இந்து மதம் என ஒன்று உண்டா? ( தொடர்ச்சி)
மதங்கள் உருவாகி வரும் முறை
மதங்கள் உருவாகி வரும் வழிமுறை என்பது உலகமெங்குமிருந்து பொதுவாக தொகுத்து வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றில் இயற்கை மதங்களின் உருவாக்கத்திற்கு என ஒரு பொதுவான போக்கு உலகமெங்கும் உள்ளது.
இயற்கை மதங்கள் மிகமிகத் தொல்பழங்காலத்தில், பழங்குடி வாழ்க்கையில் இருந்து உருவாகி வருபவை. உலகமெங்கும் பழங்குடிகளுக்கு தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் உள்ளன. அவை பெரும்பாலும் மூன்று அடிப்படைகள் கொண்டவை என வகுக்கப்பட்டுள்ளன.
அ.நீத்தார் வழிபாடு, மூத்தார் வழிபாடு
ஆ.குலக்குறி வழிபாடு
இ.இயற்கை வழிபாடு.
இந்தப் பகுப்புகள் மானுடவியலாளர்களால் பொதுவாகச் செய்யப்பட்டவை. இவற்றைக்கொண்டு பழங்குடிகளின் ஆன்மிகத்தை புரிந்துகொள்ள முடியாது. உதாரணமாக, பழங்குடிகள் தங்கள் மறைந்த மூதாதையரை வணங்குகிறார்கள். அது ஓர் எளிய நம்பிக்கையாகவே மானுடவியலாளர் சொல்வார்கள். ஆனால் அது அத்தனை எளியது அல்ல.
பழங்குடிகளிடம் பேசி பதிவு செய்யப்பட்ட உரையாடல்களிலேயே அவர்கள் அதை எப்படி அணுகுகிறார்கள் என்பது கண்டடையப்பட்டுள்ளது. மனிதர்கள் இங்கே பிறந்து வருவதற்கு முன் எங்கோ இருக்கிறார்கள் என்றும் இறந்தபின் அங்கே மீள்கிறார்கள் என்றும் பொதுவான நம்பிக்கை உள்ளது. அதாவது மனிதன் ஒரு கருத்துரு (idea) வாக இருக்கிறான். அந்த கருத்துரு பின்னர் பருவுரு (Matter) ஆகிறது. மரணத்திற்குப்பின் மீண்டும் கருத்துருவாக ஆகிறது.
அப்படியென்றால் அவர்கள் வழிபடுபவது எதை? மனிதன் என்னும் கருத்துருவத்தைத் தான். அது சாவுபயம் அல்ல. சாவை புரிந்துகொள்ளமுடியாமல் செய்வதும் அல்ல. கண்ணால் கண்ட ஒன்றில் இருந்து அதன் சாராம்சமான கருத்தைச் சென்றடையும் மனித முயற்சி அது.
அவ்வாறுதான் மாண்டவர்களை வழிபட ஆரம்பித்தனர். பின்னர் மாண்ட அனைவரையும் ஒன்றாக இணைத்து ஒரே கருத்துருவமாக ஆக்கினர். அத்தனை மனிதர்களும் இணைந்த மிகப்பெரிய ஒற்றை மனிதன் என உருவகித்தனர். மிகப்பெரிய சிலைகளாக அந்த கருத்துருவத்தை நிறுவினர். அதுவே பெரும் ஆள் என்னும் பெருமாள். பரமபுருஷன். மானுடம் என்னும் கருத்துருவம். அதை நீங்கள் சாங்கியம் போன்ற மிகத்தொன்மையான மதங்களில் காணலாம்.
பழங்குடிகள் எங்கெல்லாம் இறைசக்தி ஒன்று வெளிப்படுவதாக உணர்ந்தனரோ அதையெல்லாம் வழிபட்டனர். அவற்றை தங்கள் குலங்களின் அடையாளமாகக் கொண்டனர். பாம்பு, யானை, புலி போன்ற மிருகங்கள். மலை, கடல், நதி போன்ற இயற்கையமைப்புகள். மின்னல், இடி, புயல் போன்ற இயற்கை நிகழ்வுகள். எங்குமே பழங்குடிகள் இயற்கையை வழிபடவில்லை – இயற்கையில் வெளிப்படும் தெய்வத்தையே வழிபட்டனர். இருட்டை, நோயைக்கூட தெய்வ வெளிப்பாடாக கருதினர்.
