வட்டாரவழக்கும் கலையும்

ஓவியம் இளையராஜா

அன்புள்ள ஜெயமோகன்

நன்றாக இருக்கிறீர்களா.தங்களது 60 ஆண்டு மணிவிழா புகைப்படங்களை கண்டேன் .மனதிற்கு நெருக்கமாக இருந்தது .நான் உங்களை ஒரு தந்தையாக நினைத்து கொள்வேன் ஆனால் அருண்மொழி நங்கை அக்காவை  பார்த்தால் ஏதோ எனக்கு என் இல்லாத  மூத்த அக்காவை பார்த்தது போன்ற உணர்வை கொள்கிறேன் . நீங்கள் இருவரும் இன்னும் பல்லாண்டு மகிழ்ச்சியாக வாழவேண்டும்.

அங்காடித்தெரு காலத்திலே இருந்து எனக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கும் கேள்வி இது .வட்டார வழக்கு இலக்கியத்திற்கு நிலம் சார்ந்த வரையறை மற்றும் இன்னும் கொஞ்சம் நுட்பமாக கதை மாந்தர்களின் வாழ்க்கையை அறிய இயலும் .எடுத்துகாட்டாக கி.ராவின் இனக்குழுவை சேர்ந்த எனக்கு அவர் கதையில் பயன்படுத்தும் பொருட்கள் ,பழமொழிகள் ,வட்டார வழக்கினை நெருக்கமாக அறிய இயலும் .ஆனால் வட தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு இதே நெருக்கம் ஏற்படுமா என்று தெரியவில்லை . அப்படி புரியவிட்டாலும் காட்சிகளை நாவலிலும் ,சிறுகதையிலும் உணர்ந்து கொள்ள நிறைய நேரம் எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் திரைப்படங்களில் அது சாத்தியமா?

ஏனெனில் அங்கு வாசகனைப்போல் நின்று நிதானிக்க பார்வையாளனுக்கு நேரமில்லை . மேலும் அது காட்சி ஊடகம் அதில் வட்டார வசனங்களை கொண்டு வருவதன் மூலம் ஒரு நிலம் சார்ந்த வரையறை மற்றும் கொண்டு வர இயலுமா .வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில்  கர்ஜி பாய் எனக்கு அரிச்சலாக இருக்கு என்று பேசும் வசனம் ஒன்று வருகிறது .இந்த அரிச்சலாக என்பதை என் அம்மா ஏதாவது சாமி வந்து தன் கனவில் சொன்னார் என்ற பொருளில் சொல்லுவார் .அதாவது ஒரு தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட ஒரு நிலை .இதை மதுரையில் இருந்து நான் பார்த்து புரிந்து கொண்ட அளவுக்கு மதுரை நண்பனால் உள்வாங்க இயலவில்லை .அவன் அதை எரிச்சல் என்று பொருள் கொண்டே திரைப்படத்தை கண்டான் . எனவே திரைப்படங்களில் வட்டார வழக்கினை பயன்படுத்தும் நோக்கம் எந்தளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதை விளக்குங்கள் .

அன்புடன்

காசினி வேந்தர் பெருமாள்

அன்புள்ள காசினிவேந்தர் பெருமாள்,

எந்த கலை ஊடகத்திலானாலும் வட்டார வழக்கு என்பது பொதுமொழிக்குப் பழகியவர்களுக்கு அந்நியமானதாகவும் புரியாததாகவுமே இருக்கும்.

ஆனால் இரண்டு விஷயங்களை நாம் நினைவில்கொள்ள வேண்டும். முதல்விஷயம், இந்த பொதுமொழி என்பது என்றும் இருந்து வந்த ஒன்று அல்ல. அது சென்ற இருநூறாண்டுகளில் உருவாகி வந்த ஒன்று மட்டுமே. அதாவது அச்சு ஊடகம் உருவாகி, அனைவருக்கும் பொதுவான ஒரு மொழி தேவை என்னும் கட்டாயம் உருவானபோது மெல்ல மெல்ல இதழாளர்களாலும் இலக்கியவாதிகளாலும் மேடைப்பேச்சாளர்களாலும் புனையப்பட்ட ஒன்று அது.

