ஆதித்தகரிகாலன் கொலைவழக்கு- வெளியீட்டு விழா உரைகள்

சி.சரவணக் கார்த்திகேயனின் ‘ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?’ என்ற நாவலின் வெளியீட்டு விழா உரை. அந்நாவலை சென்ற அக்டோபர் 27 முதல் படித்து அன்று காலையில்தான் முடித்தேன். வேகமாக வாசிக்கத்தக்க நாவல். நாவல் ஒரு புதுமுயற்சி என்று தோன்றியது, ஆகவே சுவாரசியமாக இருந்தது.

சரவணக் கார்த்திகேயன் இன்றைய மதிப்பீடுகளின் அடிப்படையில் பண்டைய வரலாற்றைப் பார்க்கிறார். அவர் பார்வையில் ஆதிக்கத்திற்கான ஈவிரக்கமில்லாத போட்டி, அதன் எதிர்மறைக்கூறுகள்தான் வரலாறு. சோழபாண்டிய படையெடுப்புகளில் நிகழும் பாலியல்வன்முறைகளை விரிவாகச் சித்தரிக்கிறார்.  இதை ஒரு irreverent வரலாறு என்று சொல்லலாம். இந்தவகைமையில் இதை தமிழில் ஒரு முன்னோடி எழுத்து என்று கருதுகிறேன்.

நான் பேசிவந்தபோது ஓரிடத்தில் நாவலின் உள்ளடக்கமாக இருந்த அந்த ‘மதிப்பின்மை’ அல்லது வரலாற்றை ஆதிக்கமாக மட்டுமே பார்க்கும் பார்வை பற்றி பேசலாமென எண்ணினேன். குறித்தும் வைத்திருந்தேன். ஆனால் அதுதான் அந்நாவலின் எதிர்பாராத தன்மை. இத்தகைய ஒன்றை உடைத்து விவாதித்து அதை அப்பட்டமாக்கவேண்டாமென தோன்ற உடனே பேச்சை முடித்துக்கொண்டேன். அப்பகுதிகள், குறிப்பாக நாவலின் இறுதி, உருவாக்கும் எரிச்சலோ ஏற்போதான் இந்நாவல் அளிக்கும் அம்சம்.

ரமேஷ் வைத்யா உற்சாகமாகப் பேசினார். அண்மையில் கேட்ட உரைகளில் ஜா.தீபாவின் உரை சிறப்பானது. அவர் என் நண்பர் ஜா.ராஜகோபாலனின் தங்கை. பெண்ணிய- இடதுசாரிக் கொதிநிலைகள் எல்லாம் உண்டு. மேடையில் சட்டென்று வேறொருவராக தெரிந்தார். ஆழமும் தன்னடக்கமும் கொண்ட பேச்சு. அவர் சரவணக்கார்த்திகேயன் நாவலில் பல இடங்களில் பாலியல் சித்தரிப்புகளில் பெண்களின் உடல் பற்றி அளித்திருக்கும் வர்ணனைகளில் வெளிப்படும் மனநிலையை எப்படி எதிர்கொள்வார் என எனக்கு தெரியும்.

ஆனால் மேடையில் மிகுந்த சொல்லடக்கத்துடன், இனிமையும் நட்புணர்வும் சற்றும் குறையாமல் அந்த விமர்சனத்தைச் சொன்னார். அது அருண்மொழியிடமும் இருக்கும் பண்பு. அருண்மொழியை மீறி, சமயசந்தர்ப்பம் பொருந்தாமல் ஒரு சொல் அவளிடமிருந்து வெளிப்பட்டுவிடாது. நான் நெடுநாட்களாகவே எனக்கு அந்தப் பண்பு அமையவேண்டுமென ஆசைப்பட்டு வருகிறேன். (எதிரில் அமர்ந்திருந்த பத்ரி சேஷாத்ரியும் அதையே நினைத்திருக்கக்கூடும்.பாவம்)

முந்தைய கட்டுரைசந்திப்பின் வழி, கடிதம்
அடுத்த கட்டுரைவ.த. சுப்ரமணிய பிள்ளையும் திருப்புகழும்