தெய்வம் என்ற ஒன்று உண்டு என்றால், அது இவ்வகையில் மனிதர்களுக்கு தங்களை வெளிப்படுத்திக் கொண்டது என்று கொள்வதே முறையான ஆன்மிகப்பார்வையாக இருக்க முடியும். உலகமெங்கும், அனைத்து மக்களுக்கும் அது அவ்வாறு வெளிப்பட்டது.
இந்த பழங்குடி வழிபாட்டுமுறைகள் (worships) என்றே அழைக்கப்பட்டன. அந்த வழிபாட்டுமுறைக்கு ஓர் அமைப்பும், கொள்கையும் உருவாகும்போது அவை மெல்ல மெல்ல குறுமதங்கள் (Cults)ஆகின்றன. இணையான இயல்பு கொண்ட குறுமதங்கள் இணைந்து கொண்டே இருக்கின்றன. இணைந்து இணைந்து இன்னும் பெரிய மரபுங்கள். அந்த பெரிய மரபுகளே முன்பு தர்மம் என்றோ, மார்க்கம் என்றோ, நெறி என்றோ அழைக்கப்பட்டன. இன்று நாம் அவற்றையே மதம் (Religion) என அழைக்கிறோம்.
ஒரு நதி உருவாகி வருவது போலத்தான் இது நிகழ்கிறது. ஒரு ஊற்று மெல்ல சிறு ஓடையாக உருவாகிறது. மேலும் மேலும் ஓடைகள் சேர்கின்றன. அதன்பின் துணையாறுகள் இணைந்துகொள்கின்றன. அது திரண்டு திரண்டு முன்னகர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த முதல் ஊற்று என ஒன்றை நாம் உருவகிக்கலாமே ஒழிய அது இதுதான் என சொல்லவே முடியாது. கங்கோத்ரிக்கு முன்னாலும் கங்கை உள்ளது. நதி பெரிதாகும்போது அதில் இருந்து கிளை ஆறுகள் பிரிகின்றன. அதுவும் மதங்களில் நிகழ்கிறது. பெரிய மதங்கள் பிரிந்துகொண்டே இருக்கின்றன.
உலகிலுள்ள இயற்கை மதங்களை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு நூறாண்டிலும் அதில் புதிய துணைமதங்கள் இணைந்திருப்பதையும் புதிய கிளைகள் பிரிந்திருப்பதையும் காணலாம். மதங்களின் பெயர்கள் காலந்தோறும் மாறுபடும். ஒட்டுமொத்த கட்டமைப்பே காலத்திற்கேற்ப மாறுபடும்.
ஶ்ரீரங்கத்தில் நின்றுகொண்டு இந்த நதி காவேரி அல்ல; கர்நாடகத்தில் காவேரியே கிடையாது; அங்கே ஹாரங்கி, கபினி, சுவர்ணா என்றெல்லாம்தான் இருந்தது என்று சொல்வதற்கு என்ன பொருள்? ஈரோட்டுக்குமேல் இது பவானி என தனி நதியாக இருந்தது என்று சொன்னால் அதை எப்படி புரிந்துகொள்வது? திருச்சியை பொறுத்தவரை நொய்யலும் அமராவதியுமெல்லாமே காவேரிதான். கீழத்தஞ்சையில் காவேரியில் இருந்து வெண்ணாறு பிரிகிறது. மேலும் பல கிளைநதிகளாகிறது. அவையும் காவேரி என்றே சொல்லப்படுகின்றன. காவேரிப்படுகை என்றே அழைக்கப்படுகின்றன.
மதங்களின் இந்த தொடர்ச்சியான இணைவுச்செயல்பாட்டுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. பழைய சமூகங்கள் கூடுமானவரை பிறரை இணைத்துக்கொண்டு பெரியதாக ஆக முயன்றுகொண்டே இருந்தன. அதுவே வலிமை என அவை அறிந்திருந்தன. இரு பழங்குடிகள் இணையும்போது இரு வழிபாட்டுமுறைகளும் இணைந்தன. இரு சமூகங்கள் இணையும்போது அவர்களின் தெய்வங்களும் ஒன்றாயின.
