ம.ந.ராமசாமி- தமிழ் விக்கி
ம.ந.ராமசாமி எழுதிய யன்மே மாதா என்னும் சிறுகதை நாற்பதாண்டுகளுக்கு முன் வெளிவந்து தமிழ் இலக்கியச் சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டது. வேதச்சடங்குகளை கடுமையாக நிராகரிக்கும் கதை. கதைச்சுருக்கம் இதுதான்.
சம்ஸ்கிருதம் அறிந்த ஒருவன் தன் அன்னைக்கு வைதிகர்களைக் கொண்டு நீத்தார்ச் சடங்குகள் செய்யவைக்கிறான். அதிலொரு மந்திரம் ‘யன்மே மாதா…’ என தொடங்கும். இதன் பொருள் ‘என் தாய் (அறிந்தும் அறியாமலும்) எந்த ஆடவருடன் உறவு கொண்டிருந்தாலும் என் தந்தையராகிய அவர்களுக்கு இந்த அன்னம் சென்று செல்லட்டும்’
பேராசிரியன் கொந்தளித்துவிடுவான். ‘என்ன ஆபாசமான மந்திரம். என் பெற்றோரை கேவலப்படுத்துகிறது. என் அம்மாவின் ஒழுக்கத்தை கீழ்மை செய்கிறது. ஏதோ காட்டுமிராண்டிக் காலத்தில் எவனோ எழுதிய மந்திரத்தை இந்த நாகரீக காலகட்டத்தில் சொல்வதா? எழுந்து வெளியே செல்லுங்கள்” என்று கூச்சலிட்டு வைதிகர்களை துரத்திவிடுவான்.
இந்த கதையின் கருப்பொருளும் உணர்ச்சியும் உண்மையில் குத்தூசி குருசாமி முன்னர் எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து எடுத்துக்கொண்டது. இந்த மந்திரத்தை வைத்து வேதங்களை இழிவுசெய்து மறுக்கும் பேச்சுகளை நானே தி.க. மேடையில் கேட்டிருக்கிறேன். ம.ந.ராமசாமி அந்த மேடைப்பேச்சை திரும்ப கதையாக்கினார். அன்று அதை இடதுசாரிகள் தலைமேல் கொண்டாடி வந்தனர்.
ம.ந.ராமசாமி பற்றி பேசும்போது சுந்தர ராமசாமி இந்த கதை அவருடைய நல்ல கதை என்றார். ‘அது நேரடியான பிரசங்கமா இருந்தாலும் அதிலே உண்மையான உணர்ச்சிகள் இருக்கு’ என்றார். சுந்தர ராமசாமிக்கு வைதிகச் சடங்குகள் மேல் அருவருப்பே உண்டு. அவர் எச்சடங்கையும் செய்வதில்லை. அவருடைய கம்யூனிசப் பின்னணி, நவீனத்துவ மனநிலை இக்கதையை எழுதியவருக்கு ஒப்பானது. (பார்க்கக்கூட ம.ந.ராமசாமி கொஞ்சம் சு.ரா சாயலில் இருக்கிறார்)
நான் அதை மறுத்தேன். “அந்தக் கதையிலே இருக்கிறது இன்னிக்கு ஒரு சராசரி மனிதன், இன்னிக்குள்ள ஒழுக்கநெறிகளை வைச்சு, வாழ்க்கையை பார்க்கக்கூடிய பார்வை. சர்வ சாதாரணமான ஒழுக்கப்பார்வை. ஒரு எழுத்தாளன் சாதாரணமான உணர்ச்சிகளை சாதாரணமா வெளிப்படுத்துறவன் இல்லை. ஒரு விஷயத்திலே ஒண்ணு அவன் தனக்குள்ளே ஆழ்ந்து போய் எதையாவது கண்டடைஞ்சு சொல்லணும். இல்லே, உண்மையில் அந்த வரலாறையும் தத்துவத்தையும் ஊடுருவிப்போயி எதையாவது சொல்லணும். அரிதான பார்வைதான் இலக்கியம் ஆக முடியும்”
அன்று வேறு எவரோ கூட இருந்தார் என நினைவு. அவரும் சுந்தர ராமசாமியை ஆதரித்தார். ”என்னோட அம்மா ஒழுக்கம்தவறியிருந்தாலும்னு எப்டி ஒருத்தன் சொல்லலாம்?” என்றார். “அதிலே ஒழுக்கத்துக்கு இடமே இல்லியே… Morality வேற Reason வேற Wisdom வேற. அதிலே இருக்கிறது ஒரு தொன்மையான widsom .அதை நாம நம்ம reason ஆலத்தான் புரிஞ்சுகிட முடியும்” என்றேன். ஆனால் மேற்கொண்டு அதை விளக்க என்னால் முடியவில்லை.
