அறிவின் விளைவா உறுதிப்பாடு?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நம்முடைய இறப்பை நம்மால் தத்துவார்த்தமாக கையாள முடிகிறது. நான் கடந்த மூன்று வருடமாக stoicism படித்து வருகிறேன். அதில் என்னுடைய இறப்பின் நிகழ்வின் வரை கொடுக்கப்பட்ட நேரத்தை அர்த்தமாக்கிக்கொண்டு வாழ வழி சொல்கிறது. ஆனால் மற்றவர்களின் இறப்பை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. நம்முடன் வாழ்வில் பயணம் செய்தவர்கள் இறக்கும் போது வெறும் லௌகீக தேவையில் மூழ்கி அந்நிகழ்வை கடப்பது அவர்களுக்கு மரியாதை தரும் ஒன்றாக எண்ணால் நினைக்க முடியவில்லை.

விஷ்ணுபுரம் நாவலில் என்னால் பிங்கலன் மனநிலையில் இருந்து கடந்து செல்ல முடிகிறது, பிங்கலனை நானாக எண்ணி கடக்க முடிகிறது. ஆனால் வீரன் இறந்ததை அப்படி கடக்க முடியவில்லை. அந்த பாகனாக என்னால் வலியை கடக்க முடியவில்லை. அது ஏன் ? நான் என் ஆணவத்தை அறிந்து வெறும் பிரபஞ்சத்தில் என்னை ஒரு சிறு துளியாக எண்ணி என் இறப்பை எண்ணி பயமோ பதட்டமோ அடைவதை தடுக்க முடிகிறது. ஆனால் மற்றவரின் இறப்பை அப்படி ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன்?

ஞானசேகரன் ரமேஷ்

*

அன்புள்ள ஞானசேகரன்,

இது பொதுவான, அறுதியான பதில் ஒன்றைச் சொல்லும்படியான கேள்வி அல்ல. அடிப்படைவினா.

அடிப்படை வினாக்களை இரண்டுவகையாக எதிர்கொள்ளலாம். ஒன்று தன் அனுபவம், இலக்கிய அனுபவம் வழியாக. அதற்கு தர்க்கப்படுத்துதல் பெரிய தடை. தர்க்கமற்ற ஒருவகையான அகநிலையில் கற்பனை மற்றும் உள்ளுணர்வு வழியாக அந்த வினாக்களை எதிர்கொள்ளலாம். விடைகள் நம்முடையவை. அவற்றை நாம் மொழிவெளிப்பாடாக முன்வைக்கலாம். இலக்கியமாக.

அவ்வாறு அனுபவம் சார்ந்து நீங்கள் பேசுவீர்கள் என்றால் அங்கே விவாதம் இல்லை. ஏனென்றால் அது உங்கள் அனுபவம். மேலதிக விடைகளையும் நீங்களே கண்டடைய வேண்டியதுதான்.

இரண்டாம் வழிமுறை தத்துவார்த்தமானது. அங்கே தர்க்கமே ஆயுதம். அதற்கு தத்துவத்தை முறையாகக் கற்கவேண்டும். உறுதிப்பாட்டுவாதம் கிரேக்கத் தொல்தத்துவங்களில் ஒன்று. அதிலிருந்தே பிற்கால கிறிஸ்தவ இறையியல்வாதங்களின் பல கொள்கைகளும் உருவாயின.

நம் மரபில் அதற்கு மிக அணுக்கமானது பகவத்கீதை முன்வைக்கும் ஸ்திதப்பிரதிக்ஞன் என்னும் கொள்கை. இன்பதுன்பங்களில் நிலைகுலையாமல், நெறிகளில் நின்று வாழும் நிறைநிலை, பௌத்தமும் சமணமும் அதையே கூறின.

