இந்துமதத்தின் அரசியல்

அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய ஜெ அவர்களே,

அடியேனின் நமஸ்காரங்கள். நலமா ? மணி விழா வாழ்ததுக்கள்.

தங்களின் “இந்து வெறுப்பை எதிர்கொள்வது” பற்றிய கட்டுரையை படித்தேன். இதில் நீங்கள் முக்கியமாக சொல்ல வரும் இந்துத்துவ அரசியலின் கருத்தை குறித்த என் ஐயத்தை தீர்த்து கொள்ளவே இம்மின்னஞ்சல்.

தாங்கள் சொல்வது போல் உள்நாட்டிலும் வெளிநாடு எங்கிலும் அரசியலாக்கப்பட்ட இந்து மத வெறுப்பு பிரச்சாரத்தை எப்படி சாமானிய இந்துக்கள் எதிர்கொள்வது?

உதாரணமாக வேற்று மதத்தினர்களெல்லாம் (மற்ற சாதி இந்துக்கள் உட்பட) ஒன்று சேர்ந்து மாநில அளவிலோ, தேசிய அளவிலோ ஓர் அரசியல் நிலைப்பாடு எடுத்து வாக்களிக்கிறார்கள். இவர்கள் ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள்  இந்து மதத்தையும், பிராமணர்களையும், அரசியலுக்காக, அவமானமடுத்தும் விதமாகவும், தரக்குறைவாக பேசியும், பிழைப்பு நடத்துகின்றன. ஆனால் இஸ்லாமியருக்கோ, கிறுத்தவருக்கோ அது வெறும் இந்துக்களுக்குள் நடக்கும் சண்டை என்று, கடந்தோ, இல்லை, கண்டும் காணாமலோ இருந்து விடுகிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க, இந்து மதம், பாரத கலாச்சாரம் என்பதே பிற்போக்கானது என்ற எண்ணத்தின் அடிப்படையில், போலி மதச்சார்பிண்மையுடன், வேற்று மதத்தினரை, வெறும் அடையாள அரசியலுக்காக உபயோகப்படுத்தும் கட்சிகளுக்கு மத்தியில், ஏதோ ஒரு கட்சி, இந்து மதத்தையும், இங்கு யுகங்களாக இயங்கி வரும் கலாச்சார பண்பாட்டையும் மதித்து குரல் கொடுக்கும் (அல்லது கொடுப்பதாக கூறிக்கொள்ளும்) என்றால், அதை சாமானிய இந்து ஆதரிக்கத்தானே செய்வான் ?

அப்படி ஆதரிப்பதாலேயே அவன் வேற்று மதத்தினருக்கு எதிரியாகவும், மதச்சார்பிண்மைக்கு எதிரியாகவும் சித்தரிக்கப்படுகிறான். Representative democracy (பிரதிநிதித்துவ மக்களாட்சி) என்ற நம் ஆட்சி முறையில் ஒரு சாமானிய இந்துக்கு வேறு என்ன வழி இருக்க முடியும்?

தங்களின் மேலான கருத்துக்களை எதிர்நோக்கி..

அன்புடன்,

வெங்கட்.

*

அன்புள்ள வெங்கட்,

பதின்பருவத்தினரிடம் ஒரு வழக்கம் உண்டு. அவர்களிடம் ‘நீ உருப்படாமல் போவாய்’ என்று பெற்றோர் சொன்னால் சீற்றம் கொண்டு ‘என்னையா அப்படி சொன்னாய். சரி உருப்படாமல் போய் காட்டுகிறேன்’ என்று வீம்பு கொள்வார்கள். அது போன்ற ஒரு நிலைபாடுதான் நீங்கள் சொல்வதும். சாதாரணமாக யோசித்தால் சரிதானே என்று தோன்றும் கருத்துக்களைச் சென்றடைய அறிவும், சிந்தனையும் எதற்கு? அதைக்கடந்து நடைமுறை உண்மையையும், எதிர்கால வழிகளையும் உணர்வதற்கே அறிவும் சிந்தனை பயன்படவேண்டும்.

