யானைகளும் அரசர்களும் -கடலூர் சீனு

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நானும் ஜாஜாவும் நின்று பாகனால் உணவு ஊட்டப்பெற்றுக்கொண்டிருந்த இளைய யானைக்கன்றினை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போதுதான் குளித்து முடித்து  ப்ரும்மாண்ட கரும்பஞ்சு பொதி போல நின்றிருந்தான்.  வாலாட்டிக்கொண்டே, ஜொள்ளு வடிய, துதிக்கை உயர்த்தி, வாழைப்பூ பிளந்தன்ன வாய் திறந்து கவளம் கவளமாக வாங்கி உண்டான்.

“பாலூட்டிகள் வரிசையில் ஆண் யானை கிட்ட ஓரு விசித்திரம் உண்டு தெரியுமா” என்று ஜாஜா கேட்டார்.

“என்னது”

“அதாகப்பட்டது ஆண் யானைக்கு ஜூ ஜூ மட்டும்தான் இருக்கும். பந்துகள் இருக்காது”

பார்த்தேன். அடப்பாவமே. உண்மைதான்.

உணவு முடிந்ததும் பாகன் கை காட்ட ஓரம் போய் நின்றான். உணவுக்கலம் ஒழித்து திரும்பி வந்த பாகன் அவனுக்கு கண்ணேறு கழித்தார். அவன் துதிக்கை உயர்த்தி முன் கால்கள் கொண்டு மண்டியிட்டு நிற்க, கழிப்பு வஸ்துக்களை அவன் முகம் முன்னால் மும்முறை சுற்றினார். சுற்றி முடித்து கை காட்ட, அவன் எழுந்து கொண்டு கழித்த பொருளை துதிக்கை கொண்டு மும்முறை துப்பினான். அட என்றிருந்தது. யானைக்கு இதை எப்போது எப்படி கற்று கொடுத்திருப்பார்கள்?

வீடு வந்ததும் இணையம் கொண்டு சொற்ப ஆங்கில அறிவு வழியே கிண்டிக் கிண்டி வாசித்துப் பார்த்தேன் யானையின் ஜனன மண்டலம் முழுவதுமே தனிதன்மை கொண்டு பரிணமித்து வந்த ஒன்றாக இருக்கிறது. யானை எப்போது மனிதனால் டொமஸ்டிக்கேட் செய்யப் பட்டது என்று தேடிப் பார்த்தேன். நாய் யானை இரண்டுமே முதலில் இந்தியாவில்தான் பழக்கப் படுத்தப் பட்டிருக்கவேண்டும் என்றன கட்டுரைகள்.

மேலதிகமாக தேடி நான் கண்டடைந்தது காலச்சுவடு வெளியீடாக, தியடோர் பாஸ்கரன் மற்றும் ஜெகநாதன் இணைந்து மொழியாக்கம் செய்த, தாமஸ் ஆர் டிரவுட்மன் எழுதிய யானைகளும் அரசர்களும் எனும் நூல்.

தாமஸ் ஆர் ட்ரவுட்மன். திராவிட சான்று எனும் நூல் வழியே அறிவுத்துறைக்கு நன்கு அறிமுகமான பெயர். அமெரிக்கர். வியத்தகு இந்தியா நூலினை எழுதிய ஏ. எல். பாஷாம் அவர்களின் மாணவர். இந்தியவியலாளர். அர்த்த சாஸ்திரம் நூல் மீது பாண்டித்தியம் கொண்டவர். தமிழ் அறிந்தவர். இந்தியவியலாளர். சூழலியல் சார்ந்தும் ஆர்வம் கொண்டவர். தியடோர் பாஸ்கரன் அவர்களின் நண்பரும் கூட. அவர் எழுதிய நூல் இது.

