குள்ளச்சித்தனின் மறைஞானம்

யுவன் சந்திரசேகர் விக்கி

குள்ளச்சித்தன் சரித்திரம் விக்கி

அன்புள்ள ஜெ,

நான் பணியிலிருக்கும் நிறுவனத்திலும், பொது வெளியிலும் இந்தியர்கள் பெரும்பாலும் மதரீதியாக தங்களை எவ்வகையிலும் வெளிப்படுத்திக் கொள்வது கிடையாது. ஊரிலிருந்து கொண்டு வரும் இந்துக் கடவுள் படங்களை சில வருடங்களுக்கு முன்பு வரை பொருட்களுக்குள் மறைத்து வைத்து விமான நிலையத்தை கடந்து வர வேண்டி இருந்தது (தற்போது அப்படி இல்லை). “தன் மதம்” சார்ந்த நம்பிக்கையான நண்பர் என்ற புரிதலுக்கு பிறகே ஒருவர் அவரவர் மதம் சார்ந்து ஏதேனும் பேசிக்கொள்கிறார்கள்.

எனக்கு மதம் கடந்து, மதம் பற்றி பேசிக்கொள்ள சில நம்பிக்கையான உள்ளூர் அரபி நண்பர்கள் (மட்டும்) இருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் பற்றி ஆச்சரியமாக கேட்பது “தொழுவதற்கென்று ஒரு இடத்திற்கு செல்லாமல், நாளின் குறிப்பிட்ட நேரத்தில் கடவுளை வணங்காமல் உங்களால் எப்படி இருக்க முடிகிறது” என்பது. அவர்கள் தங்கள் ஐந்து வேளை தொழுகையில் ஒன்றை ஏதாவது காரணத்தால் தவறவிட நேர்ந்தால் அந்த நேரம் கடவுளிடமிருந்து விலகி விட்டதாக உணர்கிறார்கள். அடுத்த வேளை கூடுதலான நேரம் தொழுது விட்டு வருவார்கள். நான் என் பணிச்சூழலின் கடினமான தருணங்களை கடந்துவந்த சமயங்களில் நேரடியாகவே “நீ எங்கு, எவ்வாறு, உன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தாய்” என்று கேட்டிருக்கிறார்கள்.

தொழுகை என்பது தவிர்க்க இயலாத நிகழ்வு. செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே விட்டுவிட்டு தொழுகைக்குச் சென்று விடுவதை ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். தயக்கமே இல்லாமல் பாங்கு ஒலித்ததும் அருகில் இருப்பவர்களை சேர்த்துக் கொண்டு தொழுகைக்கு செல்வார்கள். மிக உக்கிரமாக எதிர்நிலையில் பணி சார்ந்து தர்க்கம் செய்து கொண்டிருக்கும் இரண்டு உள்ளூர் நண்பர்கள் தொழுகை நேரத்தில் இயல்பாக ஒருவரை ஒருவர் அழைத்து, கூட்டுத் தொழுகைக்கு செல்வதை சாதாரணமாக காணலாம். மேற்கல்வியை லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பயின்று மேல் பதவிகளில் இருப்பவர்களும் இதில் விதிவிலக்கு கிடையாது.

அதுபோலவே கல்வி வேறு, மதம் வேறு என்று கல்விக்கும், மதத்துக்கும் இடையில் ஒரு தெளிவான பகுப்பை கொண்டிருக்கிறார்கள். கடவுள் மனிதனைப் படைத்தான் என்று நம்பி தொழுதுவிட்டு, டார்வினின் தியரியை படிப்பதில், நம்புவதில் என்ன குழப்பம் என்று கேட்கிறார்கள். இதை அவர்களின் அரபி பண்பாட்டின் பெருமிதத்திலிருந்து பெற்றுக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

மாறாக இந்தியாவில் நவீன கல்வி பயின்ற ஒருவர் மிக இயல்பாக தன்னுடைய மதத்திலிருந்தும், பண்பாட்டிலிருந்தும் விலகிச் செல்வதை கண்கூடாகக் காணலாம். நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் கல்லூரி வரை படித்த இளைஞனிடம் மதம் பற்றி ஏதேனும் பேசிவிட முடியாது.

