கதாநாயகி, கடிதம்

கதாநாயகி வாங்க

அன்புள்ள ஜெ

கதாநாயகி நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இணையத்தில் அது தொடராக வெளிவந்தபோது வாசித்தேன். ஆனால் அப்ப்போது அதை சரியாக வாசிக்க முடியவில்லை. வாசித்தேன் என்றாலும் அதன் வடிவம் என் மனதில் நிலைகொள்ளவில்லை. நாவலாக வாசிக்கையில்தான் பிரமிப்பூட்டும் அதன் கட்டமைப்பு கண்ணுக்குப் படுகிறது.

கதாநாயகி நாவலின் வடிவம் மிகச்சிக்கலானது. நவீன நாவல்களிலுள்ள பல அடுக்குகள் கொண்டது. கன்யாகுமரி மாவட்டத்தில் ஒரு மலையில் ஒரு கதை. அதற்குள் பழைய திருவிதாங்கூரில் நடக்கும் ஒரு கதை. அதற்குள் பழைய லண்டனில் நடக்கும் ஒரு கதை. அதற்குள் அதற்கு முந்தைய பதினேழாம்நூற்றாண்டு லண்டனில் நடக்கும் கதை. அதற்குள் பழைய ரோமாபுரியில் நடைபெறும் கதை என விரிந்துகொண்டே செல்கிறது.

இந்தவகையான நாவல்களை இன்றைக்குப் பலபேர் எழுதுகிறார்கள். ஆனால் அவற்றை சீராக ஒரே கதையாக அல்லது ஒரு நெரேஷனாக ஆக்க அவர்களால் முடிவதில்லை. ஆகவே அவை தனித்தனியாக சொல்லப்பட்டு ஒரு டேபிள் போல மண்டைக்குள் செல்கின்றன. இணைத்து கதையை உருவாக்கிக்கொள்வது கொஞ்சம்கூட மகிழ்ச்சி இல்லாத மூளைவிளையாட்டாக ஆகிறது.

கதாநாயகி ஓர் அருமையான பேய்க்கதை டெம்ப்ளேட்டில் உள்ளது. அந்தச் சுவாரசியமே எல்லா கதைகளையும் இணைக்கிறது. பேய், அதன் உண்மைப்பெண், அவளுடைய டைரி, அதற்குள் அவள் வாசிக்கும் நாவல், அந்நாவலாசிரியையின் வாழ்க்கை, அந்நாவலின் கதை என்று இந்த அடுக்குள் மிக அற்புதமாக ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்துள்ளன.

ஒரு கதை இன்னொரு கதைக்கு அர்த்தமளிக்கிறது. ஒவ்வொரு கதையும் இன்னொரு கதையால் விரிகின்றன. அத்துடன் கதைகளை லண்டன், ரோம் என்று கொண்டுசென்றாலும் வெறும் telling ஆக இல்லாமல் அழகான் narration ஆக ஏராளமான நுணுக்கமான செய்திகளுடனும், அக்காலகட்ட மனநிலைகளுடனும், சமூகச்சித்திரங்களுடனும் காட்சிரூபமாக கதை அமைக்கப்பட்டுள்ளது.

பெண் என்னும் அடையாளம் மீது நடத்தப்படும் சரித்திரபூர்வமான தாக்குதலும் ஒடுக்குதலும்தான் கதை. ஓங்கி ஓர் உதைவிட்டு அதில் இருந்து ஒரு பெண் அடையும் விடுதலை. ஒரு பெண் அடிமையாக இருக்கிறாள் என்றால் அவளுக்குள் பல அடுக்குகளாக பல பெண்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். எல்லா பெண்களும் ஒரே கணத்தில் அடையும் விடுதலையே கதை. சிறப்பான ஒரு அனுபவம். உளவியல் அனுபவம் இந்தக்கதை.

நீங்கள் எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். பல நாவல்கள் கவனிக்காமலேயே சென்றுவிடுகின்றன. கதாநாயகி நாவலை மட்டுமே தமிழில் ஒரு இளம் எழுத்தாளர் எழுதியிருந்தால் ஒரே நாவலிலேயே அவர் தமிழில் நல்ல எழுத்தாளராக அடையாளம் காணப்பட்டிருப்பார்.

செந்தில்வேல் எம்

முந்தைய கட்டுரைபொன்னியின் செல்வன் எதிர்விமர்சனம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைந.பிச்சமூர்த்தியும் தாகூரும்