அன்புள்ள ஜெ
வராக ரூபம் கொண்ட பஞ்சுருளி தெய்வமெழும் காந்தாரா படம் பார்த்தேன். அதில் வரும் நிறைய வசனங்கள் உங்கள் நாவலில், கதைகளில் வருவது என்று பேசிக் கொண்டிருந்தோம். அரசுக்கும், வனத்தில் வசிப்பவர்களுக்கும் வரும் மோதலும் தணிவும் மீதமைந்த காட்சிகள், ஆவேசம் கொண்டும், அன்பு கொண்டும் மண்ணில் தெய்வம் எழுதல் போன்றவை உங்கள் சொல்லைத்தான் நினைவுப்படுத்தியது. தெய்வங்கள், சடங்குகள் குறித்து பல விளக்கங்கள் எழுதி உள்ளீர்கள்.
படம் பார்த்து விட்டு தெய்வங்களையும், கடவுளையும் பிள்ளைகள் கேட்க அதை பற்றி பேசினோம். நீர்க்கோலம் நாவலில் வரும் வேனன் கதையை சொன்னேன். முப்பெரும் தெய்வமான̀ பிரம்மனால் கொடுக்க மறுத்த வரத்தினை அவரது கால் கட்டை விரலில் இருந்து எழுதும் கலித் தெய்வம் கொடுத்ததினையும், அதன் வாக்கினை மீறியதால் வேனனுக்கு விளைந்ததும் கேட்டாள். தெய்வம் வரமும் கொடுக்கும், மீறுகையில் பலியும் எடுக்கும் என்பதை அறிய செய்த கதை.
நம் இந்து மரபில் சாத்தான் உண்டா என என்னிடம் மகள் கேட்டாள். அப்படி இல்லை என சொல்லி இமைகணத்தில் வரும் காலபுரி காட்சியை மகளிடம் சொல்ல உத்தேசித்து உள்ளேன்.
“ஒன்றுக்குள் ஒன்றென்று அமைந்த நூற்றெட்டு தெருக்களால் ஆனது காலபுரி. முதல் தெருவில் பன்னிரண்டாயிரம் இல்லங்களில் காய்ச்சலின் தெய்வமான ஜ்வரை, வலிப்பின் தெய்வமான அபஸ்மாரை, புண்ணின் தெய்வமான க்ஷதை முதலான தெய்வங்கள் தங்கள் பல்லாயிரக்கணக்கான படைக்கணங்களுடன் வாழ்ந்தன. அதற்கடுத்த தெருவில் சினத்தின் தெய்வமான குரோதை, வஞ்சத்தின் தெய்வமான பிரதிகாரை, வெறுப்பின் தெய்வமான விரோதிதை முதலிய பதினொன்றாயிரம் தெய்வங்கள் தங்கள் எண்ணற்ற ஏவலர்களுடன் வாழ்ந்தன. தொடர்ந்தமைந்த தெருவில் ஸ்கலிதை, விஃப்ரமை, தோஷை முதலிய பிழைகளின் தெய்வங்கள் பத்தாயிரம் இல்லங்களில் குடியிருந்தன.”
*
இந்து மரபின் அசுரர்கள் பற்றிக் கேட்ட பொழுது கிராதத்தில் வரும் அசுர,தெய்வ தன்மை விளக்கத்தினை படித்துக் காட்டினேன். நவீன கல்வி கொண்டவர்களுக்கும் மரபின் பார்வையை விளக்க உங்கள் சொல் உதவுகின்றது.
