அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
ஜெ 60 நிகழ்ச்சியில் நானும் என் மனைவியும் கலந்துகொண்டது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளித்தது. நிகழ்வு தொடங்குவதற்கு சற்று முன்னர்தான் அரங்கிற்கு வர முடிந்தது. அப்போதும் நீங்கள் வாழ்த்துகளை ஏற்றும் புத்தகங்களில் கையெழுத்திட்டுக்கொண்டும் இருந்தீர்கள். இடையிடையே பொன்னாடைகள் வேறு. அரங்கம் ஏறக்குறைய நிறைந்திருந்ததால் கிடைத்த இடத்தில் அமர்ந்தோம். சுற்றிலும் பல தெரிந்த முகங்கள். அருகில் எழுத்தாளர் கே.ஜெ. அசோக்குமார் அமர்ந்திருந்தார். அஜிதனும் சைதன்யாவும் பக்கத்து வரிசைகளில். ஆசிரியர்கள் பலர் குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வந்திருந்தனர். பாடப்புத்தகத்தில் அவர்கள் படிக்கும் கதை தற்போது வாழும் ஒருவர் எழுதியது என்பதை மாணவர்களிடம் சொல்ல உங்களிடம் தேதியுடன் கையெழுத்துப் பெற்றதாக சிலர் கூறினார்கள். பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலர்கள் அதிகாரிகளைப் பார்த்தோம். கல்லூரி மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். கருத்துத் தளத்தில் உங்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நண்பர்கள் சிலரையும் சந்தித்தோம். எல்லோரும் தங்களுக்குள்ளும் உங்களுடனும் ஒரு உரையாடலில் இருந்தது போல் தோன்றிக்கொண்டே இருந்தது.
வாழ்த்திப் பேசியவர்கள் எல்லோருமே சிறப்பாக பேசினார்கள். கல்பற்றா அவர்களின் உரை எனக்குப் புரிந்த அளவிலேயே ஆத்மார்த்தமாக இருந்தது. ஓராண்டு நரகத்தில் வாழ்வது நூறாண்டுகள் சொர்க்கத்தில் இருப்பதற்கு சமம் என்ற அவரது வார்த்தைகள் பெருஞ்செயல்கள் செய்வதற்கு கொடுக்கவேண்டிய விலையை உணர்த்தின. இலக்கிய ஆளுமைகள் பலருக்கு நீங்கள் அகவை நிறைவு விழாக்கள் நடத்தியிருக்கிறீர்கள். உங்களுக்காக நடத்தின நிகழ்ச்சியும் நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளைப் போலவே குறித்த நேரத்தில் ஆரம்பித்து முடிந்தது. உங்கள் ஏற்புரையை அதற்கேற்ப சுருக்கமாக அமைத்துக்கொண்டீர்கள் என்று நினைக்கிறன். இந்த விழாவிற்கு நீங்கள் இசைவு தெரிவித்ததற்கு நன்றி. இல்லாவிட்டால் இப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டம் எங்களுக்குக் கிடைத்திருக்காது. பல்லாண்டுகள் நல்ல உடல் நலத்துடனும் இதே படைப்பு விசையுடனும் இருக்க வேண்டுதல்களும் வாழ்த்துகளும்.
அன்புடன்
நிக்கோடிமஸ்
*
பேரன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
ஒரு பெரும் மங்கல சடங்கு. மிக நிறைவளித்தது. பங்குகொண்ட அனைவரது நல்விருப்பங்களையும் (உலகியல், மெய்மை என) நிறைவேற வரமளித்த ஒன்று. வெறும் கையுடன் திரும்பியவர்கள் ஒருவருமில்லை நான் அறிவேன் ஒருவேளை அவர்களே அறிந்திராவிட்டாலும். உண்மை அன்பு இறை நிகழ்த்துகிறது. காலை நண்பர் நவீன் சங்குடன் அறைக்கு வந்தபோது அனைவரும் பெருமானைக் காணச் சென்று விட்டீர்கள். திரு. யுவன் சந்திரசேகர் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. மாற்று மெய்மை குறித்த அவரது கருத்துக்களை கேட்டிருந்தோம். பின் அவரை அழைத்துக்கொண்டு சாய் நிவாஸ் வந்தபோது தமிழ் விக்கி வாசிப்பு ஒரு நாவலாசிரியனுக்கு எவ்வளவு பயன்மிக்கது என்பதை விளக்கிப் பேசிக்கொண்டிருந்தீர்கள். அருண்மொழி நங்கை அவர்களை நேரில் கண்டபோது என் வியப்பு என் தங்கை தோற்றத்தில் அருண்மொழி நங்கை அவர்களைப் போலவே இருப்பார். ஒரே வேறுபாடு என் தங்கைக்கு இப்படி பெரிய கண்கள் கிடையாது.
சிலநாட்கள் முன்பு மாலை மேற்கு வானின் புதிய ஒவியத்தைக் கண்டபோது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் எவ்வளவு அற்புத ஓவியங்கள் தந்து கொண்டு இருக்கிறான். எவ்வகையிலும் எதிலும் இறைவனுக்கு நிகரான கலைஞன் கிடையாது. மண்ணிலும் – படைக்கும் கலைஞன் இறைவனின் செயலை செய்பவனே இறைவனே தானே? விஷ்ணு இங்கே வருவதாக இருந்தால் வியாசனாக அல்லாமல் வேறு எவ்வாறு வரமுடியும்? பிறகு கண்ணணாக சிவனாக பல விதவிதமான வேடங்கள் தனக்குத்தானே புனைந்து கொள்ள முடியும்? ஜெயமோகன் குறித்த எண்ணங்களில் மூழ்கி இருந்தேன். அடுத்த நாள் சியமந்தகத்தில் ஆசிரியர் சுசித்ராவின் கட்டுரை காண நேர்ந்தது.
தமிழ் சொற்களை உச்சத் திறனுடன் பயன்படுத்தும் இந்த மலையாள மந்திரவாதியின் மணிவிழா சடங்கில் கலந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள். மிகவும் இனிதான வெண்முரசு காலத்திய நிகழ்வு.
உள்ளம் தூய்மையும் நிறைவும் கொள்ளச் செய்தது. நற்செயல்களின் மீதான தீவிர செயல் மோகம் தந்தது.
கோவை பட்டீஸ்வரனும் செயல்மோகன் தான். தன்னுடைய ஆட்களையே எல்லாப் பக்கமிருந்தும் தருவிக்கிறான்.
அன்புடன்
வணக்கத்துடன்
விக்ரம்
கோவை