தனிமை, கடிதம்

தனிமையும் இருட்டும்

நலம் தானே.

சில பத்தாண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு வரி எழுதியுள்ளீர்கள்.

சென்றநாட்களிலேயெ வாழ விதிக்கப்பட்டவனின் உடல்

நூறுமடங்கு எடைகொள்ளுமென்று தெரியுமா?

நேற்று இப்படி எழுயுள்ளீர்கள்.

அது என் உடல் பல ஆயிரம் டன் எடைகொண்டதாக ஆகும் தருணம்.

இவை இரண்டும் ஒன்றே என்று சொல்ல தோன்றவில்லை. ஆனால் இவை இரண்டிற்கும் உள்ள பொது தன்மை என உள்ள ஜெ என்ற ஆளுமை அதை ஏந்தும் பாத்திரம் என்றால் அந்த பாத்திரம் வலு கூடியபடி உள்ளது என்றும். அதை தாங்கும் வல்லமையும் திராணியும் உள்ளவராக அதுவே ஆக்கியிருக்கிறது என்று சொல்ல தோன்றுகிறது. கவிதையில் வெளிப்படும் அந்த வரி ஒரு உணர்வை அல்லது அனுபவத்தை முன் வைப்பதாக வாசித்தால். இந்த கட்டுரை வரி அதனால் பெற்றதுடன் சேர்ந்து வருகிறது.

‘கைவிடுவேன்’ என்ற வார்த்தை தரும் தகிப்பை சொல்ல முடியும்.கவிஞர் மதார் ‘துக்கம் ஒரு பரிசு பொருள்’ என்கிறார்.மாணிக்கவாசகர் ‘நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே’என்கிறார்.அதாவது இருளில் நிகழும் கலை,அதை பார்த்து மகிழும் கண். ரசிக்க சாத்தியப்படும் தனிமை அதை ‘நதியில் இறங்கி அள்ளி அள்ளி பருகினேன்’என்று சொல்லும் தேவதேவன் வரி.நீங்கள் சொல்லும் ‘டன்’.இவை அனைத்துமே ஒன்றுடன் ஒன்று இயைந்து கிடக்கிறது.எழுத்தாளனின் இருள் என்ற கட்டுரை இதன் வழி துலங்கி வருவதாக தோன்றுகிறது.

சிறு பயலாக இந்த தனிமையும், இருளும் அச்சமூட்டுவதாக இருக்கிறது.வலுவான ஆன்மீக நிலை என்பதை எண்ணும்போது உண்டாகும் செயலின்மை.விளைவாக லௌகீக சிந்தனையில் தேக்கம் வந்து சேரும் என்பது எல்லொரும் அறிந்ததே.இருளில் நட்டம் ஆடும் நாதனை தான் சோதியனே(‘இருள் அற்றவன்’) என்கிறார்.இருளில் ஆடும் நாதனை இருள் அற்றவனாக மாணிக்கவாசகர் பாடுவது எனக்கு பல காலம் புரியவில்லை.ஓரே நினைவு துக்கத்தையும் இனிமையையும் தருவதை உணர்ந்திருக்கிறேன்.கையளிக்கப்பட்ட இருளில் ஒளியின் துளிகளை கண்டறியும் மனவலிமையினால் தான் தோன்றாபெருமையனாக முடியும் என்று தோன்றுகிறது.

அ. க. அரவிந்தன்.

*

அன்புள்ள அரவிந்தன்,

பூமியில் ஒவ்வொரு உயிரையும் தனிமை சூழ்ந்துள்ளது. அத்தனிமையை ஓர் எதிர்நிலையாக பார்த்தோமென்றால் நாம் மிகச்சிறியவர்களாகிவிடுவோம். காலத்தை, பிரபஞ்சத்தை எதிர்நிலையாகக் கண்டால் வாழமுடியுமா? அது ஒரு பிரபஞ்ச விதி. அதன்மேல் நின்று நாம் நமக்கென இயற்றிக்கொள்வன எவை என்பதே நமக்கு முன் உள்ளது.

ஜெ

முந்தைய கட்டுரைவட ஐரோப்பா பயணம்
அடுத்த கட்டுரைவிசும்பு கடிதங்கள்.