அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
பழங்குடியினத்தவர்கள் தாவரங்களுடன் கொண்டிருக்கும் நெருக்கமான தொடர்பு குறித்தான ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறேன். குறிப்பாக அவர்கள் சமயச் சடங்குகளில் பயன்படுத்தும் போதைப் பண்புகள் கொண்ட தாவரங்கள் குறித்து அறிய ஆர்வம் கொண்டிருக்கிறேன். இவை குறித்த ஆய்வுகளை கல்லூரியில் மாணவர்களுக்கு அளிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் நான் தனிப்பட்ட முறையில் தரவுகளை சேகரித்து கட்டுரைகள் எழுதுகிறேன்.
எந்த பழங்குடியினப் பகுதிகளுக்கு சென்றாலும் இந்த தாவரங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பதில் ஆர்வமுடன் இருப்பேன்.
கோவை கவிதை முகாமில் கலந்து கொள்ளும் முந்தைய நாள் தருணுடன் பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு புகைப்படங்கள் எடுப்பதற்காக சென்றிருக்கையில் கொஞ்சமும் எதிர்பாராமல் யானைப் புளி எனப்படும் எண்டடா ரீடி என்னும் கொடியை பார்த்தேன். அதை நேரில் பார்க்க முடியும் என்று நினைத்திருக்கவில்லை. மாபெரும் பச்சை வாட்களைபோல அவற்றின் காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன.
இக்கொடியை ஆப்பிரிக்காவில் கனவுக்கொடி என்று அழைக்கிறார்கள். ஆப்பிரிக்க பழங்குடியினர் இதன் கடினமான விதைகளை உடைத்து, எரித்து அந்த போதை தரும் புகையை நுகர்கிறார்கள். இந்த புகை மறைந்துபோன முன்னோர்களிடம் தொடர்புகொள்ளவும், கடவுளிடம் பேசவும் வைப்பதாக நம்புகிறார்கள்.
அங்கிருந்த (ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன் போலவே இருந்த) பழங்குடியின முதியவர் ஒருவரின் அனுமதி பெற்று கொஞ்சம் விதைகளை எடுத்து வந்தேன். சிலவற்றை பரிசளித்துவிட்டு சில விதைகளை என் அலுவலக மேஜையில் வைத்திருக்கிறேன்.
கொழிஞ்சாம்பாறை எனும் கேரளப் பகுதியில் சந்தித்த ஒரு பழங்குடியினத்தவர் உலர்ந்த மிளகுக்கொடிகளை துண்டுகளாக்கி இடுப்பில் கட்டி வைத்திருக்கிறார், அவ்வப்போது அவற்றை பீடி போல புகைக்கிறார். அவர்கள் இனத்தில் அது பலநூறு ஆண்டுகளாக பழக்கம் என்றார் . மிக மிக புதிதாக அந்த உபயோகத்தை கேள்விப்பட்டேன்.
அவர் எனக்கு சில வெள்ளை இஞ்சித் துண்டுகளை அளித்தார். அவை ஷாம்பு ஜிஞ்சர் (Zingiber zerumbet) எனப்படும் தாவரத்தின் அடிக்கிழங்குகள். சிறு கூம்பு போல அவற்றிலிருந்து உருவாகும் மலர்களில் சேகரமாகும் பிசிபிசுப்பான திரவம் தலைமுடியை அலச பயன்படுத்தப்படுகிறது என்றார். இப்போது அவை என் வீட்டில் செழித்து வளர்கின்றன. நாங்கள் அதை பயன்படுத்திக் கொண்டும் இருக்கிறோம். நல்லதொரு ஆய்வு கட்டுரையையும் அதை குறித்து எழுதி வெளியிட்டேன். இதுபோல தொல்குடித்தாவரவியல் துறை அளிக்கும் சுவாரஸ்யங்கள் எண்ணற்றவை.
முதன்முதலாக நான் வாசித்த பழங்குடியினத்தவர்கள் சடங்குகளில் பயன்படுத்தப்படும் போதையேற்றும், மனமருட்சி உண்டாக்கும் மற்றும் இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் தாவரங்களான Enthoegens குறித்த நூல் ’’தெய்வங்களின் தாவரங்கள்’’.
அமெரிக்க உயிரியலாளர், மனிதவியலாளர் மற்றும் நான் ஈடுபட்டிருக்கும் தொல்குடித்தாவரவியல் துறையை தோற்றுவித்தவரான ரிச்சர்ட், புல்லரிசிப் பூஞ்சையிலிருந்து LSD யை கண்டறிந்த வேதியியலாளர் ஆல்ப்ரெட் ஹாஃப் மேனுடன் இணைந்து எழுதிய நூல் இது.(“Plants of the Gods: Their Sacred, Healing, and Hallucinogenic Powers -Richard Evans Schultes & Albert Hofmann Christian Hofmann)
20 ஆண்டுகளுக்கு முன்னர் இரவலாக வாசிக்க கிடைத்த இந்த நூலே நான் ஈடுபட்டிருந்த விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கழிவுகளை மட்க செய்து உரமாக மாற்றி மண்வளத்தை, பயிர்களின் சாகுபடியை மேம்படுத்தும் ஆய்வுகளிலிருந்து முற்றிலுமாக வெளிவந்து Ethnobotany என்னும் தொல்குடிதாவரவியலுக்குள் என்னை அழைத்து சென்றது.
