பள்ளிக்கூடங்களின் இன்ஸ்பெக்டரான ஸ்ரீமான் ஈ.ஸி.கால்டுவெல் அவர்களுக்கு,
இப்பொழுது ஸ்ரீரங்கம் தாலுகா பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயராக இருக்கும் தியாகராச செட்டியார் சிறந்த தமிழ்ப் புலவரென்றும், நல்லாசிரியரென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். சில காலத்திற்குமுன் ஸ்ரீகோபாலராவ் அவரைப் பரீட்சித்து வேலைக்குப் பூரண தகுதியுடைவரென்று அறிந்து கொண்டாரென்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்ரீரங்கத்தில் அவருடைய ஸ்தானத்தைப் பூர்த்திசெய்வதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் இப்போது இங்கே உள்ள முன்ஷி அவ்வேலைக்கு முற்றும் தகுதியுடையவராதலின் அவரை அங்கே மாற்றலாம்.
டபிள்யூ.ஏ. போர்ட்டர்
தலைமை ஆசிரியர்
இப்படியாக 1865 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் தேதி முதல் கும்பகோணம் பள்ளிக்கூடத்தில் (Provincial School) தமிழ்ப்பண்டிதராக நியமிக்கப்பட்டார் தியாகராச செட்டியார். போர்ட்டர் துரையிடம் சொல்லி அவரை நியமனம் செய்த கோபால்ராவுக்கு முதலில் “என்னடா, முன்பின் அறியாதவரை பணியில் அமர்த்திவிட்டோமே, தன் பேரையும் காப்பாற்றிக்கொண்டு, நம் பேரையும் காப்பாற்றவேண்டுமே” என்று பதைபதைப்பாகத்தான் இருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவர் சந்தேகம் கேட்பதுபோல் அவர் தமிழறிவைச் சோதிப்பதும், அவர் வகுப்பு நடத்தும்போது திடீரென்று போய்ப் பரீட்சிப்பதுமாக இருந்தார். இதெல்லாம் முதல் சில நாட்கள்தான். ஒரு வாரத்திலேயே ‘சரியான ஆளைத்தான் போட்டிருக்கிறோம்’ என்று போர்ட்டர் துரையிடம் சான்றிதழ் கொடுத்துவிட்டார் கோபால்ராவ். பள்ளி கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டபோதும் அங்கேயே ஆசிரியராகத் தொடர்ந்தார் செட்டியார்.
வாரம் தவறாமல் மாயூரம் சென்று ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் பழைய நூல்கள் குறித்து அளவளாவுவதும், ஆசிரியருடன் திருவாவடுதுறை மடத்திற்குச் சென்று அங்கு ஆதீன கர்த்தர்களுடன் சல்லாபிப்பதுமாக தமிழில் தொடர்ந்து தோய்ந்துகொண்டிருந்தார் தியாகராச செட்டியார். தன்னுடைய ஆசிரியர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மூத்த மாணவராகத்தான் உ.வே.சாமிநாதய்யருக்கு அறிமுகமாகிறார் செட்டியார். கற்கும்போது மட்டுமே மாணவர். ‘யார் கேட்டாலும் தராதரம் பார்க்காமல் உடனே சிறப்புப் பாயிரம் (Forward) கொடுத்துவிடுகிறீர்கள். அவன் நேராக என்னிடம் வந்து ‘என்னமோ அலட்டிக் கொண்டீர்களே? உங்கள் ஆசிரியரே கொடுத்து விட்டாரே?’ என்று கூறிவிட்டுச் செல்கிறான். உங்கள் கருணை என்னைத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குகிறது’ என்று ஆசிரியரையே மட்டுறுத்தவும் அவர் தயங்குவதில்லை. அதே ஆசிரியரை கல்லூரிக்கு அழைத்துச்சென்று தன் நாற்காலியில் அமரச்செய்து காலில் விழுந்து வணங்குவதும் அதே செட்டியார்தான். ஆசிரியரும் மாணவரும் பேசிக்கொள்வதை அறியாதவர்கள் பார்த்தால் சண்டைபோடுவது போல இருக்கும் என்கிறார் உ.வே.சா. வாக்குவாதம் மிகவும் முற்றினால் பிள்ளையவர்கள் ‘என்ன, பட்டாளத்தான் திமிரைக் காட்டுகிறாயோ’ என்பாராம். முதலில் ராணுவத்தினருக்கான பள்ளியில் தமிழாசிரியராகப் பணி செய்திருக்கிறார் செட்டியார். இப்பிடிச் சண்டைகள் போட்டாலும் தான் இயற்றிய புராணங்கள், பாடல்களை உ.வே.சா விடம் கொடுத்து ‘தியாகராசு என்ன சொல்கிறான்’ என்று கேட்டுக்கொண்டு வரச்சொல்லுவதும் அவர்தான். ஒருவேளை பிள்ளையவர்கள் செட்டியாரிடம் பேச்சுக்கேட்டபின், ‘இனிமேல் கறாராக இருக்கவேண்டும்’ என்று நினைத்துத்தான், கோபாலகிருஷ்ண பாரதிக்கு சிறப்புப் பாயிரம் கொடுக்காமல் அலையவிட்டாரோ என்னவோ?
