இன்றைய எழுத்தில் அடிப்படைக்கேள்விகள்

அடிப்படைத் தத்துவக்கேள்விகளில் உழல்தல் என்பது பெரும்பாலும் தமிழ்ச் சூழலில் மிக அரிதான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் இங்கே நமக்கு அன்றாட வாழ்க்கையே பெரும்போராட்டமாக உள்ளது. ஒரு சராசரித் தமிழ் வாழ்க்கை என்பது இருபது அல்லது இருபத்தைந்து வயது வரை கல்வி தவிர பிறிதொன்றும் முக்கியம் அல்ல என்னும் நோக்கில் கட்டமைக்கப்பட்டது. எல்லாத் தரப்பிலிருந்தும் நம்மிடம் முறைசார் கல்வியில் நமது முயற்சி மற்றும் தகுதி குறித்த கேள்விகளே எழுகின்றன. ஆகவே  நம் பெற்றோருக்கு சமூகச் சூழலில் இருந்து மிகப்பெரிய அழுத்தம் உள்ளது. நம்மை அவர்கள் இந்த போட்டி ஓட்டத்தில் ஓர் இடத்தில் நிறுதியாகவேண்டும். அவர்களின் கனவும் நனவும் அதுதான். அது அவர்கள் வழியாக நம் மீது செலுத்தப்படுகிறது. அதற்குப் பல படிகள்.  பல அடிகள். அதில் உழன்று ,நீந்தி ,கரையேறி ஒருவாறாக நிம்மதி  மூச்சுவிட நாற்பது கடந்துவிடுகிறது. அதன்பின்னர் நாம் எதையும் எளிதாகத் தொடங்கிவிடமுடியாது.

அடித்தள வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு படிப்பு என்பது அவர்களின் அல்லல் நிறைந்த வாழ்நிலையிலிருந்து தொற்றி மேலேறுவதற்கான நூலேணி. அதில் ஒவ்வொரு படியிலும் அவர்கள் உயிர்மூச்சைக் கொண்டு உந்தி தன்னை மேலேற்றிக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு இளமை என்பது இருபதாண்டுகள் நீடிக்கும் தொடர் போராட்டங்கள் மட்டுமே . பலவகை அவமதிப்புகள், பின்னடைவுகள், சோர்வுகள் மற்றும் தோல்விகள் ஆகியவற்றை அவர்கள் தங்கள் நம்பிக்கையாலும் ஊக்கத்தாலும்; அனைத்தையும் விட வாழ்வு அளிக்கும் கட்டாயத்தாலும் வென்று முன் சென்றாகவேண்டும். அச்சூழலில் அவர்களுக்கு அடிப்படைக் கேள்வி என்பது ஒன்றே- தங்கிவாழ்தல் மற்றும் அதற்கு எதிரான விசைகளாக அமைந்திருக்கும் சமூகசூழல்.

ஆகவே இங்கே நமக்கெல்லாம் படிப்பு என்பது வாழ்க்கையில் குடும்பச்சூழலும் சமூகச்சூழலும் அளிக்கும் ஒரே இலக்கு. அதைத் தவிர வேறொரு வினாவும், தேடும் வாய்ப்பும் எவருக்கும் வாழ்க்கையில் அளிக்கப்படுவதில்லை. படிப்பில்லாத ஒருவன் தன் இளமையில் வேறெந்த தகுதி பெற்றிருந்தாலும் மதிக்கப்படுவதில்லை. அதன்பின் பணி. திரும்பத் திரும்ப படிப்பு முடிந்த ஒருவனிடம் அவன் பணி என்ன என்பதே கேட்கப்படுகிறது. அப்பணியில் அவனுடைய தகுதி பொருளாதாரத்தால் மட்டுமே அளக்கப்படுகிறது. வேறெந்த பங்களிப்பும், எவ்வகைச் சாதனையும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மீண்டும் மீண்டும் அடிப்படைச் சம்பளம் என்ன, பஞ்சப்படி என்ன, ஆண்டுதோறும் உயர்வது எத்தனை சதவீதம் என்ற கேள்வி அவனிடம் கேட்கப்படுகிறது. ஒருவர் எந்தப்பணியில் இருந்தாலும் சூழலில் இருந்து வரும் வினா அதைவிட அடுத்தபடிக்கு அவர் செல்வது எப்படி என்பதாகவே இருக்கும். அதற்கு அடுத்தபடியில் இருக்கும் ஒருவரைச்  சுட்டிக்காட்டி அவரைப்போல் ஆகவேண்டும் என்ற கட்டாயம் சூழலிலிருந்து இடையறாமல் வரும்.

