தூக்கம், கவனம்

அன்புள்ள ஜெ

இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து நீங்கள் ஜா.தீபா பேசும்போது தூங்கியதாக இணையத்தில் ஒரு கோஷ்டி கெக்கலி கொட்டிக்கொண்டிருக்கிறது. சும்மா ஒரு தகவலுக்காக.

அர்விந்த்

*

அன்புள்ள அர்விந்த்

மகிழ்ச்சி எல்லாருக்கும் நல்லதுதானே? இந்த எளிய மக்களின் மகிழ்ச்சி என்பது அவர்களைப்போல பிறரையும் கற்பனை செய்துகொள்வதில் உள்ளது. அதன் வழியாக தங்கள் வாழ்க்கையை நரகமாக்கும் தங்கள் சர்வசாதாரணத் தன்மை பற்றிய உணர்வை கடக்க முயல்கிறார்கள்.

இது மிகச் சங்கடமான காலம். சமூக வலைத்தளங்கள் சர்வசாதாரணமானவர்களை படைப்பாளிகளுடனும் சாதித்தவர்களுடனும் புகழ்பெற்றவர்களுடனும் இணையாகப் பழக அனுமதிக்கின்றன. போலியான ஒரு சமத்துவத்தை அவை அவர்களுக்கு அளிக்கின்றன. சாதாரணமானவர்களுக்கு அந்த சமத்துவம் உள்ளீடற்றது என்று உள்ளூரத் தெரியும். தாங்கள் வெறும் சாமானியர் என்பதும் தெரியும். ஒவ்வொருநாளும் அவர்களின் அன்றாட வாழ்க்கை அதை அவர்களிடம் ஆணியடித்ததுபோலச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆகவே படைப்பாளிகளுடனும் சாதித்தவர்களுடனும் தங்களை ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கசப்பு கொள்கிறார்கள். புண்படுகிறார்கள். அகத்தே எரிந்துகொண்டே இருக்கிறார்கள். அது நரகம்.

அந்த தீராத வதையில் இருந்து தப்பும்பொருட்டு அவர்கள் அவதூறுகளை உருவாக்குகிறார்கள். வசைபாடுகிறார்கள். துணிவு குறைவானவர்கள் போலிப்பெயர்களில் அவற்றைச் செய்கிறார்கள். சிலர் அவதூறுகள் அல்லது வசைகள் நிகழுமிடங்களுக்குச் சென்று சிரித்துவிட்டுச் செல்கிறார்கள். சமூக ஊடகமே இவர்களுக்கான வெளியாக ஆகிவிட்டது. ஆகவேதான் எத்துறையிலேனும் சாதித்தவர்கள்,  தெரிந்த ஆளுமைகள் இணையவெளிக்கு வரமுடியாத சூழல் உள்ளது. சராசரிக்குமேல் செல்வம் கொண்டவர்கள் கூட வரமுடியாது. மனிதரை நம்பி அங்கே முகம்காட்டியவர்களெல்லாம் தெறித்து ஓடிவிட்டார்கள்.

(அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் நடிகர்களும் அலுவலகம் வைத்து தங்கள் சமூகவலைத்தள கணக்குகளை நடத்துகிறார்கள். ஒரு வடிகட்டலுக்குப் பின் அன்றி எதுவுமே அவர்கள் வரை சென்று சேராது)

இணையம் ஒரு சாதாரண நபருக்கு எவருடனும் தொடர்பு கொள்ள வழியளிக்கிறது. சென்ற தலைமுறையில் ஒருவர் சுந்தர ராமசாமியுடனும் பாலசந்தருடனும் உரையாடுவதென்பது மிக அரிதான வாய்ப்பு. இன்று அது எளிதாக அமைகிறது. ஆனால் அதை தன் மகிழ்வுக்காக, தன் கல்விக்காக, தன் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் அரிதினும் அரிதானவர்கள். பெரும்பாலானவர்கள் அந்த ஆளுமைகளால் சொந்த தன்முனைப்பு சீண்டப்படுபவர்கள். அதன் விளைவாக துன்பத்தில் எரிந்துகொண்டே இருப்பவர்கள். அதை ஆற்றிக்கொள்ள அந்த ஆளுமைகளை இழிவுசெய்ய, ஏளனம் செய்ய முயல்பவர்கள்.

