அமைப்பும் மதமும், கேள்வி

இந்துமதத்தின் அரசியல்

இந்து என உணர்தல்

இந்து வெறுப்பை எதிர்கொள்வது

இந்து மதம், இந்திய தேசியம்

அன்புள்ள ஜெ,

மதம் பற்றி தொடர்ந்து தளத்தில் நல்ல கட்டுரைகள் வந்தன. மனிதன் சமூகமாக வாழ்பவன். ஏதோ வகைகளில் குடும்பம் சமூகம் போன்ற அமைப்புகள் அவனின் வேவ்வேறு தேவைகள் நிறைவேற்றுகின்றது. மதம் என்பதும் ஒரு குடும்பம். வெளியில் ஒருவனுக்காக இருக்கும் குடும்பம். அது ஒரு குடும்பமாக இருக்கும் பொழுதே அது மதமாக ஆகிறது. ஆன்மீகம் குறீயிடு உளவியல் போன்றே இன்னும் மதத்திற்க்கு வேறு முக்கியதுவங்களும் அடிபடை பொறுப்புகளும் உண்டு. குக்கூ அமைப்பென்பது ஒரு குடும்பம். விஷ்ணுபுரம் அமைப்பென்பது ஒரு குடும்பம். இந்து மதம் என்று சொல்லபடுவதும் ஒரு குடும்பமாக இருக்குபொழுதான் அது உயிர் ஓட்டமானதாக இருக்கிறது என்று பொருள். மக்களின் துயர் நிங்க எண்ணியவரே புத்தர். போர் புரிந்தவரே கிருஷ்ணர். அன்பை பரப்பியவர் ஏசு.

நவீன வாழ்க்கை மனிதனை தனிமனிதானக ஆக்கும் தோறும் அவன் மதம் அற்றவனாகிறானா என்பது அடுத்த வினா. மனிதர்களுக்கு என்று பொது இலக்கும் பொது திசையும் (God) இல்லாமல் ஆகும் போது அவற்கள் மதம் அற்றவர்களாக உனர்கிறார்களா என்பது அடுத்த வினா.

நவீன சிந்தனை உருவாகி “மனிதநேனயம்” “Humanity” போன்று உருவாக்கி வந்த கருத்துகளும் இன்று ஒரு மதமாகி வந்து உள்ளதா என்பது என்பது இன்னொரு வினா. மனிதானா இருப்பதற்க்கு என்று norms and roles உறுவாகி விட்டது என்பதனால் அதை ஒரு மதம் என்று கருத முடியுமா. நவீன இலக்கியம் முயற்றி செய்வதேகூட ‘மனித மதம்’ ஒன்றை உருவாக்கதானா.

நன்றி

பிரதீப் கென்னடி

இந்து மதம் என ஒன்று உண்டா?-3

இந்து மதம் என ஒன்று உண்டா?- 2

இந்து மதம் என ஒன்று உண்டா?-1

அன்புள்ள பிரதீப்,

நீங்கள் சொல்வது ‘அமைப்பாக’ செயல்படும் மதங்களைப் பற்றி. அவற்றை மட்டுமே மதம் என அறிந்திருக்கிறீர்கள். இது இங்கே பொதுப்புத்தியிலுள்ள பதிவு. நான் என் கட்டுரையையே அந்த பொதுப்புரிதலை மறுத்து, நேர் எதிராக விளக்கித்தான் எழுதியிருந்தேன்

மதம் அமைப்புத்தன்மை இல்லாமலும் செயல்படும் என்பதே என் கட்டுரைகளின் மைய இழை. இருவகை மதங்கள் என்றே பிரித்து அதைத்தான் பல பக்கங்களுக்குப் பேசியிருக்கிறேன். மதம் என்னும் சொல்லை இங்கே அமைப்பாகச் செயல்படும் மதங்களைச் சார்ந்தே உருவகித்துள்ளோம் என்றும் அதை அப்படியே இந்துமெய்மரபுக்குப் போடும்போது என்னென்ன சிக்கல்கள் உருவாகின்றன என்றுதான் விவாதித்திருந்தேன்.

அமைப்பாகச் செயல்படாத மதம், அதாவது தனிமனிதனின் ஆன்மிகத்தை அவனுக்கான தனிப்பட்ட தேடலாக அனுமதிக்கும் மதம் கொண்டுள்ள இயல்பே வேறு. அது எவருக்கும் ’குடும்பம் சேர்ந்த உணர்வை’, அதாவது ஒரு கூட்டுணர்வை அளிப்பதில்லை.  அது அவனுக்கு அளிப்பது ஆழ்படிமங்களையும் நம்பிக்கைகளையும், தத்துவங்களையும்தானே ஒழிய எந்தவகையான புறவயமான அமைப்பையும் அல்ல. அவன் அதை அந்தரங்கமாகக் கண்டடையவேண்டும், தனக்குள் அவற்றைக்கொண்டு தன் பயணத்தைச் செய்யவேண்டும். அங்கே பிறர் என்பதே இல்லை. அதையே அக்கட்டுரைகளில் விரிவாகப் பேசியிருந்தேன்.

அதாவது மதம் என்பதை ஒருவகை அமைப்பு, அதிகாரம் மட்டுமாகவே பார்க்கும் பார்வையை மறுத்தே அவ்வளவு எழுதியிருந்தேன். அது தீர்க்கதரிசன மதங்களுக்கு மட்டுமே பொருந்தும், இயற்கை மதங்களுக்கு அல்ல . மதம் என்பதை ஓர் எளிய அமைப்பாகவோ, திரளாகவோ பார்க்கும்பார்வைதான் இங்கே பொதுவெளியில் சாதாரணமாகப் புழங்குவது. எவருக்கும் உடனடியாக வந்துசேர்வது அது. அதைக் கடந்தாலொழிய இந்துமரபு போன்றவற்றை புரிந்துகொள்ளமுடியாது என்று வாதிட்டிருந்தேன். மதத்தை அமைப்பு மட்டுமாகப் பார்க்கும் பார்வை இந்துமெய்மரபை குறுக்குகிறது, தவறாக சித்தரிக்கிறது என்று சொல்லியிருந்தேன்.