ரிச்சர்ட் பல ஆண்டுகள் அமேஸான் பழங்குடியினருடனேயே வாழ்ந்து இந்த நூலை எழுதினார்.இந்த நூல் போதைத்தாவரங்கள் ஏற்படுத்தும் உளவியல் மற்றும் சமூகவியல் தாக்கம், பழமையான சமூகங்களில் உள்ள இனவியல், வரலாறு மற்றும் நரம்பு மருந்தியல் தகவல்கள் அடங்கிய மிக பயனுள்ள தொகுப்பு.
“தெய்வங்களின் தாவரங்கள்” அமேஸான் பழங்குடிகள் உள்ளிட்ட உலகின் பல பழமையான கலாச்சாரங்களின் மதச் சடங்குகள் சார்ந்த, பரவசமூட்டும், கிளர்ச்சியடையச் செய்யும், மாயத்தோற்றம் உண்டாக்கும் அல்லது மனம் பிறழ செய்யும் பொருட்களை அளிக்கும் தாவரங்கள், அச்சடங்குகளின் தெய்வங்கள், அவற்றின் வேதிப்பொருட்கள், பிற தாவரவியல் தகவல்கள், அவை கிடைக்கும் பருவங்கள் , குணப்படுத்தும் நோய்கள், அவற்றை மருந்தாக தயாரிக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விவரிக்கிறது. இவற்றின் பக்க விளைவுகளும் நச்சுத்தன்மையால் விளையும் ஆபத்துக்களும் கூட குறிப்பிடப் பட்டிருக்கிறது.
பழங்குடியின மதச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் புனிதத் தாவரங்களின் நூற்றுக்கணக்கான அழகிய வண்ணப் புகைப்படங்களும், விரிவான விளக்கங்களும் கொண்ட இந்நூல் ஒரு அரிய தாவரவியல் பொக்கிஷம்.
இதில் மாண்ட்ரேக் கிழங்குகள், ஊமத்தை மலர்கள், கொடைக்கானலில் இப்போது கிடைக்கும் போதைக்காளான்கள், அட்ரோபா பெல்லடோனா, மெக்ஸிகோவின் பெயோட்டி போதைக்கள்ளிகள் உள்ளிட்ட பல போதைத் தாவரங்கள் விவரிக்கப்பட்டிருக்கிறது.
இந்நூல் அளித்த ஆர்வத்தினால் hallucinogenic plants குறித்து தமிழில் ஒரு நூல் எழுதவிருக்கிறேன். அவை குறித்த தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.மெக்ஸிகோவின் நீலக்கள்ளிகளிலிருந்து கிடைக்கும் டெக்கீலா, ஜப்பானின் அரிசி மதுவான ஸாகெ, கோவாவின் முந்திரிக்கனிச்சாற்றின் ஃபெனி ஆகியவற்றை குறித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.
வெண்முரசிலும் பல வகையான தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மது வகைகளும், சிவமூலி, அகிபீனா, சோமக்கொடி போன்றவைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
பீமன் பாறைக்குழிவுளில் நொதிக்க வைத்து குரங்குகளுடன் அருந்தும் பழ மது, ஈச்சங்கள், பனங்கள், பிரபாச புல்லிலிருந்து வடித்தெடுக்கப்படும் மது, பீதர்நாட்டு எரி மது, யவன மது, திரிகர்த்த நாட்டு கடும் மது, இன் தேறல்கள், தானியங்களை நொதிக்க செய்து எடுக்கும் சூரம், காட்டுக்கொடிகளை கலந்து நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுக்கப்பட்ட சோமகம், ஊனை புளிக்க வைத்து எடுக்கப்பட்ட துர்வாசம். அகிபீனாவின் இலைகளை கலந்து செய்யப்பட்ட ஃபாங்கம், மதூக மலரை அழுகச் செய்து நீரில் கொதிக்க வைத்து எடுக்கப்படும் மலர் மது, பீமனுக்கு அளிக்கப்படும் விஷம் கலந்த வடிநறவம் என்று பல வகைகள் வெண்முரசில் இருக்கின்றன.
பூரிசிரவஸின் நாட்டின் மத்யகீடம் என்னும் கடுமையான மலைமது இளம்சூடாக இருக்கையில் சிறுவிரலளவான பெரிய வெண் புழுக்களை அதில் போடுவார்கள். அவை வெம்மையை அறிந்ததும் உயிர்கொண்டு எழும். விழித்த கணம் முதல் மதுவில் திளைத்து குடிக்கத்தொடங்கும். துழாவித் துடித்து உள்ளறைகளெங்கும் மது நிறைந்து தடித்து உயிரிழந்து ஊறி மிதக்க தொடங்கும்போது எடுத்து ஆவியில் வேகவைத்து அரிசி அப்பங்களின் நடுவே வைத்து உண்பார்கள்.