இந்த நஞ்சை சந்திக்காத புகழ்பெற்ற எவருமே இல்லை. எல்லாருக்குமே இது தெரியும். தனி உரையாடல்களில் இதை கசப்புடனும் ஏளனத்துடனும் சொல்லிக் கொள்வார்கள். நான் எழுத்தாளன், உரையாடலை உருவாக்குபவன் என்பதனால் பொதுவெளியில் சொல்கிறேன்.

ஆளுமைகளை ஏளனம் செய்வது, சிறுமைசெய்வது வழியாக சாமானியர்கள் அந்த ஆளுமைகளையும் தங்கள் தரத்துக்கு கொண்டுவந்துவிட்டோம் என கற்பனை செய்கிறார்கள். ஆனால் என்ன செய்தாலும் செயலியற்றி வென்றவர் வென்றவரே என்னும் உண்மை கற்பாறை போல் கண்முன் நிற்கிறது. ஆகவே சாமானியரின் அகத்துயருக்கு முடிவே இல்லை. அவர்களுக்குச் சமூக வலைத்தள உலகம் பெரும் வதையாகவும், கூடவே விட்டுவிட முடியாத போதையாகவும் உள்ளது. அவ்வப்போது பெரும்பாலானவர்கள் விட்டுவிட்டுச் செல்கிறார்கள். உடனே திரும்பி வந்துவிடுகிறார்கள். போதையடிமைகள்தான்.

சமூக வலைத்தளங்களில் ஈடுபடுவது சாமானியரைச் சீண்டிக்கொண்டே இருக்கிறது. ஆகவே உள்ளம் அலைக்கழிந்து அன்றாடச்செயல்களில் கவனம் சிதறுகிறது. எதையும் உருப்படியாகச் செய்ய முடிவதில்லை. தொடர்ச்சியாக பத்துபக்கம் வாசிப்பதே கடினமாகிறது. குடும்ப உறவுகளையே பேண முடிவதில்லை. ஆகவே அவ்வப்போது இணைய உலகை விட்டுவிட்டுச் செல்வதாக அறிவிக்கிறார்கள். ஆனால் விட்டுவிட்டால் அவர்களுக்கு இருக்கும் எளிமையான ஓர் இருப்பு கூட இல்லாமலாகி, அவர்கள் உலகில் இல்லை என்றே ஆகிவிடுவதாக உணர்கிறார்கள். பெயர் அறிந்த நாலு பேரை வசைபாடும் போதும் எள்ளிநகையாடும் போதும் வரும் ரகசியமான ஒரு ஆணவநிறைவுதான் அவர்களுக்கு எஞ்சும் ஒரே அடையாளம். அந்த சில்லறை அடையாளம் கூட அவர்களுக்கு வெளியுலகில் இருப்பதில்லை. அவர்களின் தொழிலில், குடும்பத்தில் அவர்கள் மிகமிக எளியவர்கள். கண்ணுக்கே தென்படாதவர்கள். ஆகவே திரும்ப வருகிறார்கள்.

அத்துடன் இன்னொன்று. இது சாமானியர்களின் ரகசியக் களிப்பு மட்டும்தான். ஆனால் சாமர்த்தியமாக இதற்கு அரசியல் சார்ந்து ஒரு சாயம் பூசிக்கொள்ளலாம். அரசியல்சரிநிலைகள், ஒழுக்கச்சரிநிலைகள் சார்ந்து நியாயம் கற்பித்துக் கொள்ளலாம். இன்னார் சொல்வது அரசியல் ரீதியாக தவறு, ஆகவே எதிர்க்கிறேன், மற்றபடி நமக்கு என்ன பகை என சொல்லிக் கொள்ளலாம். இவர் பேசியது ஒழுக்கம் அல்லது சமூக அறத்துக்கு எதிரானது, ஆகவே எதிர்க்கிறேன் என்று பாவலா காட்டலாம். ஆனால் இதெல்லாமே தற்பாவனைகள், இந்த வகையான உறுதியான நிலைபாடுகள் ஏதும் உண்மையில் தனக்கு இல்லை என அதைச் சொல்பவரே அறிவார்.