தலைப்பை ஒட்டி யானைகளும் அரசர்களும் கொண்ட உறவு, அதன் வழியே யானைகள் வரலாற்றிலும் சூழலிலும் பெற்ற மாற்றங்களை ஹரப்பா முதல் ஆங்கிலேய ஆவணங்கள் வரை  (ஒருவர் அவருக்கு துப்பாக்கி சுட தெரியும் என்பதற்காக, சும்மாச்சிக்கும் நூற்றுக் கணக்கில் யானைகளை வேட்டையாடி இருக்கிறார்) அர்த்த சாஸ்திரம் முதல், கஜ சிக்ஷா, பல்காப்பியரின் ஹஸ்தி ஆயுர்வேதா, ( இந்திய புராண கதைகளின் படி இந்த பல்காப்பியரே முதல் யானை டாக்டர்) ஐனி அக்பரி, தமிழ் சங்க இலக்கியங்கள் வரை பரிசீலித்து இந்தியாவில் இன்றைய நிலையில் யானைகள் வரை தனது பார்வையை இந்நூலில் முன்வைக்கிறார்.

எட்டு அத்யாயங்கள் கொண்ட இந்த நூலில் என்னைக் கவர்ந்த அம்சங்களில் முதன்மையானது வரலாறு நெடுக ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்திய நிலப்பரப்பு நெடுக இருந்து மெல்ல மெல்ல சுருங்கி இன்றய நிலைக்கு வந்திருக்கும் வனப் பகுதிகள் குறித்த வரைபடங்கள். மேற்கு கடற்கரை பகுதிகளில் ஒருகாலத்தில் வனங்களும் அதில் யானைகளும் இருந்திருக்கின்றன. இன்று அசாம் தமிழ்நாடு (நாம் ரயில் கொண்டு மோதியவை போக)  கேரளா போன்ற மிக சில காடுகளில் மட்டுமே உயிரை கையில் பிடித்து யானைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

யானை வகைகளுள் இன்று எஞ்சி நிற்கும் ஆப்ரிக்க ஆசிய யானை இனம் போக முன்பிருந்த கம்பளி யானை முற்றிலும் அழிந்தமைக்கு காரணம் பனி யுகமும், தோல் இறைச்சி யின் பொருட்டு ஆதி மனிதர்களின் முதல் வேட்டை  இரையாக கம்பளி யானைகளே இருந்ததுமே என்கிறார் நூலாசிரியர்.

ஹரப்பா நாகரீகத்தில் யானைகள் மனிதர்களுடன் இருந்தமை குறித்து தொல்லியல் தரவுகளை நூல் அளிக்கிறது. அதன் பின்னர் வந்த வேத காலம் ஆரியர் ஊடுருவல் என முன்வைக்கப்பட்டமைக்கு காரணங்கள் சிலவற்றை தாமஸ் அளிக்கிறார். முதலாவது ஹரப்பா நிலத்தில் மட்டுமே கண்ட, பரவலாக புழக்கத்தில் இருந்த குறிப்பிட்ட வகை எருதால் இழுக்கப்பட்ட, ஆரம் இல்லாத சக்கரம் கொண்ட சுமை இழுக்கும் வண்டி. வேத இலக்கியத்தில் அவை குறித்து எதுவும் இல்லை. மாறாக ஹரப்பாவில் இல்லாத, குதிரை கொண்டு இழுக்கும் ரதம் (இது சுமை வண்டி அல்ல) வருகிறது. ஹரப்பாவில் பல இடங்களில் காணப்படும் யானை குறித்த அடையாளங்கள் ஏதும் முற்கால வேதத்தில் இல்லை. பெயர் சுட்ட இயலாமல் கை உள்ள விலங்கு என்று மட்டுமே சில இடங்களில் வருகிறது. பிற்கால வேதம் யானைகளை நன்கு அறிந்து ரதங்களை வாகனங்கள் என்று கொண்ட வேதக் கடவுளர்கள் மத்தியில் ஐராவதம் எனும் யானையை வாகனமாக கொண்ட கடவுளை பேசுகிறது.