நவீன கல்வி புறவயமான தர்க்கத்தின் அடிப்படையில் சிந்திக்கும் பயிற்சியை அளிக்கிறது. அதன் அமைப்பின் படி கல்வியறிவு பெற்றவர்கள் என்று நினைத்துக் கொள்பவர்கள் குறிப்பாக இளைஞர்கள், மத விழுமியங்களுக்கு வெளியே இருக்க வேண்டும் என்ற கண்ணுக்கு தெரியாத மேலாடையை அணிந்து கொள்கிறார்கள். அதை அவர்களின் அறிவின் அடையாளமாக புனைந்து கொள்கிறார்கள். அதற்குப் பின் அவருக்கு கோவிலுக்குச் செல்வது, இறைவனிடம் முறையிடுவது, ஆன்மீக தரிசனம் போன்ற எல்லாமே நவீன கல்வித் தர்க்கத்தின் விதிகளுக்கு எட்டாமல், எளியவர்களின் வெளிப்பாடாக, புலம்பலாக, எளிய கொடுக்கல் வாங்கலாக தெரிய ஆரம்பிக்கிறது (ஆனால் சோதிடத்தில் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது!!!).

நானும் அப்படியே இருந்தேன். கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்த பின்பே, நவீன கல்வியின் “புறவயமாக நிறுவப்பட்ட தர்க்க அறிவியல்” என்பது பல்வேறு அறிதல் முறைகளில் ஒன்று என்றும், அதற்கு கிரேக்க தத்துவவியல் அடிப்படை என்றும், அந்த அறிதல் முறைக்கும் வரம்பு இருக்கிறது என்பதையும் உணர்ந்து கொண்டேன். அந்த தர்க்க அறிவியலின்படி இன்று சமூகத்தில் மிக பிரபலமான ஹோமியோபதி மருத்துவத்தை கூட விளக்க முடியாது என்பது சமீபத்தில் ஹோமியோபதி மருத்துவருடன் பேசும்போது அறியக்கிடைத்தது.

“நவீன தமிழிலக்கிய அறிமுகம்” புத்தகத்தில் மேலும் சில அறிதல் முறைகள் குறிப்பிடப்படுகின்றன.

“””வாழ்க்கையை அறிய மூன்று வகையான அறிதல் முறைகள் இருக்கின்றன. தியானம், கற்பனை மற்றும் தர்க்கம்.

1. கற்பனையைத் தன அறிதல் முறையாகக் கொண்டுள்ளவை கலைகள் எனப்படுகின்றன. அதன் அடிப்படை அலகு “குறியீடு”.
இசை, ஓவியம், நடனம், இலக்கியம் போன்ற அனைத்தும் கற்பனையை அடிப்படையான அறிதல் முறையைக் கொண்டுள்ளன.

2. தர்க்கத்தை அறிதல் முறையாகக் கொண்டுள்ள அனைத்தும் அறிவுத்துறை எனப்படும். அதன் அடிப்படை அலகு “வரையறை (definition)”.
தத்துவம், சமூக விஞ்ஞானம், அறிவியல், கணிதம் ஆகியவை தர்க்கத்தை அடிப்படையான அறிதல் முறையாகக் கொண்டுள்ளன.””””

இவற்றில் தர்க்கத்தை தாண்டிய மற்றைய அறிதல் முறைகள் ஒரு இந்திய, தமிழ் மாணவனுக்கு (நான் உட்பட) சமூக வழியில், கல்வி வழியில் இன்று அறிமுகம் ஆவதே இல்லை. இலக்கியம் ஒன்றே அத்தகைய தர்க்கம் தாண்டிய அறிதல் முறையை தெரிந்து கொள்ளும் வழி என்று தோன்றுகிறது. எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் “குள்ளச் சித்தன் சரித்திரம்” தர்க்கத்தை தாண்டிய வேறொரு அறிதல் முறையை வெளிப்படுத்திய மற்றும் அறிந்து கொண்டவர்களை பற்றிய நாவல்.

கரட்டுப்பட்டியில் சிகப்பியும் பழனியப்பனும் சந்திக்கும் பார்வையில்லாத ஒருவர் பூலாங்குறிச்சியில் அவர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை தெளிவாக கண்டு சொல்கிறார். வலது கை கட்டை விரல் ரேகையை வைத்து அவர்களின் வரலாற்றை வைத்தீஸ்வரன் கோவிலில் வாசிக்கிறார்கள். “அப்படியெனில் வேறு எங்கோ எழுதி வைத்திருப்பதை இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ” என்று நாவல் கேட்கிறது.