ஏனென்றால் சாமானியர் எவரும் உறுதியான கொள்கைகளின்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள் அல்ல. கிடைக்கும் வாய்ப்புகளினூடாக அங்கே இங்கே ஒட்டியும் ஊடுருவியும் சிறு வாய்ப்புகளை கண்டடைந்து தங்கள் எளிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்களே. கொள்கையின் பொருட்டும் அறத்தின் பொருட்டும் கூச்சலிடுபவராக சமூகவலைத் தளங்களில் தங்களைக் காட்டிக்கொள்ளும்போது, அந்த பொய்ப்பிம்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக தாங்களே நம்ப ஆரம்பித்துவிட்டால், தான் ஒரு சாமானியனாக இருப்பதன் சிறுமையில் இருந்து கற்பனையிலேனும் மீளமுடிகிறது. ஆனால் இந்த பாவனை மிகமிக கடினமான திரை. ஒருவர் தானாகவே இதைக் கிழித்துக்கொண்டால்தான் உண்டு.

அந்த மனநிலைக்குச் சென்ற நடுவயதான ஒருவர் மீள முடியாது. இளைஞர்கள் தங்களுக்குள் அந்த மனநிலை செயல்படுவதை தற்பரிசீலனை வழியாக உணர்ந்து விடுபட்டாகவேண்டும். இல்லையேல் எதையுமே கற்க முடியாது. எவராயினும் தங்களைவிட மேலான, தங்களைவிட முன்சென்றவர்களிடமிருந்தே எதையாவது கற்க முடியும். அதற்கு நேர்மனநிலையுடன் அவர்களை கவனிப்பதும், உரையாடுவதும் அவசியமானது.

சாமானியர் என்பது ஒரு இழிநிலை அல்ல. அது எவருக்கும் இயல்பான நிலையும் அல்ல. எவருக்கும் அவருக்கான செயற்களம் ஒன்று இருக்கும். அதைக் கண்டடைந்து, அதில் செயலாற்றி, முதல் வெற்றியைக் கண்டுவிட்டாலே இந்த தாழ்வுணர்ச்சியும் அதன் விளைவான காழ்ப்புகளும் எவ்வளவு அர்த்தமற்றவை என தெரியும். இந்த தாழ்வுணர்ச்சிக் கூட்டத்தை ஒருங்குதிரட்டி, ஓர் கருத்துத்தள சக்தியாக ஆக்கி, தங்கள் அற்ப அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்பவர்களின் சூழ்ச்சிகளும் தெரியவரும். அது ஒரு பெரிய விடுதலை. அதை அடைந்த பலர் நம் நட்புக்கூட்டத்தில் உள்ளனர்.

*

இனி இந்த தூக்கம் பற்றிய அலர். இந்த விவாதத்தையே இவற்றைச் சொல்லத்தான் பயன்படுத்திக் கொள்கிறேன். சிலருக்கு உதவலாம்.

நான் பொதுவாக பகலில் எங்கும் தூங்குவதில்லை. ஏனென்றால் ஒருநாளில் குறைந்தது 8 மணிநேரம், சாதாரணமாக 9 அல்லது 10 மணிநேரம் தூங்குபவன் நான். இரவில் ஆறுமணி நேரம் பகலில் மூன்று மணிநேரம் என்பது கணக்கு. எந்த நிலையிலும் தூக்கத்தைத் துறப்பதில்லை. எதன் பொருட்டும். காரில் செல்லும் நீண்ட இந்தியப் பயணங்களில்கூட எட்டுமணி நேரத் தூக்கம் என்பது கட்டாயம் என்பது என் கொள்கை என்பது நண்பர்களுக்குத் தெரியும்.