இங்கு பணி என்பது வாழ்வதற்கான ஓர் அடிப்படை மட்டுமல்ல. ஒவ்வொரு நாளும் மேலேறிக்கொண்டிருக்கும் ஓர் ஏணி. ஒவ்வொரு கணமும் போரிட்டுக் கொண்டிருக்கும் ஒரு களம். வென்றபடியே இருந்தாக வேண்டும். முன்சென்றபடியே இருந்தாகவேண்டும். இல்லையென்றால் அது தோல்வி என்றே கருதப்படும். தொடர் வெற்றிகள் அமையாத பணிகள் அரசுத்துறையில் உள்ளவை. அத்துறையில் உள்ள ஒருவருக்கு அவருடைய மேலதிக வெற்றி என்பது தன் துறையில் அவர் செய்யும் ஊழல், அதிலிருந்து அவர் சம்பாதிக்கும் செல்வம் ஆகியவை சார்ந்தது.  ‘உன்னைவிட இவர் இதே பணியில் அதிகம் சம்பாதிக்கிறார்’ என்பதுதான் ஒவ்வொரு அரசுப்பணியாளருக்கும் நம் சூழல் விடுக்கும் குரலாக உள்ளது. அதை சந்தித்துக்கொண்டே இருந்தாக வேண்டும்.

அதன்பின் திருமணம். சமூகம் வகுத்து வைத்திருக்கும் ஓர் அகவைக்குள் திருமணம் செய்யாவிட்டால் அது ஒரு குறையாக சுட்டிக்காட்டப்படும். பின்னர் பெரும் பிழையாக மாற்றப்படும். ஒரு கட்டத்தில் குறைபாடாகவோ இழிவாகவோ கட்டமைக்கப்படும். அதன் பிறகு குழந்தைகள். அதுவும் அப்படியே செல்லும் முன்னரே வகுக்கப்பட்ட பாதைதான். குழந்தைகள் அற்றவர்கள் படிப்படியாக சமூகப்புறனடையாளர்கள் என்றே மாற்றப்படுவார்கள். அனைத்து வகையான இழிவுகளையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள் பழி சூழ்ந்தவர்களாக, பிறர் பார்வைக்குமுன் நின்றிருக்க வேண்டியிருக்கும்.

இங்கே பெற்றோர் என்பதும் பெரும் பொறுப்பு. குழந்தைகளைப் பெற்றவர்கள் அவற்றின் படிப்பைத்தவிர வேறெதைப் பற்றியும் சிந்திக்காதவர்களாக வேண்டும். அவர்களுக்கு வாழ்நாள் முழுக்க சேர்த்து செல்வத்தை கொடுக்கவேண்டும். பிள்ளைகளுக்கு ஒரு வீடு கட்டிக்கொடுக்கவில்லை என்றால் தந்தை பழி சுமக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளுக்கு முதல்தர கல்வி நிறுவனங்களில் கல்வி அமைத்துக்கொடுக்க வேண்டும். அப்பிள்ளைகளின் மிகச்சிறிய குறைபாடுகளுக்குக் கூட பெற்றோரே பொறுப்பேற்க வேண்டும். இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் தன் பிள்ளை இன்னும் ஒரு பெரிய பதவியில் இருந்திருக்கும் என்று ஒவ்வொரு பெற்றோரும் நம்ப வைக்கப்படுகிறார்கள்.

