நாயாடிக்காப்பனும் இந்து மதமும்

அன்புள்ள ஜெய்,

உங்கள் “இந்து மதம் என ஒன்று உண்டா?” மூன்று பாகமும் வாசித்தேன் – அருமை! ஒவ்வொரு இந்துவும் படிக்க வேண்டும்.  தங்களின் மூன்று பாகத்தையும் படித்த பின்பு அந்த கட்டுரைகளை அசை போட்ட படியே நடந்த போது தோன்றியது – ஒரு “நாயாடி  காப்பன்” பார்வையில் நம்ம இந்து மதம் எப்படி தோன்றும்?

பாலா
ராலே

*

அன்புள்ள பாலா,

நாயாடி என கேட்காமல்  காப்பனின் பார்வையில் என்று கேட்டீர்கள். காப்பன் கல்வி கற்றவர். ஆகவே வரலாற்றையும், சமூகவியலையும், மானுடப்பரிணமாத்தையும் அறிந்தவர். அவருக்கு சில தெளிவுகள் இருக்கும். அரசியல்வாதிகள் உருவாக்கும் எளிமையான ஒற்றைவரிகளை கொண்டு வரலாற்றையும் பண்பாட்டையும் புரிந்துகொள்பவராக இருக்கமாட்டார். எல்லாமறிந்தவர் போல முகநூலில் சலம்பிக்கொண்டிருக்கவும் மாட்டார்.

நாயாடி காப்பன் இப்படிச் சொல்வார்

என்மீதும், என் மக்கள் மீதும் இருந்த கடும் ஒடுக்குமுறை என்பது மதத்தால் உருவாக்கப்பட்டது அல்ல. மதத்தை அவற்றுக்கு பொறுப்பாக்குவது முழுமையான அறியாமை. ஒடுக்குமுறையும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான போராட்டமும் மானுட வரலாறு முழுக்கவே நடைபெற்றுள்ளன. இரண்டுக்குமே மதம் கருவியாகியுள்ளது.

ஐரோப்பிய வரலாற்றில் மதவிசாரணை, மதம் சார்ந்த ஒடுக்குமுறைகள் வழியாகவே ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டது. அவற்றை வென்று மானுட சமத்துவம், மானுடநீதி பற்றிய கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளவும் அதே மதம்தான் கருவியாகியது.

மானுட இன வரலாற்றில், சமூகங்களின் பரிணாமத்தில் ஈவிரக்கமில்லாத போட்டியே நிகழ்ந்திருந்தது .நியாண்டர்தால் அரைக்குரங்கு வாழ்க்கை முதல் பிற இனக்குழுக்கள் மேல் கொண்ட வெற்றி, அதன் விளைவான சுரண்டல் வழியாகவே மனித இனம் வளர்ந்தது. வரலாற்றில் அவ்வண்ணம் வெற்றிகொள்ளப்பட்ட எத்தனையோ இனக்குழுக்கள் முற்றாகவே அழிக்கப்பட்டுள்ளன. எத்தனையோ இனக்குழுக்கள் அடிமைகளாக்கப்பட்டுள்ளன.

மனித இனம் வளர்ந்தது உபரிச்செல்வம் வழியாக. அச்செல்வம் அடிமைகளை பயன்படுத்துவதன் வழியாக ஈட்டப்பட்டது. அந்தச் செல்வமே கல்வியும், கலைகளும் ஆக மாறியது. அக்கல்வியும் கலைகளுமே அடிமைமுறையை உதறி முன்செல்லும் அறத்தை உருவாக்கின. அடிமைமுறைக்கு மாற்றான இயந்திரங்களை உருவாக்கின. அடிமைமுறையை வலியுறுத்தியவர் பிளேட்டோ. பிளேட்டோ இல்லாமல் ஐரோப்பிய சிந்தனை இல்லை. ஐரோப்பிய இலட்சியவாதமே அடிமைமுறையை அழித்தது.இந்த முரணியக்கத்தை புரிந்துகொள்ளாதவர் வரலாற்றை அறியாதவர்.