தூக்கத்தை தவிர்த்துச் செய்யப்படும் செயல்கள் பெரும்பாலும் பயனற்றவை. உழைப்பை அவ்வாறு செய்யலாம். படைப்புச் செயல்களைச் செய்ய முடியாது. ஒருநாளில் குறைந்தது 10 மணிநேரம் கடும் மூளையுழைப்பு செய்பவன் நான். எல்லாமே தீவிரமான, செறிவான வேலைகள். அந்த ஆற்றல் துயிலில் இருந்து வருவது.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அன்று மேடையேறுவதற்கு முன் பா.ராகவனிடமும் சமஸிடமும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன். பா.ராகவன் நீண்டநேரம் இரவில் விழித்திருப்பார், தூங்குவது குறைவு என்றார். அவருடையது எழுத்துப்பணி என்பதனால் துயில் குறைவது எவ்வகையிலும் உகந்தது அல்ல என்று சொன்னேன். அதற்கு முந்தையநாள் சங்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அக்காடமி உரையிலும் அதை விரிவாகச் சொன்னேன்.

என்னைப் பொறுத்தவரை தூங்கி எழுந்தபின் உடனடியாக அமர்ந்து பணியாற்றுவதே மிகமிகச் சிறந்த வழி. எனக்கு இரண்டு காலைகள். இரவுத்துயிலுக்குப் பின், மதியத்துயிலுக்குப் பின். வேலைகள் முடிந்தபின் அந்தியில் நேரம் கிடைக்கலாம். ஆனால் அன்றைய நாளின் எச்சம் மூளையில் இருக்கும். அது புதியன செய்ய உகந்த பொழுது அல்ல. துயில் மூளையை கழுவி விடுகிறது. தூயதாக செயலுக்கு சித்தமாக இருக்கிறது மூளை.

தூக்கம் குறைவது நினைவுத்திறனை பாதிக்கும். மூளை தோல்சுருங்குவதுபோல பருவடிவிலேயே சுருக்கங்களை அடைகிறது என்கிறார்கள். மூளை களைப்படைந்திருக்கையில் அதை உழைக்கச் செய்வதும் பிழை. ஊக்கமடைந்திருக்கையில் அதற்கு வேலை கொடுப்பது அதை வளர்க்கிறது. மூளை ஒரு குதிரை. அதற்கு ஓய்வும் பயிற்சியும் தேவை.

நூறு வயது வரை நினைவுமயங்காமல் இருந்த கி.ராஜநாராயணனிடம் அதைப்பற்றி கேட்டபோது அவர் சொன்னது ஒரே சொல். ‘தூக்கம். சுகமா நல்லா தூங்கினாலே போதும்…நான் பத்து மணிநேரம் தூங்கிருவேன்’

மூளை ஓர் அரிய பொருள். அதன்மேல் அதை மயங்கச்செய்யும் எதையும் போடுவதில்லை என்பது நான் எடுத்த முடிவு. ஆகவே மதுவை தொடுவதில்லை. அலோபதி மாத்திரைகளிலேயே மயங்கச்செய்யும் எதையும் எடுப்பதில்லை. மிகமிகமிக அரிதாகவே மருந்துகள் உட்கொள்கிறேன். சாதாரணமான சளி, காய்ச்சல் எதற்கும் எந்த மருந்தும் எடுப்பதில்லை. ஏராளமான வெந்நீர் மட்டுமே. அரிதாக கொரோனா போன்றவை வந்து மருந்துகள் உண்ணும்போது டாக்டரிடம் இது மூளையில் ஏதாவது மயக்கத்தை அளிக்குமா என்று கேட்டுக் கொள்வேன். மிக நீண்ட விமானப் பயணங்களில் மட்டும் இருமல் மருந்து இரண்டு மூடி சாப்பிட்டிருக்கிறேன். அதற்கே பதினெட்டு மணிநேரம் தூங்குவேன். அலோபதிக்கு என் உடல் பழகாததனால் எந்த மாத்திரையிலும் தூக்கம் வந்துவிடும்.