அதன் பின் பிள்ளைகளின் திருமணம். அவற்றை உரிய வகையில் நடத்தி வைப்பது பெற்றோரின் கடமை அதன் பின் பேரப்பிள்ளைகளை கவனித்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்…. அவ்வளவுதான், வாழ்க்கை முடிந்துவிடுகிறது. இதைச் செய்து சாகிறவன் அவன் மைந்தர்களால் தெய்வமாக எண்ணப்பட்டு, புகைப்படமாக சுவரில் தொங்கி, ஊதுவத்திப் புகை பெறுவான். செய்யாதவன் வாழ்நாள் முழுக்க குற்றவுணர்வு கொள்ளும்படிச் செய்யப்படுவான். ஒரு கணமும் அவன் தன் விருப்பப்படி வாழமுடியாது. வாழமுற்பட்டால் மொத்தச் சமூகமே அவன்மேல் ஏறி அமர்ந்திருக்கும். ஆலோசனை சொல்லும், இடித்துரைக்கும்.(ஆனால் நாள் முழுக்க சமூகவலைத்தளத்தில் உழன்றால், அரசியல் வம்பு பேசிக்கொண்டிருந்தால், சினிமாச்சழக்குகளில் ஈடுபட்டால் அது ‘நார்மல்’ ஆகவே கருதப்படும்)

இந்த அளவுக்கு பேரழுத்தம் கொண்ட ஒரு பொதுச்சூழலுடன்  உலகில் வேறெந்த சமூகமும் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஐரோப்பியச் சமூகங்கள் இத்தகைய சூழலின் அழுத்தங்களில் இருந்து வெளியேறி நெடுங்காலமாகிறது. நம்மைப்போன்ற கீழைச் சமுதாயங்களான சீனா, ஜப்பான் போன்றவையும் இந்த அழுத்தங்களிலிருந்து விடுபட்டுவிட்டன. நாம் இன்னமும் இதற்குள் இருக்கிறோம். ஆகவே எந்த ஒரு அடிப்படை வினாவுக்கும் இந்தியச்சூழலில் சாமான்யமாக இடமில்லை. அவை எழக்கூடிய அளவுக்கு ஒரு ஓய்ந்த வேளை இங்கே உள்ளவர்களுக்கு அளிக்கப்படுவதே இல்லை. அவற்றை எளிய முறையிலேனும் எதிர்கொள்பவர்கள் நம் சூழலில் உடனடியாக கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்கள். சிலசமயம் உளச்சிக்கல் கொண்டவர்களாகவே கட்டமைக்கப்பட்டுவிடுகிறார்கள். கையாலாகாதவர்களாக, பகற்கனவு காண்பவர்களாக, வீண்வாழ்வு வாழ்பவர்களாக அவர்கள் நம் பொதுச் சமூகத்தில் தோற்றமளிக்கிறார்கள்.

உலகின் தத்துவ ஞானத்தின் பெரும்பகுதியை உருவாக்கிய ஒரு தேசம் எந்த வகையிலும் தத்துவார்த்தமான சிந்தனைக்கு இடமற்ற ஒன்றாக, சொல்லப்போனால் மொத்தமாகவே தத்துவ சிந்தனைக்கு எதிரான உளம் கொண்டதாக இன்று மாறிவிட்டிருக்கிறது. ஆகவே இன்று அடிப்படைச் சிந்தனைகள் என்பவை இந்திய சமூகத்திற்கு ஒரு வகையான நோய்க்கூறான வீக்கங்களேயாகும்.

இச்சூழலில்தான் இங்கே இலக்கியம் எழுதப்படுகிறது. ஆகவே இந்தியா முழுமைக்கும் இலக்கியத்தில் அடிப்படை வினாக்கள் அவற்றுக்கான தரிசனங்கள் பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம். இந்திய இலக்கியத்தில் இந்திய மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களிடமே அடிப்படைச் சிந்தனைகள் உள்ளன. தாராசங்கர் பானர்ஜி, விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய, வைக்கம் முகம்மது பஷீர் எஸ்.எல்.பைரப்பா, கே எம் முன்ஷி, வி.ச.காண்டேகர், சிவராம காரந்த், குர் அதுல் ஐன் ஹைதர் என்று நமது விரல் நீளும் அனைவருமே அந்தக்கால கட்டத்தை சேர்ந்தவர்கள்.

