மா.ந.ராமசாமி- கடிதங்கள்

ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு, வணக்கம், நலம்தானே?

ம.ந.ராமசாமி பற்றிய குறிப்பு படித்தேன். அவரை  நான் நன்கு அறிவேன். அவர் பெங்களூரில் இருந்தபோது பாவண்ணன் அறிமுகப்படுத்தினார். சங்கு இதழை அவருக்கு அனுப்பி வைத்தேன். சங்கு இதழில் இரண்டு மூன்று சிறுகதைகள் எழுதி உள்ளார். பின்னால் அவர் கோவை வந்து வசித்தபோது ஒரு முறை அவரைப் பார்க்க என் மகனுடன் காரில் சென்றிருந்தேன். ஏன் போனோம் என்றாகி விட்டது. அவர் இல்லமே ஒரு முதியோர் இல்லம் போலிருந்தது. அவருக்குக் காது சரியாகக் கேட்கவில்லை. அவர் மகள்தான் அருகிலிருந்தார். மகளின் மூலம்தான் பதில் பேசினார்.  அவரின் தம்பியோ அண்ணாவோ அவர்களும் மிகவும் மூத்த வயதில் இருந்தார்கள்.

அச்சூழலிலும்  அவர் இலக்கியம் பற்றி நன்கு  கலந்துரையாடினார். நல்ல நினைவாற்றல் இருந்தது. வேண்டாம் வேண்டாமெனத் தடுத்தும் எங்களுடன் காரில் ஏறி தமிழ்நாடு சிற்றிதழ் சங்கத்தலைவர் பூ.அ.இரவீந்திரனைச் சந்திக்க வந்தார். அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் பின் அவரை வீட்டிற்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தோம்.

அவர்  முற்போக்கு சிந்தனை உள்ளவர். அவரின் கதைக்கருக்கள் எல்லாமே  புதுத்தளங்களில்தான் இருக்கும். சைதன்யா சொன்னது போல ஆண்களின் கருத்தே தம் பெருமையைக்  காக்கவே பெண்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான். வள்ளுவர் கூறும் புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறு போல் பீடு நடை என்பதும் அதைத்தானே காட்டுகிறது, நன்றி

வளவ துரையன்

*

அன்புள்ள வளவதுரையன்

வள்ளுவரிலோ அல்லது பிற நீதிநூல்களிலோ உள்ள ‘வகுத்துரைக்கும்’ தன்மை இது சரி, இது அல்லது பிழை என்றே சொல்லும். அந்தக்காலத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இணையாகவே அதற்கு முந்தைய தொல்குடிக்காலம் அனைத்தையும் உள்ளடக்கும், ஒன்றைக்கூட வெளியேதள்ளாத inclusive தன்மை கொண்டிருக்கும். அதையும் புரிந்துகொள்ள முடியும்போதே வரலாற்றுச் சித்திரம் உருவாகிறது.

ஜெ

*

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வேத காலத்து மகாபாரத இதிகாச காலத்து (மகாபாரதக் கதை நிகழ்வு சிறிய அளவில் நடந்திருக்க வேண்டும் என்பது என் நிலை) பெண்கள் கற்பு நிலை பற்றி தங்களது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளீர்கள்.

ஒரு தாயின் இறப்பு குறித்து நீத்தார் சடங்கு செய்கையில் ‘எனது தாய் அறிந்தும் அறியாமலும் உடலுறவு கொண்ட. அனைத்து ஆண்களையும் எனது தந்தையாக கருதி அவர்களுக்கும் நான் அளிக்கும் பிண்டம் சென்று சேரட்டும்’ என ஒரு மகன் கூறும் மந்திரம் பற்றி வேதங்கள் மகாபாரத இதிகாசம் மற்றும் ஐரோப்பிய மரபுகள் போன்றவற்றை ஆய்ந்து கூறுகிறீர்கள்.

படித்த பின் என் கருத்து:

ஒரு பெண் வேத காலத்திலும் இதிகாச காலத்திலும் குழுமணம் இன்னும் ஒரு குழுவின் தன் சகோதரர், தகப்பன் பாட்டன் அல்லாது அனைத்து ஆண்களையும் மணம் செய்து கொள்வது அல்லது ஒரு குடும்பத்தில் அனைத்து சகோதரர்களுக்கும் மனைவியாவது என்னும் இணை மணம் புரிந்து கொண்ட காலமாக இருக்கலாம் எனவே அந்த வழியில் அனைவரும் தந்தை போன்றவர்கள் தனி ஒருவரை அடையாளம் காட்ட முடியாது என்று கூறினால் கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம்.

பெண்ணின் சுதந்திரமாக தடையற்ற பாலியல் உறவு கொள்வது அனுமதிக்கப்பட்ட காலமாக இருந்திருக்கலாம் என்றாலும் அந்தப் பெண்ணின், தாயின் சுதந்திரத்தை இன்றைய காலத்தில் கூட புரிந்து கொள்ளலாம் அங்கீகரிக்க கூட செய்யலாம்.

ஆனால் தாயின் உடல் பாலியல் வேட்கையை தணித்தவர்களை எல்லாம் தந்தையாக அந்தக் காலத்தில் கூட ஏற்றுக் கொள்வதற்கு நியாயம் கற்பிப்பது என் அளவில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அன்புடன்,

துரைசாமி

*

அன்புள்ள துரைசாமி

நீங்கள் ஏற்றுக்கொள்ளாததும் ஏற்றுக்கொள்வதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம்

அந்த தனிப்பட்ட உளவியல் நிபந்தனைகளுக்கு அப்பால்தான் இயற்கையும் அறமும் உள்ளது

அதைக் கடக்காதவர்களுக்கு பக்திக்கு அப்பாலுள்ள ஆன்மிகம் இல்லை. வரலாற்றை முழுமையாக அறியும் வாய்ப்பும் இல்லை

ஜெ

*

முந்தைய கட்டுரைStories of the True – கடிதம்
அடுத்த கட்டுரைஸ்வாமிநாத ஆத்ரேயன்