இந்து மரபை நவீன காலகட்டத்தில் நாம் மதம் என்கிறோம். ஆனால் அது இங்கே ஒரு மெய்மரபாகவே இருந்தது, இருக்கிறது என்பதே நான் பேசுவது.அதாவது இந்து மரபு என்பது ‘கருத்துக்களின் தொகுப்பு’ அல்ல. ஒரு குறிப்பிட்ட தரப்பு அல்ல. ஆகவே அதை இன்றைய கருத்துத் தரப்புகளுடன் ஒப்பிட முடியாது.

இந்து மெய்யியல் மரபு என்பது பழங்குடிக்காலம் முதல் மானுட பிரபஞ்சத்தேடல் உருவாகி வளர்ந்து வந்ததன் விளைவான ஆழ்படிமங்களின் தொகுப்பு. அவற்றிலிருந்து உருவான படிமங்களின் வெளி. அவை முன்வைக்கும் தரிசனங்கள் மற்றும் தத்துவங்களே நம்மால் மதம் என்னும் சொல்லில் இந்தியாவில் சுட்டப்படுகின்றன என்றுதான் விளக்கியிருந்தேன். அவை வெறுமே கருத்துக்கள் அல்ல, வழிகாட்டல்களோ நெறிகளோ அல்ல என கூறியிருந்தேன்.

மனிதாபிமானம், மானுட சமத்துவம், இயற்கைபேணல் போன்றவை எல்லாமே கருத்துநிலைகள். அக்கருத்துநிலைகளுக்கான சில படிமங்களை அவை கொண்டுள்ளன. அவை மதங்களாக ஆகவேண்டுமென்றால் அவற்றில் ஒட்டுமொத்த பிரபஞ்சப்பார்வை இருக்கவேண்டும். வாழ்க்கை முழுமைக்குமான தரிசனங்கள் இருக்கவேண்டும். அவற்றையொட்டிய வாழ்க்கைமுறை உருவாகி வந்திருக்கவேண்டும். நம் சூழலில் ஏராளமான கருத்துநிலைகள் உருவாகியுள்ளன.  அவை வாழ்க்கைமுறைகளாக மாறவில்லை.

இன்று ஒரு தனிமனிதனுக்கு இயற்கையுடனும் பிரபஞ்சத்துடனும் ஓர் உறவு அந்தரங்கமாக தேவைப்படுமென்றால், அதற்கு பல்லாயிரமாண்டுக்கால மானுடப் பரிணாமத்தின் சரடுடன் அவனுக்கு ஓர் உறவு தேவை என்றால், அவனுக்கு மதம் என நாம் இங்கே சொல்லும் மெய்யியல் மரபு தேவையானது என்றே நான் சொன்னேன். அவன் அந்நிலையில் தன் அகத்தை தொன்மையான ஆழ்படிமங்கள் வழியாக மேலும் ஆழமாக அறிந்துகொள்ள முடியும்.

அதாவது நான் சொன்னது மனிதனுக்கு ஒரு குழுவாகவோ திரளாகவோ அமைப்பாகவோ ஆவதற்கு எப்படி இந்துமெய்யியல் தேவை என்று அல்ல. நேர் மாறாக அவனுடைய அந்தரங்கமான தனித்தேடல், மீட்புக்கு அவை ஏன் தேவை என்றே. மாறாக நீங்கள் ஏற்கனவே சூழலில் உள்ள மதமென்றால் ஒரு குடும்பம், மதமென்றால் ஒரு அரசாங்கம், மதமென்றால் ஒருவகை கூட்டுச்செயல்பாடு என்றெல்லாம் உள்ள பொதுப்புரிதலை ஒட்டி சிலவற்றைச் சொல்கிறீர்கள்.

நவீன இலக்கியம் அல்லது கலை என்பது ஒரு தரப்பாக செயல்படுவதில்லை. எல்லா தரப்புக்கும் உரிய ஒரு விவாதவெளியாகவே அவை உள்ளன. சமகாலச் சூழலில் உள்ள எல்லா கருத்துநிலைகளும் அந்த விவாதப்பரப்பில் உள்ளன. நவீனக்கலை அல்லது நவீன இலக்கியம் மனிதனை திரளாக ஆக்கவில்லை. அவனை தனிமனிதனாகவே அவை அணுகி, அவன் ஆழுள்ளத்துடனேயே பேசுகின்றன.

மீண்டும் இப்படிச் சொல்கிறேன், தொல்ஞானத்தின் மறுஆக்கமோ நீட்சியோ ஆக அல்லாமல் உருவாகும் எதுவும் மதம் என செயல்படுவதில்லை. மதம் முழுக்கமுழுக்க ஆழ்படிமங்கள் வழியாகவே செயல்படுகிறது.

ஜெ

ஜெயமோகன் நூல்கள்

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்க

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

—————————————————

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் மின்னூல் வாங்க

இந்து மெய்மை மின்னூல் வாங்க 

முந்தைய கட்டுரைஇந்துமதமும் சாத்தானும்
அடுத்த கட்டுரைவிலா எலும்புகளின் பிரகடனம் -விக்னேஷ் ஹரிஹரன்