யானை மேல் மனிதன் அமர்ந்து சவாரி செய்யும் முதல் தொல்லியல் சான்று மெசப்பட்டோமியாவில் கிடைக்கிறது. யானை மேல் மனிதன் சவாரி செய்யும் நிலை வந்த உடன் இந்தியாவில் போரில் யானைகளை ஈடுபடுத்தும் நிலை வந்து விடுகிறது. இங்கே தாமஸ் சுவாரஸ்யமான ஒரு அவதானத்தை முன்வைக்கிறார். எப்போது யானை மேல் அல்லது குதிரை மேல் அமர்ந்து சவாரி செய்ய துவங்கினோம் எனும் காலம் திட்டவட்டமாக தெரியாவிட்டாலும், அப்படி ஒரு திறன் கிடைத்த பிறகு, போரில் ரதங்கள் எண்ணிக்கையில் குறைந்து, குதிரைகளும் பெருகி, ரத கஜ துரக பதாதி வழியே வியூகம் அமைக்கும் வகைமை உச்சம் கண்டு விட்டது என்று தரவுகள் கொண்டு கூறுகிறார் தாமஸ்.

ஐரோப்பியர் வருகை நிகழும் வரை, போரின் முதன்மை செல்வமான குதிரைகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலமும், யானைகளுக்கு தேவையான வனப் பகுதியும் இந்திய அரசர்களால் நன்கு புரக்கப்பட்டிருக்கிறது. காட்டில் வளரும் காட்டானயை இருபது வயதில் பிடித்து பழக்க படுத்த வேண்டும். இருபது வயது வரையிலான அதன் காட்டான் தன்மையே (நினைவில் காட்டுள்ள மிருகம்)  போர்க்கள யானையின் அடிப்படை ஆற்றல். ஆகவே போருக்கு தேவையான யானைகளின் உற்பத்தி கேந்திரமான வனங்கள் நன்கு பாதுகாக்க பட்டிருக்கின்றன.

காட்டாளர்கள், யானை பிடிப்பவர்கள், பாகன்கள், உதவியாளர்கள், போர் யானை பயிற்சியாளர்கள், போர் யானை வீரர்கள், யானை மருத்துவர்கள் என ஒரே ஒரு யானையை அடியொற்றி ஒரு சமூக அடுக்கே செயல்பட்டிருக்கிறது. வயது ஆக ஆக யானைக்கு ஆற்றல் கூடிக்கொண்டே போகும். அறுபது வயதில் அதன் பற்கள் விழுந்து உணவு உண்ண இயலாமல் ஆன பிறகே பலம் குன்றி மெல்ல மெல்ல உயிர் விடும். ஆக நாற்பது வருடமும் இந்தியப் படையில்  முற்றுகையிடவும், கோட்டை கதவுகளை உடைக்கவும், உள்ளே புகுந்து துவம்சம் செய்யவும் யானைகளே முன்னணி வீரர்கள். யானைகள் இன்றி போர் வெற்றி இல்லை. போர் வெற்றி இன்றி உபரி இல்லை. உபரி இன்றி எதுவுமே இல்லை. இந்தியா என்பதை அதை உருவாக்கிய பல்வேறு காரணிகளில் யானைகளும் அதன் வல்லமையும் ஒன்று என்று தரவுகளுடன் பேசுகிறது நூல்.

அலெக்சாண்டர் படையெடுப்பு வழியே போர் யானைகள் இந்தியாவுக்கு வெளியே அறிமுகம் ஆகி, உலகம் முழுவதும் பரவினாலும் ( 500 போர் யானைகளுக்கு ஈடாக சில நிலங்களை செலுக்யேஸ் நிகேடார் திருப்பி அளித்திருக்கிறார்)  நவீன போர் தளவாடங்கள் வரும் வரை இந்தியாவில் யானைகள் போரில் ஈடுபடுத்தபட்ட அளவு, வேறு எங்கும் போரில் யானைகள் பயன்படுத்தப் படாமைக்கு  தாமஸ் முன் வைக்கும் காரணம் பல, இங்கே யானைகள் புழங்கும் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமான பருவமழை சுழற்சி உருவாக்கும் நில அமைப்பு வெளியே பெரும்பாலான நிலங்களில் இல்லை. அடுத்ததாக யானைகளின் உடல் அமைப்பு. போரில் யானைகளை குறிப்பிட்ட முறையில்தான் பயன்படுத்த வேண்டும். துஷ்ப்ரயோகம் செய்தால் யானைகளுக்கு வியர்வை சுரப்பி கிடையாது என்பதால் உள் முகமாக வியர்த்து அது வெளியேற வழியின்றி யானை நோய்வாய் பட்டு விடும். கண் பார்வை இழக்கும் யானைகள் கூட உண்டு. போரில் இத்தகு யானைகள் பெரும் சுமை. இவை போக பிழை நிகழ்வு வழியே தனது படையையே துவம்சம் செய்யும் யானைகளும் உண்டு. இதற்கு வெளியே மற்றொரு முக்கிய காரணம் உண்டு. குறிப்பாக சீனர்கள் வசம்.  அது அறமின்மை. அன்றைய அரசு நீதி முதல்  இன்று ஜனநாயக நீதி வரை இந்திய யானைகள் உடன் நிற்கும் அந்த அறம் இந்திய நிலத்துக்கு வெளியே யானைகளுக்கு கிடைத்ததில்லை. எந்த அறமும் இன்றி உலக உயிர் வலையை கொன்று தின்பதில் அன்றும் இன்றும் சீனா முன்னணி வகிக்கிறது.

