எழுத்தறிவித்தல், கடிதம்

அன்புள்ள ஜெ,

சாரதா தேவி முன்னிலையில் உங்கள் கையால் என் மகள் மஞ்சரிக்கு எழுத்தறிவித்தது இனிய நிகழ்வாக அமைந்தது. நிகழ்வின் அனுபவத்தையும் உங்கள் உரையையும் தொகுத்துக்கொள்ள இதை எழுதுகிறேன்.

எனக்கு மரபு, பண்பாட்டு செயல்பாடுகள், விழாக்கள் ஆகியவற்றின் மீது ஒரு விலக்கம் வளர்ந்திருந்தது. சில வருடங்களுக்கு நீடிக்கவும் செய்தது. உங்களை தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்த பிறகே அவற்றில் மீண்டும் ஈடுபாடு துளிர்த்தது. குழந்தைகள் பிறந்த பிறகுதான் அவர்களுக்கு எதையெல்லாம் அறிமுகம் செய்வது என்ற கேள்வியை எதிர்கொள்ள நேர்ந்தது. புராணங்களில், பண்பாட்டில் அறிமுகம் இல்லாமை எத்தனை கற்பனை வறட்சிக்கு இட்டுச்செல்லும் என்று உணர்ந்த பிறகுதான் கதைகள் சொல்ல ஆரம்பித்தேன். விழாக்களை நேர்மறையாக பார்க்கத் தொடங்கினேன்.

என்னுடைய இளம் வயதிலும் சரஸ்வதி பூஜை தினத்தில் புத்தகங்களை வாசித்தது உண்டு. அது பின்னர் புத்தகங்களுக்கு சந்தனம் குங்குமம் இட்டு அடுக்கி வைப்பதுடன் நின்றுவிட்டது. இம்முறை எழுத்தறிவித்தல் முதல்நாள் மாலை குழந்தைகளுடன் வாசிப்பதில் ஆரம்பித்து, மறுநாள் உங்கள் கையால் எழுதக் கற்றுக்கொடுத்து, பெற்றோர்களுடனான உரையாடலோடு முடிந்தது பன்மடங்கு அர்த்தமுள்ள நிகழ்வாக அமைந்தது.  எழுத்தறிவித்தல் என்பது ஒரு முக்கிய பண்பாட்டு அடையாளச் செயல்பாடு. கல்வியை ஆரம்பித்து வைப்பது மட்டுமன்று. நல்லெண்ணங்களுக்கும் நற்செயல்களுக்கும் ஒரு தொடக்கம்.  

முதல்நாள் மாலை குழந்தைகளுடன் பெற்றோர்கள் சாரதாதேவியை வணங்கி , அவர்களுக்கு உகந்த புத்தகத்திலிருந்து சில பகுதிகளை வாசிக்கலாம் என்றபோது நூலகத்தில் தேடியபோது சுனில் கிருஷ்ணனின் நாளைய காந்தி புத்தகத்தை கண்டடைந்தேன்.

என் மகளுக்கு கம்பன் சொற்களில் ராமனையும், சீதையையும் அறிமுகப்படுத்தினோம். நீலம் வழியே கண்ணனையும், ராதையையும் தெரிந்துகொண்டாள். சுனில் வார்த்தைகளில் காந்தியையும் வாசித்தளித்தோம்.

மறுநாள் காலையில் அதே சாரதா தேவி முன்னிலையில் நீங்கள் ஒவ்வொரு குழந்தையையும் மடியில் அமர்த்தி அரிசியில் ஓங்காரமும் அகரமும் கையைப் பிடித்து எழுத கற்றுக் கொடுத்து அவர்களுக்கு இனிப்பு ஊட்டியது மிகவும் மகிழ்வான ஒரு நிகழ்வு. வீடு வந்த பிறகு , உனக்கு எழுதச் சொல்லிக்கொடுத்தது யார் என்று கேட்பவர்களிடமெல்லாம் என் மகள்ஜெயமோகன் தாத்தாஎன்கிறாள்.

எழுத்தறிவித்தல் முடிந்து அனைவரும் ஓரிடத்தில் குடும்பமாக அமர்ந்திருக்கும் போது மிக இயல்பாக குழந்தைகளின் கல்வி பற்றி பேச ஆரம்பித்தீர்கள். இடையிடையே குழந்தைகள் சத்தமிடுவதும் பெற்றோர்கள் அடக்குவதாகவும் இருந்தபோதுகுழந்தைகளை இலகுவாக இருக்க விடுங்கள். அடக்கிக்கொண்டே இருக்காதீர்கள்என்று நீங்கள் ஆசுவாசப்படுத்தியது உதவியது. அதன் பிறகு அவ்வப்போது அவர்களின் கூச்சலுக்கு நடுவிலும் நீங்கள் கவனம் கலையாமல் உரையாடலைத் தொடர முடிந்தது ஆச்சரியம்தான். கல்வி பற்றிய அந்த உரையாடல் முக்கியமான ஒன்று.