”அந்த மதத்தைப் பாருங்கள். அவர்கள் மட்டும் அப்படி இருக்கலாமா? ஆகவே நாமும் அப்படி ஆகவேண்டும். அதுதான் பதிலடி” என்று பேசுபவர்கள் உண்டு. அவர்களிடம் நாம் “உங்கள் மதத்திற்கு ஒரு தனித்தன்மை உண்டு என்று நம்பி, அதன்பொருட்டுத்தானே அந்த மதத்தில் இருக்கிறீர்கள். உங்கள் மதம் அந்த தனித்தன்மையை கைவிட்டு இன்னொரு மதம்போல ஆனால் ஏன் உங்கள் மதத்தில் நீடிக்கவேண்டும். அந்த இன்னொரு மதத்திலும் இருக்கலாமே?’ என்று  கேட்டால் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

இந்து மதத்தின் அடிப்படைகளாக உள்ளவை நான்கு இயல்புகள். அவை வரலாற்றினூடாக உருவாகி வந்தவை. இந்து மெய்ஞானிகளால் உருவாக்கப்பட்டவை. இந்து மெய்நூல்களாகத் திரட்டப்பட்டவை.

. இந்துமதத்தின் பன்மைத்தன்மையும், உள்விரிவும். பல்வேறு வகையான நம்பிக்கைகளை, வழிபாட்டுமுறைகளை, தத்துவக்கொள்கைகளை அது தனக்குள் அனுமதிக்கிறது. தனக்குள் உட்பிரிவுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. புதியவற்றை உள்ளிழுத்துக்கொண்டே இருக்கிறது

ஆ. தனிமனித சுதந்திரம். மீட்பு என்பதை ஒரு தனிநபரின் பயணமாகவே அது பார்க்கிறது. அதற்கான வழி அவருடைய தனித்தேர்வு. ஆகவே ஓர் இந்து எந்த அமைப்புக்கும் கட்டுப்பட்டே ஆகவேண்டியவர் அல்ல.

இ.அடிப்படைக் கொள்கைகளையும் நடைமுறைக்கொள்கைகளையும் பிரித்துக்கொள்ளும் பார்வை அதற்கு உண்டு. மாறாமூலநூல்கள் என எதுவுமில்லை. அடிப்படை மெய்யியல் தரிசனங்களையே ஞானிகள் பேசுகிறார்கள். அன்றாடவாழ்க்கையின் ’செய்- செய்யாதே’ ஆகியவை மெய்யியலாக கருதப்படவில்லை. அவை காலந்தோறும் மாற இந்துமெய்யியல் அனுமதிக்கிறது. காலந்தோறும் மாறிக்கொண்டும் உள்ளது. இந்து மெய்ஞானமரபு என்பது மாறாத நெறிகளால் ஆனது அல்ல. காலந்தோறும் பயிலப்படும் மெய்ஞானதரிசனங்களால் மட்டுமே ஆனது. ஒழுக்கம், ஆசாரம்  ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட பிரபஞ்ச உண்மையையே அது முதன்மைப்படுத்துகிறது.

ஈ. முடிவிலாத ஞானியர் மரபு, குரு பரம்பரை என்னும் உருவகம் இங்குள்ளது. ஆகவே அறுதியான ஞானி அல்லது குரு என எவருமில்லை. அது வளர்ந்துகொண்டே இருப்பது. அந்த மெய்ஞானியரும் குருநாதர்களுமே இந்து மதத்தில் ‘அதிகாரம்’ கொண்டவர்கள். அரசனோ அரசோ அல்ல. அந்த மெய்ஞானிகள் ‘நாமார்க்கும் குடி அல்லோம்’ என்ற தெளிவு கொண்டவர்கள் (அந்த நிலைபாடற்றவர்கள் ஞானிகள் அல்ல, நிறுவனத்தலைவர்கள் மட்டுமே)

இவ்வியல்புகளினால்தான் இந்து மதம் தனித்தன்மை கொண்டுள்ளது. இன்னொரு மதம் அளிக்காத ஞானத்தேடலுக்கான வாய்ப்பை அளிக்கிறது. அந்த காரணத்தால்தான் நான் இந்துவாக இருக்கிறேன். இந்த மெய்ஞான மரபு அழியலாகாது என்றும், நீடிக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன்.