ஒருமுறை தலைமைக் கல்வி அதிகாரி இவர் வகுப்பறைக்கு திடீரென்று மேற்பார்வையிட வந்திருந்தார். மாணவர்களைப் பலவிதமாகக் கேள்விகளால் குடைந்தெடுத்தார். எல்லோரும் சிறப்பாக பதிலிறுத்தனர். செட்டியாருக்கும் வெகு திருப்தி. நியாயமாகப் பாராட்டவேண்டிய அதிகாரி அப்போது கேட்டாராம் “ஏன் பிள்ளைகளுக்கு வேண்டாத பாடங்களையெல்லாம் சொல்லிக்கொடுத்து சிரமப்படுத்துகிறீர்கள்?” என்று. செட்டியார் அஞ்சாமல் “நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதே? கற்பிக்க வேண்டிய பாடங்களை கற்பிக்காமல் இருப்பதல்லவோ குற்றம். ஒரு மாதத்தில் படிக்கவேண்டிய வேண்டிய பாடங்களுக்கு ஒரு வருடத்தையா வீணாக்குவது? இவர்களுக்கு இந்த விஷயங்களைக் கற்றுக்கொள்வது சிரமமாக இருந்தால் இவ்வளவு திருத்தமாக விடையளிப்பார்களா?” என்று சரமாரியாகக் கேள்விகள் கேட்கவும் அதிகாரி வாயைமூடிக்கொண்டு போகவேண்டியதாகி விட்டது. அந்த வகுப்பில் மாணவராக இருந்த திருச்சியின் பிரபல வக்கீல் ஸ்ரீராகவாச்சாரியார் உ.வே.சா விடம் கூறியது இந்நிகழ்ச்சி. “நன்னூலை இவரைப்போல பாடம் சொல்லுகிறவர்களைப் பார்ப்பது அரிது. இலக்கணக்குறிப்புகளுக்கு இவர் காட்டுகிற உதாரணங்கள் கூட மற்றவர்களது போல இருக்காது.எல்லாக் கல்லூரி ஆசிரியர்கள் பெயரும் அந்தக் கல்லூரியைத் தாண்டித் தெரியாது. இவர் கும்பகோணம் கல்லூரித் தமிழாசிரியர் என்பது தமிழ்நாடு முழுவதும் தெரிந்திருந்தது ” என்கிறார் உ.வே.சா.