இந்தியாவில் அரசர் காலம் முடிந்து நிகழும் ஐரோப்பியர் வரவில் யானைகளின் சரிவு துவங்குகிறது. ( தே ஒரு இலையின் கதை நூலில் ராய் மாக்ஸாம் யானைகளின் வாழிடமான அசாம் காடுகள் யானைகளை கொண்டே அழிக்கப்பட்டு அவை தேநீர் தோட்டங்களாக மாறும் சித்திரத்தைக் காட்டுகிறார்) யானைகளை கொண்டு ரயில் தண்டவாளத்துக்கு காட்டு மரங்கள் வெட்டி சுமக்கப் படுகின்றன. யானைகள் மீதேறு பாதுகாப்பாக நின்றுகொண்டு புலி கரடிகள் சுட்டு கொல்லப் படுகின்றன. எல்லாம் முடிந்ததும் மிஞ்சிய யானைகள் சுட்டுக் கொல்லப் படுகின்றன. இவற்றில் மிஞ்சிய யானைகளின் தலைமுறையே இப்போது இந்திய நிலத்தில் நாம் காணும் யானைகள்.

இன்றைய இந்திய யானைகள் எதிர் நிற்கும் ஆபத்து என்ன என்பது வெளிப்படை. வாழிடமும் அதன் வழியே உணவும் சுருங்குவது. நீர் பற்றாக்குறை. கள்ள சந்தை. மோதும் ரயில்கள், பீர் புட்டிகள் இன்னும் பல .குறிப்பாக இந்திய மனிதர்கள் வசம் குறைந்து கொண்டே வரும் பெருந்தன்மை. வசுதைவ குடும்பத்தை மனதில் இருந்து உதறி புனிதமான பூஜை அறையில் வைத்து பூட்டி விட்டோம். அந்த கோயிலை காக்கும் பணியை புனிதமான ஒன்றையணா அரசியல்வாதிகள் வசம் விட்டு விட்டோம். இதன் வழியே எந்த அறமும் இன்றி பிற உயிர் குறித்த எந்த போதமும் இன்றி எதை வேண்டுமானாலும் வாங்கி விற்று துய்த்து வாழ்ந்து சாகும், தன்னைத் தவிர பிற எதுவுமே பொருட்டில்லாத காலத்துக்குள் வந்து நிற்கிறோம். அந்தப் பேருயிர்கள் அஞ்சி நிற்பது இந்த காலத்தின் முன்புதான்.

மாறும். அந்த மாற்றத்துக்கு துணை நிற்கும் ஜெயமோகன் யானை டாக்டர், ராமன் சுகுமாரன் என்றென்றும் யானைகள் போன்ற நூல் வரிசையுடன் படித்துப் பரவலாக்கம் பெறவேண்டிய மற்றொரு முக்கியமான நூல் தாமஸ் ஆர் ட்ரவுட்மன் எழுதிய இந்த யானைகளும் அரசர்களும் நூல்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைதெய்வம் பொய்யாதல் – கடிதம்
அடுத்த கட்டுரைம.பெ.ஸ்ரீனிவாசன்