இப்போது கிடைக்கும் குமுதம் 12-10-2022 – 19-10-2022 இதழில் என் பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது. பேட்டிகள் திரும்பத் திரும்ப எழுத்தாளனை நினைவில் நிறுத்துகின்றன. எங்கோ அரசுநூலகத்தில் ஓர் இளைஞன் படிப்பான் என்று கற்பனை செய்துகொள்கிறேன். மணா குமுதம் இதழில் பணியாற்றிய காலத்தில், முப்பதாண்டுகளுக்கு முன்பு, வெளியான பேட்டி ஒன்று எனக்கு பெருவாரியாக வாசகர்களைப் பெற்றுத்தந்ததை நினைவுகூர்கிறேன்.
இதழியலின் வழக்கமே கவனம்கோருவதுதான். ஆகவே அவர்கள் பேட்டிகளை விவாதங்கள் நோக்கி செலுத்துவார்கள். வழக்கம்போல ஒற்றைவரிகளில் இருந்து எவராவது விவாதங்களைக் கிளப்புவார்கள். அதை மட்டுமே கவனிக்கும் நூறுபேர் முகநூலில் சலம்புவார்கள். நூறுபேர் டிவிட்டரில் புலம்புவார்கள். வாசிப்பவர்களில் ஒரு ஆயிரம்பேர் என் எழுத்துக்களை கவனிப்பார்கள். அவர்களில் நூறுபேருக்கு என் எழுத்துக்களுக்குள் நுழைய வாசல் திறக்கும். வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஓர் உரையாடல் எங்களுக்குள் தொடங்கும்.