சைதன்யாவின் சிந்தனை – கடிதம்

ஜே.சைதன்யாவின் சிந்தனை மரபு வாங்க

அன்புள்ள ஜெ,

‘ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு’ வாசிப்பு பற்றிய எனது சிறு குறிப்பு.

சிந்தனை மரபு என்ற ஈர்ப்பால் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். சைதன்யா ஜெயமோகனின் மகள் என்று தெரியும். ஆனால் இதன் உள்ளடக்கம் எதிர்பாராத ஒரு ஆச்சர்யம் தந்தது. அதுவே ஒரு மனக் கிளர்ச்சியையும் உண்டாக்கியது.

சைதன்யாவின் பிறப்பில் இருந்து ஒவ்வொரு நிலையிலும் அவர் உலகை எதிர்கொண்ட நிகழ்வுகளையும், குறும்புகளையும், ஆர்வமூட்டும் கேள்விகளையும், சேட்டைகளையும் பாசத்துடன் செருக்குடன் பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலான நிகழ்வுகளை எனது மகனின் அதே மாதிரியான அல்லது அதற்கு இணையான சேட்டைகளுடன் நினைவு கூர்ந்து புன்னகைத்தேன்.

எனது மகனிடம் மிகவும் ரசித்து, அனுபவித்து மகிழ்ந்த பெரும்பாலான இனிய நினைவுகள், மூளையின் எங்கோ ஆழத்தில் புதைந்து கிடந்தன. குட்டி சைதன்யாவின் ஒவ்வொரு கேள்வியும், அடம் பிடித்தலும், விளையாட்டும் என் நினைவுகளைப் புன்னகையுடன் மீட்டி எடுத்தன.

ஆரம்பத்தில் ஜெயமோகனின் மகளாக இருந்த சைதன்யா, ஒவ்வொரு அத்தியாயமாக வளரும் போது எனது மகளாகி விட்டாள்.

குழந்தை பிறந்ததில் இருந்து பள்ளி சென்று தனியாக தன்னை நிர்வகித்துக் கொள்ளும் வயது வரும் வரை, அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சியும், ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைத்த உன்னதமான கொடை.

எனது மகன் பிரணவ், இரண்டு வயது இருக்கும் போது கையில் ஒரு குச்சியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, முகத்துக்கு நேராக வைத்து “டட்டாலியா” என்று சத்தமாக அழுத்தமாகக் கூவுவான். எனது தந்தை அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்றார். பல முறை காணொளிப் பதிவு செய்ய முயன்றோம். காமிராவைக் கண்டதும் நிறுத்திக் கொள்வான்.

அவனைப் பார்த்து “இவன் குறும்பு எப்பத்தான் அடங்குமோ” என்று பேசிக்கொண்டிருக்கையில்,
“எனக்கு குறும்பு அடங்காது, ஏன்னா அது என்னோட வயித்துக்குள்ள இருக்குது” என்பான்.

இது போன்ற பல நினைவுகளை ஆவணப்படுத்தி வைப்பது அவசியம் என்று தோன்றுகிறது.

சைதன்யாவை ஜெயமோகனின் மகளாக அல்லாமல் தனது குழந்தையாக உணர்ந்து வாசிக்க முடிந்தவர்கள் புன்னகையுடனும், மன எழுச்சியுடனும் இந்தக் குட்டிப் புத்தகத்தை அனுபவிக்கலாம்.

அன்புடன்,

சக்தி பிரகாஷ்

*

அன்புள்ள ஜெ

ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு நூலை இப்போதுதான் வாசித்தேன். நான் உண்மையில் அந்த நூலை ஒரு தத்துவநூல் என நம்பித்தான் வாங்கினேன். நெகிழ்ச்சியும் வேடிக்கையுமான நூல் என்று புரிந்துகொண்டேன். ஆனால் வாசித்து முடித்தபின் இப்போது அது உண்மையிலேயே ஒரு தத்துவநூல் என்று தெரிந்துகொண்டேன்.

என் மகளிடம் அந்தப்படத்தை காட்டி ‘சைதன்யா அக்கா சொன்னதையெல்லாம் புக்கா எழுதியிருக்கு’ என்று விளக்கினேன்

‘இப்ப நான் சொல்றதையெல்லாம் புக்கா எழுதி எங்கிட்ட குடு’ என்றான்

“ஏன்?” என்றேன்

“நான் ஸ்கூல் போறப்ப புக்ல இருக்கிற படிச்சு அங்கே சொல்வேன். இல்லாட்டி மறந்துடும்ல?” என்றான்.

உண்மையிலேயே பெரிய தத்துவச்சிக்கலாக ஆகிவிட்டது

ராம் மனீஷ்குமார்

சைதன்யாவின் சிந்தனை மரபு- கடிதம்

ஜெ.சைதன்யா- ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைதத்துவ வகுப்புகள் எவருக்கு?
அடுத்த கட்டுரைபஷீரின் பால்யகால சகி -சக்திவேல்