சென்ற அக்டோபர் 4 அன்று எழுத்தறிவித்தலுக்கு ஒரு குட்டி வந்திருந்தான். பெயர் என்ன என்று கேட்டால் சுபாவமாக ‘வந்தியத்தேவன்’ என்றான். செம்பா எங்கே என்றேன். ‘வீட்டிலே கட்டி போட்டிருக்கு’ என்றான். அவன் அப்பா ‘பக்கத்துவீட்டு குழந்தைய குந்தவைன்னு சொல்றான் சார்’ என்றார். ‘அப்டியா?’ என்றேன். ‘ஆமா, அவ குந்தவை…’ என்றான். முழுக்கமுழுக்க பொன்னியின்செல்வன் உருவாக்கிய நிகருலகிலேயே வாழ்கிறான்.
இந்தச் செல்வாக்கு சாதாரணமானது அல்ல. நம் குழந்தைகள் முழுக்க முழுக்க அமெரிக்காவின் வணிகசினிமா உலகம் உருவாக்கிய மெய்நிகர் உலகில், அவர்களின் கதைநாயகர்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்கிறார்கள். முழுக்க முழுக்க ஐரோப்பியப் பண்பாட்டில் வேரூன்றியவை அவை. அவற்றில் உள்ளம் ஊறி வாழும் குழந்தைகளுக்கு நம் பண்பாட்டின் தொடர்பே இருப்பதில்லை. அந்த இழப்பு மிகப்பெரியது. அவர்களுக்கு நம் கலையிலக்கியங்கள் மட்டுமல்ல; குடும்பம், மொழி, மதம், மரபு என நாம் நம்முடையதென கருதும் எந்த உணர்வுநிலைகளும் உரிய முறையில் அறிமுகமாவதில்லை. அவர்களை நாம் அமெரிக்காவை மையமாகக்கொண்ட நுகர்வுப் பண்பாட்டுக்குப் பலிகொடுக்கிறோம் என்பதே உண்மை.
நுகர்வுப்பண்பாட்டின் ஓர் அலகு என ஆகும் ஒருவர் உண்மையில் ஓர் அடிமை. அவர் தன் வேர்களை, தனித்துவத்தை இழக்கிறார். அதன்பின் அவருக்கு மகிழ்ச்சி என்பது நுகர்வில் மட்டுமே. கலாச்சாரவேர்கள் இல்லாதவர்களுக்கு கலை, இலக்கியம் சார்ந்த இன்பங்கள் இல்லை.விழாக்கொண்டாட்டங்களும் பயணங்களும்கூட அவருக்கு மகிழ்வளிப்பதில்லை. வாங்குவதில் இன்பம் தேடும் ஒருவர் ஒருபோதும் நிறைவடைய முடியாத ஒரு பந்தயத்தில் சிக்கிக்கொள்கிறார். உழைப்பு, நுகர்வு, மீண்டும் உழைப்பு என்னும் நச்சுவளையத்தில் காலம் ஓடி மறைகிறது. அதை எதிர்ப்பதற்குக்கூட அவருக்கு ஒரு பண்பாட்டு வேர் தேவைப்படுகிறது.
இன்று உலகமெங்கும் நாடுகள் தங்களுக்கான தனியடையாளத்துக்காக முயல்கின்றன. பொதுவுடைமைநாடு என கூறிக்கொள்ளும் சீனா கூட ஜெங்கிஸ்கான் போன்ற அவர்களின் தேசியத்தலைவர்களைப் பற்றி மாபெரும் பொருட்செலவில் சினிமாக்கள் எடுத்து உலகமெங்கும் கொண்டு செல்கிறது. தமிழகத்தில் அப்படிப்பட்ட அரசு நிதி சினிமாவுக்கு இல்லை, அது இயல்வதுமல்ல. வணிகசினிமா மட்டுமே அதைச் செய்யமுடியும். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அதற்கு பல சிக்கல்கள். தமிழ் மக்களின் ரசனையை அந்த சினிமா நிறைவுசெய்யவேண்டும். கூடவே தமிழரல்லாதவர்களும் அந்த சினிமாவை ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லையேல் தேவையான நிதியை அது தேடமுடியாது. பல சமரசங்கள் வழியாக அனைவருக்கும் பிடிக்கும் ஒரு படத்தை எடுத்து அதை அடுத்த தலைமுறையின் ரசனைக்கு முன் நிறுத்துவதென்பது மாபெரும் சவால். பொன்னியின் செல்வன் வென்றிருப்பது அங்கேதான்.
கொடூரக்காட்சிகள், கொடியவர்களான எதிர்நாயகர்கள் இல்லாத சினிமா. சென்றகால வரலாற்றை எதிர்மறைப்பண்புகள் இல்லாமல் சித்தரிக்கும் ஒரு படைப்பு. ஆனால் இன்றைய பரபரப்பு சினிமாக்களின் உலகில் அதை நிலைநாட்டியாகவேண்டும். அபாரமான பிடிவாதத்துடன் அதை மணி ரத்னம் செய்துள்ளார். இன்னும் நெடுங்காலம் இச்சிறுவர்களின் உள்ளத்தில் வந்தியத்தேவனும் பொன்னியின் செல்வனும் வாழ்வார்கள். அவர்களிடம் சோழமும் காவிரியும் கனவென நீடிக்கும்