“விழைவே அசுரரின் முதலியல்பு. அவ்விழைவு மூன்று முகம் கொண்டது. சூழ்ந்திருக்கும் அனைத்தையும் வென்று தன் உடைமையென்றாக்கிக்கொள்ளும் திருஷ்ணை. தன்னை முடிவிலாது பெருக்கிக்கொள்ளும் ஆஸக்தி. அறிந்துகொள்வதற்கான ஜிக்ஞாஸை. மூன்று முனைகளில் அவர்கள் அதை பெருக்கிக்கொண்டனர். வீரத்தால், பாலின்பத்தால், தவத்தால் அவர்களில் எழுந்தனர் மண்ணையும் விண்ணையும் முழுதாண்ட பேரரசர்கள். ஒன்றுநூறெனப் பெருகும் பெருந்தந்தையர். ஒற்றைச்சொல்லில் பிரம்மத்தை திறந்தெடுத்த முனிவர். அவர்கள் தங்களை கூர்படுத்தி கூர்படுத்திச் சென்று வேதத்தை தொட்டனர்”
“வேள்வியென மானுடர் இன்று இயற்றுபவை தன்னியல்பாக அன்று செய்யப்பட்ட நற்செயல்களின் சடங்கு வடிவங்களே” என்றார் சனாதனர். “ஒருபோதும் தோற்காமலிருத்தலுக்குரிய விக்ரமம், அனைத்தையும் அடைவதற்குரிய திருஷ்ணம், பெருகிக்கொண்டே இருப்பதற்குரிய கிராந்தம் என அசுர வேள்விகள் மூன்றே. அவற்றை இயற்றி அசுரர் வெற்றிகளையும் செல்வங்களையும் ஈட்டினர். குலம்பெருக்கினர்” என்றார் சனாதனர். சனத்குமாரர் “இன்று மண்ணில் அரசர்கள் இம்மூன்று மறவேள்விகளில் இருந்து எழுந்த வேள்விகள் பலவற்றை இயற்றுகிறார்கள். ராஜசூயமும் அஸ்வமேதமும் விக்ரமம் எனப்படுகின்றன. பொருள்நாடிச் செய்யும் பூதவேள்விகள் திருஷ்ணம் போன்றவை. புத்ரகாமேஷ்டி போன்றவை கிராந்தமரபைச் சேர்ந்தவை” என்றார்.
“வென்று வாழ்ந்து நிலைகொண்டபின்னரும் எஞ்சுவதென்ன என்று அவர்களின் முனிவர்கள் உளம்கூர்ந்தனர். அவர்கள் ஏழுவகை அறவேள்விகளை உருவாக்கினர். அனைவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணுதல் ஃபாஜனம், அளித்தவற்றுக்கு நன்றி சொல்லுதல் பிரதிநந்தனம், எடுத்தவை மேலும் வளரவிடுதல் அஃபிஜனனம், அளித்த விண்ணவர்க்கே திருப்பி அளித்தல் நிவேதனம், அறியாதவருக்கும் அன்னமளித்தல் அஃப்யாகதம், சிற்றுயிர்களையும் ஓம்புதல் உபகாரம், இங்கிருப்பவற்றின் ஒழுங்கு குலையாது நுகர்தல் ருதம். இந்த ஏழு தொல்வேள்விகளுக்கு அசுரர்களில் ஒருசாராரான ஆதித்யர்கள் கட்டுப்பட்டனர். ஆகவே அவர்கள் வேள்விக்குரியவர்களாயினர். தைத்யர்களும் தானவர்களும் அறவேள்வியை மீறிச்சென்றவர்கள். வேள்வியிலமர்ந்து அவிகொள்ளத் தொடங்கியதும் ஆதித்யர்கள் ஒளிகொண்டனர். அழிவின்மையை அடைந்தனர். விண்ணாளும் தேவர்களென்றானார்கள். தைத்யர்களும் தானவர்களும் தங்கள் ஆசுரத்தால் முழுக்கக் கட்டுண்டிருந்தனர். எனவே இருண்டு புவியை நிறைத்தனர்” சனகர் சொன்னார்.
அன்புடன்
நிர்மல்
*
அன்புள்ள நிர்மல்,
இந்து மதத்தையோ அல்லது அதைப்போன்ற தொல்மதங்களையோ அறிய தடையாக அமைபவை இரண்டு. இரண்டுமே எளிமையான இரட்டைமை (binary) களால் ஆனவை.
