பின் தொடரும் நிழலின் குரலும் இருட்கனியும்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க

இருட்கனி வாங்க

அன்பு ஜெ,

பின்தொடரும் நிழலில்ன் குரல்’- நாவல் தொடங்கிய ஒரு சில பக்கங்களிலேயே அருணாசலத்தின் என்ன ஓட்டங்களில் ஒரு அனுபவம் வரும். ஒரு கல்யாணத்தில் அவன் மனைவி நாகம்மை தன் தங்கையின் கொழுந்தனிடம் சிரிச்சி பேசுவதை கண்டு இவன் உள்ளுக்குள் புகைத்துக்கொள்வான். ‘குழந்தையை கொஞ்சம் வைத்துக்கொள்ள முடியுமா?’ என்று அவள் கேட்டபோது ‘ஏன் அப்பத்தான் கல்யாணமாகாத கண்ணின்னு பயக்க நெனப்பாவளா!’ என்று வார்த்தையில் முல்லை வைத்து குத்துவான். உடனே தன் கீழமைக்கு வெக்கி குறுகிப்போவான்.

தன் கட்சியின் சித்தாந்தம் அளித்த மேதமை, களப்பணிகள், தீரா விவாதங்கள், அவனை தலைவனாக தொடரும் தொண்டர்கள் என… எவ்வகையிலும் அவன் ஒரு அறிவு ஜீவி. மனதின் மேல் இத்தனை அறிவுப்பூர்வமான விஷயங்களை போட்டு நிரப்பினாலும் மாறாத ஆதி இயல்பு ஒன்று இருந்துக்கொண்டு தான் இருக்கிறது.  என்னதான், இந்திர மாளிகையை கட்டி எழுப்பினாலும் .. அதன் அடியில் சாக்கடையில் இருந்து எலிகள் போல இவைகள் எட்டி பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றன. அதிலும், பெண் உறவுகளில் இதெல்லாம் வெடித்து வெளிவந்துக்கொண்டே இருக்கும். சீல் கட்டி வெடிப்பது போல் அப்படி இன்னுமொரு நிகழிச்சி இதே நாவலில் வேறு ஒரு கோணத்தில்… இன்னும் நுட்பமாக நீங்கள் அமைத்து இருப்பீர்கள்.

அது சுப்பையாவிற்கு வீரபத்திர பிள்ளை எழுதும் கடிதம். கட்சியை விட்டு விலகிய பிறகு அங்குள்ள தன் நண்பன் சுப்பையா மிக்க கடுமையான சொற்களில் எழுதிய கடிதத்திற்கு எதிர்வினையாட்டும் வீரபத்திரன்… சொற்களால் அவனை கிழித்தெறிய அந்த அனுபவத்தை ஞாபகப்படுத்துவான். என்ன அது? தீவிர இடது சாரியான சுப்பையாவின் பெண் பிள்ளைக்கு முடியெடுக்கும் சடங்கு. அங்கு சுப்பையா கண் கலங்கினதை குத்திக்காட்டுவதுடன் தொடங்கி…  அவன் தம்பி நாவிதரை ‘அடே’ என்று சாதி பெயர் சொல்லி அழைப்பதும், குழந்தையின் தாய் மாமன் போட்ட அரைப்பவுன் கம்மலை மாறி மாறி கையால் எடை போட்ட உறவினர்களும்… இப்படி சொல்லிக்கொண்டே போகும் வீரபத்திரன் அதன் உச்சமாக அந்த நிகழ்ச்சியையும் சொல்வான்.

அது வீரபத்ரனின் கண்களும் சுப்பையாவின் மனைவியின் கண்களும் சந்தித்து… பார்வை தீண்டி சட்டென்று விலகும் காட்சி. ஒரு பார்வைதான்… முன்பின் அறிமுகம் இல்லாத ஆணும் பெண்ணும் ஒரு சிறிய ஆர்வத்துடன் சந்தித்துக்கொள்வது. அதற்கு பிறகு அது மிகவும் சாதாரணமான அறிமுகமாகவே நின்று விடலாம். ஆனால், அது  சுப்பையாவின் மனதில் ஒரு எரிமலையை வெடித்து விடுகிறது.  அவன் பார்வை மாறுபடும். ஒரு சிறு காரணத்திற்க்காக சட்டென்று மனைவியை அடிப்பான்…! வீரபாத்திரனிடம் அதுவரைக்கும் தான் காப்பாற்றிக்கொண்டு இருந்த அந்த பிம்பத்தை சுப்பையா உடைத்து எரிவான்.

