மத்துறு தயிர்,கடிதம்

அறம் வாங்க 

அன்பு ஜெ,

ராஜமார்த்தாண்டனின் வாழ்க்கையை, அதிலிருக்கும் தேடலை ஒற்றைப் பாடலில் அடைக்க முடியும் ஒன்றைக் கண்டுகொண்ட தருணத்தில்  மத்துறு தயிர் சிறுகதையை ஆரம்பித்துவிட்டீர்களோ என்று தோன்றியது. அங்கிருந்து ராஜமார்த்தாண்டனின் விக்கி பக்கம், அதன் வழியாக அவரின் கவிதைகள், அண்ணாச்சி என்ற உங்களின் நினைவுக் குறிப்புகளின் வழியான பயணம் என ஓரிரு நாட்களாக ராஜமார்த்தாண்டனின் அகத்தில் பயணம் செய்திருந்தேன்.

தன் வாழ் நாளெல்லாம் மத்துறு தயிர் போல அலைக்கழிதலுக்கு உள்ளான ஒரு மனிதனைப் பற்றிய எண்ணமே அந்த நிலைக்கு என்னை ஒரு கணம் இட்டுச் சென்று பரிதவிக்க வைத்தது. முதன்முதலில் அறம் சிறுகதைத் தொகுப்பை கல்லூரி நாட்களில் வாசித்தேன். வாசித்தபோது இந்த மத்துறு தயிர் என் மனதிற்கு நெருக்கமாகவில்லை. நூறு நாற்காளிகள் சிறுகதை மட்டுமே எனக்கானது என்று எடுத்துக் கொண்டேன். புனைவுகளின் மீது ஈடுபாடற்ற ஒரு வகையான இறுக்கமான மன நிலை அப்போது இருந்தது. உண்மை மனிதர்களின் கதை என்று சொன்னதால் மட்டுமே அறம் தொகுப்பை அப்போது வாங்கியிருந்தேன். இன்று ராஜமார்த்தாண்டனின் அலைக்கழிதலையும் தவிப்பையும் உணரும் ஒரு முதிர்ச்சி நிலையை அடைந்திருக்கிறேன். என்னால் சற்று அந்த நிலையில் நின்று பார்த்து கண்ணீர் உகுக்கும் அளவுக்கான முதிர்ச்சி நிலையில் கம்பனின் இந்த வரிகளை கண் முன்னே விரித்து தரிசிக்க முடிகிறது.

மத்துறு தயிர் என வந்து சென்று இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ?

முன்பெல்லாம் சங்கப்பாடல்களில் தலைவன், தலைவியின் பிரிவின் பாடல்களை வாசிக்கும்போது “இவங்களுக்கெல்லாம் வேற வேல வெட்டி இல்லயா” என்று நக்கலடித்திருக்கிறேன். இன்று அந்த “நான்” க்காகவும், அவ்வாறாக அன்பை, மனிதர்களை மிகச் சாதாரணமாக கடந்து செல்லும் மனிதர்களுக்காக பரிதாபமே கொள்கிறேன். இன்று தலைவனின் பிரிவை அணிலாடு முன்றில் எனும்போதும், காதலனைப் பிரிக்கும் யாமத்தின் முடிவை கூரிய வாள் எனும்போதும், பிரிவின் வலியில் மரணமே சிறந்ததென முடிவெடுக்கும் உச்ச நிலையையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

“பிரிவுக்கு இணையான வேதனை உண்டா? ஏன்னா மனுஷன் தனியாளு இல்ல கேட்டேளா? ஒவ்வொரு மனுஷனும் இன்னொருத்தர் கூட ஒட்டியிருக்கான். அவன் இன்னொருத்தர்கூட ஒட்டிக்கிட்டிருக்கான். கையும் காலும் வெரலும் உடம்பிலே ஒட்டிக்கிட்டிருக்கது மாதிரி மனுஷன் மானுடத்தோட ஒட்டிகிட்டிருக்கான். பிரிவுங்கிறது அந்த பெரிய கடலிலே இருந்து ஒரு துளி தனிச்சுப்போறதாக்கும். சாவும் பிரிவும் ஒண்ணு. எல்லா பிரிவும் சின்னச்சின்னச் சாவாக்குமே…’”