அது இந்தத்தேசம் நிலப்பிரபுத்துவ இறந்த காலத்திலிருந்து சற்றே புரண்டு முதலாளித்துவம் நோக்கி வந்த காலம். தனிமனித உரிமை, அடிப்படை மனிதச் சுதந்திரம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை நோக்கி வந்த தருணம். தனி மனிதனின் ஆன்மீக மீட்பு, தனி மனிதனின் அகச்சுதந்திரம் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகள் உருவாகி வந்த காலம். அன்று நம் முன்னோடிகள் சிந்தித்தவற்றின் சிதறல்களை வைத்துக்கொண்டுதான் இதுவரைக்கும் இந்திய இலக்கியம் எழுதப்படுகிறது என்பது உண்மை.

ஐம்பதுகளுக்குப்பிறகு நவீனத்துவம் உருவாகி வந்தபோது அந்த அடிப்படைச் சிந்தனைகளை அகவயமான, அல்லது நடைமுறைசார்ந்த ஒருவகை மறுப்பு வழியாக எதிர்கொண்டனர். ஆனால் மறுப்பென்பதே கூட ஒருவகையில் அடிப்படைச் சிந்தனைகளை கையாள்வதுதான். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஓ.வி.விஜயன், யூ.ஆர்.அனந்தமூர்த்தி என நாம் கூறும் இந்திய நவீனத்துவத்தின் வெற்றிகரமான முகங்கள் அனைவருமே  அடிப்படை வினாக்களை மறுப்பினூடாக எதிர்கொண்டவர்கள். அதன்பின்னர் மேலும் பெரிய அடிப்படை வினாக்களை நோக்கிச் செல்ல பின்நவீனத்துவம் வழி அமைத்தது. அது கடந்த கால லட்சியவாதத்திலிருந்தும் அதற்குப் பிந்தைய எதிர்ப்பு நிலைபாடுகளிலிருந்தும் நம்மை விடுவித்தது. அது முழுச்சுதந்திரத்தை நமக்கு அளித்தது. எதற்கும் கட்டுப்படாமல் தன்னியல்பாக ஆன்மீகமான அடிப்படை கேள்விகளை நோக்கிச் செல்வதற்கு அது அறைகூவியது.

பின்நவீனத்துவத்தின் சாராம்சம் என்பது உன்னதமாக்கல் (Sublimation). இங்குள்ள புறவய யதார்த்தம் என்பதே ஒருவகை புனைவுதான் என காட்டி, அதனுள்  ஒவ்வொன்றிலும் உறையும் நுண்மையை நோக்கி அது செல்ல வழிகாட்டியது. ஒன்று திரும்ப திரும்ப நிகழ்வதெனில் திரும்ப திரும்ப அதை நிகழ்த்தும் நெறியொன்றையே இலக்கியம் பேச வேண்டுமென்பதே பின் நவீனத்துவம் சொல்லும் Sublimation. உச்சங்கள், பிறழ்வுகளினூடாக வாழ்க்கையைக் கோத்துப் பார்ப்பது. தர்க்கத்தின் இரும்புத்தளைகளில் இருந்து விடுதலை பெற்று மேலெழுவதற்கு அறைகூவுவது. சீரான அறிதல்முறைகளை தவிர்த்துவிட்டு தாவிப்பாயும் கற்பனையை மொழியினூடாக நிகழ்த்தி தரிசனங்களை அடைய வழிகாட்டுவது.

