எழுத்தாளர்கள் இலக்கியத்திற்கு வெளியே பேசலாமா?

அன்புள்ள ஜெ,

ஒரு விவாதத்தில் நண்பன் ஒருவன் சொன்னான். ‘ஓர் எஞ்சீனியர் சட்டம் பற்றி கருத்துச் சொல்வதுபோலத்தான் எழுத்தாளன் இலக்கியம் அல்லாத துறைகள் பற்றி கருத்துச் சொல்வது என்பது’. எழுத்தாளர்கள் பிற துறைகள் பற்ற்ச் சொல்லும் கருத்தை புறக்கணிக்கவேண்டும் என்றான். கூட இருந்தவர்கள் அது சரி என நினைத்தனர். எனக்கு அது சரி என தோன்றவில்லை. ஆனால் பதிலும் தெரியவில்லை. ஆகவே உங்களுக்கு எழுதுகிறேன்.

சங்கர் கிருஷ்ணன்

*

அன்புள்ள சங்கர்,

இதேபோன்ற ‘அதிபுத்திசாலித்தனமான’ கருத்துக்களால் ஆனது இணையவெளி. உங்கள் நண்பர் அங்கே பொறுக்கியிருக்கலாம்.

ஒரு விவாதத்திற்காக அவரிடம் கேளுங்கள். அவர் செய்வதற்கு என்ன பொருள் என்று. இலக்கியம் என்பது அவருக்குக் கொஞ்சம்கூட தெரியாத துறை. அது என்ன பேசுகிறது, எப்படிப் பேசுகிறது என்றுகூட தெரியாமல் அதைப்பற்றி ஒரு அறுதிக்கருத்தைச் சொல்ல அவருக்கு என்ன உரிமை என்று கேட்டுப்பாருங்கள். யார் என்ன சொல்லலாம் என்று சொல்ல முனைபவர்கள் அவர்கள் என்ன சொல்ல தகுதியுடையவர்கள் என்று பார்க்கவேண்டும் அல்லவா?

இலக்கியம் பற்றி கொஞ்சமேனும் அறிந்தவர்கள் அவர் சொல்வதுபோலச் சொல்ல மாட்டார்கள். இலக்கியமே அறியாத பாமரர்களின் பேச்சு அது.

ஒரு துறையின் எல்லை என்பது அதன் பேசுபொருள் சார்ந்தது. பொறியியலின் எல்லை அது பேசும் பொறியியல். அதற்குள் வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. கணிப்பொறி பொறியியலாளர் கட்டிடப் பொறியியல் பறி பேச முடியாது

சரி, இலக்கியத்தின் பேசுபொருள் என்ன? இலக்கியமா? இலக்கியம் இலக்கியத்தைப் பற்றியா பேசிக்கொண்டிருக்கிறது?

இலக்கியம் வாழ்க்கையைப் பேசுகிறது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களும் அதன் பேசுபொருள்தான். ஆகவே அது சமகால நிகழ்வுகள் முதல் வரலாறு வரை எல்லாவற்றையும் கருவாக்கிக் கொள்கிறது. அறிவியல், தொழில்நுட்பம் எதுவும் அதன் எல்லைக்கு வெளியே இல்லை. அரசியல், தத்துவம், சமயம் எல்லாமே அதன் கருப்பொருட்களே. இதை ஒரு நாலைந்து இலக்கியநூல்களை புரட்டி அட்டைக்குறிப்புகளைப் பார்ப்பவர்களேகூட புரிந்துகொள்ள முடியும். அரட்டைக்கு வரும் நம்மவர்கள் பலர் அதைக்கூடச் செய்திருப்பதில்லை.

அந்தந்த துறைசார் நிபுணர்கள் அவற்றைப் பற்றிப் பேசுவது ஒரு வகை அணுகுமுறை. அதுவே மையமானது. அவர்களுக்கு மூன்று தகுதிகள் இருக்கவேண்டும்

