அ.முத்துலிங்கம் விழா, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். கி.ரா. விருது – 2022-ஐ முன்னிட்டு,  விருது பெற்றவரான அ. முத்துலிங்கம் படைப்புகளை சிறப்பிக்கும் பொருட்டு , விஜயா பதிப்பகம் பதிப்பித்த  இரு நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு  சிறப்பித்ததற்கு  அன்பும் நன்றியும். அருண்மொழி நங்கை அவர்கள் தொகுத்த அ. முத்துலிங்கம் அவர்களின் , வெவ்வேறு நாட்டு  மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும்  13 கதைகள் அடங்கிய ‘நடுவே கடல்’ நூலை  சிறப்பிக்கும் விதமாக ஜாஜா உரையாற்ற, முத்துலிங்கம் படைப்புகள் பற்றி வெவ்வேறு தளத்தில் நாட்டில் உள்ளவர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய, நான் தொகுத்த  ‘ஆறாம் திணையின் கதவுகள்’ நூல் பற்றி நீங்கள் உரையாற்ற விழா சிறப்புற நிகழ்ந்தது.

விழாவை தலைமை தாங்கி  நூல்களை  வெளியிட்ட  கோவை மாவட்ட  ஆட்சியர் சமீரன் அவர்களை நல்லதொரு வாசகனாக அறியும் தருணமாக அமைந்தது. ஒரே ஒரு கதையை (இராகு காலம்) எடுத்துக்கொண்டு  அவர் பேசினாலும், கதையின் நுணுக்கங்கள் அறிந்தவராக, கதையில் லெக் பீஸ் (கருத்து) தேடுவதை தவறு என்றும் , subtle-ஆக சொல்வதின் தன்மையை எடுத்துச் சொன்னார்.  நான் டெல்லியில் மத்திய அரசாங்க வேலை செய்தபொழுது  IAS முடித்த அதிகாரிகளுடன் பணியின் நிமித்தம் உரையாடியுள்ளேன். அவர்களில் ஒருவரேனும் புத்தகங்கள் பற்றி பேசி நான்  கேட்டதில்லை. டாக்டர் சமீரன் அவர்கள் விதிவிலக்காக கோவை மேடைகளில் இலக்கிய உரையாற்றுவது ஆச்சரியமாக உள்ளது.  170 மேடைகளில் பேசியதாக தனது உரையில் குறிப்பிட்டார்.

நூல்களைப் பெற்றுக்கொண்ட காரமடை சவிதா மருத்துவமனை டாக்டர் சசித்ரா தாமோதரன் உரையும், சென்னை சில்க்ஸ் இயக்குனர் T.K.. சந்திரன் அவர்களது  உரையும் அ. முத்துலிங்கம் படைப்புகளை மேலும் பல வாசகர்களுக்கு கொண்டு செல்வதாக அமைந்தது. சசித்ரா தாமோதரன் அவர்கள் அவரது மருத்துவ படிப்பின்பொழுது கிடைத்த மினி ராபின்ஸ் புத்தகம் உதவியாக இருந்தது போல, இந்த தொகுப்பு நூல்கள் புது வாசகனுக்கு அ. முத்துலிங்கத்தின் படைப்புகளுள் நுழைய நல்ல அறிமுகம் என்றார். டி.கே. சந்திரன் அவர்களுடன் , விழா ஆரம்பிப்பதற்கு முன்னர் பேசிக்கொண்டிருந்தேன்.  BSNL-ல் அவர் பணியாற்றியதையும், தங்கள் வான் நெசவு கதை அந்த அலுவலக வாழ்க்கையையும், அந்த டெலிபோன்  டோனையும் எவ்வளவு துல்லியமாக சொல்கிறது என்று பாராட்டினார்.மேலாளராக, உயர் பதிவியில் உள்ள யாருக்கும், அ. முத்துலிங்கம் அவர்களின்  திகிடசக்கரம் கதை பிடித்துவிடும்.  தன்னோடு இணைத்துப் பார்க்க வைக்கும். விழாவில் உரையாற்றிய T.K. சந்திரனும் சரி , நான் தொகுத்த நூலுக்கு கட்டுரை கொடுத்த பாரதி பாஸ்கரும் சரி, திகிடசக்கரம் கதையை அனுபவப் பூர்வமாக வாசிப்பனுவத்தை பகிர்கிறார்கள்.

