அன்புள்ள ஜெயமோகன்
அறுவது அகவை வாழ்த்துக்கள்
பொன்னியின் செல்வன் திரைப்படமும் சிறப்பாக வந்துள்ளது. கல்கியின் கதைக்கு இவ்வளவு நெருக்கமாக திரைப்படம் இருப்பது என்னளவில் ஒரு அசாத்திய நிகழ்வு. உங்களுக்கும் இயக்குனருக்கும் பாராட்டுகள்.
இரண்டு நாட்கள் முன் திருவானைக்கா ஆலயம் சென்ற போது இந்த சிற்பத்தை பார்த்தேன். முழுதும் பெண் உருவம் ஆனால் கட்டை மீசை, குறவன் போன்ற முகம். அர்த்தநாரியும் இல்லை. இணையத்தில் ஒருவர் இது பெண்கள் ஆண் வேடம் பூண்டு நடிக்கும் நாடகக்காட்சி என்று ஐயப்படுகிறார். மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. உங்களிடம் சரியான விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை. நேரம் இருக்கும் போது பாருங்கள்.
நன்றி
அன்புடன்
ரமேஷ்
*
அன்புள்ள ரமேஷ்,
கோயில்களிலுள்ள நுண்சிற்பங்களை அவை அமைந்துள்ள இடத்தைக்கொண்டுதான் புரிந்துகொள்ள முடியும். இந்தச் சிலை அமைந்துள்ள விதத்தை பார்த்தால் தூணின் மறுபக்கத்திலுள்ள ஏதோ சிலையின் பரிவாரம் என தோன்றுகிறது. பரிவார தேவதைகளாக விதவிதமான தெய்வங்கள் அமைவதுண்டு. அரசியர் அரசர்களுக்கு பலவகை மனிதர்கள் பரிவாரங்களாக ஆவதுண்டு.
இந்தச் சிலை ஒரு ஆணிலி (eunuch) ஆக இருக்கலாம். அவர்களை அரசியருக்கான காவலர்களாக அனுப்பும் வழக்கம் இருந்தது. அந்த அரசவழக்கத்தை தெய்வங்களுக்கும் கற்பனைசெய்து ஒரு தேவவடிவை உருவாக்கியிருக்கவும் வாய்ப்புண்டு.
இந்த உருவம் கத்தியும், கொம்பும் வைத்துள்ளது. பாதுகாவல், வரவறிவிப்பு ஆகியவற்றைச் செய்பவர் என நினைக்கிறேன்
ஜெ