இது சுரண்டலோ, அடக்குமுறையோ அல்ல. இது எவருடைய சதியும் சூழ்ச்சியும் அல்ல. காழ்ப்பே உருவான உள்ளங்களுக்கு அப்படி தோன்றலாம். ஆனால் கொஞ்சம் வரலாறும் சமூகவியலும் வாசிப்பவர்களுக்குத் தெரியும், இது மானுடசமூகப் பரிணாமத்தின் இயல்பான வழிமுறை.
சுவீரா ஜெயஸ்வால் எழுதிய வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூல் மார்க்சிய ஆய்வுமுறைமை கொண்டது. அது விஷ்ணு, நாராயணன், திருமால், பிரத்யும்னன், அனிருத்தன், சங்கர்ஷணன், பலராமன், பரசுராமன், ராமன், கிருஷ்ணன் என வெவ்வேறு தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் காலப்போக்கில் இணைந்து இணைந்து இன்றைய வைணவம் எப்படி உருவானது என விளக்குகிறது.
சைவமும் அப்படித்தான். வேதங்களில் பேசப்படும் ருத்ரன் போன்ற தெய்வங்களும்; தொல்குடிகளில் பசுபதியும்; லிங்க வழிபாடு, தூண்வழிபாடு, மலைவழிபாடு, அனல்வழிபாடு முதலிய வழிபாட்டு முறைகளும் இணைந்து இணைந்து சைவம் உருவானது.
இந்த இணைவுக்கான ஆன்மிகமான காரணம் ஒன்றையும் சொல்லலாம். இது மனிதன் பிரபஞ்சத்தின் சாராம்சத்தை வெவ்வேறு துளி அறிதல்களாக அறிவதன் விளைவுதான் தனி மதங்கள். அந்த அறிதல்கள் இணைந்து இணைந்து முழுமையறிதல் நோக்கிச் செல்கின்றன.
ஒவ்வொரு அறிதலும் அவ்வாறுதான் நிகழ்கிறது. இயற்பியல் பிரபஞ்சத்தை எப்படி புரிந்துகொள்கிறது? நியூட்டன், ஐன்ஸ்டீன், ஓபன்ஹீமர், ரிச்சர்ட் ஃபெயின்மான் என பலர் பல கோணங்களில், பல பகுதிகளாக அறிந்தவை இணைந்து இணைந்துதான் பிரபஞ்சம் பற்றிய அறிவு திரண்டுகொண்டிருக்கிறது. மெய்யியல் ஞானமும் அவ்வாறே பல ஞானிகளால், பல அறிஞர்களால் பல பகுதிகளாக உணரப்பட்டவை ஒன்றுடன் ஒன்று விவாதித்தும் இணைந்தும் ஒன்றாகி இறையறிவாக திரண்டுகொண்டிருக்கிறது.
நாம் அந்த இணைவின் பரிணாமத்தை தெய்வ உருவகங்கள் வழியாக காணலாம். பிரத்யும்னன், அனிருத்தன், சங்கர்ஷணன், பலராமன் எல்லாம் விஷ்ணுவின் வடிவங்களே என ஆயின. அது வெவ்வேறு வகை இறையறிதல்கள் இணைந்து ஒரே அறிதலாக ஆவதுதான். பின்னர் ராமனும் கிருஷ்ணனும் அதில் இணைந்தன. ஒரு கட்டத்தில் சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என ஆயின. ஹரிஹரன், சங்கரநாராயணன், சிவராமன், சங்கர ராமன் என்றெல்லாம் தெய்வ உருவகங்கள் அமைந்தன.
ஒருவர் அறிதலின் பொருட்டு காலத்தில் பின்னால் செல்லலாம்.சிவசங்கரன் என்னும் தெய்வ உருவகத்தை சிவன் விஷ்ணு என பிரிக்கலாம். விஷ்ணுவை பலவாக பிரிக்கலாம். அதில் ஒன்றான பலராமனின் மூலம் எது என தேடிச்செல்லலாம். ஏதோ ஒரு காலகட்டத்தில் வேளாண்மக்கள் வழிபட்ட ஒரு தெய்வம். தோளில் மேழியுடன் நின்றிருக்கும் பலராமன் உழவர்களின் அடையாளம். உழவர்கள் அனைவரையும் இணைத்து ஒரே மனித உருவமாக ஆக்கிய வடிவம். அதை மேலும் பின்னுக்கு கொண்டு சென்றால் அதேபோன்ற ஏராளமான உழுபடை தெய்வங்களை நாம் கண்டடையலாம்.