ஆகவே, மானுட வரலாற்றில் எங்கும் எக்காலத்திலும் ஒடுக்குமுறை இருந்துள்ளது. ஒடுக்குபவர்களும் ஒடுக்கப்படுபவர்களும் இருந்துள்ளனர். ஒடுக்குமுறை இல்லாத பண்பாடே இல்லை. அதன்பொருட்டு மானுடப்பண்பாட்டையே நிராகரிக்கிறேன் என எவரும் சொல்லமுடியாது.

ஆக்ரமிப்பது, அடக்கியாள்வது, சுரண்டுவது ஆகியவற்றினூடாகவே நேற்றுவரை சமூகவரலாறு இருந்துள்ளது. (இன்று அது வேறுவகையில், நுண்வடிவில் உள்ளது) நேற்று நாயாடிகள் ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டனர். அவர்களுக்கு நேர்மேலே இருந்த பறையர்களும் புலையர்களும் அவர்களை ஒடுக்கினர், சுரண்டினர், விலக்கி இழிவு செய்தனர், அவர்களுக்கு மேலே இருந்த ஈழவர்கள் புலையர்களையும் பறையர்களையும் ஒடுக்கினர், சுரண்டினர், இழிவு செய்தனர். அவர்களை நாயர்கள் ஒடுக்கினர், சுரண்டினர், இழிவுசெய்தனர்

அவ்வாறு அது மேலே மேலே சென்றது. அந்த அடுக்கின் உச்சியில் இருந்த நம்பூதிரிகளுக்குள்ளேயே இளையது என்னும் நம்பூதிரிப்பிரிவு அவர்களுக்கு மேலே இருந்த நம்பூதிரிகளால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டு இழிவுசெய்யப்பட்டது. நாயாடிகளேகூட அவர்களை விட கீழ்நிலையில் இருந்த மலைப்பண்டாரம் போன்ற பழங்குடிகளை தீண்டுவதில்லை.

சென்றகால நிலப்பிரபுத்துவ முறையில் இந்தவகையான அதிகார அடுக்குமுறை எல்லா சமூகங்களிலும், எல்லா நாடுகளிலும் இருந்தது. இதை நிலைநிறுத்த, நியாயப்படுத்த மதங்களை பயன்படுத்திக்கொண்டனர். மதங்களின்மேல்தான் அரசுகளும் பேரரசுகளும் உருவாக்கப்பட்டன. மதங்களே அரசுகளின் அடித்தளங்கள். அவை சமூகத்தை உறுதியான அமைப்பாக ஆக்கும் நோக்கம் கொண்டவை.

ஆகவே மதங்களிலுள்ள கொள்கைகள், நம்பிக்கைகள் எல்லாமே ஆட்சியின் தேவைசார்ந்து   விளக்கப்பட்டன. சமூகக் கட்டமைப்பு தெய்வ ஆணை என முன்வைக்கப்பட்டது. மதநிறுவனங்கள் அந்த அமைப்பை காத்து நின்றன. இதற்கு விதிவிலக்கான ஒரு மதம்கூட உலகில் இல்லை.

ஆனால் அதே மதங்களில் இருந்தே அந்த சமூக அமைப்பை மாற்றும் சிந்தனைகளும் எழுந்தன. அந்த மததத்துவங்களை மறுவிளக்கம் அளித்து, ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் கடக்கும் கொள்கைகள் காலந்தோறும் உருவாயின. அவையும் இந்திய வரலாற்றிலேயே பதிவாகியிருக்கின்றன.

மகாபாரதத்திலேயே கிருஷ்ணன் அப்படிப்பட்ட ஓர் ஆளுமைதான். அசுரர் உள்ளிட்டவர்களை இணைத்து ஷத்ரிய ஆதிக்கத்தை வென்று புதிய அரசுமுறையை அவர் உருவாக்கியதையே மகாபாரதம் பேசுகிறது. சங்கரர், ராமானுஜர் என தொடரும் அந்த ஞானியரின் மரபு மிக நீண்டது. அவர்களின் கொள்கைகளில் இருந்து உருவான இந்திய பக்தி இயக்கமே இந்த தேசத்தில் அடித்தளமக்களின்  அதிகாரம் உருவாக வழியமைத்தது. இந்தியாவில் பத்தாம்நூற்றாண்டுக்குப்பின் உருவான பேரரசுகள் பலவும் அடித்தளச் சாதிகள் எழுச்சி பெற்று உருவாக்கியவையே.