உரையாடலின் பகுதியாக நீங்கள் சொன்னதை நினைவிலிருந்து இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன். அங்கு வர இயலாத நண்பர்களுக்கு உதவும் என நம்புகிறேன்.

ஜப்பானிய கல்வி முறைக்கும் அமெரிக்க கல்வி முறைக்கும் வித்தியாசம் உண்டு. அமெரிக்க கல்வி முறை குழந்தைகளை தானே கற்றுக்கொள்ளத் தூண்டுகிறது. மாறாக ஜப்பானிய கல்வி முறை ஒரு இறுக்கமான சட்டகத்துக்குள் அனைவரையும் வார்த்து வளர்க்கப் பார்க்கும் ஒன்று. எல்லா தகவல்களும் கணினியிலோ அலைபேசியிலோ இருக்கும் போது, அவற்றை மனப்பாடம் செய்து மூளையில் வைத்துக் கொள்வதற்கு பெரிய பயன் இருக்க முடியாது. அந்த தரவுகளையும் தகவல்களையும் கொண்டு ஒருவன் என்ன செய்யப் போகிறான் என்பதே கேள்வி. தரவுகளிலிருந்து தாவி முன்செல்வதுதான் ஒருவனது சமூக பங்களிப்பாக அமையப்போகிறது. அதற்கு அமெரிக்க கல்வி முறை மாணவர்களை புத்தகங்களை நோக்கி திருப்புகிறது. சுயமாக சிந்திக்க பயிற்சி அளிக்கிறது. அங்கு ஒரு மாணவி 10ம் வகுப்பு முடிக்கும்போது கிட்டத்தட்ட 250 புத்தங்களை வாசித்து முடித்திருக்கக்கூடும். பல புத்தகங்களைப் பற்றி பள்ளியில் நண்பர்களிடையே, ஆசிரியர்களுடனும் விவாதித்திருப்பாள்.

புத்தகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவே தொலைக்காட்சிக்கும் அலைபேசிக்கும் அழுத்தமான விலக்கமும் உண்டு. வீட்டில் விளையாடவும் காணொளி பார்க்கவும் அலைபேசியை கொடுத்தால் பெற்றோர் மறுநாள் பள்ளியில் சென்று ஆசிரியர் முன் நிற்க வேண்டும். அது ஒரு பிறழ்வாக பதிவாகும். பெற்றோருக்கு மனநல ஆலோசனை கொடுக்கப்படும்.  

ஏன் ஒரு குழந்தையை வளர்ப்பதில் அமெரிக்கா இத்தனை கவனம் எடுத்துக்கொள்கிறது. அதை எப்படி மொத்த சமூகமும் அங்கீகரிக்கிறது? ஏனென்றால் , அமெரிக்க கல்விமுறை நெறிப்படுத்துவது தனி ஒருவரின் மகனையோ மகளையோ அல்ல. வருங்கால அமெரிக்க குடிமகனை. தனது குடிமக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை திறம்பட வகுத்து நடைமுறைப்படுத்தவும் செய்கிறது. குழந்தைகள் வெவ்வேறு துறைகளில் வல்லுநர்களாவதற்கான அத்தனை ஆயத்தங்களும் பயிற்சிகளும் இந்த சட்டகத்துக்குள் உள்ளன. பொம்மைகள் போல ஒரே வகையான மாணவர்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் போல் அல்லாமல் உண்மையான கற்றலின் இனிமையை உணரச்செய்கின்றனர்.

இப்போது சிங்கப்பூர் ஜப்பான் போன்ற நாடுகள்கூட அமெரிக்க கல்வி முறையை நோக்கி நகர்கின்றன. எழுத்தாளர்களை அழைத்து கௌரவ பேராசிரியர்களாக அமர்த்தி படைப்பு செயல்பாடு, புத்தகங்கள் பற்றி வகுப்பெடுக்க வழிசெய்கின்றன.

