ராஜராஜனின் தாடி

அன்புள்ள ஜெ

இதை உங்களிடம் கேட்பதற்கு கொஞ்சம் தயக்கம்தான். ஆனால் இந்தத் தளம் எல்லாவற்றையும் பேசுவதற்குரியதாக உள்ளது என்பதனால் இதைக் கேட்கிறேன். ராஜராஜ சோழன் தாடி மீசை இல்லாதவராகத்தான் சிற்பங்களில் இருக்கிறார். ஆனால் பொன்னியின் செல்வனில் அரசகுடியினர் எல்லாருமே ஏன் தாடியுடன் இருக்கிறார்கள்? இன்றைய ஃபேஷனை அவர்கள்மேல் திணித்ததுபோல தோன்றவில்லையா?

சாந்தகுமார்

*

அன்புள்ள சாந்தகுமார்,

சோழர்களின் வரலாறு உள்ளிட்ட எல்லாவற்றையும் இதேபோல சாதாரணமான ஒரு சினிமா சார்ந்த ஐயத்தில் இருந்து தொடங்கி மேலே பேசுவதற்குத்தான் இங்கே வாய்ப்பு அமைகிறது. ஆகவே வேறு வழி இல்லை.

முதலில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது இந்தியச் சிற்பவியலில் ‘யதார்த்தவாதம்’ இல்லை என்பது. உள்ளது உள்ளபடி காட்டும் வழக்கம் இங்கில்லை. அதாவது நம் சிலைகள் புகைப்படங்கள் அல்ல. ஆனந்த குமாரசாமி உட்பட பலர் இதை விரிவாக எழுதியுள்ளனர். நானும் இத்தளத்தில் பேசியிருக்கிறேன்.

நம் சிற்பக்கலை சாமுத்ரிகா இலக்கணம் கொண்டது. ஸ- முத்ரா என்றால், முத்திரைகளால் அதாவது அடையாளங்களால் ஆனது என்று பொருள்.அந்த அடையாளங்கள் வெவ்வேறு குணங்களின் வெளிப்பாடுகள் மட்டுமே. சத்வகுணம், ரஜோகுணம், தமோ குணம் என குணங்கள் அடிப்படையில் மூன்று.

ஆகவே வெவ்வேறு அக இயல்புகளின்படியே முகங்கள், தோற்றங்கள், அணிகள் ஆகியவை அமையும். அவர்கள் எப்படி இருந்தனர், என்ன அணிந்திருந்தனர் என்பதற்கான நேரடியான பதிவாக அமையாது.

இதைப்புரிந்துகொள்ளுதல் மிக எளிது. சிற்ப இலக்கணம்தான் இன்றும் ஆடப்படும் நம் செவ்வியல் கலைகளிலுள்ள அணிகள், வேடம் ஆகியவற்றின் இலக்கணமும்.

நம் சிற்ப இலக்கணப்படி தாடி என்பது தீட்சையின் அடையாளம். ஆகவே தீட்சை எடுத்துக்கொண்டவர்களுக்குத்தான் பெரும்பாலும் தாடி இருக்கும். துறவிகள் ஞானிகளுக்கு உரியது தாடி.

ஆனால் அர்ஜுனனுக்கு தாடி உண்டு. கர்ணனுக்கு தாடி இல்லை. அதன்பொருள் அர்ஜுனன் தாடி வளர்த்தியிருந்தான், கர்ணன் தினசரி சவரம் செய்துகொண்டான் என்பது அல்ல. அர்ஜுனன் யோகி என்பதுதான்.

நம் சிற்பங்களில் முகத்திலும் உடம்பிலுமுள்ள தசைகளின் நேரடியான பதிவு இல்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அவை மிக அரிதாக குறவன் போன்ற சிற்பங்களிலேயே உள்ளன. தெய்வமுகங்கள், தெய்வத்தன்மை கொண்ட முகங்களில் அவற்றை வடிக்க தடை உள்ளது.

சிற்பமுகங்கள் அந்த ஆளுமை எந்த குணம் கொண்டவரோ அந்த குணத்தை வெளிப்படுத்தும்படி அமைக்கப்படும். அதாவது சத்வ குணம் வெளிப்படுவதற்கு ஒருவகை முத்திரைகள் உண்டு. ரஜோ குணமும் தமோ குணமும் வெளிப்படுவதற்கு அவற்றுக்குரிய அமைப்புகள் உண்டு. இக்குணங்களின் கலப்புக்கும் அதற்கான அமைப்புகள் உண்டு. அந்த முத்திரைகளே வெளிப்படும்.

சத்வ குணம் (நேர்நிலை குணம், சாந்தமும் கருணையும் கொண்டது) வெளிப்படும் முகத்தில் நீண்ட விழிகள், இணையான நேரான புருவங்கள், நேரான கூர்மூக்கு, சிறிய உதடுகள், குவிந்த கன்னங்கள் என முத்திரைகள் அமைந்திருக்கும். அதாவது எல்லா இலக்கணங்களும் மிதமாகவும் ஒத்திசைவுடனும் இருக்கும். ஆகவே பொதுவாக சத்வகுணமுள்ள சிலைகளில் பெண்மைச்சாயலும் இருக்கும். உறுதியான தசைகள் இருக்காது.