அந்த மரபுதான் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வள்ளலார், நாராயணகுரு என நீள்கிறது. இன்றும் அத்தகைய பெரும் சீர்திருத்தவாதிகள், சமூகப்பணியாளர்கள் மதத்தினுள் இருந்து உருவாகிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அதாவது, மதம் சுரண்டலின் கருவியாக இருந்தது உண்மை. விடுதலையின் கருவியாகவும் அதுவே திகழ்ந்தது

அவ்வண்ணம் விடுதலைக்கு மதத்தை பயன்படுத்தியவர் நாராயண குரு. அவருடைய மரபில் வந்த ஒருவரின் வழியாகவே என் மீட்பும் வந்தது என்று காப்பன் சொல்வார். தன் குருநாதரின் அத்வைத தரிசனமே தனக்கான மெய்வழி என்று சொல்வார். அவரைப்போன்ற சில ஆயிரம் அத்வைதிகள் இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு பெரும்பணி ஆற்றியுள்ளனர், அடித்தள மக்களுக்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றினர் என்பார். கேரளத்தின் தலித் பேரியக்கத்தின் தந்தையான ஐயன்காளியே அத்வைதிதான், அவருடைய ஆசிரியர் ஓர் அத்வைதியான துறவிதான் என்பார்.

காப்பன் இவ்வாறுதான் சொல்வார். மதத்தில் பல்லாயிரமாண்டுக்கால மரபு உறைகிறது. பழங்குடி வாழ்க்கைமுதல் இருந்து வரும் மெய்யியல் மதத்தில் குறியீடுகளாக சேமிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நவீன மனிதன் தன் ஆதிதொல்காலத்துடன் ஆன்மிகமாக, ஆழுள்ளம் சார்ந்து ஓர் உறவு கொண்டிருக்கவேண்டுமென்றால் மதம் அன்றி வேறு வழியே இல்லை. ஆகவே தொல்குடி வாழ்க்கையில் வேரூன்றி இன்றும் நீடிக்கும் இந்து மெய்மரபுதான் தன் வழி என்பார்.

அது தொல்மரபு என்பதனாலேயே சென்றகாலத்தின் எதிர்மறையான பல நம்பிக்கைகளும் ஆசாரங்களும் அதில் இருக்கும். அதில் காலாவதியாகிப்போனவையும் இருக்கும். அவற்றை கண்டடைந்து களைந்து மெய்யியல் பயணத்துக்குரியவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பார்.

அந்த விவேகம் என்றும் மனிதனிடம் இருந்து வந்துள்ளது. மதத்தில் எந்த அளவுக்கு எதிர்மறைக்கூறுகள் இருந்தனவோ அதேயளவு எதிர்மறைக்கூறுகள் அரசியலிலும் இருந்தன. அவற்றை கண்டு, களைந்துதான் நாம் ஜனநாயகம் வரை வந்திருக்கிறோம். ஜனநாயகத்தை கண்டடைவதற்கு முன்பு பல வழிகளை பரிசீலித்திருக்கிறோம்.மாபெரும் அழிவுகளையும் அடைந்திருக்கிறோம். இந்த ஜனநாயகத்தின் குறைகளை களைந்து மேலே செல்வோம்.

நவீன அறிவியலும்கூட அவ்வகையில் பல கொடிய எதிர்க்கூறுகள் கொண்டதுதான். அணுகுண்டு தீயது என்றும் அலோபதி நல்லது என்றும் பகுத்தறியவும், தேவையற்றவற்றை விலக்கி நல்லவற்றை கொண்டு மேலே செல்லவும் மனிதனால் இயன்றது. அதையே மதத்திற்கும் கைக்கொள்வோம்.