அதற்கு முன்பு அத்தகைய பொதுமொழி இருந்ததில்லை. அன்று உரைநடையே இல்லை. செய்யுள்நடை இருந்தது. பேச்சுநடை இருந்தது. செய்யுள்நடை மிகக்கடுமையானதாகவும், செய்யுள் கற்றவர்களுக்கு மட்டுமே புரிவதாகவும் இருந்தது. பேச்சுநடை மக்கள் நாவில் புழங்கியது.

அன்று, ஒரு வட்டாரத்துக்கு என்று மட்டுமல்ல, ஒவ்வொரு சாதிக்கென்றும் தனி பேச்சுவழக்கு இருந்தது. அன்று ஒரு சாதி இன்னொரு சாதியுடன் இடைபழகுவது குறைவுஒரு வட்டாரத்து மனிதர் இன்னொரு வட்டாரத்துக்குச் செல்வது குறைவு. ஒவ்வொருவரும் அவரவர் தனிப்பேச்சுவழக்கிலேயே பேசினர். புரிந்துகொண்டனர். நான் சிறுவனாக இருந்தபோது எங்களூரிலேயே இஸ்லாமியரின் நடையை மற்றவர்கள் கொஞ்சம் கூர்ந்து கவனித்தாலொழிய புரிந்துகொள்ள முடியாத நிலை இருந்தது.

தொடக்ககால உரைநடை என்பது பேச்சுவழக்கை அப்படியே எழுதுவதாகவே இருந்ததுசிறந்த உதாரணம் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள். பின்னர் அச்சிதழ்கள் வந்தன. அவை இன்றைய பொதுமொழிநடையை உருவாக்கின. அது அச்சுமொழி என்றே அழைக்கப்பட்டது. அந்த நடை ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டதன் வழியாக அடையப்பட்ட ஒன்று. இதோ இக்கட்டுரையில் சொல்கிறேனே, ‘அடையப்பட்ட ஒன்றுஎன்ற சொல்லாட்சி. அது தமிழில் உள்ளதல்ல, ஆங்கிலத்தின் நேர்த்தழுவல் சொற்றொடர். அப்படித்தான் தொடக்ககால செய்திமொழியாக்கம் வழியாகவும் பின்னர் இலக்கியம் வழியாகவும் பாடநூல்கள் வழியாகவும் பொது நடை திரண்டு வந்தது.

அதாவது அந்த பொதுநடை செயற்கையானது, ஆங்கிலச் சாயல் கொண்டது. அது மட்டுமே போதும் வட்டாரவழக்கு வேண்டாம் என்றால் நாம் உண்மையில் தமிழின் தனித்துவம் மிக்க சொல்லாட்சிகளையும் ஒலியமைவையும் நிராகரிக்கிறோம். அச்சுமொழி தேவை, செய்தி முதல் சிந்தனைவரை அத்தனையும் அதிலேயே நிகழமுடியும். ஆனால் அது தொடர்ச்சியாக பேச்சுமொழிக்கு அணுக்கமாக ஆக முயன்றபடியே இருக்கவேண்டும். இல்லையேல் அது செத்தமொழிநடை ஆகிவிடும்.

இரண்டாவது விஷயம், ஒரு கலைப்படைப்பில் எல்லாம் தெள்ளத்தெளிவாக, எப்போதும் எல்லாருக்கும் புரியும்படி இருக்கவேண்டும் என்னும் எண்ணம் நம்மிடமுள்ளது . அது கலை என்றால் என்ன என்று அறியாமல் சொல்லப்படுவது. இலக்கியமோ சினிமாவோ, கலைப்படைப்பென்பதுசொல்லிமுடிக்கும்தன்மை கொண்டது அல்ல. தெளிவுபடுத்த அது முயல்வதில்லை. அது குறிப்புணர்த்துகிறது. கொஞ்சம் சொல்லி ,மிச்சத்தை ஊகிக்க வைக்கிறது. சிலவற்றை மறைத்துவைக்கிறது. அதன் வழியாக வாசகன் தன் கற்பனையை செலுத்தி முன்னேறி தனக்கான ஓர் அனுபவத்தை உருவாக்கிக் கொள்ளச் செய்கிறது.