கிழங்குகளிலிருந்தும் அரிசியிலிருந்தும் வாற்றி எடுக்கப்பட்ட எரியும் அனல் துளி போன்ற கடும் மது, வெல்லத்தை நீரில் ஊறவைத்து புளிக்கவிட்டு நொதித்த கலவையை மெல்லிய வெம்மை அளித்து ஆவியாக்கி அதை குளிரவைத்து எடுக்கும் மரபான மது, ஊன் புளிக்க வைத்த குமட்டும் கெடுமணம் கொண்டதும் பித்தெடுக்கவைப்பதுமான அரிதாக சிலரால் அருந்தப்பட்ட மது ஆகியவையும் வெண்முரசில் சொல்லப்படுகிறது.
வெண்முரசின் வேள்விகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சோமக்கொடி, சோமச்சாறு, சோமரசம் ஆகியவை சடங்குகளில் பயன்படுத்தப்படும் entheogen வகையில் வருகிறது.
இந்த சோமக்கொடி அல்லது செடி என்னவென்பது இன்னும் அவிழ்க்கப்படாத ஒரு புதிராகவே இருக்கிறது.
ராஜசூயம் போன்ற பெரு வேள்விகளில் மட்டுமல்லாது வேறு பல இடங்களிலும் சோமக்கொடியின் ரசம் வெண்முரசில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
முதற்கனலில் பொற்கிண்ணத்தில் சியாமை கொண்டுவரும் சோமக்கொடி போட்டு காய்ச்சி எடுத்த புதுமணம் கொண்ட திராட்சை மதுவை சத்யவதி அருந்துகிறாள். அதை எடுத்து மெல்லக்குடித்தபடி இருளையே பார்த்துக்கொண்டிருக்கும் சத்யவதிக்கு அவ்விருளின் துளி ஒன்றை அவளுள் ஏற்றிக்கொள்வது போல, உள்ளே விரிந்து பரவும் ஒளிக்கு மேல் இருளைப் பரப்புவதே அதன் பணி என்பதுபோல சோமம் பரவுகிறது
//நீர்ச்சுனைகளுக்கு அருகே நீரோடும் பசுங்குழாயெனக் கிடக்கும் சோமச்செடி. அதற்கு நீராழத்தின் வாசனை. நீரிலிருந்து ஆழத்தை மட்டும் எடுத்து சேர்த்துக் கொள்கிறது. நிழல்களாடும் ஆழம். அடித்தட்டின் பல்லாயிரம் மென்சுவடுகள் பதிந்த மௌனம். சோமம் உடலுக்குள் ஒரு காட்டுக்கொடியை படரவிடுகிறது. நரம்புகளில் எங்கும் அது தளிர்விட்டுப் பரவுகிறது//
இந்த வரிகள் சத்யவதிக்குள் சோமபானம் செய்வதென்ன என்பதை சொல்லுகின்றது
வேதங்களில் சோமரசம் எடுப்பதை குறித்து பல இடங்களில் வெண்முரசில் சொல்லப்பட்டிருப்பது போலவே சொல்லப்பட்டிருக்கிறது. பழங்காலத்தில் சோமரசம், சோமக்கொடிகளை கல்லில் இட்டு இடித்து சாறு எடுக்கப்பட்டிருக்கிறது பார்லியுடன் சேர்த்து வேக வைக்கப்பட்டோ அல்லது பால்/ தயிரில் கலந்தும் தயாரிக்கப்பட்டிருக்கிறது
பன்னிரு படைக்களத்தில் இந்திரபிரஸ்த வேள்வியில் பைலர் தௌம்யரிடம் சென்று ஆணை பெற்று வைதிகர்களின் அவைக்கு வந்து வேதம் பிறந்த தொல்மொழியில் அங்கே சோமம் பிழியவிருப்பதை அறிவிக்கிறார்.பதினெட்டு இளைய வைதிகர்கள் ஈரப்பசும்பாம்புக் குஞ்சுகளைப்போல சுருட்டப்பட்டிருந்த சோமக் கொடிகளை மூங்கில்கூடைகளில் சுமந்துகொண்டு வந்து எரிகுளங்களுக்கு முன்னால் வைக்கின்றனர்.
“தேவர்களுக்கு இனியதும் தெய்வங்களுக்கு உரியதுமாகிய சோமச்சாறு இங்கு பிழியப்படுவதாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று தருமன் ஆணையிட்டதும் மரத்தாலான நூற்றெட்டு உரல்களில் இளம் வைதிகர்கள் சோமக்கொடியை அவ்வுரல்களுக்குள் இட்டு வேதத்தின் சந்தத்திற்கு ஏற்ப மெல்லிய உலக்கைகளால் குத்தி நசுக்கி, அப்பசும்விழுதை எடுத்து வலக்கை கீழிருக்க பிழிந்து மரக்கிண்ணங்களில் தேக்குகின்றனர். நூற்றெட்டு கிண்ணங்களில் சேர்க்கப்பட்ட சோமச்சாறு முப்பத்தாறு எரிகுளங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.தர்ப்பையால் சோமச்சாறை தொட்டு எரியில் எழுந்த தேவர்களுக்கு அளித்து வேதம் ஓதுகின்றனர் வைதிகர்கள்.