புலிக்குட்டித்தம்பிரானை (புலி போல நகம் வளர்த்துக்கொண்டு தூங்குபவர்களையும், மற்றவர்களையும் ‘நறுக்நறுக்’ கென்று கிள்ளி வைப்பதால் இந்தப்பெயர்) அவர் செய்த சில அபசாரச்செயல்களுக்காக திருவாவடுதுறை மடத்திலிருந்து விலக்கிவைத்து விடுகிறார்கள். செட்டியார்தான் சென்று மத்தியஸ்தம் செய்து வைக்கிறார். இது போன்ற பல சுவாரசியமான செய்திகளைத் தன்னுடைய “வித்துவான் தியாகராச செட்டியார்” நூலில் எழுதியுள்ளார் உ.வே.சா. சிறப்புப்பாயிரம் கேட்டுச்சென்றபோது அவமானப்படுத்தியதாக ஒரு வித்துவான் தொடர்ந்த வழக்கில் செட்டியார் வெற்றி பெற்றது, தப்பான உரை எழுதியவர்களைக் கண்டித்தது, தன்னுடைய முரட்டு அடியாளையும் கவிராயராக்கியது, திருக்குறளைத் திருத்த முயன்ற ஆங்கிலேய பாதிரியாரை அடிக்காத குறையாக விரட்டிவிட்டது, முத்துக்குமாரத் தம்பிரான் செருக்கை அடக்கியது, ‘கல்லூரியில் பாடம் சொல்லுவது மடத்தில் பாடம் சொல்வதுபோல எளிதானதல்ல’ என்று சொன்ன செட்டியாரைப் பிள்ளையவர்கள் ‘பழி’வாங்குவது, சிந்தாமணிப் பதிப்பிற்குப் பிறகு செட்டியாரும் உ.வே.சாவும் சந்திக்கும் உணர்ச்சிகரமான சந்திப்பு, செட்டியார் பதிப்பித்த நூல்கள், செட்டியாரின் சென்னை விஜயம் (“யாராக இருந்தாலும் ‘என்னாங்க’ என்று ஸ்வரத்துடன் பீடிகையோடு பேச ஆரம்பிக்கிறார்கள்” – உடனே நினைவுக்கு வருவது ஏ.வி.எம் மின் ‘சபாபதி’ படத்தில் வேலைக்காரனாக வரும் காளி.என்.ரத்தினம்) என்று எத்தனையோ சுவையான செய்திகள்.
1880 – ல் உடல் நலிவின் காரணமாக விருப்பஓய்வு பெற்ற செட்டியாருடைய ‘போட்டோக்ராப்’ பை எடுத்து அனுப்பும்படி ஒரு நண்பருக்குக் கடிதம் எழுதுகிறார் உ.வே.சா. அதற்கு செட்டியாரின் பதில் ஒரு கடிதத்தில் இப்படி இருக்கிறது ” …………என்னுருவத்தை பொட்டகிராப் எடுக்கும்படி தாங்கள் உத்தரவு செய்தீர்களாம். யான் குரூபம் அடைந்த காலத்தில் எடுக்க எனக்குச் சம்மதம் இல்லை. அன்றியும் நல்ல உடை உடுத்துக்கொண்டு ஒரு நாழிகை அசையாதிருக்கச் சற்றும் பலமில்லை. ஆதலால் நான் செவ்வையாய் இருந்த காலத்தில் காலேஜ் ஸ்தம்பத்தில் என் உருவம் செய்யப்பட்டிருக்கிறது. தெற்குத் தாழ்வாரத்தில் கீழ்ப்புறத்தில் இருக்கிறது. ஒரு பக்கம் கோபாலராயர் குதிரையில் இருப்பதுபோலச் செய்யப்பட்டிருக்கிறது. நல்ல மொச்சியன் ஒருவன் அகப்பட்டால் அந்த உருவத்தைக் காண்பித்து ஒரு படம் எழுதிக்கொண்டால் அதைவைத்து வேண்டியபடி பொட்டகிராப் எடுத்துக்கொள்ளலாம்……படம் எழுதும் மொச்சியன் என்னைப் பார்த்திருந்தால் உத்தமம்” . காலேஜில் தச்சன் செதுக்கியுள்ள சிலையை செட்டியார் கூறியபடியே ‘போட்டோ’ எடுத்து, ஒரு ஓவியரையும் கொண்டு ஒரு ஓவியத்தையும் வரையச் செய்கிறார் உ.வே.சா. ஆனாலும் அவருக்குத் திருப்தி இல்லை. “இவைகளையெல்லாம் பார்த்தால் செட்டியாரின் நினைவு வருகிறது என்பது உண்மைதான். ஆனால் என் மனத்தில் இருக்கும் செட்டியாரின் உருவம் வேறு. நான் ஒரு நல்ல மொச்சியனாக இருந்தால்தான் அதை எழுத முடியும்” என்கிறார் உ.வே.சா.