முகத்தின் தசைகள், நரம்புகளின் நுண்விவரிப்பு இல்லையென்றாலே உண்மையான முகத்தோற்றம் வெளிப்படாது. தஞ்சையிலுள்ள ராஜராஜசோழன் சிலை என்று பரவலாகச் சொல்லப்படும் சிலையை பாருங்கள். அந்த முகம் அப்படியே விஷ்ணுசிலைகளில் உள்ளதுதான். ராமன் கிருஷ்ணன் எல்லாமே அந்த முகம்தான். மணிமுடி அணிந்த புத்தர்சிலை என்றும் அதைச் சொல்லிவிடலாம் இல்லையா?

அதில் முகவாய் கோடுகள் உள்ளனவா? அதன் விழிகளையும் புருவங்களையும் பாருங்கள். அந்த உடல் பெண்ணின் உடல்போல மென்மையும் குழைவும் கொண்டதாகவே உள்ளது இல்லையா? அதுவா பேரரசரின் உண்மையான வடிவம்?

அரசன் என்றாலும் சத்வ குணம் (பக்தி, பணிவு) வெளிப்படும்படி இச்சிலை உள்ளது. உடலமைப்பும் சாமுத்ரிகா இலக்கணப்படித்தான் அமைந்துள்ளது. ஆகவே முதுமை, தசைகளின் தளர்வு, வடுக்கள் எவையும் இருக்காது. தசைகளின் முறுக்கமும் இருக்காது.

(மிகப்பிற்காலத்தில் நாயக்கர் காலச் சிலைகளில்தான் இந்த இலக்கணங்கள் மீறப்பட்டு ஓரளவுக்கு நேர்த்தோற்றம் சிலைகளில் வரத்தொடங்கியது. திருமலைநாயக்கர் தொப்பையுடன் இருப்பதை காணலாம்)

ஆகவே அச்சிலைகளும் ஓவியங்களுமே யதார்த்தமான ராஜராஜன், அவரை அப்படியே காட்டவேண்டும் என இந்திய மரபை அறிந்தோர் சொல்ல மாட்டார்கள். இந்திய மரபை அறிந்தோருக்கு இன்னொன்றும் தெரிந்திருக்கும். அன்றாடம் சவரம் செய்துகொள்வது இந்திய ஆசாரங்களின்படி அனுமதிக்கப்படவில்லை. பௌர்ணமி தோறும் சவரம் செய்வதுதான் மரபு. (இளையராஜா அந்த ஆசாரத்தைத்தான் இன்றும் கடைப்பிடிக்கிறார்)

புகைப்படங்கள் வரத்தொடங்கிய பின் பதிவான பிற்கால மன்னர்கள் பெரும்பாலானவர்கள் ஒருமாதத் தாடியுடன் இருப்பதைக் காணலாம். ஆகவே சோழர்களுக்கும் அப்படி தாடி இருந்திருக்கலாமென உருவகித்துக்கொள்வதில் பிழையேதுமில்லை.

உண்மையில் சோழர்காலத்தில் ஆண்கள் கூந்தலை வெட்டுவதே இல்லை. பின்னாலும் பக்கவாட்டிலும் மிகப்பெரிய கொண்டைகள் வைத்திருப்பதையே சிற்பங்கள் காட்டுகின்றன. அக்காலத்தைய போர்களில் தலைக்கவசம், முகக்கவசம் இருந்ததா என ஒரு விவாதம் பொன்னியின் செல்வன் தயாரிப்பின்போது நடந்தது. தலைக்கவசம் கண்ணுக்கு படவில்லை. தலைக்கவசமாக இருந்தவை பெரிய கொண்டைகள்தான். அவை வாள்வெட்டு தாங்குபவை.

அக்கொண்டைகளை அப்படியே இன்றைய சினிமாவில் காட்டினால் கேலிக்குரியதாக ஆகிவிடும். (நிறைய படங்கள் வந்து பழகிவிட்டால் அப்படி தோன்றாமலும் ஆகும். சீனாவில் ஆண்கள் போட்டிருந்த நீண்ட பின்னல்கள் எவருக்கும் கேலிக்குரியதாக தெரியவில்லை) ஆகவே காகபட்சம் (காக்கையிறகு) என்று வடக்கே காவியங்கள் சொல்லும் கூந்தல்முறையே ஆண்களுக்கு இருக்கலாமென முடிவு செய்யப்பட்டது (ஆராய்ச்சி செய்து எழுதுபவரான சாண்டில்யனும் தமிழக அரசர்களை எழுதும்போது காகபட்ச கூந்தல் இருந்ததாகவே எழுதுகிறார்)

இத்தகைய பல புரிதல்கள், பல சுதந்திரங்கள் வழியாகவே கதைமாந்தர் உருவகம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்-7, குளச்சல் மு.யூசுப்
அடுத்த கட்டுரைஅஞ்சலி, விழி.பா.இதயவேந்தன்