அ. அவர்கள் அந்தந்த துறைகளில் அடிப்படையான கல்வியை அடைந்திருக்கவேண்டும். பல தருணங்களில் இங்கே அறிவியல் சார்ந்த துறைகள் பற்றிப் பேசுபவர்கள் அந்த துறை பற்றி எக்கல்வியும் இல்லாதவர்கள். தமிழ் ஹிந்து நாளிதழில் என் பழைய நண்பர் ஒருவர் மருத்துவம் பற்றி தொடர் எழுதினார். அவருக்கு மருத்துவம் பற்றிய எந்த கல்வியும் இல்லை. அவர் ஓர் உணவகம் நடத்தி அதை மூடியவர். இதழாளர் சிலருடன் அவருக்கு அறிமுகம் உண்டு, ஆகவே அவர் மருத்துவத் தொடர் எழுதினார். இங்கே உளவியலில் பட்டப்படிப்பு படித்தவர்கள் உளமருத்துவ மருந்துகளை பரிந்துரை செய்கிறார்கள். உணவு பற்றி ஒரு பட்டயப்படிப்பு படித்தவர்கள் எடைக்குறைப்பு முதல் வயிற்றுநோய்கள் எல்லாவற்றுக்கும் மருந்து அளிக்கிறார்கள். அங்கெல்லாம் இந்த தகுதிகோரும் குரல் எழுவதே இல்லை. ஆனால் இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாதபோதும் நூறுபேர் எழுத்தாளன் என்ன செய்யவேண்டும் என ஆலோசனை சொல்வார்கள்.

ஆ. அவர்கள் அந்தத் துறைக்கே உரிய ஆய்வுமுறைமையை முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும். இங்கே பல மருத்துவர்கள் எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்வார்கள். எந்த ஆய்வுப்பின்புலமும், முறைமையும் இருக்காது. மைதா சாப்பிடக்கூடாது, வாழையிலிலையில் சாப்பிடுவது நல்லது , தோசை கெடுதல், கம்பங்கூழ் நல்லது  என்றெல்லாம் டாக்டர்கள் பேசுகிறார்கள். எதற்காவது மருத்துவ முறைமைப்படி நிரூபணம் உள்ளதா என எவரும் கேட்பதில்லை.

இ. அந்தத் துறையின் ஒட்டுமொத்தம் சார்ந்த பார்வை அவர்களுக்கு இருக்கவேண்டும். இங்கே தங்கள் துறை பற்றிய முழுமையான அறிவு, அதன் புதிய வளர்ச்சிகள் பற்றிய பார்வை எத்தனைபேருக்கு உள்ளது?

ஈ. அந்த துறையின் ஆய்வெல்லைக்கு வெளியே அவர்கள் செல்லக்கூடாது. இங்கே ஓர் உளவியல் மருத்துவர் அரசியல் நிபுணராக கருத்துக்கள் சொல்கிறார். தொலைக்காட்சி நெறியாளர் பொருளியல் கருத்துக்களை சொல்கிறார். அத்தனைபேரும் சினிமா எப்படி எடுக்கவேண்டும் என மணி ரத்னத்துக்கு பாடம் நடத்துகிறார்கள்.  நமக்கு அவர்கள்மேல் விமர்சனமே இல்லை.

இலக்கியவாதி அவனுடைய பேசுபொருளாக வெவ்வேறு துறைகளைக் கொண்டிருந்தாலும், அவனுடையது துறைசார் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் அணுகுமுறை அல்ல. அவனுடையது ஆய்வு சார்ந்த கண்ணோட்டம் அல்ல. அப்படி அவன் பேசக்கூடாது. இதை பலமுறை முன்னரும் சொல்லியிருக்கிறேன்.

ஆய்வாளர் மற்றும் அறிஞர்களுடையது தர்க்கம் சார்ந்த அணுகுமுறை.தர்க்கம் சார்ந்த அணுகுமுறையானது கீழ்க்கண்ட படிநிலைகள் கொண்டது

அ. முன்முடிவுகள் இல்லாமல் இருத்தல். சாதி, மதம், இனம், மொழி என எல்லா பற்றுகளுக்கும் அப்பால் புறவயமான உண்மைமேல் நம்பிக்கை கொண்டிருத்தல். 

ஆ.நம்பகமான தரவுகளைச் சேர்த்தல். தரவுகளில் சமரசம் இல்லாமல் இருத்தல். எல்லா தரவுகளையும் கருத்தில் கொள்ளுதல்

ஆ. அவற்றை முறைமைப்படி ஒழுங்குபடுத்தி முடிவுகளுக்குச் செல்லுதல். 

இ. அம்முடிவுகளை மேலும் தர்க்கத்துடன் நிறுவுதல், அவற்றை முறைப்படி மறுக்க இடமளித்தல். 

