ஒழிமுறி, கடிதம்

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். சமீபத்தில் உங்கள் பதிவில் ஒழிமுறி படம் பற்றி, அதில் நடித்த லால் அவர்கள் உங்கள் தந்தையின் கதாபாத்திரத்தில் நடித்த போது இரண்டு நாட்களில் உங்கள் தந்தையின் உடல்மொழியினை நடிப்பில் கொண்டுவந்ததாக குறிப்பிட்டு இருந்தீர்கள். நான் ஏற்கனவே உங்கள் சிறுகதைகளைப் படித்துள்ளேன் எனவே எனக்கு மலையாளம் தெரியாது எனினும் நேற்று படம் பார்தேன்.

படம் பார்த்து முடித்த பின், இந்தப்படம் உங்கள் வாழ்க்கையின் ஒரு புனைவாக எனக்கு தோன்றியது. அன்பின் பிறிதோர் வடிவமே குரூரம் சில சமயங்களில் அன்பே சில கடுமையான செயல்களை செய்ய வைக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்த, பாதித்த காட்சிகள்,

அனைவரும் மீண்டும் மீண்டும் ஏன் முதல் முறை விவாகரத்து விண்ணப்பித்தும் உங்கள் கணவனை பிரியவில்லை என்று மீனாட்சி அம்மாவிடம் கேட்கும் பொது, ஒரு கணவனாக கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒரு தந்தையாக அவரின் அன்பை புரிந்து கொண்டதால், தன் மகனிற்கு தந்தையின் அன்பு தேவை என்று உணர்ந்ததால் என்று சொல்லும் காட்சி.

அப்பாவை பற்றி மகன் கசப்புடன் நினைவு கூறும் பொது, மீனாட்சி அம்மா குரூரம் என்பது பகையினால் மட்டும் அல்ல அன்பினாலும் தோன்றும் என்று சொன்னவுடன் மகன் தந்தையை புரிந்து கொள்ளும் காட்சி. குறிப்பாக மகன் தூங்கியவுடன் தந்தை வந்து அனைத்து அவயங்களையும் தொட்டு இறுதியில் கையினை தடவிக்கொடுக்கும் காட்சி (வெண்முரசில் பீமனின் மகன் சுதஸோமன் மற்றும் சார்வாகன் பீமனைப்பற்றி இவ்வாறு நினைவு கூறுவார்கள்). எனக்கு நினைவில் வந்தது உங்கள் ஒரு கதையில் நீங்கள் குறிப்பிட்டது போல் வாழ்க்கை என்பது அப்பாவிடம் இருந்து முடிந்த வரை ஓடி இறுதியில் தந்தையாக மாறுவதே.

தாணுப்பிள்ளை தன் மனைவியை அடிமை போல நடத்தியதிற்கு பயம் தான் காரணம் எனக் கூறும் காட்சி. பயம் அன்பினையும் குரூரமாக ஆக்கும்.

மீனாட்சி அம்மா தன் விவகாரத்திற்கு காரணம் தன் அன்பு அடிமைத்தனமாக கணவனால் புரிந்து கொள்ளப்பட்டதே தவிர வெறுப்பு அல்ல, ஆகவே தன் கணவனை எந்த வெறுப்பும் இன்றி விவகாரத்திற்கு பிறகும் தேவையான போது பார்த்துக்கொள்வேன் என்று கூறும் காட்சி.

தாணுப்பிள்ளை தன் தாயின் மரணத்தின் பின் பிண்டம் கொடுக்கும் போது, அழும் காட்சி.

அக்கால வழக்கத்தின் படி, காளிப்பிள்ளை தன் கணவன் சிவன் பிள்ளையை விலக்கும் போது, சிவன் பிள்ளை படும் துயரம்.

ஒரு வலுவான ஆளுமை கொண்ட வாழ்க்கைத் துணை அமையும் வெவ்வேறு தலைமுறை ஆண்களின் வாழ்க்கையை இப்படத்தில் காண்கிறேன். சிவன் பிள்ளை காளிப்பிள்ளையை மணந்து, அவர் பிரிவின் போது அக்கால வழக்கத்தின் படி தன் மகனை பிரிகிறார். (தந்தைக்கு மகன் அவரின் நீட்சி ஆகவே ஆணின் முதன்மையான துயரம் மகனின் மரணமே), சொத்தும் இல்லை. அதுவே இறுதியில் அவர் மரணத்திற்கு காரணமாகி அவர் இறக்கிறார்.

தந்தையின் மரணத்தால் தாயின் மேல் கசப்பு கொண்ட தாணுப்பிள்ளை மீனாட்சி அம்மாவை மணந்த பின், மனைவியின் ஆளுமையை உணர்ந்து அதனால் ஏற்படும் பயத்தால் அவர் மனைவியை அடிமையாக நடத்துகிறார். இக்காரணத்தால் இறுதியில் அவர் மனைவியை பிரிகிறார்.

சரத் சந்திரன், தன் தந்தை மற்றும் தாய் உறவின் கசப்பை உணர்ந்து தன் மனைவியிடம் சமமாக நடந்து கொள்ளும் முடிவிற்கு செல்கிறான்.

மேலும் மூன்று தலைமுறை பெண்களின் வாழ்வியலயும் இப்படத்தில் காண்கிறேன்.

காளிப்பிள்ளையின் நிமிர்வு ஒரு வகை. இறுதி வரை ராணியைப்போல் (பெண் யானையைப் போல்) வாழ்ந்த அவர் வாழ்வு அவருடையது. மீனாட்சி அம்மாவின் பொறுமையும், தெளிவும் அதனால் அவரில் ஏற்படும் நிமிர்வும் ஒரு வகை. மகனிடம் அப்பாவை பற்றி சரியாக விளக்கும் போதும், இறுதி வரை விவகாரத்தில் உறுதியாக இருப்பதும் அவரின் நிமிர்வை உணர்த்துபவை.

வாழ்விற்கும் மறக்கவியலாத படத்தை பார்த்துள்ளேன்.

அன்புடன்
அருண்

*

முந்தைய கட்டுரைவெண்முரசு வாசிப்பு-கடிதங்கள்
அடுத்த கட்டுரைபோகனின் செல்வன்