ஆகவே கலைப்படைப்பில் வரும் தெளிவற்ற பகுதிகள், புரியாத பகுதிகள் அதன் பலவீனங்கள் அல்ல. அவற்றின் வழியாகவே வாசகன் தன் பங்களிப்பை ஆற்றுகிறான். வட்டார வழக்கு ஒரு நாவலில், சினிமாவில் வருமென்றால் அந்த வட்டாரத்திற்கு வெளியே உள்ள ஒருவருக்கு அது முழுக்கப் புரியாது. ஆனால் அந்த பாதிபுரிந்த தன்மையே அதன் கவற்சி, அதுவே அவனை மேலும் கற்பனைசெய்ய செய்கிறது. உண்மையில் தான் பேசிக்கொண்டிருக்கும் ஒரு வட்டாரவழக்கை விட கலைப்படைப்பில் இன்னொரு வட்டார வழக்கு வரும்போதே வாசகர்கள் கூர்மையாக கவனிக்கிறார்கள்.

இது வட்டாரமொழிக்கு மட்டும் அல்ல வட்டாரத்தகவல்களுக்கும் பொருந்துவது. மதுரை மாவட்ட விவசாயச்செய்திகள் திருச்சிக்கு ஆச்சரியமூட்டுவன. தேவர்சாதியின் சடங்குகளைக் கேட்டால் வன்னியர்கள் ஆச்சரியப்படுவார்கள். அவை சார்ந்த உணர்வுகளும் மாறுபட்டவை. ஆகவே அவை படைப்பில் தேவையில்லை என்று சொல்ல முடியுமா? அவ்வாறு எல்லா வட்டாரச் செய்திகளும், எல்லா வட்டார வாழ்க்கைகளும் கலைப்படைப்பில் வரும்போதுதானே பண்பாடு பதிவாகிறது?

உண்மையில், ஒரு கலைப்படைப்பு எந்த அளவுக்கு வட்டாரத்தன்மை கொண்டிருக்கிறதோ அந்த அளவுக்கு அது உலகு முழுக்க ரசிக்கப்படும். சென்ற காலங்களில் நாம் ரசித்த படைப்புகள் அப்படிப்பட்டவை. நாம் என்ன சோவியத் ருஷ்யாவின் பனியைக்கண்டோமா? ஆனால் நாம் அந்த நிலத்தில் கற்பனையில் வாழவில்லையா என்ன? அந்த வாழ்க்கை நுட்பங்களை நாமும் அடையவில்லையா என்ன?

சினிமாவிலேயேகூட பெருவெற்றி பெற்ற படங்கள் பெரும்பாலும் வட்டாரவழக்கு மொழி கொண்டவை, வட்டாரப் பண்பாட்டை முன்வைப்பவை. மற்ற மக்களுக்கு முழுமையாகப் புரியவில்லை. ஆகவே கூர்ந்து கவனித்து ரசித்தனர். ஆச்சரியமான ஒன்றுண்டு, அந்த வட்டாரவழக்கு நன்றாகப் புரியத் தொடங்கும்போது மக்களின் ஆர்வம் குறைந்துவிடுகிறது. மதுரை வட்டார வழக்குக்கு இன்று ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பல சினிமாக்களில் வந்து வந்து அது செவிக்குப் பழகிவிட்டது என்பதே காரணம்.

வட்டார வழக்கு என்பது ஒரு பகுதி மக்களின் பண்பாட்டில் இருந்து பிரிக்கமுடியாத ஒன்று. அவர்கள் இலக்கியத்தில் இடம்பெறவேண்டும் என்றால் அவர்களின் மொழியுடன் மட்டுமே இடம்பெற முடியும். எல்லா மக்களுக்கும் இடமுள்ளதாக அமையும்போதே கலை மெய்யான தகுதியை அடைகிறது

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா அறிவிப்பு
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசுக்கூடுகை 53