ஆண் இக்கீழ்மைகளை உணவின் பொருட்டோ, உறைவிடத்தின் பொருட்டோ வேண்டுமென்றால் மறைத்துக்கொள்ளலாம். ஆனால், பெண் உறவின் விஷயத்தில் சாத்தியமே இல்லை.  வெண்முரசு இருட்கனியில்…  கர்ணனிடம் தீவிர அவமானத்தை அடைந்த யுதிஷ்டரன் அர்ஜுனனிடம் காட்டும் கீழமையும் அத்தகையதே.

திரௌபதியிடம்… ஐவரும் வெவ்வேறு நாட்களில் உறவு கொள்ளும் நாட்களில் இருந்தே அர்ஜுனனின் விஷயத்தில் தர்மருக்கு அந்த புகைச்சல் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. அவன் இந்த கால கட்டுப்பாடை மீறுகிறான் என்று! மற்ற மூவருக்கும் அந்த பிரச்சினையே இல்லை. மாமலரின் துவக்கத்தில் பல வருடங்களின் பயணத்திற்கு பிறகு வரும் அர்ஜுனன் திரௌபதியுடன் மகிழ… பீமன் வழிசெய்வான். நகுலனுக்கு, சகதேவனுக்கும் அவள் களி தோழியாகவும், சமயத்தில் அன்னையாகவும் அணைப்பவள். பிரச்னையெல்லாம்… யுதிஷ்டரனுக்குத்தான்…

ஏன்? அவன் அறிவுஜீவி என்பதாலா? அதை மட்டுமே தன் சுய அடையாளமாக ஆக்கிக்கொள்வதாலா?  போர், அரச சூழ்ச்சி போன்ற லௌகீக விஷயங்களில் அவரின் பொருந்தாமை வெளிப்படையாக தெரிய வருவதினாலா? அதற்காகத்தான், தன்னுடைய மெய்மையை முன்னிறுத்துகிறானா… அருணாச்சலத்திற்கும், சுப்பையாவிற்கும் மார்க்சியம் அந்த மெய்மைதானே?

இத்தனைக்கும் கந்தமாதன பர்வதத்தில் எரிந்து சத்தியத்தை தெரிந்துக்கொண்டவன் அல்லவா தருமன்! அறிவு ஜீவிகளுக்கே உள்ள நரகமா இது? கர்ணனின் உயிர் துறத்தலை பேசும் இந்நாவல்… போர் அறத்தின் வீழ்ச்சியை காட்டுகிறது. இதுவரை நான் படித்த மகாபாரதத்தில் எல்லாம்…  துச்சனின் மரணம் பீமனின் அசகாய வீரத்தால் தான் என்று சொல்வன. ஆனால், சர்வதனை கொள்ளக்கூடாதென்று கதையை ஓங்கி காற்றில் நிறுத்திய துச்சகனை இங்கு பீமன் கொள்கிறான். அதற்கு அடுத்துவரும் காட்சிகள் பீபத்ச ரசத்தின் உச்சங்கள்.

இந்த நாவலில் நான் மிகவும் ரசித்தது வால்மீகியின் கதை அமைத்துள்ள விதம். ‘மா நிஷாத’ என்ற சொல்லையோ… இணையான தமிழ் வார்த்தையையோ பயன்படுத்தாமல் குரங்குகளின் நாவால் கவிமுனிவரின் கதையை மிகவும் அழகாகக் கூறிவிட்டீர்கள்.

நன்றி ஜெ.

ராஜு.

*

முந்தைய கட்டுரைம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்
அடுத்த கட்டுரைபொன்னியின் செல்வன் எதிர்விமர்சனம், கடிதங்கள்