அண்மையில் ஒரு நீண்ட பைக் பயணத்திற்குப் பிறகு திரும்பும் வழியில் கங்கைகொண்டான் அருகே வரும்போது நல்ல மழை. மேலே போக முடியாமல் அங்கேயே ஒரு சின்ன தர்கா மாதிரி ஒரு பழைய கட்டிடத்தில் ஒதுங்கினேன். பழைய தர்கா. யாருமில்லை. விளக்கு மட்டும் எரிந்தது. ராத்திரி ஒரு ஒன்பது மணி இருக்கும். சாலையில் நடமாட்டம் இருந்தது. ஆனால் அங்கே நடு இரவில் தனியாக இருப்பதுபோல இருந்தது. ஒரு அமானுஷ்யமான உணர்வு உருவானது. ஒரு அரைமணிநேரம் நின்றிருப்பேன். அதற்குள் சிலிர்த்துவிட்டேன்.
என்ன நடந்தது என்று தெரியவில்லை. அது ஒரு மிஸ்டிக் அனுபவம் எல்லாம் இல்லை. ஆனால் பயமும் இல்லை. ஒரு எலிவேஷன் என்று சொல்லலாம். காரணம் நான் முதுநாவல் கதை படித்திருந்ததுதான் என்று தோன்றியது. ஆகவே திரும்ப வந்ததும் முதுநாவல் கதைத்தொகுப்பை மீண்டும் வாசித்தேன். அதிலுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையான மிஸ்டிக் அனுபவம் என்று நினைத்தேன்.
மிஸ்டிக் அனுபவம் என்றால் தெய்வத்தை அறிவது என்று இருக்கவேண்டியதில்லை. நாம் வாழும் இந்த அன்றாட வாழ்க்கையைவிட்டு கொஞ்சம் மேலே போனாலே நமக்கு சிலிர்த்துவிடுகிறது. முதுநாவல் கதையில் சில பறவைகள் அப்படித்தான் என்று படித்தபோது மீண்டும் அதே சிலிர்ப்பு ஏற்பட்டது. பல கதைகள் திரும்பத் திரும்ப அந்தச் சிலிர்ப்பை அளிப்பவையாக இருந்தன.
அண்மையில் வாசிக்க நேர்ந்த தொகுப்புகளில் முக்கியமானது என்று முதுநாவல் கதைத்தொகுப்பைச் சொல்வேன். இணையத்தில் பார்த்தால் அதைப்பற்றி ரொம்ப கொஞ்சமாகவே ஏதாவது அபிப்பிராயம் வாசிக்கக்கிடைக்கிறது. அது இயற்கைதான். அந்த மிஸ்டிக் அனுபவத்தை பொதுவாகச் சாதாரணமான வாசகர்கள் அறியமுடியாது. அதிலும் அதிகமாகக் கதைவாசிக்கும் வயதிலுள்ள இளைஞர்களுக்கு அது பிடிகிடைக்காது. கொஞ்சம் ஏதோ தியான அனுபவம் இருந்தாலொழிய பிடிகிடைக்காது.
எனக்கே அப்படி ஒரு அனுபவம் என் 40 வயதில்தான் முதலில் கிடைத்தது. அப்பாவின் அஸ்தியைக் கரைப்பதற்காக ராமேஸ்வரம் போனோம். அப்பாவின் அஸ்தியுடன் ஒரு லாட்ஜ் அறையில் நான் ஒரு மணிநேரம் தனியாக இருந்தேன். அப்போது ஒரு shudder ஏற்பட்டது. அந்த அனுபவத்திலிருந்து மீள ஒரு நாள் ஆகியது. அதன்பிறகுதான் நாம் மனசு என நினைப்பது நாம் அறிந்த விஷயமே அல்ல என்று தெரிந்துகொண்டேன். அது ஒரு தொடக்கம்.
நன்றி. முதுநாவல் ஒரு நல்ல தொகுப்பு. மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டிய நூல்.
மரு.கோதண்டராமன்