லை. அது எவருக்கும் எதையும் அளிப்பதில்லை. அது ஏற்கனவே இலக்கியத்தை ஒரு களமாக எடுத்துக்கொண்டு அதில் விளையாடிக் கொண்டிருப்பவர்களால் மட்டுமே வாசிக்கப்படுகிறது.

அறுதியாகச் சொல்லவேண்டியது, பின்நவீனத்துவ யுகம் என்பது இலக்கிய விமர்சனத்தின் அழிவின் காலகட்டம் என்பதே. இலக்கிய விமர்சனம் உருவாகி நிலைபெற்ற இருநூறாண்டுகளில் அது தனக்கென உருவாக்கிக்கொண்ட பணிகள் மூன்று. இலக்கியத்தை வாசிக்கப் பயிற்சி அளித்தல், இலக்கியத்தின் மீதான கூட்டுவாசிப்பை உருவாக்குதல், இலக்கியமதிப்பீடுகளை நிலைநிறுத்துதல். பின்நவீனத்துவமே விமர்சகர்களால் உருவாக்கப்பட்டது தான். ஆனால் கழுவிய நீரில் பிள்ளையையும் தூக்கி வீசியதற்கு மிகமிகச் சரியான உதாரணம் பின்நவீனத்துவ விமர்சனம்தான்.

இது புதியது அல்ல. ஏற்கனவே தத்துவத்தில் இது நிகழ்ந்தது. மேலைக்கல்விச்சூழலில் உருவான புறவயத்தர்க்கவாதம் (Logical Positivism) தத்துவத்தையே கிட்டத்தட்ட அழித்துவிட்டிருக்கிறது. தத்துவவிமர்சனமே தத்துவம் என ஆனதே புறவயத் தர்க்கவாதம். ஏ.ஜே.அயர் போன்றவர்கள் முன்வைத்த புறவயவாத அலை முதலில் மீபொருண்மை (Metaphisics) யை  அடித்துக் காலிசெய்தது. எல்லாவகையான இலட்சியவாதத்தையும், அறவிவாதத்தையும் மறுத்து தத்துவத்தில் இடமில்லாததாக ஆக்கியது. எது அன்றாட உண்மையோ அதுவே தத்துவம் உசாவவேண்டியது என வாதிட்டது. எல்லாவற்றையும் அழித்துவிட்டு தானும் அழிந்தது. பெருங்கனவுகளை உருவாக்குவதே தத்துவத்தின் பணி. முகிலில் ஏணி வைத்து ஏறுவது போல. அது இல்லையென்றானால் அதன்பின் எளிமையான செயல்முறைத் தர்க்கமே தத்துவமென எஞ்சியிருக்கும்.

இலக்கியத்திற்கு பிரெஞ்சு பின்நவீனத்துவ விமர்சனம் செய்ததும் அதையே. எந்த எழுத்தையும் உடைத்து விளையாடுவதே வாசிப்பு என அது கூறியது. அதற்கான பயிற்சியை அளிக்கும் விமர்சகன் படைப்பாளியைவிட ஒரு படி மேல் என வாதிட்டது.  ‘Author is dead! Longlive the critic!’ என்பதே அதன் நடைமுறைக் கோஷம். ‘No text, only context’ என்னும் பின்நவீனத்துவ கோட்பாட்டின் மெய்யானபொருள் கூடவே இணையும் ‘…and we are the context makers’ என்ற விமர்சகனின் உள்ளக்குரல்தான். பின்நவீனத்துவ விமர்சனம் முதலில் இலக்கியப்படைப்பை செயற்கையான மிகைத்தர்க்கங்களால் ஊடுருவி சிதைத்து அழித்தது. வாசிப்பை பொருளற்றதாக ஆக்கியது. பின்னர் தானும் அழிந்தது. (அல்லது அலன் சோக்கல் அதை கொன்றார்)  சரியானபடிச் சொல்லவேண்டும் என்றால் அது ஒரு பிரெஞ்சு இலக்கியத் தற்கொலைத் தாக்குதல்.  இன்று உலகமே அதை உணர்ந்திருக்கிறது. உலகம் முழுக்க மீளும் முயற்சிகள் நிகழ்கின்றன.

சோக்கல்

இந்த கோணலான அறிவுத்தாக்குதலின் விளைவாக உலகம் முழுக்கவே இலக்கியத்தில் அன்றாடத்தன்மை மட்டுமே எழுத்து என ஆகியது. கனவுகளில்லாத, இலட்சியங்கள் இல்லாத, ஆன்மிகமோ கவித்துவமோ இல்லாத அன்றாடம். அதற்கு இயல்பாக எந்த ஆழமும் இல்லை. ஆகவே ஆழ்பிரதி (subtext) ஐ உருவாக்கும் பொருட்டு அதை சிக்கலாக ஆக்கினார்கள். ஒரே கதைக்குள் ஒன்பது கதை சொல்வது, கொண்டுகூட்டிப் பொருள்கொள்ள வைப்பது, ஒரு எழுத்தை விட்டுவிட்டு எழுதுவது, கதையை புதிராக ஆக்குவது போன்ற அபத்தமான புனைவு விளையாட்டுக்கள் உருவாயின. பத்தாண்டுகளுக்குள்ளாகவே அவையும் சலிப்பூட்டி,இன்று  மறைந்துவிட்டிருக்கின்றன.

இந்தியச் சூழலில் புனைவின் புதிர்விளையாட்டு பெரிதாக எடுபடவில்லை. பதிலுக்கு இங்கே ஒரு குறிப்பிட்ட வகை எழுத்து உருவானது. ஐரோப்பா நம்மிடம் சொல்கிறது ‘நீ பிற்பட்ட தேசத்தைச் சேர்ந்தவன், உன்னைச் சுற்றி ஏராளமான இருளும் அழுக்கும் இருக்குமே? அதை எழுது. அது விளிம்புநிலை எழுத்து’. அந்த வாய்ப்பைப் பிடித்துக்கொண்டோம். இன்று இந்திய மொழிகளில் வெளிவரும் எழுத்துக்களில் கணிசமானவை எழுதுபவர்களால் எந்த வகையிலும் நேரடியாக அறியப்படாத செயற்கையான கொடூர நிகழ்வுகள் கொண்ட அதீத உலகங்களின் சித்தரிப்புகள். கொலைகள், பாலியல் பிறழ்வுகள் ஆகியவற்றை இந்த ’லேபில்’ கொடுத்து எழுதினால் அவற்றை கிளுகிளுப்புக்காக படிக்கும் பொதுவாசகனும் நூலை வாங்குவான். இன்று இலக்கியம், வணிக இலக்கியம் என்னும் வேறுபாடு அழிந்துள்ள சூழலில் விற்பனையே அந்த செயற்கைக்கொடூர எழுத்திற்கு இலக்கிய அங்கீகாரமும் ஆக கருதப்படும்.

(மேலும்)

ஜெயமோகன் நூல்கள்

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைஅம்புலிமாமா ஏன் நின்றது?
அடுத்த கட்டுரைதேவர்களின் நடனம் – கடிதம்