ஒருவர் என்னிடம் இப்படிச் சொல்கிறார் என்று கொள்வோம். ’இந்து மெய்ஞான மரபு அழிந்துவிடும், இதைக் காக்க ஒரே வழிதான் உள்ளது, மேலே சொல்லப்பட்ட நான்கு அடிப்படைகளையும் அது துறந்துவிடவேண்டும்’ என்கிறார். என் பதில் என்னவாக இருக்கும்?  ‘அப்பண்புகள் இல்லையேல் அது நான் நம்பும் இந்துமதமே அல்ல. அது ஏன் வாழவேண்டும் என நான் முயலவேண்டும்?  வெறும் கும்பலடையாளமாக, சில குறியீடுகளாக, சில அமைப்புகளாக அது எஞ்சியிருந்து என்ன பயன்?’ என்றுதான்.

அந்நான்கு அடிப்படைப் பண்புகளும் இந்துமதத்தை அரசியலியக்கமாக ஆக்குபவர்களால் காலப்போக்கில் அழிக்கப்படும் என்பதனாலேயே அரசியலில் இருந்து இந்து மெய்மரபு முற்றிலும் விலகியிருக்கவேண்டும் என்று நான் சொல்கிறேன்.

ஏனென்று எனக்கு ஒரு புரிதல் உள்ளது. அது நடைமுறையில் இருந்து அறிந்தது. கண்கூடாகவே இன்று அதற்கான சான்றுகள் இணையவெளியில் காணக்கிடைக்கின்றன.

அ. ஒற்றைப்படுத்தல். அரசியலியக்கம் ஒன்று இந்து என்னும் அடையாளத்தை பயன்படுத்தும்போது அது இந்து மெய்ஞானமரபின் உள்விரிவு, பிரிந்து வளர்ந்து இயங்கும் தன்மை ஆகியவற்றை மறுத்து ஒற்றை அடையாளம் கொண்ட ஒற்றைத்திரளாக இந்துநம்பிக்கையாளர்களை ஆக்குகிறது. அவ்வாறு ஆக்காமல் அதனால் தனக்கான அரசியல் ஆற்றலை பெற முடியாது. இந்த மூர்க்கமான ஒற்றைப்படையாக்கம் இந்துமெய்மரபின் அடிப்படை இயல்புக்கு எதிரானது

ஆ. அமைப்புமயமாக்கம். இத்தகைய ஒருமைப்படுத்தலின் விளைவாக மதம் சார்ந்த அமைப்புகள் மொத்த மெய்மரபையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அடையும். அவை அரசியல் சார்ந்த ஆதிக்கத்தையும் அடையும். விளைவாக சுதந்திர ஆன்மிகத்தேடல் ஒடுக்கப்படும். இன்றே வட இந்தியாவிலுள்ள மத அமைப்புகள் எந்தவகையான வேதாந்த சிந்தனையையும் பொதுவெளியில் வைக்கமுடியாத படி ஒடுக்குமுறை மனநிலைக்கு வந்துவிட்டன. மதம் அதிகாரத்துடன் இணைந்த இடங்களிலெல்லாம் இது நிகழ்கிறது.

’கோயிலில் இருப்பது தெய்வம் அல்ல, கல்’ என சொல்லும் ஒரு சித்தர் இன்று வட இந்தியாவில் இருந்தால் அடிவாங்குவார். ஆனால் இந்து மெய்மரபின் ஒளியை ஏந்தி முன்னால் செல்பவர்கள் என்றும் அத்தகைய சித்தர்களாகவே இருந்துள்ளனர். எந்த ஆலயத்திலும் ஒருமுறையேனும் வழிபாடு நடத்தியிராத நித்ய சைதன்ய யதி போன்ற ஒருவர் இத்தகைய அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தும் மதச் சூழலில் எப்படி கையாளப்படுவார்? அவருக்கு இடமில்லாத ஒரு சூழலை ஆன்மிக சாதகன் எப்படி ஏற்கமுடியும்?

இ. விவாத மறுப்பு. இந்து உட்பிரிவுகள் சுதந்திரமான உள்விவாதம் வழியாக வளர்பவை. இந்து மெய்யியலையும், குறியீடுகளை மறுக்கவும் விளக்கம் அளிக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு. அந்தச் சுதந்திரமே இந்த மெய்யியியலின் அடிப்படையான இயங்குமுறை. மதம் சார்ந்த கருத்துக்களும் கொள்கைகளும் அரசியலடையாளமாக ஆகும்போது சட்டென்று அவை எவராலும் மறுக்கமுடியாதவையாக ஆகின்றன. அதை விமர்சிப்பவர்களும் மறுப்பவர்களும் எதிரிகள் ஆகிறார்கள். அவர்களை எதிர்க்கவும் ஒடுக்கவும் அரசியல்வாதிகளும் அவர்கள் திரட்டும் கும்பல்களும் எழுகின்றன. இது உலகமெங்கும் மதம் அரசியலாக்கப்பட்ட இடங்களிலெல்லாம் நிகழ்கிறது. இங்கும் நிகழலாம்.