ரிச்சர்டின் ’’தெய்வங்களின் தாவரங்கள்’’ நூலுக்கு அடுத்து வெண்முரசில் இவற்றை வாசிக்கையில் இரண்டும் இணைந்து தொல்காலத்தில் எப்படி சடங்குகளில் இவை பயன்படுத்தப்பட்டிருக்கும் என்னும் சித்திரம் உருவானது.
வெய்யோனில் கெளரவர்கள் ஜெயத்ரதனுடனும் நடத்தும் கள்ளாட்டில் துரியோதனன் “கள் அல்ல. இமய மது அது. திரிகர்த்தர்களின் நாட்டிலிருந்து வருகிறது. சோமக்கொடியின் நீரைப் பிழிந்து அதில் நறுமணம் சேர்த்து இந்த மதுவை செய்கிறார்கள். இதை அருந்துபவர்கள் விண்ணுலகுக்குச் சென்று அங்குள்ள தேவகன்னியருடன் ஆடி மீள்வர்’’ என்கிறான்
இமைக்கணத்தில் அர்ஜுனனிடம் இறைவைன் ’’மூன்றுவேதம் அறிந்தோர், சோம மது உண்டோர், பழியகன்றோர் என்னை வேள்விகளால் வழுத்தி வானுலகை வேண்டுகின்றனர்’’ என்கிறார்
இமைக்கணத்திலேயே உதங்கரிடம் இளைய யாதவர் சோம மதுவின் இனிமையை குறிப்பிடுகிறார்
வெண்முகில் நகரத்தில் திருதிராஷ்டிரர் திரௌபதி நகர் நுழைகையில் ’’நகரத்தையே சோமச்சாறால் நிரப்புங்கள்’’ என ஆணையிடுகிறார்.
பல வேள்விகளில் சோமரசம் சிறு பொற்கிண்ணங்களில் பரிமாறப்பட்டு அவையமர்ந்திருந்த அரசர்கள் அனைவருக்கும் அளிக்கப்படுகிறது.
சோமனுக்குப் பிடித்த உணவு சோமரசத்தில் ஊறவைத்த மானுட இதயங்கள் என்கிறது பிரயாகை
இப்படி சோமக்கொடி, அது முக்கிய சடங்குகளில் இடம்பெற்றிருப்பது, சோமக்கொடியிலிருந்து சாறு பிழிவது, சோம ரசம் அருந்துவது என பல இடங்களில் வெண்முரசு சோமக்கொடியை பேசுகிறது
அதர்வ வேதம் சோமச்செடியினை போன்ற இயல்புடைய பிற செடிகளையும் குறிப்பிடுகிறது அவற்றில் கசகசா செடி, பார்லி மற்றும் தர்ப்பை ஆகியவை உள்ளன. அதர்வ வேதம் கூனைப்புல் எனப்படும் Imperata cylindrica என்னும் நாணல் வகையையும் போதை தருவதாக குறிப்பிடுகிறது. இந்த நாணலின் தோற்றம் வெண்முரசின் பிரபாச புல்லை ஒத்திருக்கிறது.
எளிதில் எரியும் தன்மை கொண்ட, காட்டெரிக்கு காரணமாக இருக்கும், வெண்னிற மலர்க்குவையை கொண்டிருக்கும் இந்த புல்லை வெண்முரசு படைப்புல் அத்தியாயத்தில்;
//அந்நாணல் தன்னுள் நெய் நிரப்பி வைத்திருப்பது. ஆகவே செந்தழலுடன் சீறி வெடித்து எரியத்தொடங்கியது.
’’நாணல் புல்லின் நுரை போன்ற வெண்மலரின் மகரந்தத்தையும் தேனையும் பிழிந்தெடுத்துச் செய்த மது.”
’’சதுப்பில் மலரும் பெருங்குவளை மலரின் தேனும் பொடியும் சேர்த்த மது பலராலும் விரும்பப்பட்டது. ஒருவகை கொடியின் தண்டு மதுவில் நுரையை நிறைத்தது.//
இந்த விவரிப்புக்கள் பிரபாசபுல்லென்பது கூனைப்புல்லாக இருக்கலாம் என்று எண்ண வைக்கிறது
அதே பகுதியில் //பிரஃபாச க்ஷேத்திரத்தின் கடலோர எல்லையில் செறிந்திருக்கும் பெருநாணலின் இளந்தளிரைப் பிழிந்து சாறெடுத்து அதை மதுவுடன் கலக்கலாம் என்று கண்டுபிடித்தனர். அது மதுவின் மயக்கை மேம்படுத்தியது. அதை அருந்தினால் எண்ணங்களும் கனவுகளும் மட்டுமன்றி கண்முன் தெரியும் காட்சிகளும்கூட நொறுங்கி ஆயிரம் பல்லாயிரம் சிதறல்களாக மாறிவிடும் என்று கூறினார்கள்//. என்று சொல்லப்பட்டிருக்கும்.