இன்று யோசிக்கையில் இந்த விவாதம் எப்படி பொருள்படுகிறது? என் மகள் சைதன்யா பெண்ணியப்புலி. அவளிடம் இந்த விவாதத்தைச் சொன்னேன். “ரெண்டு ராமசாமிகளும் சொல்றதுதான் most regressive பார்வை. பொம்புளையோட ஒழுக்கத்தை எல்லாத்துக்கும் மேலே வைச்சுக்கிற ஆணாதிக்க அணுகுமுறை. என்னமோ அவங்களோட சொந்த அடையாளத்தை பாதுகாக்கிற பொறுப்பு பொண்ணுக்குன்னு நினைச்சுக்கிடறாங்க” என்றாள். ஆச்சரியமாக இருக்கவில்லை. நாற்பதாண்டுகளில் மொத்த பார்வையும் இங்கே தலைகீழாக ஆகிவிட்டிருக்கிறது.
அந்த சிரார்த்த மந்திரத்தைச் சுற்றி இங்கே இன்னமும் விவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அதை எதிர்த்தும் ஆதரித்தும் பேசும் இருதரப்பும் பெண்களின் கற்பு விஷயத்தில் ஒரே கொள்கை கொண்டவர்களே. அந்த மந்திரம் பெண்களின் கற்பினை இழித்துரைக்கிறது என்று சொல்லி, சொல் சொல்லாக எடுத்து விளக்கமளிக்கின்றனர் எதிர்ப்பாளர்கள். அப்படி அல்ல, அது சொல்வதற்கு வேறு பொருள் என்று விளக்கமளிக்கும் வைதிகர்களும் அது பெண்களின் கற்பை ஒன்றும் சொல்லவில்லை என நிறுவ முயல்கின்றனர்.
அந்த மந்திரத்துக்குச் சமானமான மந்திரங்களை பிராமணங்களில் காணமுடியும். அந்த மந்திரத்தின் உட்பொருளை விளக்கும் விரிவான பகுதிகள் மகாபாரதத்தில் உள்ளன. மகாபாரதத்தின்படி ஒருவன் எவருக்கெல்லாம் நீர்க்கடன் செய்யலாம்? அவனுடைய அன்னையுடன் எவ்வகையிலேனும் உடலுறவு கொண்டவர்கள் எல்லாரும் அவன் தந்தையரே. அவன் அன்னை எவருமறியாமல் உள்ளத்தால் வரித்துக்கொண்டவர்களும் அவன் தந்தையரே. அவன் தானாகவே ஒருவரை தந்தை என எண்ணிக்கொண்டால் அவரும் தந்தையே.
தொல்பழங்காலத்தில் திருமணங்களே பலவகையானவை. எல்லாவகை உறவுக்கும் ஏதோ ஒரு வகையில் ஏற்பு இருந்தது. மகாபாரதம் யாரெல்லாம் ஒருவனுக்கு மகன் ஆவான் என்னும் பட்டியலை அளிக்கிறது. தன் மனைவிக்கு எவரில் எப்படி பிறந்திருந்தாலும் எல்லா குழந்தைகளும் ஒருவனின் குழந்தைகளே. அவள் ரகசிய உறவில் குழந்தை பெற்றிருந்தால்கூட. அக்குழந்தைகளுக்கு அவன் பொறுப்பேற்றாகவேண்டும். அந்தப்பட்டியலை பார்த்தால் bastrard என ஒரு குழந்தைகூட அகற்றப்படலாகாது என்னும் தொல்குடி விவேகத்தையே காணமுடிகிறது.