உதாரணமாக, ஒரு வேதாந்த சிந்தனையாளர் ’புராணங்கள் சொல்லும்  ராமன் என்பவன் ஒரு உருவகம் மட்டுமே, ஓர் அரசன் மட்டுமே ,குறைபாடுகள் உள்ள ஒரு மனிதன் மட்டுமே , தெய்வம் அல்ல’ என்று சொன்னால் ராமனை அரசியலாக்குபவர்கள் திரண்டு அவரை ஒடுக்க முற்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் ராமனை விமர்சிக்க முடியாத மத அடையாளமாகவும், இனக்குழு அடையாளமாகவும் ஆக்கியிருப்பார்கள். அப்போதுதான் அந்த அடையாளம் அரசியல் அதிகாரம் பெறும்

வேதாந்தத்தின் விளைநிலமாகிய கேரளத்தில், ஆதிசங்கரர் பிறந்த மண்ணில், மாபெரும் வேதாந்தியாகிய குமாரன் ஆசான் ராமனை அவ்வாறு சித்தரித்து எழுதிய ஒரு கவிதையை சார்ந்து எம்.எம்.பஷீர் என்னும் பேராசிரியர் ஒரு கட்டுரையை மாத்ருபூமி நாளிதழில் எழுதியபோது அவர் கைகளை வெட்டுவோம் என்ற மிரட்டல் எழுந்து அந்த கட்டுரை நிறுத்தப்பட்டது. கட்டுரை எழுதிய பேராசிரியர் வேதாந்தத்திற்கு அணுக்கமான சூஃபி மரபுக்குள் சிந்திப்பவர். ஏராளமான வேதாந்த நூல்களுக்கு விளக்கம் எழுதியவர். (பஷீரும் ராமாயணமும்)

இந்தவகையான ஒடுக்குமுறை அரசியல் இந்து ஞானமரபுக்கு முற்றிலும் எதிரானது. சங்கரரின் மண்ணில் வேதாந்தம் வாய் திறக்கமுடியாது என்றால், அதற்கு அரசியலாளர்களின் அங்கீகாரமும் அவர்களின் கும்பல்களின் ஏற்பும் இன்றியமையாதவை என்றால், அதுவா நம் முன்னோர் நமக்களித்த மரபு? அந்த நாடா நாம் விரும்பும் ஞானபூமி?

ஈ. அதிகாரக் கருவியாக்குதல்.மதம்சார்ந்த அரசியலுக்கு மதம் கருவியே ஒழிய அதற்கு உண்மையாகவே மதத்தின் மேல் எந்த ஆர்வமும் இல்லை. ஆன்மிகம் மேல் எந்த மதிப்பும் இல்லை. அவர்களின் அரசியலுக்கு எதிராக எதையேனும் சொன்னால் எந்த மெய்ஞானியையும் இழிவுசெய்ய, ஒடுக்க, அழிக்க அது தயங்காது. நான் இந்துத்துவ அரசியலுக்கு எதிராகப் பேசுகிறேன் என்ற ஒரே காரணத்துக்காக, நித்ய சைதன்ய யதி இந்துத்துவ அரசியலை கண்டித்திருக்கிறார் என்பதற்காக, இங்கே பொதுவெளியில் காழ்ப்பைக் கக்கிக்கொண்டிருக்கும் இந்துத்துவர் நித்ய சைதன்ய யதி பற்றி, நடராஜ குரு பற்றி என்னென்ன கீழ்த்தரமான வசைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை நீங்களே பார்க்கலாம். செவிகூசும் ஆபாசச்சொற்கள் வரை அந்த ஞானியர்மேல் பொழியப்பட்டுள்ளது. நீங்களே வாசிக்கமுடியும்.