மெக்ஸிகோ பழங்குடியினர் இப்போதும் பெயோட்டி கள்ளிகளை உலரவைத்து சமயச் சடங்குகளில் பயன்படுத்துகின்றனர். இந்த கள்ளியை உண்ணும் போது வெண்முரசில் சொல்லப்பட்டிருப்பதைப்போலவே உலகம் கலைடாஸ்கோப்பின் வண்ணச்சிதறல்களாகி விடுவதாக சொல்லுகிறார்கள். மெக்ஸிகோவில் பெயோட்டிகள் நோய்களை குணப்படுத்தும் சடங்குகளிலும் உபயோகிக்கப்படுகின்றன.
வேதங்களும் புராணங்களும் , சோமக்கொடியை சுற்றி பெரும் மாயமும் தெய்வீக சக்தியும் இருந்ததாக சொல்கின்றன சோமக்கொடியே ஒரு தெய்வமாகக் கருதப்பட்டது,
சோமம் கடவுளாகவும் கருதப்பட்டு சோமன் என்னும் தெய்வமாகவும் வழிபடப்பட்டது. சோமன் மண் சார்ந்த தெய்வமாகக் கருதப்பட்டான். வேதப்பாடல்கள் பத்து வெண்ணிறக் குதிரைகள் கொண்ட மூன்று சக்கரங்கள் கொண்ட தேரில் வரும் இவனைப் போற்றுகின்றன. “சோமலதை” எனும் ஒருவகைச் செடியிலிருந்து பெறப்பட்ட போதை தரும் பானமாக இவன் கருதப்படுகிறான்.
இதுபோலவே கிரேக்க தொன்மங்களில் டயோனிசஸ் திராட்சை அறுவடை, திராட்சை ரசம், செழிப்பு, பண்டிகைகள், மதக் கொண்டாட்டங்கள், சடங்கின் போது ஒருவருக்கு ஏற்படும் ஆவேசம் மற்றும் நாடகக்கலையின் கடவுளாகக் கருதப்படுகிறார் . இவரே ரோமானிய தொன்மங்களில் பேக்கஸ் எனப்படுகிறார்.
‘’சோமா குடிப்பவருக்கான இரவு இன்பத்திற்கானது
தூய சோமத்துளிகள் தயிருடன் கலக்கப்படுகின்றன
பரிபூரண பலத்துடன் இருக்கும் இந்திரனே
நீ சோம பானத்தை அருந்தவே உருவானவன்
வலிமை மிக்க இந்திரனே,
இசையை நேசிக்கிறவனே, இந்த வேகமான சோமபானம்
இந்த முனிவர்களுக்குள் நுழைந்து
அவர்களுக்கு ஆனந்தத்தைக் கொண்டு வரட்டும்’’
இப்படி பல நூறு பாடல்களில் சோமத்தை குறித்து சொல்லும் ரிக் வேதம் சோமத்தாவரங்களில் பல வகைகள் இருந்ததாகவும் சொல்லுகிறது
ரிக்வேதத்தின் 9வது மண்டலம் 114 பாடல்களில் சோம ரசத்தை தூய்மைப்படுத்துவதை விவரிக்கிறது.. ஒரு பெண் தன்னை ஆண்களின் முன்பாக கவர்ச்சியானவளாக காட்டிக்கொள்ள சோமச்செடிகளை மென்று தின்றாள் என்கிறது இதே வேதம்.
சோம ரசம் பிழிகையில அதனுடன் பொன்னும் அருமணிகளும் சங்குகளும் நன்முத்துக்களும் வைடூர்யமும் கலந்து இடிக்கப்பட்டதாவும் பண்டைய நூல்களில் குறிப்புகள் உள்ளன.
சோமத்தாவரம் ஒரு கொடி, ஒரு நீர்த்தாவரம், அது தாமரை, அது அல்லி, அது ஒரு மலைப்பகுதிச்செடி, அது ஒரு பாலை நிலத்தாவரம் என பலவகையான யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன எனினும் உறுதியாக சோமக்கொடி அல்லது செடி என்பது இதுதான் என இப்போது வரை எதுவும் அடையாளம் படுத்தப்படவில்லை
அரளிக்குடும்பத்தை சேர்ந்த மலைப்பாங்கான பகுதிகளில் வளரும் கொடித்தாவரமான Asclepias acida என்னும் தாவரம்தான் இது என்று சிலர் கருதுகிறார்கள். சோமக்கொடியின் சாற்றுடன் கஞ்சா இலை, மாதுளங்கனி, நீலத்தாமரை கொடியின் தண்டு, பால் மற்றும் சில நச்சுக்காளான்களும் சேர்ந்ததே சோமபானம் என்பது ஒரு தரப்பினரின் கருத்து
பலர் பெர்சியாவின் தாவரமான ephedra தான் சோமக்கொடி என யூகின்றனர். எனக்கும் இக்கருத்தில் உடன்பாடு உண்டு. மலர்களை உருவாக்காமல் சூலகங்களை நேரடியாக உருவாக்கும் கீழ்நிலைத்தாவரங்களாகிய ஜிம்னோஸ்பெர்ம்ஸ் என்னும் வகையை சேர்ந்த எஃபிட்ரா தான் சோமச்செடி என கருதுகிறேன்
சோமலதை என்னும் பெயரையும் கொண்டிருக்கும் இது கொடியை போன்ற வளரியல்பு கொண்டது. சீனாவில் ’மா ஹுவாங்’ (Ma huang) எனப்படும் இந்த செடி இந்தியா, ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இதிலிருந்து உருவாக்கப்படும் பல பானங்கள் செயலூக்கத்தை அதிகரிக்கும் (performance enhancers) பானங்களாக சந்தைப்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்தியர்கள் இதை சோமபானம் என்றும் ஈரானியர்கள் இதை ஹோமபானமென்றும் அழைக்கின்றனர்.