இந்தியாவில் அமெரிக்க கல்விமுறை வெகு அரிதாகவே கிடைக்கிறது. திருமலை அவரது மகனை ரிஷிவேலி போன்ற பள்ளியில் படிக்க வைக்கிறார். அதற்காக ஊர் மாறிக்கொண்டார். அவரது மகனின் முதல் எழுத்துத் தேர்வே 10ம் வகுப்புக்கானதுதான். அதுவரை தேர்வு இல்லாத கற்றல்தான். நல்ல மதிப்பெண்ணில் தேறியிருக்கிறார். இத்தகைய கல்விக்கூடங்கள் ஒரு சிலவே உள்ளன. அவற்றிலும் பணம் அதிகம் செலவாகலாம். எனில் இந்தியாவில் உள்ள பெற்றோர்கள் இன்று என்ன செய்துவிட முடியும் ?  என்ன செய்ய வேண்டும்?

ஒன்று,  குழந்தைகளுடனான அழுத்தம் கொடுக்காத உரையாடல். ஒரு சராசரி குழந்தைக்கு சற்று அழுத்தம் கொடுத்தால் அது மேலும் ஊக்கம் கொண்டு முன்னேறும். ஆனால் ஒரு புத்திசாலி குழந்தைக்கு அழுத்தம் அதன் ஊக்கத்தை கெடுத்துவிடும். இரண்டுக்கும் நடுவில் நின்று கொண்டு,  குழந்தைகளை கைவிட்டும் விடாமல், சுமைகளையும் ஏற்றி வைக்காமல், அவர்களோடு உளத் தொடர்பில் இருப்பது முக்கியம். என்ன நடந்தாலும் வீட்டில் வந்து சொல்ல முடியும் என்ற சகஜத் தன்மை மட்டுமே வேண்டும். ஒரு விஷயத்தை வீட்டில் சொன்னால் அதனால் பிரச்சனையாகும் என்று எண்ணும் குழந்தைகள் வீட்டிலிருந்து விலகிச் செல்ல ஆரம்பிக்கின்றனர். அதை தவிர்த்தாலே பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.

இரண்டு, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் முறையாக கற்பித்தலை பயின்றவர்கள் அல்லர். மேலும்  நாம் நமது அச்சங்களையும் உணர்வுகளையும் அவர்கள் மீது கொட்டிக்கொண்டே இருப்போம். பக்கத்து வீட்டு குழந்தைக்கு தெரிந்த அளவு நம் குழந்தைக்கு தெரியாவிட்டால் பதறிவிடுகிறோம். எப்படி நோய்க்கு மருத்துவரிடம் செல்கிறோமோ அப்படி கல்விக்கு ஆசிரியர்களிடமே சொல்ல வேண்டும். அதை விடுத்து நானே மருந்து கொடுப்பேன் நானே கல்வி கொடுப்பேன் என்று சரியான பயிற்சி இல்லாத எந்த பெற்றோர் முயற்சி செய்தாலும் அது இடராகவே சென்று முடியும். கல்வி மீதான ஈர்ப்பையே அது அழித்துவிடும்.

மூன்றாவது, நல்ல ஆசிரியர்கள் அமைவது. இன்றைய தேதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் ஒரு தனியார் பள்ளியில் , நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வெறும் 7000 சம்பளத்துக்கு வேலை பார்க்கிறார்கள்.  அவர்கள் எவரும் B.Ed எனப்படும் குழந்தைகளுக்கு பயிற்றுவித்தல் குறித்த கல்வியை அடைந்தவர்கள் அல்லர். அவர்களது நீண்ட கால திட்டமே வேறு வேலைக்கு செல்வதுதான். ஆசிரியர் பணியில் இருப்பதே தற்காலிக ஏற்பாடுதான். அதிலும் ஒரே நேரத்தில் 60 குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டாயம். இங்கு குழந்தைகள் பெரிதாக எதையும் அடைந்து விட முடியாது.

ஆனால் அமெரிக்காவில் கற்பித்தலுக்கு வரும் பெரும்பாலான ஆசிரியர்கள் சொந்த செலவில் தன்னார்வலர்களாக வருபவர்கள். பணம் ஒரு பொருட்டல்ல என்ற நிலையை எட்டியவர்கள். தீவிர ஈடுபாட்டுடன் கற்பித்தலை பயின்றவர்கள். ஒரு ஆசிரியை விடுப்பு நாளில் பூங்காவில் இருக்கும் மரம் செடி கொடிகளை பற்றி அங்கு வருபவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். எந்த சம்பளமும் கிடையாது, ஆனால் மிகத் தரமான ஒரு வழிகாட்டியாக அங்கு நிற்கிறார். அத்தகையோர் மட்டுமே நல்ல ஆசிரியர்களாக அமைய முடியும்.