சரி, உளத்திரிபு கொண்ட சிலர் அப்படிச் சொல்கிறார்கள் என வாதிடலாம். அந்த உளத்திரிபுகொண்ட அதீத இந்துத்துவ அரசியலாளர்களை அவர்களின் ஆதரவாளர்களான மதப்பற்றோ, மரபுப்பற்றோ கொண்ட எவரேனும் ஒரு சொல்லேனும் கண்டித்திருக்கிறார்களா? அந்த வசைகளில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றாவது  சொல்லுவார்களா? முடியாது. ஏனென்றால் அரசியலென்பது அடிப்படையில் ஒருவகை குழுச்செயல்பாடு. குழுவின் பொதுநியதிகளை எவரும் மீறமுடியாது. இந்து ஞானிகளே இந்துத்துவ அரசியலால் கீழ்த்தரமாக வசைபாடப்படுவார்கள் எனில் அந்த அரசியல் இந்து மெய்ஞான மரபுக்கு என்ன நன்மையை செய்ய முடியும்?

உ. மதத்தின் மேல் அதிகாரம். ஒரு மெய்ஞான மரபு தொடர்ச்சியான தன்விமர்சனம் வழியாகவும் மீறல்கள் வழியாகவும்தான் முன்செல்லமுடியும்.  அதைச் செய்யவேண்டியவர்கள் ஞானிகள் மற்றும் அறிஞர்கள். அவர்களிடையே எல்லா விவாதங்களுக்கும், எல்லா மீறல்களுக்கும் இடமுண்டு. ஓர் அரசியலியக்கம் மதத்தின்பொருட்டு பேசினால் அவர்கள் முதலில் ஞானிகளின், அறிஞர்களின் வாயைமூடச்செய்யவே முயல்வார்கள். அரசியலாளர்களின் நோக்கம் தங்கள் அரசியல் லாபம் மட்டுமே. அவர்கள் சொல்லும் கருத்துக்கள் செய்யும் செயல்கள் எல்லாமே அரசியல்ரீதியான அதிகாரத்தை அடைந்து அதை தக்கவைக்கும் நோக்கம் கொண்டவை மட்டுமே. மதம் தேடும் மெய்ஞானம் அவர்களின் நோக்கமே அல்ல. அரசியல் அன்றாடம் சார்ந்தது. அதற்கு பிரபஞ்சநோக்கு என ஏதுமில்லை.

ஆகவே அரசியல் நோக்கத்துடன் மதம் விவாதிக்கப்படுமென்றால் அது அம்மதத்தின் அழிவே .அரசியலியக்கம் தன் அரசியல்நோக்குடன் முன்வைக்கும் கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளின் பொறுப்பை மதமோ மெய்யியலோ சுமக்க முடியாது. அரசியலியக்கம் உருவாக்கும் காழ்ப்புகள், வெறுப்புகள், எதிர்ப்புகள் ஆகியவற்றை மதம் கைக்கொள்ளக்கூடாது. அரசியலியக்கம் செய்யும் செயல்களுக்காக மதம் குற்றவாளிக்கூண்டில் நிற்கக்கூடாது.  மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்திவிட்டு, அதன்பின் அரசியலில் நிகழும் தவறுகளுக்கு மதம் பொறுப்பல்ல என எவருமே வாதிட முடியாது.

ஊ. எதிர்நிலை. மதம், அதன் சாரமாக உள்ள மெய்யியல் ‘எதிரிகள்’ அற்றதாகவே இருக்கமுடியும். எதிர்நிலைகளுக்கும் அப்பால் செல்வதாகவே இருக்கமுடியும். காழ்ப்பு, கசப்பு, எதிர்ப்பு ஆகியவற்றுக்கு மெய்யியலில் நூற்றுக்குநூறு இடமில்லை. ஒரு சிறு கசப்பு எஞ்சினாலும், எதையாவது ஒன்றின்மேல் அச்சமோ விலக்கமோ கொண்டிருந்தாலும் மெய்யியல்பாதையில் செல்லமுடியாது. ஐயமிருந்தால் உண்மையிலேயே ஒரு நல்ல யோகநிலையத்தை நடத்தும் எவரிடமாவது கேட்டுப்பாருங்கள். அதற்கு அரசியல் முற்றிலும் உதவாத ஒன்று. ‘அயல்’ ‘பிறர்’ இல்லாமல் அரசியலே இல்லை.

