உங்கள் வலைதளத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும் பொழுது “அறிவியக்கம்” என்ற சொல் அடிக்கடி முக்கிய இடங்களில் பேசப்படுகிறது. அதன் பொருள் எனக்கு சரியாக புலப்படவில்லை. நீங்கள் அறிவியக்கம் குறித்து சற்று விரிவாகக் கூற முடியுமா?
நன்றி,
அனீஷ்.
*
அன்புள்ள அனீஷ்
இப்படி ஒரு கேள்வி வருமென நினைத்திருக்கவில்லை, நல்லது.
ஒரு சமூகத்தில் இலக்கியம், தத்துவம், மதக்கொள்கைகள், அறிவியல், நீதி, சமூகவியல் என பல தளங்களில் அறிவார்ந்த ஆய்வுகளும், சிந்தனைகளும் நிகழ்கின்றன. கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை விவாதங்கள் வழியாகவும், நூல்கள் வழியாகவும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்படுகின்றன.
இவ்வாறு அறிவு தொடர்ச்சியாக ஒரு சமூகத்தில் நிகழ்ந்துகொண்டே இருப்பதைத்தான் அறிவியக்கம் என்கிறோம். ஏன் அது இயக்கம் என்றால் அது தொடர்ச்சியாக ஒருவரில் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது. அடுத்தடுத்த தலைமுறைகள் தோறும் பரவுகிறது. சமூகத்தை ஓர் உடல் எனக்கொண்டால் இந்த நுண்ணிய இயக்கத்தை அதன் மூளை எனலாம். நம்முள் மூளை எப்போதுமே சொல்வெளியாக ஓடிக்கொண்டே இருப்பதைப்போல ஒரு சமூகமும் தனக்குள் பேசிக்கொண்டே இருக்கிறது.
நம் மனத்துக்கு அறிந்தும் அறியாததுமான பல அடுக்குகள் இருப்பது போல சமூகத்திற்கும் பல மன அடுக்குகள் உள்ளன. சமூகத்தின் வெளிப்பாடாக நாம் காண்பது அதன் மேல்மனம் அல்லது கான்ஷியஸ். அதற்கு அடியில் சப்கான்ஷியஸ் என்னும் ஆழுள்ளங்கள் உள்ளன. அவை உடனே தெரிவதில்லை. வரலாற்றை திரும்பிப்பார்த்தால் அவை தெரியும்.
இப்போது தமிழ்ச்சூழலில் வெவ்வேறு அறிவுத்தரப்புகள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று விவாதித்துக்கொண்டிருக்கின்றன. அந்த விவாதங்களையே நாம் ஊடகங்களில், சமூக ஊடகங்களில், இலக்கியங்களில் காண்கிறோம். இவை அனைத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அறிவியக்கம் என்கிறோம்.
அறிவியக்கத்தை ஒவ்வொருவரும் உணரமுடியும். ஆனால் தெளிவாக அடையாளம் வகுக்க முடியாது. மிகப்பாமரர்கூட அறிவியக்கத்தின் ஓர் இடத்தில்தான் உள்ளனர். அதை விளிம்பு என்று கொள்ளலாம். அறிவியக்கம் அதன் மையத்தில்தான் தெளிவாகக் காணும்படி உள்ளது. ஏதேனும் ஒருவகையில் கருத்துக்களை உருவாக்குபவர்களே அதன் மையம்.
அறிவியக்கத்தின் நியூக்ளியஸ் எனப்படும் மையத்தில் உள்ளவர்கள் தத்துவஞானிகள், வரலாற்றறிஞர்கள், சிந்தனையாளர்கள். அவர்களே புதியவற்றை கொண்டுவருகிறார்கள். அவற்றின்மேல்தான் மொத்த அறிவியக்கமும் எதிர்வினையாற்றுகிறது. அந்த விவாதம் வழியாகவே சமூகங்கள் சிந்திக்கின்றன. சிந்தனை வழியாகவே அவை முன்னகர்கின்றன.
சிந்தனையாளர்களே நுண்மையத்தில் செயல்படுபவர்கள். அவர்களின் சிந்தனைகள் அரசியல் களத்தில் வேறுசிலரால் கொண்டுவரப்படுகின்றன. அரசியல் களத்தில் அவை உக்கிரமான பிரச்சாரங்கள் வழியாக மக்களிடையே கொண்டுசெல்லப்பட்டு கண்கூடான விசையாக ஆகின்றன.
உதாரணமாக, திராவிட இயக்கக் கருத்தியல் இன்று மிக வலுவானது. அதன் ஆளுமைகளாக ஈ.வெ.ரா , சி.என்.அண்ணாத்துரை, மு.கருணாநிதி ஆகியோர் தெரிகின்றனர். ஆனால் அவர்கள் வெளிப்பாடுகள் மட்டுமே. அவர்களின் சிந்தனைகளை உருவாக்கிய முன்னோடிகள் பலர் உள்ளனர்.
அவர்கள் பல நுண்ணிய தரப்புகளாகச் செயல்பட்டனர். கே.என்.சிவராஜ பிள்ளை, வி.கனகசபைப்பிள்ளை போன்ற தமிழாய்வாளர்கள் தமிழின் தனித்தன்மையை நிறுவியவர்கள். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள் (தமிழிசை இயக்கம்) சி.வை.தாமோதரம் பிள்ளை, (தமிழ் பதிப்பியக்கம்) மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர், இலக்குவனார் (தனித்தமிழ் இயக்கம்) போன்றவை திராவிட இயக்கத்தின் மூலவடிவங்கள். ஞானியார் சுவாமிகள் போன்றவர்கள் அதன் ஆன்மிக முன்னோடிகள்.
எழுத்தாளர்களும் கலைஞர்களும் அந்த நியூக்ளியஸில் செயல்படுபவர்கள். ஆனால் நேரடியாக அல்ல. அவர்கள் சமூகத்தின் ஆழுள்ளத்தை அறிபவர்கள், ஆழுள்ளத்தை கட்டமைப்பவர்கள், அவர்கள் வழியாகவே அந்த ஆழுள்ளம் வெளியாகிறது. அவர்களின் பணி மேலும் நுண்மையத்தில் நிகழ்கிறது. உடனடியாக வெளியே தெரியவதில்லை.
தமிழ்ச்சமூகத்தில் புதுமைப்பித்தனின் செல்வாக்கை நேரடியாகக் காணமுடியாது. புதுமைப்பித்தனை இலக்கிய ஆர்வலர்களே வாசித்திருப்பார்கள். ஆனால் அவர்களே இதழாளர்களாகவும் பேச்சாளர்களாகவும் ஆகிறார்கள். அவர்களின் சிந்தனைகள் வழியாக புதுமைப்பித்தன் சாமானியர்களையும் பாதிக்கிறார்.
உலகம் முழுக்க இப்படி நுண்மையத்தில் இருந்து மையத்திற்கும் அங்கிருந்து விளிம்புநோக்கியும் சிந்தனை பரவுகிறது. இந்த அறிவுச்செயல்பாடையே அறிவியக்கம் என்கிறோம். இதில்தான் நீங்களும் இப்போது இருக்கிறீர்கள். எங்கே எந்நிலையில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். எங்கே செயல்படவேண்டும் என்பது உங்கள் தெரிவு
ஜெ
ஜெயமோகன் நூல்கள்
வாசிப்பின் வழிகள் வாங்க
வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க
வணிக இலக்கியம் வாங்க
இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க
இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க