தத்துவம், மதம் – கடிதம்

இந்துமதத்தின் அரசியல்

இந்து என உணர்தல்

இந்து வெறுப்பை எதிர்கொள்வது

இந்து மதம், இந்திய தேசியம்

இந்து மதம் என ஒன்று உண்டா?-3

இந்து மதம் என ஒன்று உண்டா?- 2

இந்து மதம் என ஒன்று உண்டா?-1

வணக்கம் ஜெ

சமீபத்தில் நீங்கள் எழுதிய தத்துவம் மற்றும் மதம் பற்றிய கட்டுரைகள் மிக முக்கியமானவை. சூரிய ஒளியை வில்லையின் மூலம் குவிப்பதுபோல் உங்களின் வாழ்வனுபவங்கள் பயணங்கள்வழி அறிதல்கள் அனைத்தையும் கூர்மையாக கொண்டுள்ள எழுத்து.

வேதகாலத்தின் யஞ்னங்களிலிருந்து உபநிஷத காலத்தின் தத்துவம், இவற்றின் ஊடாக, பல சமயம் ஊற்றாக இருக்கும் நாட்டார் பண்பாடு- இங்கிருந்து ஒருவன் பயணிக்கதொடங்கினால் அவன் ஒரு ஒட்டுமொத்த காட்சியை காணமுடியும்.

ஒரு சராசரி மேற்கத்தியன் போலவே இன்று ஒரு இந்தியனும் கடவுள் என்றால் தாடி வைத்த ஒரு கிழவர், மேகங்களில் வசிப்பவர், உலகை சமைத்தவர் என சொல்லக்கூடும். அதன் காரணம் நூற்றாண்டுகளாக நமக்கு அளிக்கப்பட்ட கல்வி முறை. மேற்கில் படைத்தவனே இறைவன், அவன் ஒருவன், அவனையே வணங்குவோம் என்ற ஆபிரகாம மதங்களை போல் அல்லாமல், நம்மிடம் ஒரு சட்டமிடப்பட்ட உருவகம் கிடையாது. ரிக்வேதத்தில் கூட ஒரு திட்டவட்ட காஸ்மோகோனி தரப்படவில்லை, அதுவே அறியும் அல்லது அதுவும் அறியாது என்றே சிருஷ்டி கீதம் சொல்கிறது. படைத்தவனே இறைவன் என்றால் பிரம்மனை வழிபடுபவர் இன்று ஏன் யாருமில்லை என நம்மில் ஒருவன் கேட்டால் அவனை கண்டிக்க பலர் உண்டு, கற்பிக்க சிலரே. ஒரு குழந்தைக்கு இதை விளங்க வைக்க பெற்றோருக்கு இந்நுட்பம் விளங்கியிருக்கவேண்டும்.

அனைத்து வழிபாடுகளையும் கடவுள்களையும் தத்துவங்களையும் இணைத்து பெருகி செல்லும் நதி இது, மானுட அறிவின் ஒற்றை பெரு வெளியின் தரிசனங்களின் குறியீடுகள் இவை. நீங்கள் பலமுறை கூறுவதுபோல் ஒரு பொற்பட்டு நூல்.

மேற்கில் உள்ள மதங்கள் இன்று பெரும்பாலும் ஒரு சமூக கட்டமைப்பாக மட்டுமே உள்ளன. அவற்றில் ஒருவன் அவன் அக தேடலையும் அறிவையும் பெற பல தடைகளை தாண்டி வர வேண்டும். சிலர் அவ்வாறான ஒரு அக வாழ்க்கை பற்றிய சிறு சிந்தனை கூட இல்லாமல் ஆனால் தீவிர கடவுள் மத பற்று உடையவராக இருக்க முடியும். தினம் அவன் மதம் அளிக்கும் நூல்களை படித்து அதன்படி ஒரு சீரான வாழ்கையை வாழ முடியும். இந்து மதம் அவ்வாறான மூல நூல்களை வழங்குவதில்லை. அதன் அறிவு அக அனுபவத்தால் பெறப்படுவது. அவ்வறிவை அடைந்தவர்களையே ரிஷிகள் என அழைத்தனர். அக அனுபவங்களுக்கு உதவுபவை செவி வழியாக அறிந்தவை. அது ஒவ்வொரு மாணவனுக்கேற்ப ஆசிரியனால் அளிக்கப்படுவது. மேற்கின் நாஸ்டிக் மதங்கள் இந்து, பௌத்த அம்சங்களை சில இடங்களில் கொண்டிருந்தாலும் அவற்றை அதற்கான ஆசிரியர்கள் மூலம் தன்னளவிலேயே புரிந்து கொள்ள வேண்டும். மேற்கின் தத்துவ மத அடிப்படைகளை கொண்டு நம் மரபை விளக்கிக் கொள்ள முயல்வது கண்ணை கட்டிக்கொண்டு யானையை கையால் அறிவதுபோல தான்.

இக்கட்டுரைகள் விரித்தளிக்கும் பாதைகள் பல, அவை ஒளி நிரம்பியவை. நன்றி.

ஸ்ரீராம்

தற்கல்வியும் தத்துவமும்-5

தற்கல்வியும் தத்துவமும்-1

தற்கல்வியும் தத்துவமும்-2

தற்கல்வியும் தத்துவமும்-3

தற்கல்வியும் தத்துவமும்- 4

அன்புள்ள ஸ்ரீராம்,

நீங்கள் குறிப்பிடுவது உண்மை. இன்றைய சூழலில் தமிழில் மெய்யியல் பற்றிப் பேசுவதென்பது ஏற்கனவே இருக்கும் பல கருத்தியல் உறைநிலைகளை உடைத்து, அகற்றி, அதன் விளைவாக கிடைக்கும் சிறிய இடத்தில் நம் கருத்துக்களை வைப்பதாகவே இருக்கிறது. ஒரு மாபெரும் ‘கல்வி அழித்தல்’ நிகழாமல் இங்கே எதையும் கற்கமுடிவதில்லை. இந்து, இந்திய மெய்யியலை விரும்பிக் கற்பவர்கள், அவற்றை முழுமையாக நிராகரிப்பவர்கள் என இரு சாராருமே அத்தகைய பிழையான கல்வியை அடைந்து, முற்றிலும் தவறான உறுதிப்பாடுகளுடனேயே இருக்கிறார்கள். விடாப்பிடியாக ஒன்றைச் செய்வதற்கு ஒரு விளைவு காலப்போக்கில் உருவாகும் என நான் நம்புகிறேன். ஆகவே இதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அத்தனை திரிப்புகள், திசைமாற்றல்களைக் கடந்து சிலர் வந்துகொண்டும் இருக்கிறார்கள்.

ஜெ

ஜெயமோகன் நூல்கள்

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்க

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க
முந்தைய கட்டுரைஇரண்டு நாட்கள்
அடுத்த கட்டுரைஆ.ராசா, ஸ்டாலின், ராஜராஜசோழன்- கடிதம்