இதை தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே இருக்கிறேன். என் மகன் உட்பட இளைய தலைமுறையினர் தூங்குவது மிகக்குறைவு. காரணம் சமூகவலைத்தளங்கள், இணையம். இன்று ‘தூக்கம் வந்தால் தூங்குவோம்’ என்னும் மனநிலை தவறானது. தூங்குவதற்கு ஒரு நேரத்தை முடிவுசெய்து, எது வந்தாலும் அந்நேரத்தில் தூங்கிவிடுவதை ஒரு நெறியாக கொண்டாகவேண்டும். எழுதி ஒட்டிவைப்பதுகூட நல்லது. சினிமாவில் பலர் அதையே செய்கிறார்கள். என் நண்பர் ஒருவரின் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்சேவர் தூங்கும்நேரம் பற்றிய அறிவிப்புதான்.  நீங்கள் தூங்கும் நேரம் என்ன என்பதை உங்களுக்கு அணுக்கமான அனைவருமே அறிந்திருக்கவேண்டும். (சினிமாவில் இது மிக முக்கியமானது)

இல்லை என்றால் தூக்கம் வரும்போது ‘சரி, கடைசியாக வாட்ஸப் மட்டும் பார்த்துவிட்டு தூங்குவோம்’ என ஆரம்பிப்பீர்கள். அது தொட்டுத்தொட்டு இரண்டு மணிநேரத்தை விழுங்கிவிடும். உடலின் இயல்பு என்பது காலப்பிரமாணம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதில் தூங்குபவர்களுக்கு காலப்போக்கில் இயற்கையான தூக்கம் வராமலாகும். மலையாள சினிமாவின் பிரச்சினையே இதுதான். அங்கே இரவுபகலாக படப்பிடிப்பு உண்டு. ஆகவே நடிகர்கள் செட்டில் இருந்து செட்டுக்கு ஓடுவார்கள். விளைவாக இயற்கையான துயிலும் பசியும் இல்லாமலாகும். குடியும் மிகையுணவும் வழக்கமாகி உடல்நிலை கெடும்.

தூக்கம் சரியாக இல்லாமலிருக்க இன்னொரு காரணம் மூக்கு. மூக்கின் வளைவு, பாலிப்ஸ் என்னும் மென்சவ்வு அடைப்பு ஆகியவற்றால் மூச்சு சீராக இல்லாமல் ஆவதன் விளைவாக தீவிரமான தூக்கம்  அமையாமலாகும். உடல்பருமன், வயதாவது ஆகியவற்றால் தாடைத்தசை தளர்ந்து மூச்சுக்குழாயை அடைப்பதனாலும் ஆழ்ந்த தூக்கம் இல்லாமலாகும்.

அதாவது பலமணிநேரம் தூங்குவதுபோல் இருக்கும். ஆனால் காலை எழும்போது சரியாக தூங்கவில்லை என்று தோன்றும். பகலில் சிறு தூக்கங்கள் வந்துசெல்லும். அது ஆழ்துயில்குறைவின் அடையாளம். துயில் என்பது உண்மையில் ஆழ்துயில்தான். அரைத்துயில் என்பது துயில் அல்ல. உள்ளம் மட்டுமல்ல, உடலும் ஓய்வடைவதில்லை. அரைகுறைத் துயில் நெடுநேரம் படுக்கையில் இருக்கவைக்கும். ஆனால் மூளை ஓய்வடையாது.

அதற்கு முறையான சிகிழ்ச்சை எடுத்தாகவேண்டும். திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா மருத்துவநிலையில் இதற்கென்றே ஒரு பிரிவு உள்ளது. (பார்க்க COMPREHENSIVE CENTER FOR SLEEP DISORDERS (CCSD)) இங்கும் பல மருத்துவமனைகளில் துயில்சிகிழ்ச்சை பிரிவுகள் உண்டு. ஆனால் அவை செலவேறியவை என்கிறார்கள். திருவனந்தபுரத்தில் செலவு மிகக்குறைவு. மறைந்த ஸ்ரீ சித்திரைத்திருநாள் மகாராஜாவின் கொடை அமைப்பு அது. ஐம்பது வயது கடந்தவர்கள், பருமனானவர்கள் எவராயினும் சரியாகத்தான் துயில்கிறோமா என ஒரு முறை சோதனை செய்து கொள்வது நல்லது. (பார்க்க பழைய கட்டுரைகள் தூக்கம் ,  தூக்கம் குறித்து மேலும்)

