சந்திப்பின் வழி, கடிதம்

அன்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் நேற்று உங்களை ஒரு நூல் விழவில் கலந்து கொண்டு சில நிமிடம் மட்டுமே கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்களுடன் ஒரு ஒளிபடமும் எடுத்துக்கொண்டேன். நான் அங்கு வந்தது உங்களிடம் சில நிமிடங்கள் மனம்  விட்டு பேசலாம் என்று. ஆனால் அங்கு என் பின்னால் நின்ற கூட்டத்தை பார்த்தவுடன், ஒதுங்கி வந்து விட்டேன்.

நான் இன்றைய தினம் தான் உங்களின் “இன்றைய காந்தி” என்ற பனுவலை படித்து முடித்தேன். முடித்தவுடன் நான் உணர்ந்தவை, ஒரு வாசகனால் பல நூல்களை வாங்கி படிக்க இயலாத ஒன்றை, நீங்கள் அதீத உழைப்புடன் ஆராய்ச்சி செய்து பல நூல்களை படித்து, அந்த நூல்களின் முக்கிய சாராம்சங்களை எல்லாம் வாசகனுக்கு உகந்த வகையில் உங்கள் ஆழ்ந்த தனித்துவமான மொழி நடையில் உங்களுடன் நடந்த விவாதங்களுக்கு பதில் சொல்வதில் நயமாக, மிகவும் நாகரீகமான வகையில் வெளிப்படுத்தியதாக  என்னை உணரவைத்தது.

காந்தி அவர்களே ஆத்மாவாக உங்கள் மேன்மையான எழுத்துக்களின் மூலம் தன் உண்மை வரலாற்றை சொல்லியதாகவும் நான் எண்ணினேன்.

உங்களுடைய ஒவ்வோர் ஆக்கமும் மிகவும் ஆழமானவை. நான் முதலில் படித்த நாவல் விஷ்ணுபுரம்..மெய்மை தேடலின் உன்னதமான நாவல். இரண்டாவதாக கொற்றவை – கண்ணகி பற்றிய அறியாதவற்றை படித்து வியந்தேன். மிக மிக ஆழமான மொழி நடை. மூன்றாவது பின் தொடரும் நிழலின் குரல் – ஒரு நாட்டின் உண்மை வரலாறு, இங்குள்ள கட்சியின் நாடகங்கள் அனைத்தும் உண்மையின்மையின் செயல்கள் அனைத்தும் ஒரு வாசகன் அறியும்படி அமைந்த ஒரு ஒப்பற்ற நாவல். நான்காவதாக குமரித்துரைவி – மீனாக்ஷி சுந்தரேஸ்வரின் திருக்கல்யாணம் உருவான வரலாறு. சமீபத்தில் இன்றைய காந்தி படித்து முடித்தேன்.

வெண்முரசில் பதிமூன்று பகுதிகள் வாசித்து முடித்து, நீர்க்கோலம் வாசிக்க எண்ணியுள்ளேன். உங்களை நாகர்கோவில் வீட்டில் வாய்ப்பு கிடைக்கும்போது சந்திக்க பெரிதும் விழைகிறேன்.

இந்த பகிர்வில் என்னுடைய ஒளிப்படத்தையும் இணைத்துள்ளேன்.

அன்புடன்

பழனியப்பன் முத்துக்குமார்.

*

அன்புள்ள பழனியப்பன்,

பொதுவாக நிகழ்ச்சிகளில் ஒருவகையான எளிய முக அறிமுகமே இயல்வது. ஓரிரு சொற்கள் பேசிக்கொள்ளலாம். சந்திப்பு, உரையாடல் என்றால் அதற்கென்றே அமர்வதுதான் ஒரே வழி. அதற்கு நான் வெவ்வேறு வகையில் வாசகர்களையும் நண்பர்களையும் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத்தவிர வழியில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைபிஸி!
அடுத்த கட்டுரைஆதித்தகரிகாலன் கொலைவழக்கு- வெளியீட்டு விழா உரைகள்