அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கோவையில் நடந்த மணி விழாவில் தங்களை சந்தித்து ஆசி பெற்றது ஒரு பெரும் பேறு. நான் தொடர்ந்து நம் தளத்தில் வெளியாகும் தமிழ் விக்கி பதிவுகளை படித்து வருகிறேன் சமீபத்தில் வெளியான அரையர் சேவை பதிவையும் படித்தேன்.
அதில் இப்படி ஒரு வரி வருகிறது “பெருமாளின் உத்தரவைப் பெறும் சடங்கு அருளப்பாடு அனப்படும். அரையர் “ஆயிந்தேன், ஆயிந்தேன்” எனக் கூறியபடி”.
நான் சில முறை அரையர் சேவையை நேரில் பார்த்துள்ளேன். சென்ற வருடம் முத்துக்குறி வைபவத்தை நேரில் கண்டு அனுபவித்தேன். “நாயந்தே அல்லது நாயிந்தே என்றுதான் தொடங்குகிறார்கள். அப்படி என்றால் “நான் இதோ” என்ற பொருளில். நான் ஒரு வைணவ ஆச்சாரியாரிடமும் உறுதி செய்து கொண்டேன். நாயந்தே அல்லது நாயிந்தே என்பதே சரியானது என்று அவரும் கூறினார்.
நீங்களும் இதை வைணவ பண்டிதர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு
ஆயிந்தேன், ஆயிந்தேன் என்பதை “நாயந்தே நாயந்தே” என்று திருத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் வாசகன்,
கோகுலரமணன்
பெங்களூர்.
அன்புள்ள கோகுலரமணன்
தகவலுக்கு நன்றி.
விசாரித்தபோது ஆயிந்தே அல்லது ஆயந்தே என்பது மராட்டிய சொல் என்றும், அதுவே நாயக்கர் காலம் முதல் புழக்கத்திலுள்ளது என்றும் சொன்னார்கள்.
ஆகவே நீங்கள் குறிப்பிட்டதை அடைப்புக்குள் அளித்துள்ளோம்.
ஜெ