ஒன்று, அந்த மதங்கள் பின்னர் பெருமதங்களாக உருவானபின்னர் திரண்டுவரும் புராணத்தன்மை. அவை அந்த மதத்தின் தொன்மையான கூறுகளை எளிய உருவகங்களாக ஆக்கிவிடும். நன்மை தீமை என தெளிவாக அடையாளப்படுத்திவிடும். இந்து மதத்தின் அரக்கர், அசுரர் போன்ற உருவகங்கள் பிற்கால புராணக்கதைகளில் அப்படி மிகமிக எளிமையாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ராமாயணத்தின் ராவணன், மகாபாரதத்தின் துரியோதனன் எல்லாம் ‘கெட்டவர்கள்’ அல்ல. ஆனால் பிற்கால புராணக்கதைகளில் அவர்கள் ‘வில்லன்’களாக ஆக்கப்பட்டிருப்பார்கள்.
இரண்டு, அந்த மதங்கள் மீது மிகப்பிற்காலத்தைய நவீனத்துவப் பார்வை (modernist approach). அது மதங்கள்மேல் போடப்படும்போது மிகமிக எளிமையான புரிதல்கள் உருவாகின்றன. அவை பெரும்பாலும் அரசியல் சார்ந்த எளிமைப்படுத்தல்கள். எல்லாவற்றுக்கும் ஒரு மையத்தையும், அந்த மையத்திற்கு ஒரு உலகியல் சார்ந்த தர்க்கத்தையும் நவீனத்துவப் பார்வை உருவகிக்கும். நவீனத்துவர்கள் தங்கள் அறிவில் நம்பிக்கை கொண்டவர்கள். மனிதகுல பரிணாமத்தையே தங்களால் அறுதியாக வகுத்துவிட முடியும் என நினைப்பவர்கள். ஆகவே வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் தாங்கள் அளிக்கும் விளக்கமே வரலாறும் பண்பாடுமாகும் என நம்புகிறவர்கள். இவர்கள்தான் அரக்கர் என்றால் பழங்குடிகள், அசுரர் என்றால் திராவிடர் என்றெல்லாம் அசட்டு எளிமைப்படுத்தல்களைச் செய்வார்கள்.
இது பின்நவீனத்துவ யுகம். (post modern age) இந்த யுகத்தின் முதல் நிபந்தனை இரட்டைமைகளுக்கு அப்பாற்பட்டு யோசிப்பது. இரண்டாவது நிபந்தனை, தர்க்கபூர்வ அறிதலின் எல்லைகளை உணர்ந்து அதற்கு அப்பாலும் சென்று யோசிப்பது. தொல்மதங்களை அவ்வண்ணம் சென்று யோசித்தாலொழிய புரிந்துகொள்ள முடியாது.
அப்படி யோசித்தால், தொல்மதங்களை உருவாக்கிய பழங்குடி மனநிலையிலுள்ள சில அடிப்படைக்கூறுகளை நாம் கண்டடைவோம். அதிலொன்று, அறுதியான இரட்டைமைகளை உருவாக்காமலிருப்பது. முரணியக்கம் (Dialectic) பற்றிய புரிதல் அவர்களுக்கு உண்டு. அதன்பொருட்டு இரட்டைமைகளை கற்பனை செய்திருப்பார்கள். கூடவே அந்த இரட்டைமைகளை ரத்துசெய்துமிருப்பார்கள். ஆண்-பெண் வேறுபாடுடன் ஆணும்பெண்ணும் இணைந்த வடிவம் இருக்கும். விலங்கு- மனிதன் வேறுபாட்டுடன் விலங்கும் மனிதனும் இணைந்த வடிவமும் இருக்கும்.
அந்த மனநிலைதான் தூயதீமை என்பதை உருவகிக்க அவர்களால் இயலாமலாக்குகிறது. கூடவே தூயநன்மை என்பதும் அவர்களிடமில்லை. அப்பல்லோ, தோர், இந்திரன் போன்ற எவரும் முழுக்க நல்லவர்கள் அல்ல. இந்திரன் வருணன் குபேரன் எல்லாம் அசுரர்களாக ஆதியில் இருந்து வேள்விகளால் தேவர்கள் ஆனவர்கள். வேள்வி குறைந்தால் தீயவர்களாக ஆகக்கூடியவர்கள். பொறாமை போன்ற எல்லா எதிர்க்குணங்களும் கொண்டவர்கள். மாயாண்டிச்சாமி, சுடலைமாடன் எல்லாம் அப்படித்தான்.