ஈ. அம்முடிவுகளில் தனிப்பட்ட பற்று ஏதும் இல்லாமலிருத்தல். உணர்ச்சிகரமான ஈடுபாடு இல்லாமலிருத்தல். அது மறுக்கப்படுமெனில் ஏற்றல்.

மறுபடியும் கவனியுங்கள், இங்கே இந்த படிநிலைகளின்படி ஆய்வுகளைச் செய்து முடிவுகளை முன்வைக்கும் எத்தனைபேரை காண்கிறீர்கள்? இங்கே பெரும்பாலான ஆய்வாளர்கள் அரசியல்கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் போல கண்மூடித்தனமான வெறியுடன் பேசுபவர்கள். தங்கள் அறிவுத்துறையின் எல்லைகளுக்கு அப்பால் சென்று பேசுபவர்கள். எந்த முறைமையையும் கடைப்பிடிக்காதவர்கள். எந்த மறுப்பையும் செவிகொள்ளாதவர்கள்.

இந்த தரத்திலிருக்கும் ஆய்வாளர்கள் அல்லது அறிஞர்கள் பற்றி இங்கே ஒருவகையான விமர்சனமும் இல்லை. இங்கே அப்பட்டமாக தரவுகளை திருடி, கட்டுரைகளையேகூட அப்படியே திருடி எழுதும் ஆய்வாளர்கள் நாணமில்லாது பொதுவெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆய்வுநிறுவனத்தின் கோரிக்கைக்கு ஏற்ப களநிலவரத்தையே மாற்றுபவர்கள், சாதிய உள்நோக்குடன் சமூகவியல் சித்திரங்களையே திரிப்பவர்கள் எழுதித்தள்ளுகிறார்கள். எவருக்கும் விமர்சனம் இல்லை.

ஆனால் எழுத்தாளர்கள் பேசக்கூடாது என பதறுகிறார்கள். பேசினால் வசைகளும் அவதூறுகளுமாக கொந்தளிக்கிறார்கள். ஏன்?

ஏனென்றால் எழுத்தாளனின் அணுகுமுறை முற்றிலும் வேறான ஒன்று. அவனுடையது தர்க்கபூர்வ அணுகுமுறை அல்ல. அவன் வெளிப்படுத்துவதும் தர்க்கபூர்வமாக அல்ல. அவனுடைய வாசகர்கள் அவனை உணர்வதும் தர்க்கபூர்வமாக அல்ல.

எழுத்தாளன் ஓர் உண்மையை அடைவதும் வெளிப்படுத்துவதும் இரண்டு அடிப்படைகளில். ஒன்று, அனுபவம். இன்னொன்று நுண்ணுணர்வு.

இவ்விரண்டும் அறிவுத்துறைகளின் புரிதலுக்குள் சிக்காதவை. அவர்களால் விளங்கிக்கொள்ளவும் இயலாதவை. ஆகவே அவர்கள் அப்படி ஏதும் இல்லை என்றும், தர்க்கபூர்வ அறிதலும் வெளிப்படுத்தலும் மட்டுமே உள்ளது என்றும் கூச்சலிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இலக்கியம் அதன் வழியில் செயல்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

இலக்கியவாதி தன் தனியனுபவத்தைச் சார்ந்தே சமூகம் அரசியல் உட்பட எதையும் பேசுகிறான். வரலாறும் தத்துவமும்கூட அவனிடம் அவனுடைய தனியனுபவமாகவே சென்றடைகின்றன. அதில் இருந்து அவன் தன் படைப்புள்ளம் சார்ந்த நுண்ணனுபவத்தால் தனக்கான சில கண்டடைதல்களை அடைகிறான். அவற்றை அவன் முன்வைக்கிறான்.

இலக்கியவாதி ‘ஆய்வுமுறைமை’ எதையும் கடைப்பிடிப்பதில்லை.ஆகவே அவன் ‘தரவுகளை’ கருத்தில் கொள்வதில்லை. தரவுகள் சேகரிப்பது இலக்கியவாதியின் பணி அல்ல. அவ்வாறு அவன் சேகரிக்கும் புறவயத் தரவுகளால் அவனுக்கு எப்பயனும் இல்லை. தரவுகளை முழுமையாகச்  சேகரிக்கும் பணியில் ஓர் எழுத்தாளன் ஈடுபட்டான் என்றால் காலப்போக்கில் அவனுடைய படைப்புமனநிலையை இழப்பான்.