தொடக்கநிலை துயில்சிக்கல் கொண்டவர்களுக்கு படுப்பதன் ‘போஸ்’கள் பற்றிய எளிய பயிற்சிகள் போதும். அடுத்த கட்டத்தில் வாயில் மாட்டும் சிறிய கிளிப் போன்ற கருவிகள். தீவிரமான தூக்கச்சிக்கல் உடையவர்களுக்கு பேட்டரியுடன் இணைந்த ஒரு கருவி உண்டு. மேலதிக காற்றை அது உந்தி நுரையீரலுக்கு அனுப்பும். அது குறையும் மூச்சை ஈடுகட்டும். அக்கருவியை பயணங்களில் கொண்டுசெல்லலாம். இருபதாயிரம் ரூபாய் வரை ஆகுமென நினைக்கிறேன். எனக்கு தெரிந்து பலருடைய வாழ்க்கையையே அந்த கருவி மாற்றியிருக்கிறது. பல ஆண்டுகளாக இந்த எளிய சிகிழ்ச்சை இல்லாமல் வாழ்க்கையை வீணடித்ததாக உணர்ந்திருக்கிறார்கள். எட்டாண்டுகளுக்குப்பின் ஒவ்வொரு நாளும் கண்கள் தெளிந்து, மனம் தெளிந்து விழித்தெழுவதாகச் சொன்ன ஒரு மலையாள சினிமா இயக்குநர் கண்கலங்கிவிட்டார்.

ஒழிமுறி படத்தின் இணை இயக்குநர் உண்ணி தூக்க சிகிச்சை எடுத்துக்கொண்டபோது நானும் ஸ்ரீசித்ரா தூக்க மருத்துவமனைக்குச் சென்றேன். என் தூக்கத்தையும் சோதனை செய்துகொண்டேன். உடலில் எலக்ட்ரோடுகள் பொருத்தி அங்கேயே தூங்கவைப்பார்கள். காமிராக்கள் தூக்கத்தில் நம்மை படம்பிடிக்கும். நம் உடலசைவுகளை பதிவுசெய்யும். என் தூக்கம் ‘பெர்பெக்ட்’ என்றார் அங்கிருந்த பெண்மருத்துவர். ஐம்பது வயதுக்குமேல் மல்லாந்து படுத்து தூங்கக்கூடாது, தாடைச்சதை மூச்சுவழியை அடைக்கும். அதைமட்டும் எனக்கு பரிந்துரைத்தார். நான் காலையில் எப்போதுமே தூக்கம் விழித்ததும் சட்டென்று எழுந்துவிடுவதை, நேரடியாகவே உற்சாகமாக பேசவோ எழுதவோ தொடங்குவதை நண்பர்கள் கண்டிருக்கலாம். தூக்கம் விழித்த ‘சடைவு’ இருப்பதில்லை. அது இருக்கக்கூடாது. அது இல்லாமலிருப்பதே நல்ல துயிலுக்கான சான்று.

இன்று ரயிலில் பலர் தூங்கும்போது படும் அவஸ்தைகளை காண்கிறேன். திடுக்கிட்டு திடுக்கிட்டு விழித்துக்கொண்டும், கனைத்துக்கொண்டும் இருப்பார்கள். ஒரே கேள்விதான். காலையில் எழுந்தால் சோர்வாக இருக்கிறதா? முகம் அதைத்ததுபோல, தொண்டை வறண்டு அடைத்ததுபோல உணர்கிறீர்களா? கண்கள் களைத்து ஒளிக்கு கூசுகின்றனவா? எங்கு எப்போது அமர்ந்தாலும் ஓரிரு நிமிடங்கள் தூங்குகிறீர்களா? மருத்துவரை அணுகியாகவேண்டும்.

தூக்கம் வருங்காலத்திலும் பெரிய பிரச்சினையாகவே இருக்கும். செல்பேசி போல எப்போதும் உடனிருக்கும் ஒரு கருவி நம்மை தூங்க விடாது. நாம் எப்போது வேண்டுமென்றாலும் எவரால் வேண்டுமென்றாலும் அழைக்கப்படலாம் என்பதைப்போல அபத்தமான நிலை வேறு இல்லை. அதையே அன்று சமஸ், ராகவன் இருவரிடமும் சொன்னேன்.