திகிடசக்கரம் கதையை இவர்கள் அலுவலக வேலையுடன் ஒப்பிட்டு பேச, ஜாஜா தனது  உரையில்  இந்தக் கதையில் வரலாறு, புராணம், அறிவியல் என்று எல்லாம் கதையோடு கதையாக ஊடுபாவாக  வருவதை (வலுக்கடடாயமாக திணித்ததுபோல் இல்லாமல்) குறிப்பிட்டு சொன்னார். ‘ஒரு சாதம்’  கதையை எடுத்துக்கொண்டு ஜாஜா அலசி ஆராய்ந்ததை கேட்டதும், இதற்காக அவர் சென்னையிலிருந்து பயணித்து வந்தது சரிதான் என்று நினைத்தேன். முத்துலிங்கம் கதைகள் , முதல் வாசிப்பிற்கு எளியவை போல் தோன்றி வாசகனை ஏமாற்றிவிடும். மீள் வாசிப்பில் அதன் ஆழம் புரியும் என்பதை கலெக்டரும் சொன்னார். ஜாஜாவும் குறிப்பிட்டு பேசினார்.

அருண்மொழி நங்கை  அமெரிக்காவில் வான் கோ ஓவியங்கள் பார்த்த அனுபவத்தை சொல்லி தனது ஏற்புரையை ஆரம்பித்தது பொருத்தமாக இருந்தது. அ. முத்துலிங்கம் படைப்புகள் குறித்த கட்டுரைகள் தொகுப்பு நல்ல தொடக்கம் என்று  பாராட்டிவிட்டு ,கி.ரா-வின் படைப்புகள் பற்றி ஒரு நூல் வரவேண்டும் என்று இன்னொரு பணிக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டீர்கள்

கி. ரா. விருது – 2022 விருது அறிவிப்பு வந்த நாள் தொடங்கி கடந்த நான்கு மாதங்களாக இந்த நூல்கள்  அச்சிடும் வரை  ரவிசுப்பிரமணியனுடன் பணியாற்றினேன்.   அவர் எம்.வி. வெங்கட்ராமன் கதைகளை தொகுத்ததை பற்றி  நண்பர்கள் கூறக்  கேட்டிருக்கிறேன். கட்டுரைகளின் தரத்திற்கும் நூல்களின் வடிவமைப்பிற்கும்  அவர்  எதிர்பார்ப்பின்படி நிறைவுறச் செய்யும் சமயம் நண்பர்களின் கூற்றை நான் உணர்ந்தேன். அப்பாடா முடிந்தது என்று நினைக்கும் சமயம் , விழா அன்றும் ஒருங்கமைப்பாளர் என்ற பெயரில் சவுக்கை எடுத்துக் கொண்டார்.(அதில் எனக்கு மகிழ்வே).

இந்தப் பணியின்  நிமித்தம் விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் அவர்களை அறிந்துகொண்டது இன்னொரு பாக்கியம். தமிழில் நான் அறிந்த எழுத்தாளரெல்லாம் அவர் வீட்டில் இட்லி சாப்பிட்டுவிட்டு இலக்கியம் பேசியிருக்கிறார்கள்.  ஒரு சிறுகதையின் பெயரையோ நாவலின் பெயரையோ சொன்னால்  அதன் சாராம்சத்தை நினைவிலிருந்து மீட்டெடுத்து சொல்கிறார். நூல் வெளியீட்டின்பொழுது அவர் எனக்கு போர்த்தியது இரண்டாவது பொன்னாடை. ஒரு வாரத்திற்கு முன்னர் ஊருக்கு வந்துவிட்டோம் என்று சொல்ல அவர் பதிப்பகத்திற்கு  நானும் ராதாவும் சென்றோம். அன்றே எனக்கும் ராதாவிற்கும்  பொன்னாடை போர்த்தி  வரவேற்றார். முழு விழாவையும்  சிறப்புற செய்த அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எனது நன்றிகள். இதனுடன் விழாவின் காணொளியை இணைத்துள்ளேன்.

அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்

முந்தைய கட்டுரைஐந்துநெருப்பும் வெந்து தணிந்த காடும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிண்ணளந்த சிறகு