ரிஷி சுனக் பிரிட்டிஷ் பிரதமராக ஆகியிருப்பது பற்றி நீங்கள் ஏதாவது எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். இந்தியர்கள் திறமையற்றவர்கள் என்று பிரிட்டிஷார் சொல்லிவந்தனர் (சர்ச்சில் சொன்னார்) இன்று இந்திய வம்சாவளியினர் ஒருவர் பிரிட்டிஷ் பிரதமர் ஆகியிருப்பது முக்கியமான நிகழ்ச்சி அல்லவா?
ஆர்.ரமணி
***
அன்புள்ள ரமணி,
இந்திய வம்சாவளியினர் ஒருவர் ஓர் உயர்பதவிக்கு வரும்போது அல்லது பரிசுபெறும்போது இங்கே உருவாகும் பரவசம் என்னைக் கூச்சமடையச் செய்கிறது.
அதிலுள்ள உணர்வு உண்மையில் என்ன? இந்தியர்களுக்கு தங்கள் இனம் சார்ந்து இருக்கும் தாழ்வுணர்ச்சியே. அது வெள்ளையர் உருவாக்கியது. வரலாற்றில் நமக்கு நிகழ்ந்த வீழ்ச்சியால் அடையாளமிடப்பட்டது.
அதை அகத்தே நாமும் நம்புவதனால்தான் ஓர் இந்திய வம்சாவளியினர் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ வெற்றி அடையும்போது நாம் கொண்டாடுகிறோம். அது நம் வெற்றி என நினைக்கிறோம். ஏனென்றால் அது நம் தாழ்வுணர்ச்சியை கொஞ்சம் போக்குகிறது.
இந்த தாழ்வுணர்ச்சியால்தான் நாம் இங்குள்ள எந்த சாதனைகளையும் கண்டுகொள்வதில்லை. நம் சூழலின் அறிஞர்களை பொருட்படுத்துவதில்லை. எவரையும் அறியமுயல்வதுமில்லை. அரசியல்வாதிகள், கேளிக்கையாளர்களே நமக்கு முக்கியமானவர்கள். ஓர் அரசியல் கட்சியின் விசுவாசிகள்கூட அக்கட்சியின் சிந்தனைகளை உருவாக்கிய அறிஞர்களை பெயர்கூட அறியாதவர்களாக இருப்பார்கள். திகைப்பூட்டும் சூழல் இது.
அதேசமயம் எவருக்காவது ஓர் ஐரோப்பிய அங்கீகாரம் கிடைத்துவிட்டால் மிகையாகக் கொண்டாடுவோம். அறிஞர், ஆய்வாளர் என எவரையாவது கொஞ்சம் அறிமுகம் செய்துகொண்டாலே மிகையாக தூக்கி வைக்க ஆரம்பிப்போம். நம் பொதுவெளி ஆளுமைகளை எல்லாம் தெய்வங்களாகவே முன்வைப்போம்.
ஏனென்றால் உண்மையில் நம்மிலொருவர் அறிஞராக, ஆய்வாளராக எல்லாம் இருக்க முடியும் என்னும் நம்பிக்கையே அடிமனதில் நமக்கு இல்லை. அந்த அவநம்பிக்கையால்தான் நாம் அறிவுசார்ந்த அளவுகோல்களை மறுத்து மிகையாகக் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறோம்.
ரிஷி சுனக் அல்லது அதைப்போன்றவர்கள் இந்தியர்கள் அல்ல. இந்தியக் கல்விமுறையில் உருவானவர்கள் அல்ல. இந்தியர்கள் திறமையற்றவர்கள் என்று சொல்ல ரிஷி சுனக்கையே ஏன் ஓர் ஐரோப்பியர் சுட்டிக்காட்ட கூடாது? இந்தியப் பல்கலையில் பயின்று எவரும் உயர்நிலையை அடையமுடியாது, இந்தியாவை ஆளவேண்டுமென்றால்கூட ஐரோப்பியப் பல்கலையில் பயிலவேண்டும் என அவர் சொல்லலாமே? ரிஷி சுனக்கை உருவாக்கியது பிரிட்டிஷ் கலாச்சாரமும் கல்வியும்தான் என வாதிடலாமே? அது எவ்வளவு இழிவு நமக்கு?