நான்காவது, ஒரே விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடிவது. வீடியோ பார்த்து யாருமே அறிஞர் ஆகி விட முடியாது. நேரடி அனுபவமும் புத்தகங்களும் மட்டுமே கற்றலுக்கு ஒரே வழி. குழந்தைகள் தொந்தரவு இல்லாமல் இருப்பதற்காக கையில் அலைபேசியை கொடுத்துவிட்டு அல்லது தொலைக்காட்சி பார்க்க அனுமதித்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் பெரியவர்கள் நிச்சயம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு துரோகம் இழைக்கிறார்கள். முதல் சிக்கல் நம் குழந்தைகளுக்கு கவனம் என்பதே இருப்பதில்லை. அதிவேகத்தில் காட்சிகள் மாறும் கார்ட்டூன்கள்தான் அவர்களுக்கு ஏற்றதாக உள்ளன. ஒவ்வொரு காட்சியும் ஒருசில நொடிகள்தான். இத்தகைய குழந்தைகள் 10 நிமிடங்களுக்கு மேல் எதிலும் ஆழ்ந்திருப்பதில்லை. ஒரு பொம்மையைக் கூட 10 நிமிடங்களுக்கு மேல் வைத்து விளையாடுவதில்லை.

அமெரிக்காவில் பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் அமெரிக்க உள்நாட்டு போர் பற்றிய புத்தகத்தை வாசிக்கிறாள். 400 பக்கம் உள்ள அந்த புத்தகத்தை முடிக்க அந்த பெண்ணுக்கு மூன்று நாட்கள் ஆகிறது. ஒரு நாளுக்கு சராசரியாக ஆறிலிருந்து ஏழு மணி நேரம் வாசிக்க முடிகிறது. வாசித்தவற்றை தொகுத்துக் கொண்டு பள்ளியில் சென்று தன்னுடைய பார்வையை முன் வைக்க முடிகிறது.  

நம்முடைய குழந்தைகள் எதிர் கொள்ள போகும் சவால் இந்த கவனம் தான். தொடர்ந்து ஆறு மணி நேரம் ஒரு புத்தகத்தில் கவனத்தைக் குவிக்க முடிந்த அமெரிக்க குழந்தைகள். 10 நிமிடத்திற்கு மேல் ஒரு பொம்மையில் கூட கவனத்தைக் குவித்து விளையாட முடியாத இந்திய குழந்தைகள். இவர்களில் யார் துறைசார் வல்லுநர்களாகவோ, படைப்பூக்கம் மிக்கவர்களாகவோ வளர முடியும்?  

ஐந்தாவது, நம் கனவுகளை பிள்ளைகள்மேல் திணிப்பது தேவையில்லை. சாத்தியமுமில்லை.  தன் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் லண்டனில் பொருளாதாரம் படித்து முடித்துவிட்டு பின்னர் தான் பொருளாதார மேதை ஆகப்போவதில்லை என்று சினிமாவுக்கு இயக்குனராக வந்துவிட்டார் ஒருவர். இப்படி பல உதாரணங்கள். பிள்ளைகளுக்கான எதிர்காலத்தை பெற்றோர்கள் அறுதியாக வகுத்து விட முடியாது.  பிள்ளைகள் தவறான வழியில் சென்று விடாமல் இருப்பதை மட்டும் கவனித்துக்கொண்டால் போதும். மற்றவற்றை அவர்களே தெரிவு செய்து கொள்வார்கள்.

நவீன் வீட்டில் உங்களை சந்தித்ததிலிருந்து இருநாட்களுக்குப் பிறகு திரும்பும் வரை நிறைவான நிகழ்வுகள். என் மனைவிக்கு அங்கு தான் செய்வதற்கு வேலை எதுவும் இல்லையே என்பதுதான் வருத்தம். எனக்கும் மனைவிக்கும் மகள்களுக்கும்கூட புதிய நண்பர்கள் கிடைத்தனர். அத்தனைக்கும் நன்றி. இதில் பங்கேற்க வழிசெய்த ஈரோடு கிருஷ்ணன், ஒருங்கிணைத்த அந்தியூர் மணி, உடனிருந்து எனக்கு உதவிய நவீன் அனைவருக்கும் நன்றிகள்.

அன்புக்கும் கல்விக்கும் நன்றி சார்,

பா.விஜயபாரதி

சென்னை 

முந்தைய கட்டுரைபொன்னி, சில குரல்கள்
அடுத்த கட்டுரைகவிதைகள் இதழ், அக்டோபர்