திருப்பூர் கலை இலக்கியப்பேரவையின் விருதுகள் இவ்வருடம் சிறுகதைக்கு சு.வேணுகோபால் எழுதிய ‘வெண்ணிலை‘ தொகுப்புக்கும் நாவலுக்கு சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல்கோட்டம்‘ நாவலுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. ரூபாய் பதினைந்தாயிரம் பெறுமானமுள்ள விருதுகள் இவை.
‘வெண்ணிலை‘யை தமிழின் சிறந்த சிறுகதைத்தொகுதிகளில் ஒன்று என்று ஐயமறக்கூறலாம். முற்றிலும் யதார்த்த தளம் சார்ந்த நேரடியான கதைகள் இவை. ஆனால் மண்ணால் கைவிடப்பட்ட எளிய விவசாயிகளின் வாழ்வின் படிப்படியான சரிவை தீவிரமாகச் சொல்வதன் வழியாக சமகால வரலாற்றின் பதிவாக நிலைகொள்கின்றன. அத்துடன் மண்ணை இழந்த விவசாயியின் ஆன்மீகமான வீச்சியைச் சொல்வதன் மூலம் பேரிலக்கியத்தகுதி பெறும் சில கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன
இவ்வருடம் வெளிவந்த ‘காவல்கோட்டம்‘ தமிழின் சிறந்த வாசகர்களால் இயல்புவாத வரலாற்றுநாவலின் ஒரு சாதனை என்றும், மதுரையின் ஒருவரலாற்று மாறுதல்புள்ளியின் ஆகச்சிறந்த ஆவணம் என்றும், வரலாற்றினூடாக மனிதவாழ்க்கை பெருகிச்செல்வதைக் காட்டும் ஒரு பெரும்படைப்பு என்றும் கருதப்படும் நாவல்.
இரண்டும் தமிழினி வெளியீடுகள்.
விருதுபெற்ற சு.வேணுகோபால், சு.வெங்கடேசன் இருவருக்கும் வாழ்த்துக்கள்