பிஸி!

இந்த செப்டெம்பர் – அக்டோபர் முடிந்தபோது சட்டென்று என் டைரியை திரும்பி பார்த்தேன். முதலில் நான் எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. அண்மைக்காலத்தில் இத்தனை பரபரப்பாக இருந்த இரண்டு மாதங்கள் இல்லை. இத்தனை நிகழ்ச்சிகள், சந்திப்புகள், பயணங்கள்….

இந்த 2022 ஆண்டே எனக்குப் பரபரப்பானதுதான். இது என் அறுபதாமாண்டு. நான் பி.எஸ்.என். எல்லில் நீடித்திருந்தால் ஏப்ரல் 22ல் ஓய்வுபெற்றிருப்பேன். அதன்பின் என்ன செய்திருப்பேன் என்று தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் ஓய்ந்து அமர்ந்து ஓரண்டை கடத்தியபின்புதான் ஓய்வெடுப்பதும் களைப்பை அளிக்கும் என உணர்ந்து வேறென்ன செய்வது என ஆரம்பிப்பார்கள்.

நான் இவ்வாண்டு தமிழ் விக்கி திட்டத்தை அறிவித்தேன். அதற்கான வெறிகொண்ட உழைப்பு. அப்படியே அமெரிக்கா சென்று அதை தொடங்கிவைத்தேன். அமெரிக்காவில் மேற்குக் கடற்கரையில் இருந்து கிழக்குக் கடற்கரை வரை பாலைநிலம், மலைகள், விரிவெளிகள் வழியாகக் காரில் சென்றேன். இந்தியாவை மும்முறை நெடுக்காகக் கடக்கும் தொலைவு.

திரும்பிவந்து மறுநாளே காசர்கோடு. அங்கிருந்து அப்படியே சென்னை. சினிமா வேலைகள். இலக்கியச் சந்திப்புகள். இலக்கிய விருதுவிழாக்கள். தமிழ்விக்கி -தூரன் விருது இவ்வாண்டு புதியதாக அறிவிக்கப்பட்டு ஈரோட்டில் சிறப்பாக நடைபெற்றது.

செப்டெம்பரில் என் இரண்டு திரைப்படங்கள் வெளியாயின. செப்டெம்பர் 15 ஆம் தேதி வெந்து தணிந்தது காடு. செப்டெம்பர் 30ல் பொன்னியின் செல்வன். இரண்டுமே வெற்றிப்படங்கள். பொன்னியின் செல்வன் தமிழில் இதுவரை எடுக்கப்பட்ட எந்தப்படமும் அணுகவே முடியாத வெற்றி. இனி அதை பொன்னியின் செல்வன் 2 கடந்தால்தான் உண்டு.

தமிழில் இதுவரை வெளிவந்தவற்றில் முதல்மூன்று வெற்றிப்படங்கள் (2.0, விக்ரம், பொன்னியின்செல்வன்) இரண்டில் நான் எழுதியிருக்கிறேன்.

இரண்டுபடங்களும் வெளியாகும்போது பதற்றமும் பின் விடுதலையும். ஆனால் அதில் திளைக்கவும் நேரமில்லை. செப்டெம்பர் 18 அன்று என் மணிவிழாக் கொண்டாட்டம் கோவையில். அதன்பின் தத்துவ வகுப்புகள்.

இந்த அக்டோபரில் 2 ஆம் தேதி வீட்டிலிருந்து கிளம்பினேன். எழுத்தறிவித்தல் நிகழ்வுக்குப்பின் சென்னை சென்றேன். அங்கிருந்து ஒன்பதாம் தேதி வீட்டுக்கு வந்தேன். பன்னிரண்டாம் தேதி கிளம்பி பாண்டிச்சேரி. நண்பர் அரிகிருஷ்ணனின் மணிவிழா. அங்கிருந்து ஈரோடு தத்துவ வகுப்பு. அங்கிருந்து சென்னை. சென்னையில் புதிய சினிமாக்கள் கையெழுத்தாயின. அங்கிருந்து கோவை. அங்கே அ.முத்துலிங்கம் நூல்கள் வெளியீட்டு விழா.

நாகர்கோயில் சென்று அங்கிருந்து 28 கிளம்பி சென்னை. சென்னையில் நூல்வெளியீட்டுவிழா.அப்படியே இந்தமாதம் முடிகிறது.

ஆனால் வரும் நவம்பர் இன்னும் நெருக்கடியானது. ஓர் ஐரோப்பியப் பயணம் இருக்கலாம். அதன்பின் நேராக வந்திறங்கிய மறுநாளே மலேசியா. அங்கிருந்து வந்ததுமே டிசம்பரில் சென்னையில் ஓர் இலக்கிய விழா. அடுத்த வாரமே விஷ்ணுபுரம் விருதுவிழா. அதுமுடிந்ததும் 2022 முடிவுறும்.

இதன் நடுவே நான்கு சினிமாக்களுக்கும் எழுதவேண்டும். கதைகள் சில எழுதி வைத்திருக்கிறேன், முடிக்கவேண்டும். நாள்தோறும் இந்த தளம். தமிழ்விக்கி பணிகளை நிறுத்தவேகூடாது.

அதாவது கிட்டத்தட்ட இன்ஸ்பெக்டர் க்ளூஸோ அளவுக்கே பிஸி.

முந்தைய கட்டுரைஇந்து என உணர்தல்
அடுத்த கட்டுரைசந்திப்பின் வழி, கடிதம்