சக்திவேல், கடிதம்

விஷ்ணுபுரம் நிதி, கடிதம்

அன்புள்ள ஜெ,

விருது விழாவுக்கு தயாரிப்பாக திரு.சாரு நிவேதிதா அவர்களின் படைப்புகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

அநேகமாக விழாவில் இந்த வருடமும் நேரடியாக பங்கு கொள்வேன், இந்த முறை இந்தியா வருவதற்கு விழா மட்டுமே காரணமாக இருக்கும், சென்ற முறை வந்த பொழுது நீங்கள் என்னை சந்திக்க நேரம் அளித்ததும் உங்களுடனான உரையாடலில் இருந்து நான் பெற்றுக் கொண்டவையும் என்னளவில் மிகப்பெரிய விஷயங்கள். மிக்க நன்றி.

இன்று தளத்தில் சக்திவேலின் நிதியளிப்பு கடித்தை கண்டேன், மகிழ்ச்சி அளித்ததுமுன்னரே அவருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறேன், அவரது உற்சாகமும் அர்ப்பணிப்பும் மிக மகிழ்ச்சி அளிக்கிறதுஅவர் நம்  தளத்தில் எழுதும் கட்டுரைகள் மிக நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன, அவர் இலக்கிய விழாவுக்கு வரவோ பிற இடங்களுக்கு செல்லவோ உடல் தடையாக இருப்பது சரியென படவில்லை, இங்கே  அமெரிக்காவில் இந்த வகையான உடல் குறைபாடுகள் ஒரு மனிதனின் செயலுக்கு தடையே அல்ல, எல்லா கட்டிடங்களும்  சாலைகளும் பொது போக்குவரத்து வசதிகளும் உடல் குறைபாடு கொண்டவர்களையும் மனதில் வைத்துக் கொண்டே வடிவமைக்கப்படுகின்றன, இந்த ஒருவர் செயலாற்ற நினைத்தால் அவருக்கு தடையாக இருப்பது அகவயமான மனத்தடைகள் மட்டுமே, என்னை நானே ஆராய்ந்து சொல்லிக்கொள்கிறேன்.

இந்த நிலையில் சக்திவேல் போன்ற தீவிரமும் திறனும் அர்ப்பணிப்பும் கொண்டவர்கள் உடல் தடை காரணமாக, இலக்கியக் கூட்டங்களுக்கோ அல்லது கல்வி நிகழும் களங்களுக்கோ செல்ல முடியாமல் இருப்பதில் ஒரு மனித ஆற்றல் வீணடிப்பை காண்கிறேன். அவருடன் தொலைபேசியில் பேசி முடித்தவுடனேயே ஒரு யோசனை தோன்றிற்று, இப்பொழுதெல்லாம்  மின்சாரத்தில் இயங்கக்கூடிய சக்கர நாற்காலிகள் நிறைய புழக்கத்தில் இருக்கின்றன. அவை பெரிய அகலமான சக்கரங்கள் கொண்டிருப்பதால் சாலைகளில் கூட செல்லக் கூடியவையாக உள்ளன. ஆனால் அப்படிப்பட்ட ஒரு இயந்திரம் அவருக்கு உபயோகமாக இருக்குமா?. நாம் அதை அளித்தால் ஏற்றுக்கொள்வாரா?   இப்படி ஒரு மின்சார நாற்காலி அவருக்கு உபயோகமாகுமா ? ஆமெனில் எந்த வகையான நாற்காலி தேவைப்படும், இந்தியாவில் இப்படிப்பட்ட சிறந்த, பழுதாகாத, அப்படி பழுதானால் எளிதாக பழுதுநீக்க நிலையங்கள் உள்ள நாற்காலியை பற்றிய விவரங்களை சேகரிக்க சொல்கிறேன், எல்லாம் சரிவருமெனில் நாற்காலிக்கான  நிதி தேவையை நான் ஏற்றுக்கொள்கிறேன், அனால் இதைப்பற்றி சக்திவேலிடமும  பிறரிடமும் பேசும்பொழுது உங்கள் அறிவுறுத்தலின் படி தான் இது நிகழ்கிறது என்று சொல்வோம், அதற்க்கான அனுமதியை நீங்கள் தர வேண்டும், ஒரு ஆசிரியரிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார் என்றால் அவருக்கு எந்த தயக்கமும் இருக்காது , எனக்கும்  இந்த திட்டம் தொடர்பான எல்லா அறக் குழப்பங்களும் இல்லாமலாகின்றன. இதற்கான செலவை எனக்கும் உங்களுக்குமிடையே தொடரும் இந்த சோற்றுக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

அப்புறம் இன்னொரு விஷயம் ஆசானே, சக்திவேலிடம் தொலைபேசியில் பேசினேன் என்று சொன்னேன் அல்லவா? அது தவறு, நான் அவரை அழைத்து உரையாடலை ஆரம்பித்தேன் அப்புறம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர் பேசினார், நான் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆகவே அது ஒரு dialog அல்ல ஒரு molologue மட்டுமே, பேசி முடித்ததுமே பின்தொடரும் நிழலின் குரலில் அருணாச்சலம் இளவயது ஜெயமோகனை சந்திக்கும் தருணம் தான் நினைவுக்கு வந்தது

 “….அவருடன் இருந்த  இளைஞன் மிகுந்த உற்சாகத்துடன் கேட்பவர் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாமல், ஏதோ பேசியபடி இருந்து அவன் வருகையால் அது அறுபட்டு போய் பொறுமை இழந்தவனாக இருந்தான்……எஸ் எம் ராமசாமி அவனை அதிகம் பொருட்படுத்தவில்லை என்று தெரிந்தது அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவுமில்லை அவனுக்கு அவனுடைய பேச்சு தவிர எதுவும் முக்கியமில்லாதது போலிருந்தது

விஷ்ணுபுரமும், கொற்றவையும் , வெண்முரசும் விதையாக உள்ளிருக்கையில் ஒரு மனிதன் அப்படித்தான் இருந்திருக்க முடியும், வேறு எப்படியும் இருந்திருக்க முடியாதுசக்திவேலின் உள்ளும் சில விதைகள் உறங்குகின்றன என்று நினைத்துக்கொண்டேன்.

சங்கர் பிரதாப்

முந்தைய கட்டுரைமுகங்கள்
அடுத்த கட்டுரைமுடியரசன், கவிதைப் போட்டி