சிவராம காரந்த்தின் “அழிந்த பிறகு” இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது. நீங்கள் பட்டியலிட்டிருந்த NBT வெளியிட்ட சிறந்த நாவல்கள் வரிசையில் இருந்ததென்று நினைக்கிறேன்.
கன்னடத்தில் 1960-ல் வெளியாகியிருக்கலாம். காரந்த்தின் முன்னுரை ஜனவரி, 1960 காட்டுகிறது. தமிழ் முதல் பதிப்பு 1972-ல் வெளிவந்திருக்கிறது. சித்தலிங்கையா மொழிபெயர்த்திருக்கிறார். வாசிப்பனுபவத்தில் மொழிபெயர்ப்பு என்று எக்கணத்திலும் தோன்றச் செய்யாத நேர்த்தியான அழகான மொழிபெயர்ப்பு. அரை/முக்கால் நூற்றாண்டு கடந்த பிராந்திய செவ்வியல் நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீடுகளுக்காக நேஷனல் புக் டிரஸ்டிற்கும், சாகித்ய அகாடமிக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.
“அழிந்த பிறகு” நாவல் மனதுக்கு மிக நெருக்கமாயிருந்தது. ஒரு அருமையான கிளாஸிக்!. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் கழிந்தும் இன்னும் அதன் விகசிப்பு/இருப்பு/இளமைத் தன்மை அப்படியே ஜ்வலிக்கிறது. அதன் விசாரங்களும், தேடல்களும் இன்றைக்கும் பொருந்திப் போகும் தன்மையும், நிகழ்கணத்தில் நிற்கும் மதிப்பும் கொண்டவை.
“அழிந்த பிறகு” நாவல் வாழ்வின் அடிப்படை கேள்விகளும், ஆழமும் கொண்டு பயணித்தாலும் ஒரு திரில்லரின் சுவாரஸ்யத்தை தன்னுள் தக்கவைத்துக் கொண்டிருப்பதாக எனக்குப் பட்டது ஜெ. சினிமா அறிமுகங்கள் எழுதும்போது ஸ்பாய்லர் அலர்ட் குறிப்பிடுவது போல், இதன் கதையைச் சொன்னால் இதற்கும் ஸ்பாய்லர் அலர்ட் போடவேண்டுமோ என்று புன்னகையுடன் நினைத்துக் கொண்டேன். கதை முன்னரே தெரியாமல், புதிதாக நாவலைப் படித்தால் மிகப் பிரமாதமான வாசிப்பனுபவம் கிட்டும். யசவந்தர் எனும் இயல்பான மனிதனின் வாழ்க்கைச் சித்திரம்தான் கதை என்றாலும், காரந்த்தின் எழுத்தில் யசவந்தரின் குணங்களும், ஆளுமையும், வாழ்வின் பக்கங்களும் புதிது புதிதாய் ஒவ்வொன்றாய் சுவாரஸ்யமாக வெளிப்படும் அந்த அழகு அபாரமானதொன்று. ஒரே அமர்வில் படித்து முடிக்கத் தூண்டும் மாய எழுத்து. காட்சிகளும், நிலப்பரப்பும், மனிதர்களும் நம்முள் நுழைந்து ஒன்றாகி விரியும் அதிசயம்!. எனக்கு ஒரு கலைப் படத்தை திரையில் பார்த்தது போன்று பரவசமாய் இருந்தது.
“அழிந்த பிறகு” – யசவந்தரின் வாழ்க்கைப் பயணத்தில் அவரின் இருப்பு அவரைச் சுற்றிலும் குடும்பத்திலும், உறவினர்களிடத்திலும், நண்பர்களிடத்திலும் உருவாக்கிய தடங்கள்/சலனங்கள் என அருமையான வாசிப்பனுபவம். உடன் யசவந்தரின் வேர்களைத் தேடிப் பயணிக்கும் காரந்திற்குக் கிடைக்கும் வாழ்வின் தரிசனங்கள். நாவல் ஓட்டத்தில் அங்கங்கு வெளிப்படும் பாத்திரங்களையும், யசவந்தருக்கும் அவர்களுக்குமான உறவுகளையும், யசவந்தர் குறித்த அவர்களின் மனப்பதிவுகளையும் வாசிப்பில் அறிவது இன்னும் பரவசமும், சுவாரஸ்யமும் தரக்கூடியதாய் இருந்தது. என்னைக் கேட்டால் இலக்கிய வாசகர்கள் மட்டுமல்லாது, சர்வதேச கலைச் சினிமா ரசிகர்களும் தவறவிடக் கூடாத நாவல் “அழிந்த பிறகு” என்றுதான் சொல்வேன்.