உண்மையில் பிரிவையும் சாவையும் பிரிக்க முடியவில்லை என்னால். மரணம் உடலைக்கடந்தது என்ற சிந்தனைக்குப் பின் அது மேலும் பிடிபடுகிறது ஜெ. மரணத்திற்கிணையான வேதனையை பிரிவு அளிக்க வல்லது. கம்பராமாயணத்தில் அத்தகைய துயர் கொண்டு வாடுபவள் சீதை. தன் வாழ்நாளின் மிகப் பெரும் பகுதியை அத்தகைய தத்தளிப்பில் உழன்று தவித்தவள். ”வேண்டியவங்கள பிரிஞ்சுட்டான்னு சொன்னா அம்பிடு வேதனையும் ஒருத்தனுக்கே வந்திரும்” என்ற வரிகளின் வழி சீதையின் துக்கத்தைக் கண்ணுருகிறேன். துக்கத்தில் அதிக வேதனை தருவது பிரிவின் துக்கமே என பேராசிரியர் கூறுவதான விளக்கம் அருமை.

”மத்தால தயிரைக்கடைஞ்சா வெண்ணை வரும். துக்கத்தைக் கடைஞ்சாக்க வாறது தெளிவு. பால்கடலை கடைஞ்சுல்லா அமுதம் எடுத்தாங்க. அமுதம்னா சாகாமை.” அத்தகைய துக்கத்தில் உழன்றவனுக்கு வாழ்க்கையில் உண்மையில் எந்தவித உயர்வும், தாழ்வும், புகழ்ச்சியும், இகழ்ச்சியும் ஒரு பொருட்டல்ல. ஒரு போதும் தனக்கு நடந்ததை அவன் பிறர்க்கு செய்வதுமில்லை. ”பொரிந்து வெந்திலா கா இலை, கொடி இலை, நெடிய கான் எலாம் எனுமளவான துக்கத்தை கைக்கொண்டு அலைக்கழிந்த ராஜமார்த்தாண்டனை இச்சிறுகதையின் வழி அணைத்துக் கொண்டேன் ஜெ. ”அர்த்தம்னா என்னது? துக்கத்துக்கு ஏது அர்த்தம்? துக்கத்தைப் புரிஞ்சவனுக்கு கவிதையிலே மேக்கொண்டு என்னத்தை புரிஞ்சுகிடதுக்கு இருக்கு?” இத்தகைய துக்கத்தை புரிந்தவனால், உணர்ந்தவனால் மட்டுமே இக்கம்பனின் வரிகளையும், ராஜமார்த்த்தாண்டத்தையும், இச்சிறுகதையும் முழுவதுமாக திறந்து கொள்ள முடியும் என்று தோன்றியது.

பல வகையான துக்கங்கள் வருகின்றன வாழ்க்கையில். பலரும் காலம் ஆற்றிவிடும் என்கிறார்கள். சில துக்கங்கள் காலத்தால் சுவடில்லாமல் அழிந்துவிடுகின்றன, சில் பொருளற்றுப் போகின்றன, சில தீற்றலாகின்றன, சில இனிய நினைவுகளாகின்றன, சில வடுக்கலாகின்றன, சிலவை மட்டும் ராஜபிளவையாகின்றன. துக்கத்தை நமக்கு அருளியவர்களுக்கே இது அத்தகைய ஒன்றா என்று ஐயப்படுமளவு எது ராஜபிளவையாக மனதில் நீடிக்கும் என்பது ஒவ்வொரு தனி மனிதரையும் பொருத்தது. தோல்விகள், பொருளிழப்புகளைத் தாண்டியும் அன்பைக் கொடுத்துவிட்டு திடீரென மறைந்து விடும் மனிதர்கள் தரும் வலி என்பது அவர்களுக்கே சொல்லி விளங்க வைக்கவியலா வலி.