சிறு தவறுக்கு கூட தலை கொய்யும் வழக்கமுடைய மங்கோலிய மகா பேரரசர் செங்கிஸ்கான் வீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுகையில், படைப்பிரிவினர் யாராவது சோர்ந்தோ அல்லது உறங்குவதையோ பார்த்தால் அங்கேயே தலை வெட்டப்படும் என்பதால் அவரது படை வீரர்கள் அனைவரும், எப்போதும் விழிப்புடன் உற்சாகமாய் இருக்க வைக்கும் இந்த மா ஹுவாங் தேநீரை அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்,
சரத்துஸ்திரர்களின் புனித நூலான அவெஸ்தா (Avesta) சோமக்கொடியை சிறு கிளைகள் கொண்டது, நறுமணம் மிக்கது, பசுமஞ்சள் நிறம் கொண்டது, மலைப்பாங்கான இடங்களில் நெருக்கமான புதராக வளரும், அழுத்தி பிழியப்படும் வகையில் மெனமையானது என்கிறது.
இந்த விவரிப்புகள் அனைத்தும் ஈரானில் haoma என்றும் குறிப்பிடப்படும் சோமலதையான் எஃபிட்ராவின் இயல்பை ஒத்திருக்கிறது. பலர் இதுதான் சோமக்கொடி என்று கருதுகிறார்கள்
1999 ல் நெதர்லாந்தில் நடைபெற்ற Haoma-Soma கருத்தரங்கில், Jan E. M. Houben என்னும் விஞ்ஞானி தனது ஆய்வுக்கட்டுரையில் ’’இனி பேசிக்கொண்டிருக்க தேவையே இல்லை,சோமக்கொடி என்பது எஃபிட்ராதான்’’ என்று உறுதியாக தெரிவித்திருந்தார்.
ஈரான் நாட்டின் மாமுனிவரும், சரத்துஸ்திர சமயத்தை உருவாக்கியவருமான சரத்துஸ்தர், அவரது பெற்றோர்கள் ஹோமா கொடியை பாலில் கலக்கி அருந்திய பின்னர் பிறந்தார் என்கிறது அச்சமய வரலாறு.
James Darmesteter, 1875 ல் எழுதிய ’அவெஸ்தாவின் தொன்மங்கள்’ என்னும் ஆய்வேட்டில் எஃபிட்ராவின் குச்சிகள் ஒருபோதும் அழிவதில்லை என்பதை குறிப்பிட்டிருக்கிறார்.
ரிக் வேதம்.சோமச்செடி நீர்நிலைகளுக்கருகில் வளரும், அவற்றிலிருந்து பால் வடியும் என்கிறது. இது எஃபிட்ராவுக்கு பொருந்தாது. எஃபிட்ரா வறண்ட மலைப் பகுதிகளில் வளர்வது, பால் இல்லாதது.
மேலும் சில பண்டைய நூல்கள் சோமச்செடி என்பது அரளிச்செடியின் குடும்பத்தை சேர்ந்த Cynanchum acidum என்கிறது. இதுவும் எஃபிட்ராவை போலவே இலைகளின்றி குச்சி குச்சியான தண்டுகளுடன் இருக்கும் புதர்ச்செடிதான்.
சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்த கோஷ்டம் என்ப்படும் Saussurea lappa என்னும் தாவரத்தையும் சோமக்கொடியென்று சிலர் கருதுகிறார்கள்.
சரக மற்றும் சுஸ்ருத சம்ஹிதைகள் சோமச்செடியில் நாளொன்றுக்கு என 15 இலைகள் முழு நிலவு வரை வளர்ந்து பின்னர் கருநிலவு நாள் வரை ஒவ்வொன்றாக உதிர்ந்துவிடும் என்று குறிப்பிடுகின்றன..சுஷ்ருதர் சோமச்செடிகள் என 24 வகைகளையும் அவற்றை போலவே மனம் மயக்கும் இயல்பு கொண்ட வேறு 18 தாவரங்களையும் பட்டியலிட்டிருக்கிறார்
இன்னும் சில நூல்கள் Amanita muscaria, Psilocybe cubensis, Stropharia cubensis போன்ற நச்சுக்காளான்களை சோமச்செடி என்று குறிப்பிடுகின்றன ஆனால் நிச்சயம் அது காளானாக இருக்க முடியாது. ஏனெனில் பல நூல்களில் சோமக்கொடி வேள்விகளில் கழுத்தில் மாலையாக அணிவது சொல்லப்பட்டிருக்கிறது.
1921ல் கஞ்சா செடி தான் சோமச்செடி என் பிரஜாலால் முகர்ஜி (Braja Lal Mukherjee) Royal Asiatic Society யின் சஞ்சிகையில் “The Soma Plant” என்னும் கட்டுரையில் எழுதினார்.