மதமே பிற்போக்கானது, தவிர்க்கவேண்டியது என எண்ணும்  மனநிலை என்பது நவீனத்துவ (modernism) காலத்திற்குரியது. அந்தக் காலம் மறைந்துவிட்டது. அது மனிதனின் தர்க்கபுத்தியை மட்டுமே நம்பியது. இன்று நாம் குறியீடுகளின் வல்லமையை அறிந்திருக்கிறோம். இது பின்நவீனத்துவ யுகம். (post modern) இன்று அப்படி மதத்தையோ, பழங்குடிவாழ்க்கையையோ, நாட்டாரியல் ஞானத்தையோ தூக்கிவீசிவிட அறிவுள்ளோர் முயலமாட்டார்கள்.

இன்றைய மனிதன் வெறும் நுகர்வோன் ஆக சுருங்காமலிருக்கவேண்டும் என்றால், வெறும் அறிவியல்பிண்டமாக ஆகாமலிருக்கவேண்டும் என்றால், அவனில் கவித்துவமும் மெய்ஞானமும் திகழவேண்டும் என்றால் அவனுக்கு மதத்தில் இருந்து கிடைக்கும் அடிப்படையான தரிசனங்களும், அத்தரிசனங்களின் வடிவங்களான படிமங்களும் இன்றியமையாதவை

நாயாடிகளை ஒடுக்கியது இந்துமதமே என ஒருவன் என்னிடம் சொல்வதை நம்பி நான் வெளியே சென்றால் எந்த மதத்திற்குச் செல்வது? ஆஸ்திரேலியாவிலும் தென்னமேரிக்காவிலும் எகிப்திலுமெல்லாம் தொல்மானுட இனங்களையே முற்றாக அழித்த மதங்களுக்கா? தொல்குடிகளின் குருதி படியாத மதம் எது? இல்லை, மார்க்ஸியன் ஆகவேண்டுமா?சைபீரிய வதைமுகாம்களில் கொன்றழிக்கப்பட்ட பல லட்சம் கொசாக்குகளின் குருதியை என் குருதி என நான் கருதினால் அங்கே எப்படிச் செல்வேன்? இல்லை நவீன லிபரல் ஆகவேண்டுமா? அவர்கள்தானே ஹிரோஷிமாவில் அணுகுண்டை வீசிவிட்டு அதை நியாயப்படுத்தவும் செய்தவர்கள்?

மதம் தேவை என உணர்ந்தேன் என்றால் என் மதத்தை தொல்மரபுகளில் இருந்து நானே கண்டடைவேன். வேண்டியதை கொண்டு அல்லாதவற்றை விலக்கி எனக்குரிய வகையில் உருவாக்கி கொள்வேன். எல்லா மதங்களிலும் மெய்ஞானியர் உள்ளனர். பெருந்தியாகத்தால் மானுட இனங்களுக்கு கல்வியும் மருத்துவமும் அளித்த கிறிஸ்தவ இறைப்பணியாளர்கள். அன்னமிட்டு உலகுபுரந்த சூஃபிகள். நாராயணகுருவும், வள்ளலாரும் போன்ற மெய்யியலாளர்கள். நான் அவர்களையே மதத்தில் இருந்து பெற்றுக்கொள்வேன்

இவ்வாறு காப்பன் சொல்வார்.நான் சிந்திக்கும் மனிதன். வரலாற்றின் இழிவுகள் அல்லது இருளுக்கான பழியை மதம் அல்லது மரபின்மேல் சுமத்தும் மூர்க்கமும் அறியாமையும் என்னிடமில்லை. நான் வரலாற்றின் இயக்கத்தை புரிந்துகொள்வேன். அதை கடந்துசெல்வதைப் பற்றி யோசிப்பேன். என் வழித்தோன்றல்களுக்கு அந்த ஞானத்தை கையளிப்பேன்

இது முழுக்கக் கற்பனை அல்ல. காப்பன் அவ்வாறு சிந்தனைசெய்பவர்.

ஜெ

ஜெயமோகன் நூல்கள்

சாதி ஓர் உரையாடல் வாங்க

சாந்தி ஓர் உரையாடல் – மின்னூல் வாங்க 

இந்து மெய்மை வாங்க

இந்து மெய்மை மின்னூல் வாங்க

ஆலயம் எவருடையது? வாங்க

ஆலயம் எவருடையது மின்னூல் வாங்க 

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைநீல பத்மநாபன்
அடுத்த கட்டுரைமுதற்கனல் வாசிப்பு- இந்துமதி