விடுபடுபவை

நான் தனிப்பட்ட முறையில் சினிமாவில் ரசிப்பது சகஜமான காட்சிகளை. எந்த பெரிய நிகழ்வுகளும், நெருக்கடிகளும் இல்லாத, அன்றாடம்போன்றே நிகழக்கூடியவற்றை. அவற்றில்தான் கதைநடக்கும் சூழல், கதைமாந்தரின் உள்ளம், கதையின் மெய்யான சிக்கல் எல்லாமே உண்மையாக வெளிப்படுகின்றன.

அத்துடன் எனக்கு சினிமாவில் பிடித்ததே குட்டிக்கதாபாத்திரங்கள்தான். அவைதான் இயல்பானவை, ஆகவே உயிர்த்துடிப்பானவை. வெந்து தணிந்தது காடு படத்திலுள்ள நாலைந்து குட்டிக்கதாபாத்திரங்கள் மிக இயல்பாக அந்த உலகை வெளிப்படுத்துபவை. மாசாணம், இசக்கி, கர்ஜி, சரவணன், செந்தூரான். அவர்களை தமிழ் சினிமா ரசிகர்களும் விமர்சகர்களும் பொதுவாக கவனிப்பதில்லை

எழுதும்போது நான் அவற்றையே ரசித்து உருவாக்குவேன். என்னால் முடிந்தவரை அவை சினிமாவில் இருக்கவேண்டுமென சொல்லிப்பார்ப்பேன். ஆனால் பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் அக்காட்சிகளை விரும்புவதில்லை. திரையரங்கில் நெளிவார்கள்.  இங்குள்ள விமர்சகர்களும் Lag என்றும், கத்திரிபோட்டிருக்கலாம் என்றும் எழுதுவார்கள்.

ஆகவே சினிமாவில் தீவிரநெருக்கடிகளோ, சாகசங்களோ, கொண்டாட்டங்களோ கொண்ட காட்சிகளை மட்டுமே வைத்து மற்ற காட்சிகளை வெட்டிக்கொண்டே இருப்பார்கள். அதை தவிர்க்கவே முடியாது. நான் எழுதுவதில் கணிசமான பகுதிகள் காணாமலாகிவிடும்.

என் வரையில் பொன்னியின் செல்வன்-1 சினிமாவின் மையக் காட்சி என்பது குந்தவையும் நந்தினியும் சந்திப்பது. அங்கே அவர்கள் பேசிக்கொள்வதிலுள்ள உள்ளர்த்தம். சிறை, அரியணை, பொன், சாவி என அவர்கள் இயல்பாகப்பேசினாலும் எல்லாமே ஒருவருக்கொருவர் அறிந்த நுட்பங்கள் கொண்டவை. அந்தக் காட்சி படத்தில் கடைசியில் இருக்காது என்றே நினைத்தேன், நல்லவேளை இருக்கிறது.

சதியாலோசனையை குந்தவை கலக்கிவிட்டுச் செல்லும் காட்சியும் அப்படித்தான். அதுவும் படத்தில் இருக்கிறது, கேரளத்தில் மிக ரசிக்கப்படுகிறது.

வெந்து தணிந்தது காடு படத்தில் இறுதியில் எட்டு நிமிடம் குறைக்கப்பட்டபோது இந்தக் காட்சி வெட்டப்பட்டது. ஆனால் இதை நீக்குகும் படிச் சொன்னது நான்.

கௌதமிடம் நான் சொன்னேன். “எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த காட்சிகள் இத்தகையவை. சாதாரணமான காட்சிகளை எடுக்கும்போதுதான் உண்மையில் இயக்குநரின் திறன் வெளித்தெரிகிறது. ஒரு கொலையை விட கொலை நடந்தபின் உள்ள பதற்றமான, ஆனால் தணிவான, கொஞ்சம் சலிப்பும் கலந்த காட்சியை எடுப்பதுதான் மெய்யான சவால். நீங்கள் இயக்குநராக மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் தமிழ்சினிமா ரசிகர்கள் நெளிவார்கள். விமர்சகர்கள் கத்திரி கத்திரி என கதறுவார்கள். நீளம் குறைக்கப்பட்டே ஆகவேண்டும் என்றால் இதை தூக்கலாம்”

இந்தக் காட்சி படத்தின் இரண்டாம் பகுதியின் தொடக்கம். முத்து செய்த கொலைக்கு பிந்தைய காட்சி. அவன் அவனுடைய தலைமைக்கு அப்போதுதான் அறிமுகமாகிறான். அவர்கள் அவனை எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் அத்தனைபெரிய கொலையை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதில்தான் அந்த கிரைம் உலகின் இயல்பு வெளிப்படுகிறது. முத்துமட்டும் அலைபாய்ந்துகொண்டிருக்கிறான். அவன் உள்ளத்தின் அலைபாய்தலை அந்த காட்சியின் காரின் வைப்பர் காட்டுகிறது. அவன் அஞ்சவுமில்லை, பதறவுமில்லை. ஆனால் குழம்பிப்போயிருக்கிறான்.

மங்கிய விடிகாலை வெளிச்சம். போலீஸார் ஏற்கனவே வழக்கமான விசாரணை, சட்டநடவடிக்கைகளை முடித்துவிட்டிருக்கிறார்கள். சும்மா எல்லாரையும் நாலைந்து அடிபோட்டு மிரட்டி நாடகம் போட்டிருக்கிறார்கள். அதன்பின் சடலங்களை கொண்டுசெல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் பெரிய அக்கறை எல்லாம் கிடையாது. சரவணன் கர்ஜியுடன் போன் பேச அனுமதிக்கிறார்கள்.

அந்தக் காட்சி மிகமிக இயல்பாக ஒழுகிச்செல்கிறது. அதில் சரவணன், முத்து, இசக்கி, செந்தூரான், கர்ஜி அனைவருடைய இயல்பும் சாதாரணமாக வெளிப்படுகிறது. கொலை நடந்திருப்பது மும்பையில், ஆனால் அவர்கள் அப்படியே தெக்கத்தி ஆட்களாகவே வெளிப்படுகிறார்கள். கர்ஜிக்கு அந்தக்கொலையில் அவ்வளவு பெரிய அக்கறை இல்லை. என்ன நடந்தது என்னும் ஆர்வமும் புதியதாக ஏதோ நடந்ததனை அறிந்த மெல்லிய குதூகலமும்  மட்டும்தான் இருக்கிறது.

மூன்று காட்சிகளும் சேர்த்தே 3 நிமிடம்தான். ஆனால் படத்தில் வைக்கமுடியாது, ’அய்யய்யோ lag அடிக்கே!  lag அடிக்கே!” என கரண்ட் அடிப்பதுபோல கண்ணீர்விடுவார்கள்.  மூன்று நிமிடம் lag என எழுதுவார்கள். இக்காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது என்பதே ஒரு குறியீடுதான். பொதுரசனையில் இருந்து விலகி நிற்கும் ஒரு துண்டு இது. விலக்கப்பட்ட ரசனைக்குரியது.

எனக்காக இக்காட்சியை மீண்டும் பார்த்துக்கொள்கிறேன். தமிழகத்திலும் ஓர் ஆயிரம்பேர் இதை விரும்பக்கூடும், இதுதான் உண்மையில் சினிமா என அறியக்கூடும்

முந்தைய கட்டுரைவாசிப்புப் பயிற்சி முகாம், கடிதம்
அடுத்த கட்டுரைசிவஞான சித்தியார் – முன்விலைத்திட்டம்