அதன் மறுபக்கமே எதிர்ப்பண்பு கொண்ட தெய்வங்கள். அவர்களும் நன்மை கொண்டவர்களே. சாவின் அதிபனும் நரகத்தின் ஆட்சியாளனுமான யமன் அறத்தின் காவலன் என தொல்புராணம் கூறுகிறது. நீங்கள் சுட்டிக்காட்டிய அந்த வெண்முரசுப்பகுதியில் சொல்லப்பட்டிருப்பதற்கு இணையானது செமிட்டிக் (பிற்காலத்தில் கிறிஸ்தவ- இஸ்லாமிய) தொன்மத்தின் சாத்தான் ஒரு ‘வீழ்ச்சியடைந்த’ தேவன் என்பது. தொல்பழங்காலத்தில் லூசிபர் முழுக்க முழுக்க கெட்ட தெய்வமாக இருந்திருக்கவில்லை என்பதற்கான சான்று அது.
பிற்காலத்தில் ‘நன்மை மட்டுமே கொண்ட’ தெய்வ உருவகங்கள் உருவாயின. பெருமதங்களுக்கு அத்தகைய தூயநன்மை கொண்ட தெய்வங்கள் இன்றியமையாதவை. பெருமதங்களே பேரரசுகளை உருவாக்கும் கருத்தியல் அடித்தளத்தை உருவாக்கமுடியும். ’நன்றும் தீதும் அதுவே’ என வேதாந்தம் இறைச்சக்தியை உருவகிக்கையில் பிற்காலத்தைய சைவ வைணவப் பெருமதங்கள் ‘தீதிலன்’ ‘மாசிலன்’ ‘அருட்பெருங்கடல்’ என இறைவனை வரையறை செய்கின்றன.
அன்பும் கருணையும் நன்மையும் மட்டுமே கொண்டவனாக இறைச்சக்தி, இறைச்சக்தியின் தூதன் அல்லது மகன் உருவகிக்கப்படும்போது அதற்கு எதிர்ச்சக்தி இரக்கமே அற்ற, அழிவை மட்டுமே அளிக்கக்கூடிய, தீமை மட்டுமேயான ஒன்றாக உருவகிக்கப்படுகிறது. லூசிபர் ‘சாத்தான்’ ஆனது அப்படித்தான். பிற்காலப் புராணங்களில் அசுரர்களும் அரக்கர்களும் தீயோர் ஆனதும் அவ்வண்ணமே.
நாம் பிற்காலப் பெருமதங்களின் எளிய இரட்டைமையில் இருந்து பின்னோக்கிச் சென்று புராணங்களை படிக்கையில் திகைப்படைகிறோம். கிருஷ்ணனின் மகன்களும், பேரன்களும் அசுரர்களின் குடியிலிருந்து திருமணம் செய்துகொண்டனர் என்பதையோ, ராவணன் சாமவேத ஞானி என்பதையோ நம்மால் உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதற்கு நம் எளிய தர்க்கத்தால் சமூகவியல் அல்லது அரசியல் விளக்கங்கள் அளிக்க ஆரம்பிக்கிறோம்.
நாம் அனைத்தையும் அறியும் வல்லமைகொண்ட ஞானிகள் என்றும், தொல்காலம் குறித்து நாம் எண்ணுவதே உண்மை என்றும் நம்பும் மடமைகளைக் கொஞ்சம் கைவிட்டு, அறிதலுக்கு அடிப்படைத்தேவையான பணிவுடன், தொல்காலம் என்னும் நாமறியாத பெரும்பரப்பை அணுகினோம் என்றால் நம்மால் அன்றிருந்த நம் மூதாதையரை கொஞ்சம் புரிந்துகொள்ள முடியும். அது நாம் நம் ஆழத்தை, நம் சொந்த உணர்வுகளையும் கனவுகளையும் புரிந்துகொள்ளும் வழியாக அமையும். அதற்கு நமக்குத் தேவை நம் முன்னோர் நமது உருவாக்கங்கள் அல்ல, அவர்களின் உருவாக்கமே நாம் என்னும் தெளிவு.
ஜெ
ஜெயமோகன் நூல்கள்
இந்து மெய்மை வாங்க
ஆலயம் எவருடையது? வாங்க
இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க
—————————————————