க.நா.சுப்ரமணியம் தமிழ் விக்கி
பொய்த்தேவு தமிழ் விக்கி
அன்பின் ஜெ,
நலம்தானே?
நீங்கள் 2001 மார்ச்சில், 2000 வரையிலான தமிழ் நாவல்களில் விமர்சகனின் சிபாரிசாகப் பரிந்துரைத்த பட்டியலையே இன்னும் முழுதாக வாசித்து முடிக்கவில்லை. “கண்ணீரைப் பின்தொடர்தல்” பட்டியலிலும் பல பாக்கியிருக்கின்றன. மலைத்து பின்வாங்கிவிட வேண்டாம் என்று அடிக்கடி மனதுக்கு சொல்லிக்கொள்கிறேன். மெய்யியல் சார்ந்து தேடல்கொண்ட படைப்புகளாக பதினைந்தை பரிந்துரைத்திருந்தீர்கள் (2021 மார்ச்). சில நாவல்களை வாசித்திருந்தது மகிழ்ச்சியைத் தந்தது.
சென்ற வாரம் “பொய்த்தேவு” வாசித்தேன். மனம் நிறைக்கும் வாசிப்பனுபவம். “ஆலயமணியின் ஓசை” என்று தலைப்பிட்டு ஒரு சிறிய வாசிப்பனுபவக் குறிப்பெழுதி அம்முவிற்கும் அனுப்பி அம்முவையும் நாவலை வாசிக்கச் சொன்னேன்.
ஆலய மணியின் ஓசை
“பொய்த்தேவு” முதல் பதிப்பு 1946-ல் வெளியாகியிருக்கிறது (மறுபதிப்புகளை அகரம், புதுப்புனல், காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், டிஸ்கவரி போன்ற பல பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன). கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு கடந்தபின்னும் அதன் வாசிப்பின்பம் கிஞ்சித்தும் குறையவில்லை. சிறிதும் தொய்வில்லாத சுவாரஸ்யம். விறுவிறுவென்று நகரும் பக்கங்கள். ஆயாசம் கொண்டு வேகம் குறைக்க வைக்காத நடை. அதன் உள்ளடக்கம்/பேசு பொருள்/விவாதிக்கும் புள்ளி, இன்றும் so contemporary.
மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் எட்டாம் திருமுறையில் வரும் ஓரு பதிகப் பாடல்…
“அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றற்றநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ”
இப்பாடலின் “பொய்த்தேவு” எனும் வார்த்தை தன் மனக்காதில் ஒலித்துக் கொண்டேயிருந்ததென்றும் அதனையொட்டிய எண்ணங்களே சோமுவின் கதையை எழுத்தாக்கின என்றும் க.நா.சு முதல் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஒருவரின் முழுவாழ்வை நேரடியாகச் சொல்வது போல் முதல் 900 பக்கங்கள் எழுதி அது சரியாக வராமல் அதனை முந்நூறு பக்க நாவலாகச் சுருக்கி பின் அதுவும் திருப்தி தராமல் மீண்டும் குறுக்கி, நாவலை தற்போதைய வடிவத்திற்கு கொண்டு வந்ததாகச் சொல்கிறார். கச்சிதமான கட்டமைப்பு! தெளிவான இயல்பின் அழகுடன் அத்தியாயங்கள். நாவலை வாசித்து முடித்தபின் முன்னிருக்கும் அத்தியாயத் தலைப்புகளை மட்டும் மறுபடி படித்தாலே முழு நாவலையும் தொட்டெடுக்கும் பரவசம். “பொய்த்தேவு” தவறவிடக்கூடாத கிளாஸிக்.
நாவல் சோமுவின் வளர்சிதை மாற்றம். அவ்வாழ்வின் வட்டம். நதிப் பெருக்கின் கொண்டாட்டமும், இயல்பொழுக்கின் அமைதியும் சங்கமமும். கும்பகோணத்தை ஒட்டிய காவிரி நதிக்கரை கிராமமான சாத்தனூரில் (ஊர் நடுவில் இனிய நாதம் எழுப்பும் மணியுடன் சிவன் கோயில்) மேட்டுத் தெருவில் கறுப்ப முதலிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாக அவதரிக்கிறான் சோமு. சோமு, சோமுப் பயலாகி, சோமசுந்தர முதலியாராக வளர்ந்து, மனதில் மணியோசையின் அழைப்பு கேட்டு சோமுப் பண்டாராமாக உருமாறும் கதை.