நீங்களே சென்று அந்த அரசியலாளர்களைப் பாருங்கள். அவர்கள் எவ்வகையான உச்சகட்ட காழ்ப்பில், வெறுப்பில், எதிர்மனநிலையில் இருக்கிறார்கள் என்று பாருங்கள். அச்சம், ஐயம், கோபம் என அவர்கள் அன்றாடம் தங்களையே வதைத்துக்கொள்கிறார்கள். எதிரிகளை எண்ணி எண்ணி தவிக்கிறார்கள். அதையா ஆன்மிகம் ஒருவருக்கு அளிக்கும்? அந்நிலையில் உள்ள ஒருவர் ஆன்மிகத்திற்கு காவலராக இருக்க முடியுமா?

*

சரி, உண்மையிலேயே நீங்களோ பிற அப்பாவிகளோ நம்புவதுபோல அரசியலியக்கம் மதத்தை காக்கமுடியுமா? அரசு ஒரு மதத்தை அல்லது மெய்யியலை வளர்க்க முடியுமா?

முடியும் என்றால் நீங்கள் மதம் என நினைப்பது உண்மையில் என்ன? ஓர் அதிகார அமைப்பு அல்லது ஒரு சமூகக்குழு மட்டும்தான் இல்லையா? மதம் என்பதை மெய்யியல்தொகை என்று நினைத்தீர்கள் என்றால் அதை மெய்யியலாளார்கள் தானே வளர்க்க முடியும்? காக்கமுடியும்?

இதுவரை இந்துத்துவம் பேசும் அரசுகள் இந்து மரபுக்கு என்ன செய்துள்ளன, அடையாளங்களை கையிலெடுத்துக்கொள்வதை தவிர? வேறெந்த மெய்மரபுக்கு வேறெந்த அரசு என்ன நன்மை செய்துள்ளது?

இந்து மெய்யியல் சர்வதேச அளவிலான மாபெரும் கூட்டியக்கமொன்றால் தாக்கப்படுகிறது, திரிக்கப்படுகிறது, அழிவை நோக்கி தள்ளப்படுகிறது என்பது உண்மை. ஏற்கனவே அழிக்கப்பட்டவையும் இன்று அழிவின் விளிம்பில் நின்றிருப்பவையுமான இயற்கைமதங்களின் மேல் நடந்த அதே தாக்குதல், அழித்தொழிப்பு முயற்சிதான் அது. இந்து மெய்ஞானமரபு தப்பிப்பிழைக்குமா என்பதை வரலாறுதான் சொல்லவேண்டும்.

ஆனால் தப்பி பிழைத்து வளரவேண்டுமென்றால் அதற்கான வழி அதை அரசியல்கட்சியாக ஆக்குவது அல்ல. அரசியலில் அடைக்கலம் தேடுவதும் அல்ல. அது அந்த அழிவை மேலும் விரைவாக்கும். இந்து மெய்மரபை அழிக்கும் நோக்குடன் தாக்குதல்களைச் செய்பவர்கள், அதன்மேல் சர்வதேச வெறுப்பை உருவாக்குபவர்கள் எந்தெந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்களோ அதையெல்லாம் ஒன்றுவிடாமல் செய்து இந்து மரபின்மேல் மேலும் தாக்குதலை ஈர்ப்பவர்கள் அரசியலாளர்களே. இந்துமத ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொண்டு மூர்க்கமான மொழியில் பேசுபவர்கள், வெறுப்பையும் காழ்ப்பையும் முன்வைப்பவர்கள் இந்து மரபின் மீது தாங்களும் சேறுபூசுகிறார்கள்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல, தொன்மையான இயற்கைமதமான இந்து மெய்மரபு அந்த தொன்மை காரணமாகவே பலவகையான பழங்குடி ஆசாரங்களையும், காலத்திற்கு ஒவ்வாத பழக்கங்களையும் நம்பிக்கைகளையும் கொண்டிருக்கலாம். அவற்றை மட்டுமே இந்துமதம் என சுட்டிக்காட்டியே இந்து மரபு தாக்கப்படுகிறது. அந்நிலையில் அந்த குறைகளை களைவதே இந்து மதம் மேல் அக்கறை கொண்டவர்களின் செயல்பாடாக இருக்க முடியும். அவற்றை சப்பைக்கட்டு கட்டுவதல்ல. அவற்றுக்கு மேல் அடைக்கோழி போல அமர்ந்திருப்பது அல்ல. எது சாராம்சமோ அதை வைத்துக்கொண்டு சக்கைகளை களைந்தபடியே இருப்பதுதான் அவசியம்.