நான் செல்பேசியில் பேசுவது எனக்கு வசதிப்படும்போது மட்டுமே. நடை செல்லும்போது மட்டுமே செல்பேசியில் பேசுவேன் என்பது ஒரு தன்நெறியாகக் கொண்டிருக்கிறேன். தொழில்செய்பவர்களுக்கு அது இயல்வதல்ல. ஆனால் இரவில் எந்தப்பொழுதில் செல்போனை அணைக்கவேண்டும் என்று தெரிந்திருக்கவேண்டும். அதை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்.

சரி, நீங்கள் கேட்டதற்கே வருகிறேன். அன்றல்ல, என்றுமே எங்குமே தூங்கும்நேரம் தவிர எப்போதும் தூங்குவதில்லை. தூங்கும் நேரம் என்றால் அதை அறிவித்துவிட்டு இருபதுபேர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் அறையிலேயே ஓரமாக படுத்து ஆழ்ந்து தூங்கிவிடுவேன் என்பதையும் நண்பர்கள் கண்டிருக்கலாம். ஆகவே பகலில் மிக மெல்லிய அளவில்கூட மூளை மயங்குவதில்லை.

நான் ஆழமாக ஒன்றை உள்ளத்தில் வகுத்துக்கொள்ளும்போது, அல்லது கவனிக்கும்போது கண்களை மூடிக்கொள்வதுண்டு. என் வரையில் அரைக்கவனம் என்பது இல்லை. அதேபோல கவனிக்கத் தேவையில்லை என்ற சலிப்பு உருவானாலும் கண்களை மூடிக்கொண்டு வேறு உலகில் நுழைந்துவிடுவேன்.

அப்போது ஒரு மொத்த குறுநாவலையும் மனதிலேயே ஓட்டி அழித்துவிடமுடியும். என் தனிப்பட்ட பொழுதுபோக்கு என்பதே வெறுமே என் சுவாரசியத்துக்காக எனக்குள் கதைகளை உருவாக்கி ரசிப்பதுதான். கட்டுரைகளை பல படிகளாக விரிவாக உருவாக்கிக் கொள்வதும் உண்டு. (அதற்கான சில வழிமுறைகளும் உண்டு. அதைப்பற்றி தனிவகுப்புகளில் விரிவாக பேசியிருக்கிறேன்) எங்கிருந்தாலும் நம்மால் சூழலை விலக்கி நம்முள் ஆழ்ந்து நம் சிந்தனைகளை ஒருங்கிணைக்க முடியும். அதைச்செய்யாதவர்களால் என் அளவு எழுதமுடியாது.

தன்னுள் கற்பனையிலாழ்தல் என்பது எழுத்தாளனின் அந்தரங்கமான ஓர் இன்பம். (பதின்பருவத்தில் எல்லாருக்கும் அந்த உலகம் இருக்கும். இறுதிவரை நீடித்தால் நீங்கள் எழுத்தாளர்) இருநாட்களுக்கு முன் ரயில் பயணத்தில் ஒரு துப்பறியும் கதையை நானே அத்தியாயம் அத்தியாயமாக உள்ளத்தில் கற்பனைசெய்தேன். ரயில் இறங்கும்போதும் அதை முடிக்கவில்லை. மேம்பாலத்தில் நின்று அதை முடித்துவிட்டு மேலே சென்றேன். சுந்தர ராமசாமிக்கு அந்த வழக்கம் உண்டு. யுவன் சந்திரசேகருக்கு அந்த வழக்கம் உண்டு என்று சொல்லியிருக்கிறான்.

*

இந்த நீண்ட விவாதத்தின் ஒரு பகுதியாக கவனம் என்பது பற்றியும் சொல்ல விரும்புகிறேன். இப்படி ஒரு விவாதத்தின் பகுதியாக இளைஞர் சிலருக்கு இது சென்று சேர்ந்தால் நல்லது. காழ்ப்பாளர்கள் இதைப் பரப்பட்டும். அவர்களால் அப்படியேனும் ஒரு நன்மை விளையட்டும்.