கறுப்ப முதலி, வெள்ளையம்மாள், பாப்பாத்தியம்மாள், பள்ளிக்கூட உபாத்தியாயர் சுப்பிரமணிய ஐயர், ரங்க ராவ் ராயர், சோனிபாய், கங்காபாய், சாம்பமூர்த்தி ராயர், கோவிந்தப் பிள்ளை, வாசக சாலை சாமா, ரங்காச்சாரியார், கோமளவல்லியம்மாள், கமலாம்பாள், பாலாம்பாள்… எல்லோரின் வாழ்வினூடே ஒரு பயணம் சென்று வந்ததில் மகிழ்வும், நிறைவும்.
மேட்டுத் தெரு, சாத்தனூர் எல்லைகள், பள்ளிக்கூடத்து நிழல், கல்யாண ஏற்பாடுகள், கல்யாண விமரிசை, ஸ்டேஷன் மகஜர் அத்தியாயங்கள் வெகு சுவாரஸ்யமானவை. முதல் நாள் பள்ளி சேர்ப்பு வைபவமும், சாத்தனூர் மேட்டுத் தெருவில் பிறந்த பிரபல தீவட்டிக் கொள்ளைக்காரன் பிச்சாண்டியின் கைவரிசை அத்தியாயமும் அபாரமானவை.
***
“இந்தப் பண்டாரம் வேடிக்கையான பண்டாரமாயிருந்தார். நம்ம கிட்டே குடுக்கை, கந்தைத் துணி, கஞ்சா உருண்டை ஏதாவது இருக்கு. இவர்கிட்டே அதுகூடக் கிடையாது! என்ன பண்டாரங்கிறேன்!” என்றார் ஒரு பண்டாரம்.
மற்றவர், “போகலாம் கிளம்பு. இன்னுஞ் சித்தெப்போனால் கும்பி கொதிக்கும். நாலு இடம் பார்த்தாத்தானே சோறு கிடைக்கும்?” என்றார்.
“நேத்து ராத்திரி ஒரு விஷயம் சொன்னார் இந்தப் பண்டாரம்” என்றார் முதல் பண்டாரம்.
“சொல்லு” என்றார் இரண்டாவது பண்டாரம்.
“நேத்து ராத்திரி தெய்வம் ஒண்ணுதான்னு இந்தப் புதுப் பண்டாரத்துகிட்டெச் சொன்னேன். ஏதோ பேசிகிட்டிருக்கச்செ சொன்னேன். இந்தப் பண்டாரம் ‘இல்லே. தெய்வம் ஒண்ணு மட்டுமில்லே. எத்தனையோ உண்டு‘ அப்படின்னார். ‘முப்பத்து முக்கோடின்னு சிவ புராணம் சொல்லுது. அது தப்பு‘ன்னேன் நான். ‘தப்புத்தான்‘னார் அவர். ‘முதல்ல அப்படிச் சொன்னீர், இப்ப இப்படிச் சொல்றீரே‘ன்னு நான் கேட்டேன். ‘தெய்வங்கள் முப்பத்து முக்கோடி மட்டுமில்லே. முப்பத்து முப்பத்து முப்பத்து முக்கோடி. எத்தனையோ முப்பத்து முக்கோடி தெய்வம் இருக்கு‘ன்னார். ‘எப்படித் தெரிஞ்சிச்சு உங்களுக்கு?’ன்னு நான் கேலியா கேட்டேன். உலகம் பொறந்த நாள் முதல் இன்னிவரையில் எவ்வளவு விநாடி உண்டோ அவ்வளவு தெய்வம் உண்டு. இனி இருக்கப்போற விநாடிக்கும் விநாடிக்கொரு தெய்வம் உண்டு‘ன்னார் அந்தப் பண்டாரம். எனக்குப் புரியல. பின்னாடி கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன்” என்றார்.
பதில் அறிய அவசியம் சோமுப் பயலையும், மளிகை மெர்ச்சண்டு சோமசுந்தர முதலியாரையும் சந்திக்க வேண்டும் அம்மு.
வெங்கி