‘காயம்பட்டா ஆறும். அது உடம்புக்க இயல்பு. ஆனா என்ன மருந்து போட்டாலும் ராஜபிளவை ஆறாது. ஆளையும் கொண்டுட்டுதான் போகும்’ என்கிறார் பேராசிரியர். ராஜமார்த்தாண்டத்தை கடைசி மூச்சுவரை பற்றி அள்ளி அணைத்துச் சென்றது அந்த ராஜபிளவை தான். அத்தகைய துக்கம் ஒன்று எப்படித் தாக்குகிறது என்ற கேள்விக்கு ”எதை நம்பி வாழ்க்கைய வச்சுருக்கோமோ அது உடைஞ்சா அந்த துக்கம் வரும்னு குமாரபிள்ளை ஒரு தடவை சொன்னாரு…” என ஒரு ஊக பதிலை பேராசிரியர் உதிர்க்கிறார். ஒன்றைக் கொண்டு, ஒரு மனிதரைக் கொண்டு மிக நீண்ட காலத்தை வாழ்ந்து பார்த்துவிட்ட ஒன்றால் அது சட்டென குமிழியாக வெடித்துச் சிதறுவதை தாங்கிக் கொள்ளமுடியாதபோது பித்து வந்துவிடுகிறது என்றே தோன்றுகிறது.

நான் அலுவலகம் செல்லும் வழியில் மனப்பிறழ்வு அடைந்த ஒரு மனிதரை நித்தமும் பார்க்கிறேன். முக்கு ரோட்டிலிருந்து இருமுனைப் பிரியும் சாலை வரை நடந்து கொண்டே இருப்பார். அது அரைக்கிலோமீட்டர் தொலைவிருக்கும், காலை செல்லும் போதும் நடந்து கொண்டிருப்பார். மாலை வரும் போதும் நடந்து கொண்டிருப்பார். கைகளை ஆட்டியபடி யாரோ ஒருவரை சமாதானம் செய்யும் தொனியில் பேசிக்கொண்டே விறுவிறுவென அந்த அரைக்கிலோமீட்டர் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருப்பார். ஒரு வருட காலமாக அவரைப் பார்க்கிறேன் ஜெ. என்றாவது ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும் போது அவர் நினைவு வரும். அந்நேரமும் நடந்து கொண்டிருப்பார் என்றே நினைப்பேன். கொட்டும் மழையிலும், கடும் வெயிலிலும், குளிர்ந்த மார்கழியிலும் கூட அதே பாவனையில் நடந்து கொண்டிருப்பார். அவர் வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தில், ஏதோவொரு மனிதருடன் ஏதோவோர் சொல்லாடலில் அந்தச் சாலையில் அவர் நின்றுவிட்டார் என்றே தோன்றியது. ஒருவேளை என்றாவது அவரை அலுவலகம் செல்லும்போது பார்க்க முடியவில்லையானால் அவர் இறந்துவிட்டார் என்று மட்டுமே ஊகித்துக் கொள்ள முடியும் என்னால். பிரிவினால் சித்தம் பிறழ்ந்துவிட்டவர்களையும், அதிலேயே உழன்று மத்துறு தயிராக அலைக்கழிந்து செயலில் திகழ்ந்த ராஜமார்த்தாண்டன்களையும், அவ்வலியோடு வாழ இயலாமல் வாழ்க்கையை மாய்த்துக் கொண்டவர்களையும் இக்கதையின் வழி நினைத்துக் கொள்கிறேன்.

பிரேமையுடன்

ரம்யா

முந்தைய கட்டுரைபனிநிலங்களில்- 5
அடுத்த கட்டுரைசாருவின் உலகத்திற்கு ஒரு சாவி – காயத்ரி. ஆர்