இது வரலாற்றுப்பார்வை. குறியீடுகளின் வரலாற்றைக்கொண்டு சமூக வரலாற்றை ஊகித்தறியலாம். ஆன்மிகப்பரிணாம வரலாற்றையும் ஊகிக்கலாம். மாறாக ‘அய்யய்யோ பலராமனை விஷ்ணுவாக ஆக்கிவிட்டார்களே, அது அடக்குமுறை’ என ஒருவன் கூவுவான் என்றால் அவன் யார்? விஷ்ணுவில் இருந்து பலராமனை பிரிக்கவேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்வான் என்றால் அவன் நோக்கம் என்ன?
ஒன்று அவன் மோசடியாளன். உள்நோக்கம் கொண்ட ஆதிக்கவாதி. பிரித்தாள நினைப்பவன், பிரித்தாளும் கலையில் வல்லுநர்களின் கையாள். அல்லது அவர்களால் ஏமாற்றப்படும் முழு அசடு.
தீர்க்கதரிசன மதங்களுக்கு ஒரு பரிணாமம் உள்ளது. ஒரு தீர்க்கதரிசி தனக்கு முன்னாலிருந்த ஆன்மிகப்பார்வைகளை தொகுத்து, அதற்கு தன் தரிசனத்தின் அடிப்படையில் மையம் ஒன்றை உருவாக்கி, அதை முன்வைக்கிறார். அதையொட்டி பிற்காலத்தில் அவருடைய மாணவர்களால், வழித்தோன்றல்களால் ஒரு மதம் மெல்லமெல்ல உருவாகிறது. அவர்கள் அந்த முதல் தீர்க்கதரிசியை தங்கள் நோக்கில் விளக்கிக்கொள்ளும்போது அந்த மதத்திற்குள் பிரிவுகள் உருவாகின்றன. மேலும் மேலும் ஞானிகள் அந்த மரபில் தோன்றும்போது கிளைகள் தோன்றுகின்றன.
சமணம் இந்தியாவில் ஸ்வேதாம்பரர், திகம்பரர் என்னும் இரு பிரிவாக உள்ளது. அதனுள் பல சம்பிரதாயங்கள் உள்ளன. பௌத்தம் புத்தருக்குப் பின் இருநூறாண்டுகளில் மகா காசியபர் காலத்தில் தேரவாதம் (ஸ்தவிரவாதம், நிலைமரபு) அல்லது ஹீனயானம் மற்றும் மகாயானம் (பெருமரபு) என பிரிந்தது. மேலும் மேலும் பிரிந்துகொண்டே இருந்தது. இறுதியாக இந்தியாவில் உருவான மரபு வஜ்ராயனம். அதுவே திபெத்தில் எஞ்சியிருக்கிறது. மிக அண்மையில் உருவான பௌத்த மரபு என்றால் அம்பேத்கர் உருவாக்கிய நவயான பௌத்த மரபைச் சொல்லலாம். இவ்வாறுதான் மதங்கள் பரிணாமம் அடைகின்றன.
இயற்கை மதங்களும் தீர்க்கதரிசன மதங்களும்
தீர்க்கதரிசன மதங்களின் தோற்றத்திற்கு அந்த தீர்க்கதரிசியை அடையாளப்படுத்தலாம். இயற்கை மதங்கள் எப்போது எப்படித் தோன்றின என்று கூறவே முடியாது. இயற்கைமதங்கள் மிகத்தொன்மையானவை என்பதனால் அவற்றில் தொன்மையான பழங்குடி வாழ்க்கையின் நம்பிக்கைகள், குறியீடுகள், சடங்குகள், வாழ்க்கை ஆசாரங்கள் ஆகியவை நிறைந்திருக்கும். காலந்தோறும் அவற்றை புதுப்பித்தபடியேதான் அவை முன்னகர முடியும். ஆனால் இயற்கை மதங்கள் நெகிழ்வானவையாகவும், உள்விரிவுகளை அனுமதிப்பவையாகவும், புதியவற்றை உள்ளிழுத்து வளர்பவையாகவும் இருக்கும்
இயற்கை மதம், தீர்க்கதரிசன மதம் ஆகியவற்றுக்கு அவற்றுக்கே உண்டான பிரச்சினைகள் மற்றும் எதிர்மறைக்கூறுகள் உண்டு. இயற்கை மதங்கள் தொன்மையான ஆசாரங்கள் நிறைந்தவையாக இருக்கும். உதாரணமாக இந்து மதத்தில் உள்ள நீத்தார்ச்சடங்குகள். சனிக்கிழமை ஒருவர் இறந்தால் ஒரு கோழியையும் கொன்று சிதையில் உடன் வைக்கவேண்டும் என்பது போன்ற நம்பிக்கைகள். இவற்றின் வேரைத்தேடிப்போனால் மனிதர்கள் சமைத்து உண்பதற்கு முந்தைய காலகட்டத்திற்கே சென்றுவிட வேண்டியிருக்கும்.