உறுதிப்பாட்டு வாதம் உலகில் உருவானது மானுடநாகரீகத்தின் தொடக்ககாலத்தில். அன்றைய சூழலில் அது மிகமிகப் பெரிய ஒரு தத்துவ தரிசனம், சிந்தனையில் ஒரு பாய்ச்சல். கிரேக்கப் பண்பாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மையமே விழைவுகளை தொடர்ந்துசெல்லுதலும், ஆற்றலால் அவற்றை வென்று நிறைவுறுதலுமே. யுலிஸஸ், அக்கிலிஸ், ஹெர்குலிஸ் எல்லாருமே அத்தகைய நாயகர்கள்தான். அச்சூழலில் விழுமியங்களில் உறுதிப்பாடு கொள்ளுதலே உயர்நிலை என்று கூறும் சிந்தனை அது.

உறுதிப்பாட்டுவாதத்தை ஒரு தத்துவமாக அறியவேண்டும் என்றால் அதை ஏற்றும் மறுத்தும் பின்னால் உருவான தத்துவங்களுடன் இணைத்துப் பார்க்கவேண்டும். அதை கிரேக்க தத்துவத்தின் பொதுவான பரப்பிலும் மேலைத்தத்துவக் களத்தின் பரப்பிலும் பொருத்திப் பார்க்கவேண்டும். இல்லையென்றால் உதிரிக்கருத்துக்களாக நாம் அவற்றை அறிந்துகொள்ள நேரிடும். தத்துவக் கொள்கைகளை விவாதப்பரப்பில் வைத்து அறிவதே முறையானதாகும்.

எவரும் எளிதாக விழுமியங்களில் உறுதிப்பாடு கொண்ட வாழ்க்கையை அடையமுடியாது. உறுதிப்பாடு என்பது சிந்தனையால் அடையப்படுவது அல்ல. உண்மையில் அங்கே சிந்தனையின் இடம் பெரிதாக ஏதுமில்லை. விழுமியங்களை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதற்கு மட்டுமே சிந்தனை உதவுகிறது. ஏற்றுக்கொண்டபின்னர் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு சிந்தனை பயனற்றது. உறுதிப்பாடு சிந்தனையின் விளைவல்ல.

நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளுதல், கடப்பதற்கான வழிகளை தானே கண்டடைதல், அதனூடாக தன்னை மெல்ல மெல்ல கண்டடைந்து தன் ஆளுமையை தனக்கும் பிறருக்குமாக நிறுவிக்கொள்ளுதல் ஆகியவற்றின் வழியாகவே விழுமியங்கள் வாழ்க்கையாகின்றன. அவ்வாறுதான் உறுதிப்பாடு உருவாகிறது, உறுதிப்பாடு செயல்வடிவமாகிறது.

அதாவது விழுமியங்கள் என்பவை சிந்தனைக்கான கருப்பொருட்கள் அல்ல, அவை செயல்முறை நெறிகள்.  அவற்றை வெறுமே தத்துவார்த்தமாக விவாதிப்பது வழியாக எவரும் அவற்றை  தலைக்கொள்ள முடியாது.

இனி, உங்கள் வினாவுக்கு வருகிறேன். உறுதிப்பாட்டு வாதம் வழியாக நீங்கள் உங்கள் சாவு பற்றிய ஐயங்களையும் அச்சங்களையும் கடக்கமுடியுமா? சாவின் பொருளை ‘அறிந்துகொண்டால்’ மட்டும் அதை எதிர்கொள்ள முடியுமா? அதேபோல பிறர் சாவு அளிக்கும் துயரையும் வெறுமையையும் வெறுமே எண்ணங்களையும் புரிதல்களையும் கொண்டு எவரேனும் கடக்கமுடியுமா?

கடக்கவேண்டும் என்னும் நிலைபாட்டை வந்தடைய மட்டுமே அந்தக் கொள்கை உதவும். எஞ்சியிருப்பது நடைமுறை மட்டுமே. நடைமுறையில் சாவு குறித்த அச்சங்களையும் ஐயங்களையும் சற்றேனும்  கடந்திருப்பவர் எவர்? பெருஞ்செயல்களில் ஈடுபட்டிருப்பவர்கள் மட்டுமே. அன்றாடத்தை செயல்வழியாக அர்த்தப்படுத்திக் கொண்டே இருப்பவர்கள்.