ஆனால் நவீனத்துவ யுகத்துக்குப்பிறகு இந்திய இலக்கியம் அந்த சுதந்திரத்தை அடையவில்லை. மாறாக, ஒட்டுமொத்தமாகவே அது அடிப்படை வினாக்கள் இல்லாத ஒருவகையான அன்றாட யதார்த்தத்தை நோக்கியே திரும்பியது. இன்று இந்தியாவெங்கும் எழுதப்பட்டு வாசிக்கப்படும் படைப்புகள் உறுதியான உலகியல்தன்மை கொண்டவை. எந்தவகையான ‘பைத்திய’ நிலைகளுக்கும் அங்கே இடமில்லை. வகுக்கப்பட்ட, அனைவராலும் புரிந்துகொள்ளப்படத்தக்க, தர்க்கநிலை அவற்றில் இருக்கவேண்டும். இங்கே எல்லாவகையான மதிப்புரைகளும் தெளிவான சில கலைச்சொற்களை பிடிமானம் (handle) ஆக பயன்படுத்துவதைக் காணலாம். மூன்றாமுலக யதார்த்தம், பின்காலனியம், பெண்ணியம், முற்போக்கு, தாராளவாதம், வலதுசாரி, இடதுசாரி… நம் சமகாலப் புனைவுலகின் இந்த அன்றாடக்களம் இருவகை யதார்த்தங்களைச் சார்ந்தவை.

ஒன்று அரசியல் யதார்த்தம். இன்னொன்று உளவியல் யதார்த்தம். பெரும்பாலான இந்திய எழுத்துகள் எளிமையான சீர்திருத்தச் சமூகவியல், முற்போக்கு  அரசியல் கருத்துகளின் தொகையாகவே உள்ளன. அவற்றின் வினாக்களும் சரி, அவை கண்டடையும் விடைகளும் சரி, ஏற்கனவே வெவ்வேறு அரசியல் தரப்பினரால் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டவை. ஆகவே அவை எழுதப்படும்போது உடனடியாக அந்தந்த அரசியல் தரப்பினரின் ஏற்பையும், பாராட்டுகளையும் பெறுகின்றன.  பரிசுகளையும் வெல்கின்றன. இன்னொரு அரசியல் தரப்பினரின் எதிர்ப்பையும் ஈட்டி விவாதமாகிப் புகழ்பெறுகின்றன.

இன்னொன்று ,உளவியல் யதார்த்தம். பெரும்பாலும் இது உறவுகள் சார்ந்தது. மரபான உறவுகளிலிருந்து விடுவித்துக்கொண்டு தனிநபர் சார்ந்த சார்ந்த உறவுகளை நோக்கிச் செல்லும் இன்றைய தலைமுறையின் ஆணவச்சிக்கல்கள்,  தொடர்புறுத்தல் பிரச்சனைகள், அவற்றின்  விளைவாக உருவாகும் தனிமை ஆகியவற்றை இன்றைய எழுத்து மீள மீளப் பேசுகிறது.உளவியல் யதார்த்தம் என்பது அரசியலால் அவநம்பிக்கை அடைந்து, இலட்சியங்களை இழந்து, வெறுமையைச் சென்றடையும் நிலையை மையப்பேசுபொருளாக ஆக்கிக்கொண்டது.

திரும்ப திரும்ப இந்திய நவீன எழுத்து என்பது அரசியல் அல்லது உளவியல் சார்ந்ததாக உள்ளது. ஒருவகையில்  அதன் பொது வாசிப்புத்தள வெற்றிக்கு அதுவே காரணம். இன்று இந்திய அளவில் பெரிதும் பேசப்படும் படைப்புகள் எவையுமே தத்துவார்த்தமான ஆன்மீகமான அடிப்படை வினாக்களை எழுப்பி விடைகாண முயல்பவை அல்ல. அவை எழுப்பும் வினாக்கள் அரசியல் அல்லது உளவியல் சார்ந்தவை என்பதனாலேயே ஆழ்ந்த தேடலோ அதன் விளைவான கண்டடைதலோ இல்லாத பொது வாசகர்களில் பலரை அவை கவர்கின்றன. அவர்கள் அந்தப் பிரச்னையுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஒருவகையில் இந்தியச் சமுதாயத்தின் தத்துவ வெறுமை இந்திய இலக்கியப் படைப்புகளில் வெளிப்படுகிறது என்றே சொல்லவேண்டும்

(மேலும்)

ஜெயமோகன் நூல்கள்

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைவீ.நடராஜன், சோழர் வரலாறு 
அடுத்த கட்டுரைஆயிரம் ஊற்றுக்களின் அழகியல்-கடிதம்