எழுத்தாளனுடைய கருத்துக்களுக்கு ஆதாரம் என்பது அவனே சொந்த அனுபவமாக அறிபவை மட்டுமே. புறவயமான ’தர்க்க முறைமை’ எதையும் தன் கருத்துக்களை நிறுவ பயன்படுத்துவதுமில்லை அவன் பெரும்பாலும் அவதானிப்புகளையே சொல்கிறான். அந்த அவதானிப்புகள் வழியாகச் சென்றடையும் மையத்தை, தரிசனத்தை முன்வைக்கிறான்.

இலக்கியவாதியின் கருவிகள் அவனுடைய நுண்ணுணர்வும், அந்நுண்ணுணர்வின் புறவடிவமான மொழியும்தான். ஆகவே மொழிவெளிப்பாடாகவே அவனுடைய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. தர்க்க வெளிப்பாடுகளாக அல்ல.

வாசகன் அவற்றை எப்படி எதிர்கொள்கிறான்? இலக்கியத்தை வாசிப்பதுபோல மொழிவடிவமாகவே அவன் அவற்றை அணுகுகிறான். இலக்கியத்தை அடைவதுபோலவே அடைகிறான்.

இலக்கியம் அளிப்பது அறிவித்தல் (Information) அல்லது கற்பித்தலை (Education) அல்ல. அகத்தூண்டலையே. (Evocation) இலக்கியவெளிப்பாட்டை வாசிக்கும் வாசகன் ஒரு கருத்தை  ‘தெரிந்து’கொள்வதில்லை.ஒரு கொள்கையை ‘புரிந்து’கொள்வதும் இல்லை.

எனில் என்ன நடக்கிறது? வாசகன் எழுத்தாளனின் எழுத்துக்கள் வழியாக தன்னுடைய சொந்த அனுபவப்புலம் தூண்டப்படுகிறான். இலக்கியம் அவனுக்கு புதியதாக எதையும் சொல்வதில்லை. அவன் ஏற்கனவே அறிந்ததையே அது நினைவில் தூண்டிவிடுகிறது. புதியவகையில் அவற்றைப் பார்க்கச் செய்கிறது.

ஆகவேதான் இலக்கியம் எந்த ஆதாரத்தையும் தன் கூற்றுக்கு அளிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட வகையில் மொழியில் தன் அவதானிப்பைச் சொல்லி நிற்கிறது. படிமங்கள், உணர்ச்சிகள், சொல்லடுக்குகள் போன்ற இலக்கிய உத்திகளையே அது கையாள்கிறது.

‘மகிழ்ச்சியான குடும்பங்களெல்லாம் ஒன்றுபோலுள்ளன, மகிழ்ச்சியற்ற குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மகிழ்ச்சியற்ற்றவை’ என்று டால்ஸ்டாய் சொல்லும்போது அதற்கு இலக்கியவாசகன் ஆதாரம் கேட்பதில்லை. அவன் தன் சொந்த அறிதல் தீண்டி எழுப்பப்படுகிறான். தன் நுண்ணுணர்வைக்கொண்டு அதை ஏற்கவோ மறுக்கவோ செய்கிறான்.

மாறாக, டால்ஸ்டாய் எத்தனை குடும்பங்களின் தரவுகளை எடுத்தார், எந்தவகையான முறைமையை அதற்கு கையாண்டார், அந்த முடிவுக்கு வந்த தர்க்கமுறை என்ன என்றெல்லாம் எவரும் கேட்பதில்லை – தமிழகத்தில் சிலர் தவிர.

இலக்கியவாதி முன்வைக்கும் ஒரு வாழ்க்கைப் புரிதலை, ஒரு கருத்தை வாசகன் எப்படி மறுக்கலாம்? அவன் வாதிடவே வேண்டியதில்லை. ‘இல்லை, இது என் அனுபவத்திற்கு உண்மை என தோன்றவில்லை’ என்று சொல்லிவிட்டாலே போதும். எப்படி ஏற்கிறானோ அப்படியே மறுக்கலாம். ஏற்பதற்கு அவன் தன் சொந்த அனுபவத்தையே நம்பியிருக்கிறான். மறுப்பதற்கும் அதுவே போதும்.