அந்த விவேகம் ஒழுக்கம் சார்ந்த எளிமையான அன்றாட நெறிகளுக்கு அப்பாற்பட்டது. அன்றைய தொல்குடிச் சமூகத்தின் பரந்த பார்வையின் வெளிப்பாடு அது. ஒரு குழந்தையும் ‘தந்தையற்றது’ அல்ல. ஒருவனும் ’மைந்தன் இல்லாதவன்’ அல்ல. நினைவுகூரப்படுவது, நீர்க்கடன் அளிக்கப்படுவது இரண்டும் மறைந்த ஒவ்வொருவருக்கும் சமூகம் ஆற்றவேண்டிய கடன். அதை ஒழுக்கம் முதலியவற்றுக்கு மிகமிக அப்பால் ஒரு அதீதமான விழுமியமாகவே அந்தச் சமூகம் பார்த்தது.
மகாபாரதம் வழியாகப் பார்த்தாலே, அந்த தொல்குடிச் சமூகம் பாலியல் ஒழுக்கத்தை வாழ்க்கையின் அடிப்படை நெறியாக எண்ணவில்லை என்பதை காணலாம். மிகமிக நெகிழ்வான ஒன்றாகவே அது பாலியல் ஒழுக்கத்தை பார்த்தது. மகாபாரதம் ஆதிபர்வத்தில் குந்திக்கும் பாண்டுவுக்குமான உரையாடல் தொடங்கி பல இடங்களில் பாலியல்நெறிகளின் பலவகை நெகிழ்வுகள் பற்றிப் பேசுகிறது. நாமெல்லாம் கதையாக அறிந்த குந்தி, திரௌபதி, தமயந்தி என எல்லா கதைகளுமே அதற்கான சான்றுகள்.
ஆனால் மகாபாரதத்திலேயே பாலியல் நெறிகள் மேலும் மேலும் இறுக்கமாகிக்கொண்டே வருவதை நாம் காண்கிறோம். ஏனென்றால் மண், செல்வம், குடியடையாளம் ஆகியவற்றின் மீதான ஆணின் உரிமை வலுப்பெற்றபடியே வருவதை மகாபாரதம் காட்டுகிறது. பெண்ணின் இடம் இல்லாமலாகிக்கொண்டே செல்கிறது. திரௌபதி போன்ற ஓர் அரசி மகாபாரத காலகட்டத்திற்கு பின் நிகழ முடியாது என தெரிகிறது. குந்தியும் திரௌபதியுமெல்லாம் பெண்ணுக்கும் மண்ணுரிமை, குலஉரிமை இருந்த காலத்தைச் சேர்ந்தவர்கள்.
சொல்லப்போனால் திரௌபதி சபையில் சிறுமை செய்யப்பட்ட நிகழ்வு இந்தியாவின் வரலாற்றுப் பரிணாமத்தில் பெண்களின் உரிமையும் அதிகாரமும் இல்லாமலான தருணத்தை குறிப்பிடுகிறது என்று தோன்றுகிறது. பிற்காலக் கதைகளில் திரௌபதி ஐந்துபேரை மணந்தது எப்படியெல்லாம் ‘சப்பைக்கட்டு’ கட்டப்பட்டுள்ளது என்பது வியப்புடன் கவனிக்கத் தக்கது. மேலும் வியப்பு அளிப்பது, இந்தியாவில் உருவான அத்தனை ’முற்போக்கு’வாதிகளும் குந்தியையும் திரௌபதியையும் பற்றி இழிவாக எழுதியிருக்கிறார்கள் என்பது. அவர்கள் பார்வையில் ‘கற்பு’ உள்ள பெண்ணே நல்லவள்.
நிலம் மீது, குலம் மீது, அரசின் மீது ஆணின் ஆதிக்கம் ஓங்கியிருந்த காலகட்டத்தின் பார்வையே பெண்ணின் ஒழுக்கத்தை அதீத புனிதப்படுத்தியது. அதையொட்டியே ஆணின் அடையாளத்தை அமைத்தது. அந்த மனநிலையே ’யன்மே மாதா’ என்று செவியில் விழுந்ததுமே ரத்தம் கொதிக்கச் செய்கிறது. அது முற்போக்கு என்று வேறு நம்பச் செய்கிறது. முற்போக்காளர்களின் அந்த நிலப்பிரபுத்துவகால விழுமியத்தை கடந்து நின்று இன்று பார்க்கையில் அதற்கு முந்தைய தொல்மரபின் விவேகமே உண்மையில் முற்போக்கானதாக, அரவணைக்கும் தன்மை கொண்டதாக தோன்றுகிறது.