கவனிப்பது என்பது அறிவுத்துறைச் செயல்பாடுகளின் அடிப்படைத் தகுதி. நான் கவனிப்பவற்றை முழுமையாகவே கவனிப்பேன். கவனித்த எதையும் எப்போதும் மறப்பதுமில்லை. என்னுடன் எப்போதுமே பெருந்திரளாக நண்பர்களும் இளைஞர்களும் இருக்கிறார்கள். நான் அரங்குகளில் பிறர் உரைகளை, கட்டுரைகளை, கதைகளை கூர்ந்து கேட்டு முழுமையாகவே திரும்பச் சொல்லி, என் கருத்தைப் பேசுவதை பலர் கவனித்திருக்கலாம். மொத்த உரையாடலையும் கவனித்து, அதை அப்படியே திரும்ப சொல் சொல்லாக மொழியாக்கமும் செய்வேன். இதை சியமந்தகம் கட்டுரைகளில் பலர் வியப்புடன் பதிவுசெய்துள்ளனர். யுவன் மேடையிலும் சொன்னான்.

ஆனால் இது ‘அதீத’ திறன் அல்ல. பயின்று அடையத்தக்கதுதான். ஒன்றைக் கவனித்து, பின் அதை மறக்கிறோம் என்றால் அந்த கவனிக்கும் நேரமே வீணானதுதான். மறதிக்கு எதிரான போர்தான் சிந்தனை என்பது. தத்துவ வகுப்புகளில் ’மறந்துவிட்டேன்’ என்பது ஒரு சாக்கு அல்ல, குற்றம். மரபான வேந்தாதக் குருநிலைகளில் சென்றதுமே கூர்ந்து கவனிப்பதையே முதலில் கற்பிப்பார்கள். அந்த வகுப்புகளுக்குப் பின்னரே தத்துவம். கவனிப்பதற்கான வழிமுறைகள் உள்ளன.

இதை தத்துவ வகுப்புகள் உட்பட அனைத்திலும் தொடர்ந்து சொல்லி வருகிறேன். நம் சந்திப்புகளில் இதற்கான பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அதாவது ஓர் உரையை கவனிப்பதென்றால் அந்த உரையை முழுமையாகவே திரும்ப சொல்ல முடியவேண்டும். பலமுறை நான் அவ்வண்ணம் பிறர் உரைகளைச் சொல்லிக்காட்டி நண்பர்களுக்கு அந்த நம்பிக்கையை அளித்திருக்கிறேன். இன்று பல நண்பர்கள் அதேபோல சொல்லும் திறன்கொண்டிருக்கிறார்கள்.

அந்த அரங்கில் அன்று உண்மையில் நான் மட்டுமே ஜா.தீபாவின் உரையை முழுமையாக கவனித்திருப்பேன். ஜா.தீபாவே மறந்துவிடலாம். இருபதாண்டுகள் கழித்து என் எண்பது வயதில் அந்த உரையை ஏறத்தாழ முழுமையாகவே என்னால் திரும்பச் சொல்ல முடியும்.

மரபான வேதாந்த குருகுல முறைகளில் தத்துவக் கல்விக்கு முன் அளிக்கப்படும் இப்பயிற்சி ஒருவகையான அடித்தளம். முழுமையாகக் கவனித்தல் என்பது நம் உள்ளத்தை ஒழுங்குபடுத்தல்தான்.  அதற்கான வழிமுறைகளை, அதிலுள்ள பிழைநிகழ்வுகளை முறையான வகுப்புகளாக நானும் அண்மைய தத்துவ வகுப்புகளில் நண்பர்களுக்கு பயிற்றியிருக்கிறேன். (தத்துவ வகுப்புக்கு வந்தவர்கள் அங்கே சொல்லப்பட்ட நான்கு வகை fallacy களை நினைவுகூரவும்) பலர் அத்திறனை என்னைவிட எளிதாக அடைந்ததையும் கண்டேன்.

ஆனால் போதைப்பழக்கம் உடையவர்கள், அலோபதி மருந்துகள் (குறிப்பாக ரத்த அழுத்த மாத்திரைகள்) உண்பவர்களால் அந்த பயிற்சியை அடைய முடியாது. போதைப்பழக்கம் இருந்து அகன்றாலும்கூட அது சாத்தியமில்லை என்றுதான் முன்னோடிகள் சொல்லியிருக்கிறார்கள். தனிநபரின் அதீத முயற்சியால் கைகூடலாம். பொதுவாக சாத்தியமில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைசிவசங்கரி
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்-3, அகரமுதல்வன்