எண்ணிப்பாருங்கள், இலக்கியம் என ஒவ்வொரு நாளும் பல ஆயிரம்  எழுதப்படுகின்றன. அவற்றில் சில நூறு பக்கங்களே உண்மையில் வாசக ஏற்பை பெறுகின்றன. எஞ்சியவை எவராலும் பொருட்படுத்தப்படுவதில்லை. ஓர் எளிய செய்தியின் மதிப்பு கூட அவற்றுக்கு இல்லை. ஏன்? ஏனென்றால் அவை வாசகனின் அனுபவத்தை தூண்டவில்லை. வாசகன் தன் அனுபவத்தினூடாக ஆசிரியன் சொல்வதை வந்தடையும்படிச் செய்வதில்லை. அவ்வாறு செய்யாவிட்டால் அவை இலக்கியம் அல்ல. அவற்றுக்கு மதிப்பில்லை. அவ்வளவுதான்.

மாறாக, ஓர் எழுத்தாளன் எழுதும் ஓர் வாழ்க்கைச் சித்திரம் அல்லது வாழ்க்கை உண்மை வாசகனின் அனுபவத்துக்கு உண்மை என்று தோன்றினால் அவன் ஏற்கிறான். அது நிலைகொள்கிறது. அது சூழலில் உள்ள அனைவரும் சொல்லும் ஒட்டுமொத்தமான தரப்புக்கு நேர் எதிரானதாகக் கூட இருக்கலாம். புறவயமாக நிரூபிக்கப்பட்ட விஷயங்களுக்கு மாறானதாகக் கூட இருக்கலாம். ஆனால் வாசகன் ஏற்றுக்கொண்டால் அது இலக்கிய உண்மைதான். அவ்வண்ணம் வரலாறு முழுக்க எவ்வளவோ கொள்கைகளை, கருத்துக்களை இலக்கியம் நிலைநாட்டியிருக்கிறது.

இலக்கியம் அளிப்பது ஆய்வுண்மை அல்ல, அனுபவ உண்மை. வாசகனும் எழுத்தாளனும் சந்திக்கும் ஓர் பொது அனுபவப்புள்ளியில் அந்த உண்மை நிகழ்கிறது. ஆகவேதான் இதையும் சொல்லவேண்டியுள்ளது. இலக்கியம் எந்த அறிவுத்துறையிலும் முதன்மையறிதலை அளிக்கமுடியாது, கூடாது.

இலக்கியம் அளிப்பது ஒரு சார்புண்மையைத்தான். இலக்கியவாதி அனுபவ நுண்ணுணர்வுவழியாக வாழ்க்கையை அறிபவன், மொழியினூடாக வெளிப்படுத்துபவன் என ஓர் உண்மையான துறைசார் அறிஞன் அறிந்திருப்பான். இலக்கியவாதி சொல்வது ஆய்வறிதல் என்னும்  அறிதல்முறைக்கு வெளியே உள்ள ஓர் அரிதான அறிதல்முறை என்பதனால் ஆய்வாளன் அதில் கவனம் செலுத்துவான். அவ்வறிதல்களை கருத்தில்கொள்வான். சிக்மண்ட் ஃப்ராய்ட் ஆனாலும் சரி ,கார்ல் மார்க்ஸ் ஆனாலும் சரி, சி.ஜி.யுங் ஆனாலும் சரி.

உலக வரலாற்றில் ஆய்வறிஞர்களுக்கு நிகராக, அரசியல் மற்றும் சமூகவியல் உண்மைகளை முன்வைத்தவர்கள் இலக்கியவாதிகளே. டால்ஸ்டாய், எமிலி ஜோலா, ரோமெய்ன் ரோலந்த் என பலநூறு எழுத்தாளர்களை உலகசிந்தனையை உருவாக்கியவர்கள் என்று சுட்டிக்காட்டமுடியும். சிவராம காரந்த், தாகூர் என இந்திய சிந்தனையை வடிவமத்தவர்களின் பட்டியலைப் போடமுடியும். அவர்களின் குரல் என்றுமிருக்கும்.

இங்கே எழுத்தாளர்கள்மேல் ஏன் இந்த பதற்றம் இருக்கிறது? காரணம் ஒன்றே, அவர்கள் உண்மையைச் சொல்கிறார்கள். அறிஞர்களும் ஆய்வாளர்களும் தேவைக்கேற்ப நெளிந்துகுழையும் இடங்களில் உறுதியுடன் இருக்கிறார்கள்.

ஜெ

 

ஜெயமோகன் நூல்கள்

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

 

முந்தைய கட்டுரைஅரங்க. சீனிவாசனின் காந்தி காதை
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர், கடிதம்