இவற்றில் எவை இன்று தீங்கானவை அல்லது காலத்துக்கு ஒவ்வாதவை என்றும் எவை தவிர்க்கமுடியாதவை என்றும் கண்டடைவது எளிதல்ல. ஞானிகளே அதைச் செய்ய முடியும். அவர்களும் கூட எளிதாக மாற்றங்களை கொண்டுவர முடியாது. அவற்றின் தொன்மையாலேயே அவை ஆழமாக வேரூன்றியவையாக இருக்கும். ஆகவே இம்மதங்களுக்குள் ஒரு தொடர் போராட்டம் நிகழ்ந்தபடி இருக்கவேண்டும். ராமானுஜர் முதல் வள்ளலார் வரை, கபீர் முதல் காந்தி வரை இந்து மதத்திற்குள் அது நிகழ்கிறது.
மறுபக்கம், தீர்க்கதரிசன மதங்கள் ஒப்புநோக்க தர்க்கபூர்வமானவையாகவும் கொஞ்சம் நவீனமானவையாகவும் இருக்கக்கூடும். ஆனால் அவற்றின் மையச்சிக்கல் ‘நாங்கள் சொல்வதே உண்மை. எங்களுடையது மட்டுமே கடவுள். மற்ற நம்பிக்கைகளும் மரபுகளும் எல்லாமே பிழையானவை, பொய்யானவை, அழிக்கப்படவேண்டியவை, அவற்றை நம்புகிறவர்கள் பாவிகள் அல்லது அறிவிலிகள், அவர்களை மீட்டாகவேண்டும்’ என்னும் அவர்களின் உறுதிப்பாடுதான். உலகில் மாபெரும் மதப்போர்களை உருவாக்கியவை தீர்க்கதரிசன மதங்களே. ஆப்ரிக்காவிலும், தென்னமேரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் மொத்த மக்களினங்களையே கொன்றழித்தவை அவை. மத்தியகால ஐரோப்பாவின் மதவிசாரணைகள் (Inquisition) போன்றவை ஹிட்லரின் யூதப்படுகொலைகள், ஸ்டாலினின் சைபீரிய வதைமுகாம்களை விடக் கொடூரமானவை, இந்தியாவிலும் அவை நிகழ்ந்துள்ளன (Goa Inquisition)
இயற்கை மதங்கள் அவற்றிலுள்ள ஆசாரவாதத்துடனும் தீர்க்கதரிசன மதங்கள் அவற்றின் ஒற்றைப்படையான மூர்க்கத்துடனும் போராடி முன்னகர்ந்துகொண்டே இருக்கவேண்டும். இயற்கை மதங்கள் நெகிழ்வானவை, அனைத்தையும் உள்ளடக்குபவை. அப்பண்பு பேணப்படவேண்டும். அவை இறுக்கமான அமைப்பாக ஆகிவிடக்கூடாது. அவ்வாறு ஆகுமென்றால் இயற்கைமதங்கள் பழமையான ஆசாரங்களின் தொகுப்பாக தேங்கிவிடும். தீர்க்கதரிசன மதங்கள் உறுதியான அமைப்பு கொண்டவை. அவை நெகிழ்வுத்தன்மையை அடையவில்லை என்றால் ஆதிக்க அமைப்பாக மாறி ஒடுக்குமுறையை ஆரம்பித்துவிடும். மதங்களுக்குள் ஞானிகள், சீர்திருத்தவாதிகள் தோன்றி இவற்றை நவீனப்படுத்திக்கொண்டும் விரிவாக்கிக்கொண்டும் இருக்கவேண்டும். அதைக்கொண்டே அந்த மதத்தின் மதிப்பு அளவிடப்படவேண்டும்.