அவ்வித அறிதல் பற்றி ஸ்ரீ முத்துச்சாமி “என்னைப் போன்றவர்கள் இன்னும் கொஞ்சம் அறைகளைத் திறந்து பார்ப்போமே என்னதான் இருக்கும் அதிலே என்று முயற்சி செய்கிறோம்” என்று சொல்கிறார். மேலும் அவர் “கால ஜடா பேதமற்ற பிரயாணத்தில் எங்கும் செல்லாமலேயே எங்கோ சென்று கொண்டிருக்கிறேன்” என்று சொல்கிறார். இத்தகையோர் எளிய மனிதத் தர்க்கங்களுக்கு அப்பால் சில செயல்களை செய்ய முடிகிறது. அது சாதாரண மனிதர்களுக்கு அற்புதங்களாக இருக்கிறது.

ஸ்ரீ முத்துச்சாமி அவர்களோடு ஏற்பட்ட நிகழ்வுகளையும் அனுபவங்களையம் புத்தகமாக பதிவு செய்வதற்கு, அவர் சொல்லிய சில பெயர்களின் வழியாக வேறு வேறு இடங்களில் வேறு வேறு மனிதர்களை ஹாலாஸ்யம் சந்திக்கிறார். ராமாமிர்தத்தம்மாள், சென்ன கேசவ முதலியார் தம்பதியினருக்கு குழந்தை கிடைக்கச் செய்வது. பூ வியாபாரம் செய்யும் தாயாரம்மாள் அவளது பெண்ணின் பிரசவ காலம் வரை ஊரின் கண்களில் மறைந்து பின் கன்னியாகவே திரும்புவது, நடக்க இயலாத பெருமாள் குறை நீங்கி, அந்த அவதூதர் மறைந்த இடத்தில் உருவான கோவில் பூசாரியாக மாறுவது போன்ற கதைகளும், அவற்றை நிகழ்த்திக் காட்டும் வாமன சுவாமிகள், குள்ளச் சித்தர் போன்ற பெயர்களில் அற்புதங்கள் நிகழ்த்தியவர்கள் பற்றியும் தெரிய வருகிறது. அடுத்தடுத்து ஒன்றை ஒன்று பின்னிச் செல்லும் கதைகள். ஆசிரியர் க. நா. சு அவர்களின் “அவதூதர்” இதுபோன்றதொரு அற்புதங்கள் செய்யும் மெய்மையைப் பேசும் வேறொரு நாவல்.

என் தந்தை முன்பு இதுபோல சிலவற்றை சொன்னபோது காதுகொடுக்காது நகர்ந்திருக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக கேட்டிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

நான் தரையில் இருக்கும்போது எதிரே இருக்கும் மலையின் உச்சியைப் பார்க்கிறேன். என் அருகில் மரத்தில் அமர்ந்திருந்த பருந்து உயரே எழும்பி மலையின் அந்தப் பக்கம் இருப்பதை பார்க்க முடியும் என்பதை நானே என் புலன் வழியாக அறிந்து கொண்டால் மட்டுமே நம்புவேன் என்பது அறிவியல். அதற்காக விமானத்தை கண்டறிந்து உயரே போய் உறுதி செய்யலாம், ஆனால் பருந்தின் பார்வையை மூட நம்பிக்கை என்று இன்று என்னால் ஒதுக்க முடியவில்லை.

நாவல் அனுபவம் என்பதை யோசித்தால் ஆசிரியர் தனது பின்னுரையில் சொல்வதுபோல “பரிசோதிப்பதும் உறுதி செய்வதும் இரு துறைகளின் பணி, இந்த அனுபவக் கோணத்தின் இயல்பாக பொதிந்திருக்கும் புனைவுத் தன்மை” நல்ல வாசிப்பனுபவத்தை கொடுத்தது.

அன்புடன்,
சி. பழனிவேல் ராஜா.

முந்தைய கட்டுரைஒரு சிம்மம்
அடுத்த கட்டுரைவிதி வழிப்படூஉம் புணை – பா.ராகவனின் யதி- சுபஸ்ரீ