தனது கட்டுரைக்கு ஆதரமாக முகர்ஜி, வேதக் கிரியைகள், சுக்ல யஜுர் வேதத்தோடு தொடர்புடைய வரலாறுகள் தொன்மங்கள் ஆகியவற்றை விளக்கும் சதபத பிராமணம் என்னும் நூலில் சோமச்செடி “Usana,” என குறிப்பிடப் பட்டிருப்பதை காட்டியிருந்தார். கஞ்சா செடியின் சமஸ்கிருத பெயரான “Sana.” என்பதை ஒப்பிட்டு இது கஞ்சாதான் என வாதிட்டு எழுதியிருந்தார்
கஞ்சாவின் பிறமொழிப்பெயர்களான் திபெத்திய ’’சோமரஸ்தா’’ மற்றும் திபெத்–பர்மா மொழிகளில் ஒன்றான சீனப்பழங்குடியினரின் தாங்குடு மொழியின் ’’ஸ்கோமா’’ (dschoma) ஆகியவற்றையும் தனது வாதத்திற்கு துணையாக்கிக் கொண்டார். சதபத பிராமணம், சோமச்செடி கிடைக்காதபோது உபயோகிக்கலாமென்னும் மாற்றுச்செடிகளையும் பட்டியலிடுகிறது
ரஷ்யாவின் கரா–கம் பாலைவனத்தில் நடைபெற்ற அகழாய்வில் கஞ்சா எஃபிட்ரா மற்றும் கசகசா செடிகளின் இடித்த எச்சங்கள் கிடைத்ததை கொண்டு இம்மூன்றும் சேர்ந்த கலவையே சோமபானமாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது
19 ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த ஐரோப்பிய தாவர வியலாளர்கள், வேதவிற்பன்னர்கள் மற்றும் இறையியலாளர்கள் சோமச்செடியை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார்கள் அவர்களில் Hillebrandt, (1891) மற்றும் Monnier- Williams (1899)ஆகிய இருவரும் மிக குறிப்பிட்டுச் சொல்லும்படியான தேடலில் ஈடுபட்டவர்கள்
20 ம் நூற்றாண்டில் சோமச்செடியை தீவிரமாக தேடிய வாஸன் (R. Gordon Wasson-1968) ல் இது ஒரு காளான்தான் என உறுதியாக அறிவித்த போது அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் எழுந்தன
இவர் Amanita muscaria என்னும் காளான்தான் சோமச்செடி என்று பலவருடப் பயணம் மற்றும் ஆய்வுகளுக்கு பின்ன 1968 ல் வெளியான தனது Soma: the Divine Mushroom of Immortality. என்னும் நூலில் விவரித்திருந்தார்
இந்நூலில் ‘’ இக்காளான்களை பிழிந்து சாறெடுத்து நீரில், பாலில், தயிரில் அல்லது தேனில் கரைத்து சோம பானமாக அருந்தலாம் என்றும், அக்காளான்களை உண்டவர்களின் சிறுநீரிலும் அதன் வேதிப்பொருட்கள் இருக்குமென்பதால் அதையும் சோமபானமென்று கருதலாமென்றும் வாஸன் குறிப்பிடுகிறார்
வாஸன் இந்திய குகை ஓவியங்களின் காளான் சித்திரங்கள், வேதங்கள், மற்றும் பல தொல் நூல்களிலிருந்து ஆதாரங்களை அளித்திருந்ததால் இந்நூல் பிரபலமாக பேசப்பட்டது.
சோமத்தாவரம் குறித்த விவரங்கள் தெளிவாக எந்த பண்டைய நூலிலும் அளிக்காப்படாததற்கு இவை அதிக போதை உண்டாக்கும் தன்மை கொண்ட, மதம் சார்ந்த முக்கியச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டது காரணமாயிருக்கலாம்.
இன்னும் சோமபானம் எடுக்கப்பட்ட தாவரம் எதுவென்று தெரியாவிட்டாலும் ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் உரிய மனம் மயக்கும் போதை தாவரங்கள் இருப்பதால், அந்தந்த நிலப்பகுதியில் இருந்த தாவரங்கள் அப்பகுதி மக்களால் சோமச்செடி என்னும் பெயரில் அழைக்கப்பட்டிருக்கும் சாத்தியங்களும் இருக்கிறது. .