இந்து மரபென்பதே கீழ்மையான ஆசாரங்கள் மட்டும்தான் என்ற உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் நிகழும் சூழலில் இந்து மரபின் மெய்யியலை, தத்துவத்தை, அதன் கலைகளையும் இலக்கியங்களையும், அதன் மாபெரும் குறியீட்டுவெளியை, அதன் ஆழ்படிமத் தொகையை, அதன் மகத்தான ஒருங்கிணைப்புத்தன்மையை தீவிரமாக முன்வைப்பதே அதை காக்கவும் வளர்க்கவும் நாம் செய்யக்கூடியதாக இருக்கும். உலகின் முன் வைக்கவேண்டும். நம் வாரிசுகள் முன் வைக்கவேண்டும்.

அதற்கு முன் நாமே அவற்றைக் கற்கவேண்டும். நமக்கே தெளிவு இருக்கவேண்டும். அறிதலின் உறுதி இருக்கவேண்டும். அவ்வாறு கற்க நாம் நம் நூல்களையும் ஞானியரையும் அறிந்திருக்கவேண்டும். எண்ணிப்பாருங்கள் இன்று தமிழகத்தில் ஒரு பத்துலட்சம்பேர் (அதாவது இந்துக்களில் இரண்டு சதவீதம்பேர்) இந்து மதம், இந்து மெய்யியல் பற்றிய கல்வியும் தெளிவும் கொண்டவர்கள் என்றால் எந்த எதிர்ப்பிரச்சாரத்தைப் பற்றி நாம் அஞ்சவேண்டும்? இந்த எதிர்ப்பிரச்சாரங்கள் எடுபடுவதே எவரும் எதையும் வாசிப்பதில்லை, கற்பதில்லை, முழுமையாக அறியாமையில் இருக்கிறார்கள் என்பதனால்தானே?

நமக்கு நம் மரபு பற்றி அறிவில்லை. கற்க ஆர்வமுமில்லை. நேரமில்லை என்பதே நம் சாக்கு. நாம் இந்து மதம் பற்றி அறிவதே அதை எதிர்ப்பவர்களிடமிருந்துதான். அவர்கள் வாசிக்கும் அளவுக்குக்கூட நாம் வாசிப்பதில்லை. ஆனால் அதைக் காக்க ஏதாவது ஓர் அரசியல்கட்சிக்கு ஓட்டுபோட்டால்போதும் என நாம் நம்புகிறோம். அது மாபெரும் மடமை

அரசியல் என்பது நம்முடைய வரிப்பணத்தை செலவிடும் அதிகாரத்தை நாம் சிலருக்கு அளிப்பது மட்டுமே. நம் பொருளியலை வளர்க்கவும், இங்கே சட்ட ஒழுங்கை பேணவும் அந்த செல்வம் செலவிடப்படவேண்டும். அதற்கான தகுதி நம் வாக்குகளை பெறுபவர்களுக்கு உண்டா என்பது மட்டுமே அரசியலில் நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வியே ஒழிய அவர்கள் நம் மதத்தினரா, நம் மதத்தை காப்பாற்றுவார்களா என்று அல்ல. மதத்தை மதஞானியர், மத அறிஞர் காப்பாற்றுவார்கள். அவர்களை நாம் அறிந்து ஆதரிப்போம்.

என்னைப் பொறுத்தவரை என் அரசியல் என்பது இந்திய தேசத்தின் மாபெரும் ஒருமைப்பாட்டை பேணுவதென்பது இதன் பொருளியல் வளர்ச்சிக்கே இன்றியமையாதது. அந்த ஒருமைப்பாடு அனைவரையும் அணைத்துச்செல்லும் அணுகுமுறையில் இருந்தே வரும்.

ஜெ

ஜெயமோகன் நூல்கள்

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்க

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

முந்தைய கட்டுரைவ.த. சுப்ரமணிய பிள்ளையும் திருப்புகழும்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்: அ.வெண்ணிலா