இயற்கை மதங்களிலுள்ள தொன்மையான ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் மட்டுமே அந்த மதங்களின் ஒட்டுமொத்தம் என எடுத்துக்கொண்டு, அவற்றை காட்டுமிராண்டி மரபுகள் என அடையாளப்படுத்தி அழிப்பது முந்நூறாண்டுகளாக உலகில் நடந்துகொண்டிருக்கிறது. அந்தத் தாக்குதல்களால் பெரும்பாலான தொன்மையான இயற்கைமதங்கள் அழிந்துவிட்டன. அந்த மதங்களில் சேமிக்கப்பட்டிருந்த தொன்மையான பண்பாடுகளின் குறியீடுகளும், படிமங்களும் மறைந்தன. குறியீடுகளாகவும் படிமங்களாகவும் மாற்றப்பட்டிருந்த பண்பாட்டு அறிவும் தத்துவ ஞானமும் அழிந்தன.
இந்து மதம் போன்ற இயற்கை மதத்தில் இரு எல்லைகள் உள்ளன. ஓர் எல்லையில் அது ஒரு தொன்மையான பழங்குடி மதம். பழமையான சடங்குகள், நம்பிக்கைகள், ஆசாரங்கள் கொண்டது. இன்னொரு எல்லையில் அது தூய தத்துவ மதம். ஒரு கிராமதேவதையின் பூசாரியை நாராயண குரு சந்தித்து வணங்கும் காட்சி பதிவாகியிருக்கிறது. ஒரு புகைப்படமும் உண்டு. இரு எல்லைகள். ஒருவர் பழங்குடிப் பண்பாட்டில் இருக்கிறார். இன்னொருவர் தூய வேதாந்தி. இருவருமே இந்துக்கள்தான்.
பழங்குடி மரபிலிருந்து வந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையும் ஆசாரங்களையும் தொடர்ச்சியாக தத்துவ அறிஞர்களும் ஞானிகளும் எதிர்கொண்டபடியே இருப்பதை இந்து மரபில் காணலாம். ஒருபக்கம் அவர்கள் அந்த நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் சடங்குகளையும் காலத்திற்கு ஏற்ப புதுப்பித்து, காலத்திற்கு ஒவ்வாதனவற்றை களைந்துகொண்டே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அவற்றில் சிலவற்றை தத்துவத்திற்கும் மெய்ஞானத்திற்கும் குறியீடுகளாக ஆக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
சங்கரர் முதல் காந்தி வரை, திருமூலர் முதல் வள்ளலார் வரை அத்தனை ஞானிகளும் இந்த இரண்டு பணிகளையும் செய்துகொண்டே இருந்தார்கள். அந்த மரபு அழிவற்று தொடர்வது. இந்து மரபு தன்னைச் சீர்திருத்திக்கொண்டும் தத்துவார்த்தமாக ஆக்கிக்கொண்டும் செயலூக்கத்துடன் திகழ ஞானியரே காரணம். அவர்கள் நிகழாத காலகட்டமே இருந்ததில்லை. இன்னும் அவர்கள் வருவார்கள்.
ஆகவே, ஒருவர் இன்று நம்மிடம் வந்து இந்துமதம் என்பதே சில ஆசாரங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் மட்டுமே என சொல்கிறார் என்றால் அவர் உண்மையில் சங்கரர் முதல் காந்தி வரையிலான நம் ஞானியரை அவமதிக்கிறார். திருமூலர் முதல் வள்ளலார் வரையிலானவர்களைச் சிறுமை செய்கிறார். அதற்கு அவருடைய மறைக்கப்பட்ட மதவெறியோ, அரசியல் உள்நோக்கங்களோ காரணமாக இருக்கலாம். நாம் அச்சொற்களுக்குச் செவிகொடுத்தோம் எனில் நம்மையே கீழ்மைப்படுத்திக் கொள்கிறோம். அதைக்கூட செய்யலாம், நம் முன்னோரையும் ஞானியரையும் நாம் கீழ்மைப்படுத்திக் கொள்வோம் எனில் நம் தலைமுறைகளுக்குப் பெரும் பாவத்தைச் சேர்த்து வைக்கிறோம் என்றே பொருள்.
(மேலும்)