ஒரு முக்கியமான முன்னெடுப்பு

சோழர், ஓர் உரை

செல்வன் உருவாக்கிய விழிப்புணர்வுகளில் ஒன்றாக இது இருக்கலாம். அல்லது எப்போதுமுள்ள ஒரு கோரிக்கைக்கு மக்களாதரவை திரட்ட பொன்னியின் செல்வன் என்னும் அலையை பயன்படுத்திக்கொள்வதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலுக் இது மிகச்சிறந்த ஒரு முன்னெடுப்பு.

என்னும்போதே கசப்பு உருவாகும் சிலரை பார்க்கிறேன். தலித் மக்களிடம் அப்படி ஒரு கசப்பு எழ வரலாற்று நியாயமுண்டு என்பதே என் எண்ணம். அதை பதிவுசெய்துமிருக்கிறேன். மற்றபடி சோழர்கள் என்றாலே பற்றி எரிபவர்களுக்குள் செயல்படுவது பெரும்பாலும் மறைக்கப்பட்ட மதக்காழ்ப்புகளும் மொழிக்காழ்ப்புகளுமே ஒழிய எந்தவகையான அறச்சார்பும் அல்ல.

எந்த மன்னராட்சியும் அதற்கான ஒடுக்குமுறை, அதிகார அடுக்குமுறையுடனேயே இருக்கும். அதைவிட பலமடங்கு கொடூரமான ஒடுக்குமுறையும் அதிகார அடுக்குமுறையும் கொண்ட கம்யூனிச சர்வாதிகார அரசுகளை விழுந்து விழுந்து கொண்டாடியவர்கள் அதை விமர்சிக்கும் தகுதி அற்றவர்கள். மக்களாட்சியிலும் அதற்குரிய அடக்குமுறையும் அதிகார அடுக்கும் இருப்பதைக் காணலாம்.

சோழர்காலம் அக்காலத்திற்குரிய அடக்குமுறை, மேலாதிக்கம் கொண்டதே. ஆனால் அன்று உலகிலிருந்த வேறெந்த அரசுகளைவிடவும் மக்கள்பணியில் ஆர்வம் கொண்ட அரசு அது. உலகில் அன்றிருந்த எந்த அரசும் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்குச்  சமயப்பொறையும் ஜனநாயகத்தன்மையும் கொண்டது.

நாம் பொற்காலங்களை பின்னால்திரும்பி பார்த்துக் கண்டடைய வேண்டியதில்லை. அதை எதிர்காலத்தில் தேடுவோம். ஆனால் நம் முன்னோரின் சாதனைகளை மறுக்கவேண்டியதில்லை. அதைச் சிறுமைப்படுத்தும் மனநிலைகளை அடையாளம் காண்போம்.

சோழர்களே தமிழகத்தின் பாசனக்கட்டுமானத்தின் அடித்தளத்தை அமைத்தவர்கள். அவர்கள் அமைத்த பாசன ஒழுங்கையே இன்றும் கடைப்பிடிக்கிறோம். அதன்மேல்தான் மொத்த தமிழகப்பொருளியலும் பண்பாடும் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

சந்திரசேகர ராவ் தெலுங்கானாவில் ராஷ்டிரகூட ஏரிச்சங்கிலி எனப்படும் மாபெரும் பாசனத்திட்டத்தை புதுப்பித்தார். ராஷ்டிரகூடப்பேரரசி ருத்ராம்பா தேவியால் உருவாக்கப்பட்ட ஏரிவரிசை அது. நூறாண்டுகளுக்கும் மேலாக பராபரிப்பின்றி கிடந்தது. அது தெலுங்கானாவின் வாழ்க்கைமுறையையே மாற்றியது.

அதைப்போல இங்கும்  சோழர்காலப் பாசனச் சங்கிலியை முழுமையாக மீட்டெடுக்கலாம். மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உள்ளம் இருக்கவேண்டும். முன்னோரை வசைபாடி நம்மை பெரியவர்களாக கருதிக்கொள்ளும் மடமையில் இருந்து வெளிவரவேண்டும்.

முந்தைய கட்டுரைஅர்ஜுனனும் கர்ணனும்,கடிதங்கள்
அடுத்த கட்டுரைசங்கு சுப்ரமணியம், லட்டு மிட்டாய் வேணுமா?