இன்று வரையிலும் சோமச்செடியை குறித்த தேடல்களும், கருத்துக்களும், சர்ச்சைகளும் நீடிக்கின்றன. புதிய போதை தாவரங்களும் கண்டறியப்பட்டு கொண்டிருக்கின்றன.சமீபத்தில் சிரியாவின் தாவரமான Peganum harmala சோமச்செடியின் இயல்புகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருப்பதால் இதுவே பண்டைய சோமச்செடி என்று பேசப்படுகிறது
கோவிட் தொற்றுக்கு முன்பு 2018ல் என் அமெரிக்க தோழி ஜாய் பெரூ வில் நடக்கும் 6 நாட்களுக்கான ஆயவாஸ்கா (Ayahuasca) அனுபவத்தில் கலந்துகொண்டாள் கட்டணம் 2000 டாலர்கள்
தெய்வங்களின் தாவரங்கள் எழுதிய ரிச்சர்ட் தான் முதன்முதலில் ஆயவாஸ்கா என்கிற அமேஸான் பழங்குடியினத்தவர்களின் மதச்சடங்குகளிலும், குணப்படுத்தும் சடங்குகளிலும் அருந்தப்படும் சாற்றைக் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு உலகிற்கு அதை தெரியப்படுதியவர். அவருடன் இச்சடங்கு பானம் குறித்து வசியத்துயில் மருத்துவத்தையும் ஆன்மீக மரபுகளையும் இணைத்து சிகிச்சையளிக்கும் துறையின் முன்னோடிகளில் ஒருவரான கிளாடியோ பெஞ்சமினும் (Claudio Benjamín) இணைந்திருந்தார்.கிளாடியோ கடந்த 2019ல் மறைந்தார்.
எனக்கும் இந்த சிகிச்சை அல்லது அனுபவத்தில் ஆர்வம் இருந்தது என்றாலும் கட்டணம் மிக அதிகம் என்பதால் அப்போது செல்லவில்லை.
உலகெங்கிலும் இருந்து பல நூறு பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்வின் தொடக்கத்தில் பழங்குடியினத்தவர்கள் வந்து சில பிரார்த்தனை பாடல்கள் பாடி வழிபாடுகளில் இவர்களையும் ஈடுபட சொல்லி, அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டு மிகக் கசப்பான மூன்று தாவரங்களின் சாற்றை கலந்து அருந்த கொடுத்திருக்கிறார்கள்
அரை மணி நேரத்தில் பலரும் வாந்தி எடுத்து அலறி கூச்சலிட்டு விழுந்து புரண்டு இருக்கிறார்கள். தானும் வாந்தி எடுத்ததாக சொன்ன ஜாய்’ யினால் அதன் பிறகு நடந்தவைகளை ஓரளவுக்கு விளக்க முயன்றாள்.
அலறிக்கொண்டு கீழே பாயில் புரண்டு கொண்டிருந்த அவளை, அவளிடமிருந்து பிரிந்து மேலே சென்ற அவளே பார்த்துக்கொண்டிருந்தாள் என்றும் வெகு விரைவாக தான் எங்கெங்கோ பயணித்ததையும், மறைந்த தன் தந்தையுடன் பேசிக்கொண்டிருந்ததையும் சொல்லும்போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
இதைக்கேட்ட பின்பு போதைத்தாவரங்கள் குறித்த நூலை எழுதும் முன்பு இந்த சடங்கில் கலந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இச்சடங்குகளில் உபயோகப்படும் இந்த தாவரங்களில் ஒன்றோ அலல்து அனைத்துமோ கூட சோமக்கொடியாக இருக்கலாம்.
பிக்மி பழங்குடியினர் Tabernanthe iboga, என்னும் மரத்தின் வேர்ப்பட்டைகளை மனம்பிறழவைக்கும் அனுபவத்தின் பொருட்டு சடங்குகளின் போது பயனபடுத்துகிறார்கள்.
வெண்முரசில் ’’மதுவுக்கு நம்மை அளிக்காவிட்டால் மதுவின் தெய்வம் இறங்கிவருவதில்லை” என்று துரியோதனன் கர்ணனிடம் சொல்லுவான்.
ஹரிதர் விருஷாலியிடம் ’’தன்னை தலைகீழாக்க மானுடன் கொள்ளும் உள்விழைவை தொட்டு முளைக்க வைக்கிறதா மது? தலைகீழாக நின்று இவ்வுலகையே அவ்வண்ணம் திருப்பிக்கொள்கிறார்களா?” என்று கேட்கிறார்.
கல்பொருசிறுநுரை மது வேட்கையை ’’உவகையை நோக்கிச் செல்லும் உயிரின் விழைவு அது. தன்னை மறந்தாடவும், தக்கவைத்துக்கொண்ட அனைத்தையும் கைவிடவும், அனைத்திலிருந்தும் விடுபடவும், வேறொரு வெளிக்குச் சென்று திளைக்கவும் உள்ளம் கொள்ளும் துடிப்பு’’ என்கிறது.
கிராதம் “மதுவை நாடுபவர் அனைவரும் மதுவெனக் கொள்வது ஒன்றையே அல்ல. அஞ்சுபவர்களுக்கு அது துணை. பணிந்தவர்களுக்கு அது குரல். தனித்தவர்களுக்கு அனைத்து வாயில்களையும் திறக்கும் காற்று” என்கிறது.
வெண்முரசு காட்டும் இதுபோன்ற மது குறித்தான செய்திகளையும், மது எழுப்பும் மெய்யிலி உலகங்களையும், சோமம் உள்ளிட்ட தாவர மதுவகைகளையும், அவை பயன்படுத்தப்படும் தொல் சடங்குகளையும் இணைத்து ஒன்றாக அறிந்து கொள்கையில் கிடைக்கும் சித்திரம் மிக புதியது, மிக சுவாரஸ்யமானது..
நன்றியுடன்
லோகமாதேவி