ஒருமுறை செட்டியார் தன் சொந்த வேலைகளை கவனிப்பதற்காக பூவாளூர் செல்ல முடிவுசெய்து, ஒரு ஆறு மாதகாலம் விடுப்பு எடுத்துக்கொண்டார். அப்போது செட்டியாருடைய வேலையைப் பார்ப்பதற்காக சந்திரசேகர கவிராஜ பண்டிதர் என்பவர் தமிழாசிரியராக நியமிக்கப்பட்டார். அவர் சிறந்த பண்டிதராக இருந்தாலும் மாணவர்களுக்குத் திருப்திகரமாக பாடம் சொல்லவில்லை. அவர்களைக் கண்டித்து அடக்கவும் துணியவில்லை. ஒருவாறு ஒப்பேற்றி ஆறுமாதகாலத்தை முடித்தார் பண்டிதர்,. செட்டியார் ஆறுமாதம் விடுப்பு முடிந்து வேலையை ஒத்துக்கொண்டபோது சந்திரசேகர கவிராஜ பண்டிதர் பிரின்சிபாலிடம் நன்மதிப்புச் சான்றிதழ் ஒன்று கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதுபோல அவரும் ஒன்று ஆங்கிலத்தில் எழுதிக்கொடுக்க, அவரும் தலைவரிடம் விடைபெற்றுக்கொண்டு மற்றஆசிரியர்களிடம் விடை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களுடைய அறைக்குச் சென்றார். அங்கே இருந்த சுந்தரராவ் என்ற ஆசிரியர் எப்போதும் வேடிக்கையாகப் பேசக்கூடியவர். நன்மதிப்புச் சான்றிதழைப் படித்துப்பார்த்த அவர் செட்டியாரைப் பார்த்து “தங்களுக்கு போர்ட்டர் துரை ஏதாவது நன்மதிப்புப் பத்திரம் தந்திருக்கிறாரா?” என்று கேட்டார். “இல்லையே, அவரிடம் நான் இதுவரை கேட்டதில்லை. இத்தனை வயதுக்கப்புறம் அதை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்” என்றார் செட்டியார். “இதோ இருக்கிறதே, இதற்கு ஒரு பிரதி வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு மிகவும் பயன்படும்” என்றார் சுந்தரராவ். அப்போது சந்திரசேகர கவிராஜ பண்டிதர் திடுக்கிட்டு “தலைவர் எனக்கல்லவா கொடுத்தது?” என்றார். சுந்தரராவின் இயல்பை உணர்ந்த செட்டியார் “என்ன சமாச்சாரம்? இதில் என்ன எழுதியிருக்கிறது? ஏன் இந்தப் பெரியவருக்கு மனக்கலக்கத்தை உண்டாக்குகிறீர்கள்?” என்று கேட்க சுந்தரராவ் மொழிபெயர்த்துக் கூறினார் ” மாணாக்கர்கள் மனத்தைக் கவர்ந்து போதிப்பதில் வல்லவரும், சிறந்த வித்வானுமாகிய தியாகராச செட்டியார் பார்த்துவந்த வேலையை இவர் ஆறுமாதம் பார்த்தார்”
உ.வே.சா தன்னுடைய நூலின் முன்னுரையில் கூறுகிறார் ” என் ஆசிரியரிடம் எனக்கு முன் படித்தவராதலின் இவர் எனக்கு முன்னவர். என்பால் அன்பு வைத்துப் பழகியமையின் என் நண்பர். இன்னின்னபடி மாணாக்கர்களிடம் நடந்துவரவேண்டுமென்பதையும், சில நூற்பொருள்களையும், வேறு சில விஷயங்களையும் எனக்கு அறிவுறுத்தியமையின் எனது ஆசிரியர்களில் ஒருவர். எனக்குத் தம் உத்தியோகத்தை அளித்துப் பிறர் கையை எதிர்பாராமல் செய்தவகையில் ஒரு வள்ளல். தியாகராசர் என்று இவருக்கு வாய்த்த பெயர் என்னளவில் பொருளுடையதாகவே நிற்கின்றது. இவரை நான் மறவேன். காலேஜில் தம் இடத்தைத் தந்து உதவிய இவர் பெயரை நான் தங்கியிருக்கும் இடத்திற்கு வைத்து அங்கு வாழ்ந்து வருகிறேன். ‘தியாகராஜ விலாசம்’ இவருக்கும் எனக்கும் உள்ள அன்புப் பிணைப்பிற்கு அடையாளமாக நிற்கிறது.”
தமிழின் தனி அடையாளமாக நின்றிருக்கவேண்டிய நூறாண்டு கடந்த ‘தியாகராஜ விலாசம்’ 2014ல் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சிக்காலத்தில், தமிழறிஞர்களின் கண்டனங்களுக்கு நடுவே, இடித்துத் தள்ளப்பட்டது. இன்றைக்கு செட்டியார் இருந்திருந்தால் அவருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்குமா?
கிருஷ்ணன் சங்கரன்