இருபதாம் நுற்றாண்டின் மத்திம காலத்தைய கர்நாடகாவின் அந்த உட்கோடி மலைக்குன்றுக் கிராமங்கள் (சிர்சி சுவாதி அருகே பெனகனஹள்ளி, ஹொன்னகத்தே, சாணெகெட்டி), குமட்டி நிலப் பரப்புகளையும், அதன் மனிதர்களையும், அவர்களின் சந்ததிகளையும், பண்பாடுகளையும் அறிந்துகொண்டது மனதிற்கு மிக நிறைவாக இருந்தது. பரிச்சயமான மும்பை, பூனா, லோனாவாலா, கண்டாலா நிலங்களை நாவலில் கண்டதும் மகிழ்ச்சி. பருவமழைக் காலங்களில் கண்டாலாவின் பசுமையை மனதுள் நினைத்துக் கொண்டேன்.
பகவந்த ஹெக்டே (யசவந்தரின் அப்பா), பார்வதியம்மாள், சங்கர ஹெக்டே, சம்பு ஹெக்டே, மூகாம்பா, ராம ஹெக்டே, சீதாராம ஹெக்டே, கமலம்மா, மஞ்சையா, ஜலஜாட்சி, சிறுவர்கள் யசு, ஜெயந்தன், பகு, தாரேஸ்வரத்துச் சரசி என்னும் கலைவல்லி, இலக்கியம் வாசிக்கும் இந்துமதி…எல்லோரையும் அம்மக்களின் கலாச்சார இழைகளுடன் சந்தித்து, பரிச்சயப்படுத்தி வந்தது ஓர் இனிய நல்பயணம்.
நாவலின் இறுதியில் இந்த உரையாடல்…
“பந்த் அவர்களே! பிறப்பிறப்பு, ஆன்மா, பரமான்மா பற்றிய விஷயங்களில் உங்கள் கருத்தும் அவர் கருத்தும் எவ்வாறிருந்தன?”
“வட துருவம், தென் துருவங்கள்தான்! அவருடையது ஒருவகையான அத்வைதம். அதை நவீன அத்வைதம் என்று அழைக்கட்டுமா? துவைதிகள் சங்கராச்சாரியாரை நாஸ்திகர் என்று அழைத்ததைப்போல, நானும் ஏதாவது பெயரைத் தரலாம். ஆனால் அது அப்படி இல்லை. அவர் தனிமனித வாழ்க்கையை நம்பினார். தனிப்பட்ட ஆன்மாவை நம்பவில்லை. அதனால் அவருக்கு பரமாத்வைப் பற்றிய பிரச்சினையே முக்கியமானதல்ல. பக்தி, மோட்சம் இவற்றிலும் அவருக்கு அக்கறையில்லை. அப்படியானால் அவர் நாஸ்திகரா என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். உயிருள்ளவற்றையெல்லாம் அன்போடு கண்டார் அவர். அவருடைய மனப்பரப்பில் எல்லா வாழ்க்கையும் ஒரே மாதிரிதான். அப்படிப்பட்ட வாழ்க்கையில், உயிர்களில் அன்றும் இன்றும் என்றும் வேறுபாடு காணாத ஒருவைகையான அத்வைதச் சிந்தனை அவருடையது. அத்வைதம் என்றது இதற்காகத்தான். அது அவருடையதேயான ஒருவகை அத்வைதம்.. ”
ஒவ்வொரு மனித வாழ்விலும் மறைவிற்குப் பின் இறுதியில் எஞ்சுவது என்ன என்று யோசித்துப் பார்த்தால்…எண்ணங்கள் பின்னிப்பின்னி எங்கோ இழுத்துச் செல்கின்றன.
வெங்கி