அதாவது இப்படிச் சொல்கிறேன். அர்ஜுனனைப் போல களத்தில் நிற்பவர்கள் மட்டுமே. உண்மையில் களத்தில் நிற்பவர்கள், அதிலிருந்து கேள்விகளை அடைபவர்கள் மட்டுமே தத்துவத்தைப் புரிந்துகொள்ளவும் திராணி கொண்டவர்கள்.

கீதை ஸ்திதப்பிரதிக்ஞனின் இயல்பெனச் சொல்வது ஆகவே செயல்புரிக என்பதே. நிலைபேறு கொண்ட சித்தத்துடன் செயல்புரிக என அது சொல்வதை நிலைபேறு கொண்ட சித்தத்தை அடைவதற்கான வழியாகச் செயலாற்றுக என்றும் கொள்ளலாம். வெறுமே நிலைபேறு மட்டும் எவருக்கும் அமைவதில்லை.

நிலைபேறுடன் செயலாற்றுபவன், அச்செயலின் இறுதியில் அடையும் மெய்யறிதலையும் அதனூடாக அடையும் விடுதலையையும், அறுதியான நிறைநிலையையும் கீதை மோட்ச சன்யாச யோகம், விபூதியோகம் என்று கூறுகிறதென்றாலும் அங்கு செல்வதற்கான வழி கர்மயோகமும் ஞானயோகமும்தான். அதாவது தொடர்செயலும் ,சலியாத அறிதலும்தான்.

நம் மரணம் நமக்கு எப்போது பொருளற்றுப் போகும்? நாம் வாழ்ந்தோம் என உணரும்போது. நாம் செய்யவேண்டியதைச் செய்தோம் என அறியும்போது. வாழ்வை இயற்றி நிறைந்தோம் என உணரும்போது. அப்படி பலரை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் தங்களுக்குரிய களத்தில் பெருஞ்செயலாற்றியவர்கள்.

பிறர் மரணம்? அதைக் கடக்க நாம் அவர்களுடனான உறவுகளை கடக்கவேண்டும். பற்றற்ற நிலையை அடையவேண்டும் துறவு வழியாக அதை நோக்கிச் செல்லவேண்டும். இந்திய மதங்கள் துறவு இல்லாமல் ஸ்திதப்பிரதிக்ஞன் என்னும் நிலை முழுமையாகச் சாத்தியமில்லை என்றே சொல்கின்றன.  உலகியலில் இருந்தபடி அதை முழுமையாக எய்த முடியாது என்றே நானும் எண்ணுகிறேன்.

எய்தலாம். தன்னலம் மிகுந்தும் கருணையற்றும் ஆகும்போது. அது விடுதலை அல்ல. அந்நிலையில் தன் மரணம் மிகமிகப்பெரிதாக ஆகிவிடும். அது இரும்புக்குண்டு போல தன் கழுத்தில் தொங்கும்.

ஆகவே தன் அகம்நிறையும் செயல்களை ஆற்றும் வாழ்க்கை வழியாக தன் சாவு குறித்த அச்சத்தையும் ஐயத்தையும் ஒருவன் எதிர்கொள்ளலாம். மிகப்பெரிய இலட்சியங்களுக்கும் செயல்களுக்கும் தன்னை ஒப்பளிக்கும்போது பிறர் மரணம் அளிக்கும் துயர்களிலிருந்து ஓரளவு விடுபடலாம். அவ்வளவே உலகியலாளனுக்கு இயல்வது.  அதுவே போதுமானதும்கூட

ஜெ

 

ஜெயமோகன் நூல்கள்

 

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்க

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

 

முந்தைய கட்டுரைகோவை சொல்முகம் அரங்கும் எம்.கோபாலகிருஷ்ணன் கருத்தரங்கும்
அடுத்த கட்டுரைபனிநிலங்களில்.. கடிதங்கள்