எனக்கு அந்த தாழ்வுணர்ச்சி இல்லை. ஆகவே நான் சுந்தர் பிச்சை, இந்திரா நூயி என்றெல்லாம் நடனம் ஆடுவதில்லை. மெய்யாகவே இந்தியப் பண்பாட்டுக்கும் அதனூடாக உலகப்பண்பாட்டுக்கும் கொடையளித்த இந்திய மேதைகளைப் பற்றி எழுதுகிறேன். அவர்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல முயல்கிறேன். அவர்களே நம் பெருமிதம்.
ரிஷி சுனக் விஷயத்தில் என் ஆர்வம் ஒன்றே. பிரிட்டிஷ் பொருளியல் பற்றி படித்தேன். முழுக்கமுழுக்க தொழில்மயமாக்கப்பட்ட நாடு. தொழிலுற்பத்தி, ஏற்றுமதி, அதன் அன்னியச்செலவாணி வருகை வழியாக வாழ்கிறது. உணவுற்பத்தி மிகக்குறைவு. வேளாண்பொருட்களை இறக்குமதி செய்கிறது.
இந்த பொருளாதார ‘டெம்ப்ளேட்’ பிரிட்டனுக்கு பழைய தொழிற்புரட்சிகாலம் முதல் உருவானது. தொழிலுற்பத்திப் பொருட்களை விற்கும் ‘கட்டாயச் சந்தை’ ஆகவும் அதற்கான மூலப்பொருட்களை அளிக்கும் ‘கட்டாய வயல்’ ஆகவும் காலனிநாடுகளை பயன்படுத்தியது.
உலகப்போருக்குப் பின் காலனிகளை இழந்த பிரிட்டன் அமெரிக்க உதவியுடனும் பழைய தொழில்மயமாக்கலின் மிஞ்சிய வசதிகளுடனும் தாக்குப்பிடித்தது. அண்மைக்காலம் வரைக்கும்கூட காலனிகள் சிலவற்றை வைத்திருந்தது.
இன்று சீனாவின் தொழிலுற்பத்திப் பொருட்கள் பிரிட்டிஷ் தொழிலுற்பத்திப் பொருட்களை சந்தையில் இருந்து விரட்டுகின்றன. பிரிட்டன் அதன் ஊழியர்களுக்கு அளிக்கும் ஊதியத்தில் பத்திலொன்றைக்கூட தன் ஊழியர்களுக்கு அளிக்காத சீனாவின் ஏகாதிபத்தியப் பொருளியலுடன் பிரிட்டன் போரிடமுடியாது.
ஆகவே பிரிட்டனின் பொருளியல் தடுமாறுகிறது தொழிலதிபர்கள் சீனாவுடன் போட்டியிடவேண்டுமென்றால் வரிச்சலுகை வேண்டும் என்கிறார்கள். அதை அளித்தால் தொழிலாளர், அடித்தள மக்கள்மேல் வரிபோடவேண்டியிருக்கும். தொழில்கள் சோர்வுற்றால் தொழிலாளர் வேலையிழப்பு, ஊதியக்குறைப்பு பொருளியலை மேலும் வீழ்த்தும்.
பொதுவாக பொருளியல் வல்லுநர்கள் ‘திட்டமிட்டு’ பொருளியலை மேம்படுத்த முடியுமா என்றெல்லாம் எனக்குச் சந்தேகங்கள் உண்டு. பொருளியல் அறிந்தவர்கள் சொல்வதை எல்லாம் ஒரு சிட்டிகை உப்புடன் எடுத்துக்கொள்வதே என் வழக்கம். அந்த ஐயம் ஓர் எளிய பாமரனின் தரப்பு என்று கொள்க.
பிரிட்டனுக்கு ஒரே வழிதான். ஐரோப்பாவுக்கே ஒரே வழிதான். நுகர்பொருளுற்பத்தியில் சீனாவுடன் போட்டியிட முடியாது. உயர்தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்கி மூன்றாமுலக நாடுகள் தலையில் கட்டுவது. அந்த லாபத்தில் பொருளியல்மீட்சி அடைவது. அதற்காக எதையும் செய்வார்கள். வரும்நாட்களில் அதுதான் நிகழும். அதை ரிஷி சுனக் செய்தாலென்ன, போரீஸ் ஜான்ஸன் செய்தாலென்ன?
ஜெ
***